1.

”நீங்கள் ஒரு அரவாணி என்றும் நீங்கள் மலத்துவாரம் வழியாக இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொள்ளும் வழக்கமுடையவர் என்றும்  எனவே நீவிர் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு  377 இன் படி தண்டிக்கப்படக்கூடிய குற்றம் புரிந்துள்ளீர் என்றும் உம்மீது அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   இந்தக் குற்றச்சாட்டு குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள் ?”

பைபிளின் பக்கங்களை வாசிக்கிற சுதியில் குற்றப் பத்திரிக்கையை  ஒரே மூச்சில் வாசித்து முடித்தார் எம்.சி.  கிளர்க். இறுதியாக ஆமேன் மட்டும் சொல்லவில்லை.   கசகசவென  கசங்கிக் கொண்டிருந்த அந்த மேஜிஸ்டிரேட் நீதிமன்றம்  சட்டென ஒருமுகப்பட்டது.   பார்வைகள் மொத்தமும்    குற்றவாளிக் கூண்டை நோக்கித் திரும்பியது.    சேலையும் ஜாக்கெட்டும்  உடுத்திருந்த கருத்த மெலிந்த உருவம்  ஒன்று கூனிக்குறுகி நின்று கொண்டிருந்தது.  ஒரே குப்பியில் அடைக்கப்பட்ட பசியும் வலியும் பயமும் அசதியும்   நிறைந்து   வழிந்து கூண்டின் தேக்கு மரச் சட்டங்களை   ஈரமாக்கிக் கொண்டிருந்தன.

மர மேடையில் நீதிபதியின் பக்கவாட்டில் உட்கார்ந்து பழைய ஹால்டா மிசினில் விரல்களை மேயவிட்டிருந்த பெண் டைப்பிஸ்ட்   தலையைக்  குனிந்து  நீதிபதியை பார்ப்பதைத் தவிர்த்தார். அவர் உடலுக்குள்  பெண்மை கிடந்து நெளிந்தது. ஒரு நாற்பத்தி ஐந்து நாற்பத்தியாறு வயதிருக்கும். நடுத்தர வயதுதான்.  அந்த நீதிபதி தன் முகத்தில் எந்தச் சலனத்தையும் வெளிப்படுத்தக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். குற்றவாளிக் கூண்டருகில் நின்று கொண்டிருந்த ஏட்டையா உடல் தோலை விரைப்பாகவும் முகத்தோலை இறுக்கமாகவும்  இழுத்டுக் கட்டியிருந்தார்.   நாட்டு நடப்புகளைக் கிசுகிசுத்துக்  கொண்டிருந்த வழக்கறிஞர்கள் மத்தியில் நமட்டுச் சிரிப்பலை எழுந்தது.   அரைத் தூக்கத்திலிருந்த ஒரு வழக்கறிஞர்  சட்டென விழித்து பக்கத்திலிருந்த வழக்கறிஞரிடம் கேட்டார். அவர் காதுக்குள் ஏதோ வேதம் ஓத, நீண்டு தொங்கிய கருப்பு கவுனை எடுத்து வாயில் பொத்திக்கொண்டு சிரித்தார்.  ஆர்.சி. கிளர்க் மேசை அருகில் கேஸ் கட்டுகளை அனைத்தபடி நின்று கொண்டிருந்த ஒரு இளம் பெண் வழக்கறிஞர் நாசூக்காய் வெளியேறினார். வராந்தாவில் வாய்தாவுகளுக்காக காத்திருந்த  அக்யூஸ்ட்களும் சாட்சிகளும் ஒடக்கானைப்போல் தலையை நீட்டிப் பார்த்தார்கள்.

கருத்த ஆண் உடல் கூடின் மீது பெண் வேசம் போர்த்தியது  போலிருந்தது.  இடுப்புவரை மறைத்திருந்த கூண்டிற்கு கீழும் மேலும் வேறு வேறு உருவங்கள் தெரிந்தன.    மழிக்கப்பட்டிருந்தாலும் துளிர் விட்டிருந்த தாடியும் மீசையுமாக தெரிந்த ஆண் உருவத்தை பார்த்தவர்கள் கூண்டின் மரக்கால்களுக்கிடையே தெரிந்த வெளிறிப்போன பச்சைக் கலர் சேலையை உற்றுப் பார்த்தார்கள்.   மட்டமாக  இருந்த ஜாக்கெட்டுக்குள்  ஊடுருவி மார்புகளை துப்புத் துலக்கின சில கண்கள்.   எத்தனையோ  கொடூர வழக்குகளையும் கொலைக் குற்றவாளிகளையும்  கண்ணுற்ற  தடித்த அழுக்கேறிய  சுவர்கள் ஏதோ நரகலை மிதித்தது போல் அறுவறுப்பாய் பார்த்தது.

  ’’பதில் சொல்லுங்க !’’ என்றார் எம்.சி.கிளர்க்.

குனிந்த தலையை சற்று உயர்த்தி முழித்தாள் கைரதி.  அந்த உள்ளொடுங்கிய  கண்கள் ஏதோ பேசுகிறது.   பயமா, வலியா, வேதனையா, வெதும்பலா, வாதையா, அதிர்ச்சியா, அசதியா, யாசகமா, இரைஞ்சலா, இல்லை எல்லாம்  கலந்த மொழியா? என்னவென்று என்னால் சொல்ல இயலவில்லை.

’’என்னம்மா ! கேஸ ஒத்துகறையா, இல்ல நடத்துறயா?’’  இம்முறை நீதிபதியே கேட்டார்.

பதில் சொல்லாமல் தனது கால்களை அகட்டி வைப்பதில்தான் கவனம் செலுத்தினாள் கைரதி.  கால்களைக் கூட்டி வைக்கும்போது மலத் துவாரத்தில் ஏற்பட்டிருந்த இரத்தக்காயம் ஒன்றோடு ஒன்று உரசி தாங்க முடியாத  பெரும் வலியை ஏற்படுத்தியது. அகட்டி வைக்கும்போது சற்றேனும் ஆசுவாசமாக இருந்தது.

’’என்னம்மா ? பதில் சொல்லு !   கேஸ ஒத்துகறையா, இல்ல நடத்துறயா? ’’ சத்தமாகக் கேட்டார் நீதிபதி.

2

மூத்திர வாடையில் இறுகிக் கிடந்த லாக்கப்பின் ஈசான மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தாள் கைரதி

கைரதி யார்,  சொந்த ஊர் எது, எப்படி இந்த ஊருக்கு வந்தாள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. தெரிந்துகொள்ளவும் யாரும் மெனக்கெடவில்லை.    ஓட்டல்களில் பாத்திரம் கழுவுற வேலைக்கு சென்று வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தாள். அவள் பாத்திரம் கழுவினால் பளிச்சின்னு சுத்தமா இருக்கும். அதுக்காகவே ஓட்டல்காரர்கள் அவளை வேலைக்கு கூப்பிட்டார்கள்.  முதலில் யாரும் வேலை தரவில்லை.  அடிக்காத குறையாக விரட்டி விட்டார்கள். அரவாணிக்கு யார்தான் வேலை தருவாங்க. ஃபவ் ஸ்டார் டீக்கடைக்காரர்  கிளாஸ் கழுவுன தண்ணிய மூஞ்சியில் ஊத்தினார்.  முதலில்   ஆப்பக்கடை ஆச்சிதான் பாத்திரம் கழுவற வேலை தந்தது. கூலியாக நாலு ஆப்பம் தரும். அப்படி தொடங்கியதுதான் ஏழெட்டு ஓட்டலுக்கு மூனு வேளையும் பாத்திரம் கழுவுற வேலைன்னு பொழுது போயிடும்.  இரவு கடைசியாக வேலை பார்க்கிற ஓட்டலில் கிடைக்கிற மிச்சம் மீதியை தின்றுவிட்டு ஓட்டல் வாசல்,  சமயலறை அல்லது  ஸ்டோர் ரூம் என எங்கேயாவது படுத்துக்கொள்வாள்.    “அரவாணிகளுக்கு வேலை கொடுத்தா அவுங்க எதுக்கு மானங்கெட்ட அவுசாரி தொழிலுக்கு போறங்க ? வயுத்தக் கழுவ பாத்திரம் கழுவிக் கிடைக்கிற நாலு காசு போதுமில்ல” என்பாள்.

வழக்கம்போல்  வேலை முடிந்து முருகவிலாஸ் ஓட்டல் வாசலில் மூடப்பட்டிருந்த ஷட்டருடன் ஒட்டிப்  படுத்துக்கொண்டாள். வெயில் காலம் கிச்சன்ல படுத்தா புழுக்கமாக இரும்மென வாசலில் படுத்தாள். வந்ததே வினை.  இரவு ரோந்துக்கு வந்த போலீஸ் பேட்ரோல் லத்தியால் தட்டி எழுப்பியது.  அவளை அள்ளி ஜீப்பில் தூக்கிப் போட்டுக்கொண்டு வர அரவாணி என்ற ஒரு காரணமே போதுமாக இருந்தது.

இரவு 12 மணிக்கு மேலாகிவிட்டது.  காவல் நிலையத்திலும் நாலைந்து போலீசாரைத் தவிர வேறு யாருமில்லை. லாக்கப்பிலும் கைரதியைத் தவிர வேறு யாருமில்லை. அரண்டு போயிருந்தாள். பயத்தால் முகம் வெளிறிக்கிடந்தது. தன்னை கூட்டிப்போக ஏதாவது ஓட்டல் முதலாளிங்க வருவாங்களா என லாக்கப் கம்பிகளின் வழியாக வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  சப் இன்ஸ்பெக்டர், ஏட்டையா, மூன்று போலீஸ்காரர்கள் என ஒரு சிறப்பு புலனாய்வுப் பிரிவு  லாக்கப்பிற்குள் நுழைந்தது.  விசாரனையைத் தொடங்கியது.

’’ஏண்டி அரவாணி முண்ட எத்தன நாள இந்தத் தொழில் செய்யற.?’’

’’ஏழெட்டு வருசம்.’’

’’எத்தன ரூபா கிடைக்கும்.?’’

’’மாசத்துக்கு ஒரு ஓட்டலுக்கு நூறு நூத்தம்பது ரூபா கொடுப்பாங்க சார்.?’’

’’ஏண்டி,  தேவடியாத் தொழிலப் பத்திக் கேட்டா வேறெதையோ பத்திச் சொல்ற.?’’

’’இல்லைங்க, பாத்திரம் கழுவுற வேலைதான் பார்க்கறேனுங்க.’’ வார்த்தைகளை மென்னு முழுங்கினாள்.

“ஏண்டி பொட்டக் கண்டாரோழி முண்ட போலீசுகிட்டயே பொய் பேசறியா” என செவுட்டில் ஒரு அறைவிட்டார் 1084. நிலை தடுமாறிய கைரதியை முரட்டுத்தனமாக கட்டிப்பிடித்து  மூஞ்சி வாயெல்லாம் முத்தம் கொடுத்தார். மார்புகளைப் பிடித்து கசக்கினார்.  கதறிப் பார்த்தாள் கைரதி.  அவள் கதறலை விட வாக்கி டாக்கியின் சத்தம் ஓவராக இருந்தது.  அது வேற நேரங்கெட்ட நேரத்துல கிடந்து கரகரவென ஏதோ கத்திக்கிட்டே கிடந்தது.

சேலையை சரசரவென உருவினார் 1336.  பாஞ்சாலியின் சேலையை துரியோதணன் துகிலுரித்தது போல் என்ற உவமையை மட்டும் கண்டிப்பாகச் சொல்ல மாட்டேன்.   இதையே எத்தனை காலத்திற்குத்தான் சொல்வது. வேறு என்ன நவீன உவமையைச் சொல்லலாம் என்று யோசிப்பதற்குள் கைரதியை கீழே தள்ளி  ஜட்டியை பரபரவெனெ கழட்டினார். அவ்வளவு அவசரம்.  ஏற்கனவே ஓட்டையும் கிழிசலுமாக இருந்த ஜட்டி கிழிந்துகொண்டு வந்தது.  கைரதியின் சிறுத்த ஆண் குறி டபக்கென எட்டிப்பார்த்தது

 “சார், முன்னாடி ஓட்டையே இல்ல, குஞ்சாமணிதான் இருக்கு”.  ஏமாற்றத்தில் கத்தினார் 1336.

’’முன்னாடி ஓட்ட இல்லைனா என்ன பி.சி.! பின்னாடி ஓட்டை இருக்குல்ல, அதுல வுடுங்க.’’

’’சூப்பர் ஐடியா, இதுக்குத்தான் ஏட்டையா வேணுங்கிறது!’’

மானத்தை எப்படியாவது மறைத்துவிடலாமென்ற மூட நம்பிக்கையில்   முட்டிகளை மடக்கி நெஞ்சோடு சேர்த்து வளைந்து சுருண்டு கிடந்த கைரதியின் விலா எலும்புகளுக்கிடையில் லத்தியை சொருகி புரட்டிப்போட முயற்சித்தார் 1084.

கைரதியின் உடல் நகரவில்லை, லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.

’’அடிப் பொட்டத் தேவடியா முண்ட, கவுந்து படுடீ.’’

வலதுகால் பூட்ஸின்  வளைந்த முனை பொடனியைத் தாக்க, அய்யோ அம்மாவென அலறிக்கொண்டு கவுந்து படுத்தாள்

“யோவ் 1084, இப்படி கவுந்து கிடந்தா எப்படி செய்ய முடியும். முட்டிங்கால் போடச்சொல்லுயா” என்றார் சப் இன்ஸ்பெக்டர்.

1084 ம் 1336 ம் எதிரெதிர்புறம் நின்றுகொண்டு தரையோடு ஒட்டிக்கிடந்த வயிற்றுக்கடியில் லத்திகளைக் கொடுத்து  குண்டியைத் தூக்கி நிறுத்த  முயற்சித்தார்கள்.

“இதெல்லாம் சரிப்பட்டு வராது, பொச்சுமேல நாலு விளாசு விளாசினா தன்னால நடக்கும்” என்று சொல்லிக்கொண்டே கைரதியின் புட்டத்தில் லத்தியை வீசினார் ஏட்டையா.

அய்யய்யோ என்று அலறிய கைரதியை அதட்டி முட்டிங்கால் போடவைத்தார்கள். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி முட்டிங்கால் போட்டாள். அதற்குள் தனது மதிப்புமிக்க  காக்கி யூனிபார்மில் எந்தக் களங்கமும் படிந்துவிடக்கூடாதென்ற கடமையுணர்வோடு உடைகளையெல்லாம்  கழற்றிவிட்டு  தயாராக நின்றார் நமது சப் இன்ஸ்பெக்டர்.  விறைத்த குறியை கையில் பிடித்துக்கொண்டு கைரதியின் புட்டத்தை நோக்கிப்போனார். அவரும் முட்டிங்கால் போட்டு வேலையைத் தொடங்கினார்.  ஏதேதோ செய்து பார்த்தார்.  ஊ..கும்,  குறியை அந்த மலத்துவாரத்திற்குள் நுழைக்க முடியவில்லை.  பெருத்த தொப்பை வேற சீனப் பெருஞ்சுவர் போல் இடையில் கிடந்து இடைஞ்சல் செய்தது.  பாவம் சப் இன்ஸ்பெக்டர் ஐயா சோர்ந்து போனார்.  குழந்தை தவழ்வதைப் போல் தவழ்ந்துகொண்டே பேசினார்.

’’யோவ் என்னய்யா இது, உள்ள போக மாட்டேங்கிது’’

’’ஐயா, ஓட்ட ரொம்பச் சின்னதா இருக்கும் போல, அவ சூத்துல லத்திய வுட்டு நாலு வாட்டி இழுத்தா சரியாயிடுங்க..’’

’’ஏதாவது சீக்கிரம் செய்யுங்க ஏட்டையா, வேலைய முடிச்சிட்டு தூங்கறதுக்கு வீட்டுக்குப் போகனும்.’’

ஏட்டையா கண்ணசைக்க, 684 கைரதியின் மலத்துவாரத்தில் லத்தியை வைத்து அழுத்தினார். சற்று நேரம் போராடிய ஆசான வாயின் சுருங்கு தசைகள்  அழுத்ததைத் தாக்குப்பிடிக்க முடியாமல் விரியத் தொடங்கியது.  லபக்கென லத்தி உள்ளே நுழைந்தது. லத்தியை ஆழமாகச் சொருகி முன்னும் பின்னுமாக இழுத்தார். ஒவ்வொரு முறையும் லத்தியின் இரும்புப் பூண் மலக்குடலையும் பெருங்குடலையும்  குத்திவிட்டு திரும்பியது.  வெளியே உருவும் போது   இரும்புப் பூன் தகடின் ஓரங்கள் மலத்துவாரத்தின் சுருங்கு தசைகளை அறுத்துக்கொண்டு வெளியே வந்தது.  “அய்யய்யோ, அம்மம்மா” எனப் பெருங்குரலில் கதறினான் கைரதி. அன்னிச்சையாக உடல் திமிறியது.  உடனே 1084, தரையில் ஊன்றியிருந்த கைரதியின்  புறங்கைகளின் மீது ஏறி நின்று கொண்டார்.  பூட்ஸ் கால்களுக்கடியில் விரல்கள் நசுங்கியது.  வலிகள் ஒன்றின் மீது ஒன்வொன்றாய் ஏறி அமுத்த கண்கள் இருண்டது.  அரை மயக்கத்திற்குச் சென்றது கைரதியின் மூளை.

’’எஸ்.ஐ. சார், இப்ப வேலைய ஆரம்பிங்க.’’

மீண்டும் கைரதியின் புட்டத்தை நோக்கி திசைமாணியின் முள் திரும்புவது போல் திரும்பியது சப் இன்ஸ்பெக்டரின் ஆண் குறி.  இந்த முறை அதிகம் சிரமமிருக்கவில்லை. ஆசான வாயில் அதிகாரத்தின் தடித்த குறி சற்று எளிதாக நுழைந்தது.  செயல்படத் தொடங்கினார்.  மற்ற போலிஸ்காரர்களும்  நிர்வான சீருடையை அணிந்தார்கள்.  ஒருவர் பின் ஒருவராக இயற்கையின் புட்டத்தில் இயங்கினார்கள். ஆசான வாயில் தன் முறை வரும் வரை காத்திருக்க முடியாத இளம் கான்ஸ்டெபிள் 684 அதுவரை ஏன் சும்ம இருக்க வேண்டுமென உணவு வாயை குறி பார்த்தார். தொங்கிக்கொண்டிருந்த கைரதியின் தலை மயிரைப் பிடித்து இழுத்து தலையை மேலே தூக்கி வாயுக்குள் குறியை நுழைத்து  வேகமாகச் செயல்பட்டார்.

காரை பெயர்ந்து அங்குமிங்கும் ஓட்டைகளாக இருந்த லாக்கப் சுவர், அவசர அவசரமாக தனது ஓட்டைகளை மூடிக்கொண்டது.  எங்கே தனது ஓட்டைகளை நோக்கி வந்து விடுவார்களோ என அரண்டுபோய்க் கிடந்தது

வாதையில் முனகுவதற்குக்கூட சக்தியில்லாமல் இரவு முழுவதும்  மயக்கத்தில் சுருண்டு கிடந்தாள் கைரதி.  வாயில் எச்சிலும் ஆசான வாயில் இரத்தமும் ஒழிகிக் கொண்டே இருந்தது.

3

’’என்ன கேஸ் பி.சி.’’

காவலர்  766 கையில் கொடுத்த கடித்தையும் கைத்தாங்கலாக அழைத்துவரப்பட்ட கைரதியையும் நோட்டமிட்டவாறே கேட்டார் அரசு மருத்துவர்.

’’இயற்க்கைக்கு மாறான உடலுறவு சார்’’

’’என்ன பி.சி. இப்பெல்லாம் இந்த மாதிரி கேஸைத்தான் வலைவீசி புடிக்கிறீங்க போல”  நமட்டுச் சிரிப்புடன் கேட்டார் மருத்துவர்.

’’சரி, வெளிய நில்லுங்க, டெஸ்ட் செய்திட்டுக் கூப்பிடறேன். ’’

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ட்ராமா வார்டில் பரிசோதனை அறையில் மறைப்புக்கு பின்னே உயரமான படுக்கையில் கிடத்தப்பட்ட கைரதியை டாக்டரும் இரண்டு நர்ஸுகளும்  சோதித்தார்கள்.  உதடுகளிலும் மார்புகளிலும் பதிந்திருந்த பல் அடையாளங்களையும் இரத்தம் கட்டி நின்ற கன்றிய காயங்களையும் பார்த்துவிட்டு “ இது வேற கேஸ் மாதிரி தெரியுதே” என்று இழுத்தார் மருத்துவர்.   இறுதியில் மலத்துவாரத்தைப் பார்த்தபோது   எல்லோரும் அதிர்ந்தார்கள்.

’’யோவ், பி.சி. என்னய்யா குதத்தையே இவ்வளவு கொடூரமா கொதறி வச்சிருக்கீங்க, ரிப்போர்ட் அடிச்சேனா எல்லாரும் டவுசரக் கழட்டனும் தெரியுமில்ல? ’’ கோபமாகக் கத்தினார் டாக்டர்.

’’சார், இன்ஸ்பெக்டர் உங்ககிட்ட பேசறேன்னு சொன்னார்.’’

’’செய்யறதெல்லாம் செஞ்சிட்டு என்னத்தப் பேசறது. போன்ல பேசற வேலையெல்லாம் வேணாம், நேர்ல வந்து பார்க்கச் சொல்லு.’’

’’எஸ் சார்.’’

விரைப்பாக சல்யூட் அடித்துவிட்டு நகர்ந்தார் நம்ம 766.

4

ன்று கைரதி வழக்கில் தீர்ப்புச் சொல்லப்போறாங்களாம்.  கடந்த ஆறு மாதத்தில் கைரதி வழக்கு நீதிமன்ற ஊழியர்கள் மத்தியிலும் வழக்கறிஞர்கள் மத்தியிலும் பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. தீர்ப்பை கேட்பதற்காக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் திரண்டிருந்தார்கள்.  நூறு வழக்கறிஞர்களுக்கு மேல் இருக்கும். நடுவில் ஒரு அகலமான மேசை. இரண்டு புறமும் சேர்த்து பத்து மரச்சேர்கள்தான் இருக்கும். அதில் இரண்டின் கை உடைந்திருக்கும்.  ஒன்றின் கால்கள் கடகடவென ஆடும். தினமும் காலையில் எப்படியும் பத்து இருபது வழக்கறிஞர்கள் நின்று கொண்டுதான் இருப்பார்கள்.  இன்று அறுபதி எழுபது வழக்கறிஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.  உள்ளே இடமில்லாமல் வெளியே வராந்தாவிலும் நின்று கொண்டிருந்தார்கள்.  சிலர்  ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெளியே பத்திரிக்கையாளர்களும் காத்திருந்தார்கள்.

கைரதி சார்பாக வாதாடிய இலவச சட்ட உதவி மையத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட   வழக்கறிஞர்  தர்மராஜ் முன்னமே வந்து இடம்பிடித்து உட்கார்ந்துகொண்டார்.  சும்மா சொல்லக்கூடாது, இலவச வக்கீலாக இருந்தாலும் ஒவ்வொரு சாட்சியிடமும்  நாலு கேள்வியாவது கேட்டார். அவர் அடிக்கடி கைரதியைப் பார்த்தார். கைரதியோ யாரையும் பார்க்கவில்லை. வெளிக்கூரையில்  உட்கார்ந்திருந்த புறாக்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.  ஒவ்வொரு வாய்தாவிற்கு வரும் போதும் விசாரணையின் போதும் குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டு  புறாக்களைப் பார்ப்பதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.

எம்.சி. கிளர்க்கிடம் தீர்ப்பை வாசிக்கும்படி சொன்னார் நீதிபதி.  வழக்கம்போல் பைபிளை வாசிக்கிற சுதியில் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார் எம்.சி. கிளர்க்.

’’அரசு தரப்பில் விசாரிக்கப்பட்ட சாட்சியங்களின் படியும்  குற்றம்சாட்டப்பட்டவரின் மலத்துவாரம் தாரை என்ற இசைக்கருவியின் வாய் போல் விரிந்து பெரிதாக இருப்பதாகவும் மலத்துவாரத்திலும் புட்டத்திலும் சிராய்ப்பு காயங்கள் இருப்பதாகவும் குதத்தில் சிபிலிஸ் நோய்த் தொற்று இருப்பதாகவும் ஆகவே குற்றம் சாட்டப்பட்டவர் அடிக்கடி மலத்துவாரம் வழியாக இயற்கைக்கு மாறாக  உடலுறவு  செய்கிற வழக்கமுடையவர் என்று அரசு மருத்துவர் அளித்துள்ள சாட்சியத்தின்படியும் குற்றம்சாட்டப்பட்டவர் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377  இன் படி  குற்றம் புரிந்துள்ளார் என்று இந்த நீதிமன்றம் தீர்மானித்து அவருக்கு ஒரு வருட கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ 2,000/- அபராதத் தொகை விதித்தும் அபராதத் தொகை  செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு மாத கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கிறது.’’

நிசப்தத்தின் அகச் சலனக் கதிர்கள் மொத்தமும் கைரதியின் சபிக்கப்பட்ட உடலை  நோக்கிப் பாய்ந்தது. கைரதியின் மனதோ புறாக்களின் சுண்டுவிரல் பிடித்து நடைபழகிக்கொண்டிருந்து.  தீர்ப்பு எதுவும் அவள் காதில் விழவில்லை. புறாக்களின் குர்ர்ர்ர்ர்….  குர்ர்ர்ர்..  மொழிக்கு அவள் காதுகள் சிக்குண்டுகிடந்தது.

இப்போதும் கால்களை அகட்டி வைத்துதான் நின்றிருந்தாள். கூட்டி வைத்தால் வலி புடுங்கி எடுக்கும். மலத்துவாரத்திலிருந்த காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிவருகிறது.

ஆனால்  கக்கூஸ் போகும் போது சுண்டி இழுக்கும் உயிர் போகிற வலி  மட்டும் இன்னும் என்னமோ மாறவில்லை.