1

‘உன் இந்தியப் பொறுக்கித்தனத்தை என்னிடம் காட்டாதே’ – எவ்வளவு முயன்றும் வேறு எப்படியுமாக அதை என்னால் மொழிப்பெயர்த்துக்கொள்ள முடியவில்லை. சொல்லும்போது அவன் முகத்திலிருந்த கொதிப்பையும் கணக்கில் வைத்தால் இதைவிட மென்மையான ஓர் அர்த்தத்தை தருவிக்க முடியாது என்றுதான் பட்டது.

அந்த அமர்வு தொடர்ந்துகொண்டிருந்த அடுத்த ஒன்றேகால் மணி நேரமும் இந்த தாக்குதலிலிருந்து மீண்டு என்னை சாந்தப்படுத்திக்கொள்வதில்தான் முனைப்பாக இருந்தேன். சூழலை மறுதலித்து அவனை எதிர்த்து நிற்கக்கூடிய நிலையில் நானில்லை என்ற எதார்த்தம்தான் அவனது சொற்களைவிடவும் அதிகம் வதைப்பதாக இருந்தது. திரையில் காட்டப்படும் ஒளித்தகடுகளும் மிக மெல்லிய பின்னணி பெண்குரலும் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் அமானுஷ்ய அரங்கம், இருபத்தியோரு நாடுகளிலிருந்து வந்திருக்கும் முப்பது பிரதிநிதிகளின் கருப்பும் வெள்ளையும் மாநிறமுமான முகங்கள், தனிமனிதன் என்பதைத் தாண்டி அந்த கணத்தில் சுமத்தப்பட்டிருக்கும் தேசத்தின் அடையாளம், பெயருக்கு பின்னாலிருக்கும் படிப்பு, கழுத்தை இறுக்கிப் பிடித்திருக்கும் டை, கருப்பு பளிங்கைப் போல மின்னும் புதிய ஷூ – இவையெல்லாம் ஒருவனைச் சாத்விகமாக்கி கட்டிப்போடத்தானே வேண்டும்?

பயிலரங்க உரையில் என்னால் மேற்கொண்டு கவனம் செலுத்த முடியவில்லை – குறிப்பெடுத்துக்கொண்டிருந்த ஏட்டை மூடிவைத்துவிட்டு திரையை வெறித்தப்படி அமர்ந்திருந்தேன். அமர்வு முடிந்ததும் அவனை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பதிலும் தெளிவு கிடைத்தபாடில்லை. கல்லூரி மாணவனைப் போல முஷ்டியைக் கொண்டு மூக்கையா பெயர்க்கமுடியும்? ஏதாவது ஓர் எதிர்வினை – போக்குவரத்து சிக்னலில் அநாவசிய ஒலி எழுப்புபவனை ஏறிடுவதைப்போல குறைந்தபட்சம் முறைக்கவாவது வேண்டும். அதிகபட்சம் நடுவிரலை உயர்த்திக்காட்டலாம் – அந்த சூழல் அனுமதிக்கும் சலுகை அவ்வளவுதான். திரும்பி அவன் முகத்தைப் பார்த்தேன். நான் பார்ப்பது தெரிந்தே எவ்வித முகக்குறிப்புமின்றி திரையை வெறித்துக்கொண்டிருந்தான். முதல் நாளிலிருந்தே இதை அவதானித்திருந்தேன் – சொல்லிவிட்ட கருத்திற்கு கிஞ்சித்தும் பொருப்பேற்காத அவனது மெத்தனமான உடல்மொழி. அதுதான் பொறுக்கித்தனமாக எனக்கு பட்டது

2

மின்சார ரயில் நிலையத்திலிருந்து நடந்தே அடையக்கூடிய தொலைவில்தான் கனாயமா ப்ளாஸா அமைந்திருந்தது. பத்து நாட்களுக்கான துணிப்பொதியொன்றும் அத்தனை கனமாக இருக்கவில்லை – உருட்டிக்கொண்டே போய் வரவேற்பறையில் நின்றபோது, உயரமான ஆங்கிலேயனொருவன் அந்த மேசையில் எனக்கு முன்னால் நின்றபடி படிவங்களை நிரப்பிக்கொண்டிருந்தான்.

வரவேற்பு பணிப்பெண் பேசிய துண்டு துண்டான ஜப்பானிய ஆங்கிலம் எனக்கு புரிபடவில்லை அவளுக்கே புரிந்திருக்கவேண்டும். மன்னிப்பு கோருவதைப் போல ஏதோ செய்கை செய்துவிட்டு, சில அட்டைகளை எடுத்து காட்டினாள். கேட்கவேண்டிய கேள்விகளைத் தனி தனியாக தட்டச்சு செய்து தயாராக வைத்திருக்கிறார்கள். காலை விமான நிலையத்தில் இறங்கியதிலிருந்தே இப்படியான அட்டைகளைப் பார்த்துக்கொண்டுதான் வந்திருந்தேன். ஆங்கில போதாமை குறித்த சுதாரிப்பு பலமாகவே இருந்தாலும், நம்மவர்களைப் போல அதற்கான தாழ்வுணர்ச்சி எதுவும் அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை.

‘சீனா / வூஹானுக்கு சமீப வாரங்களில் பயணித்திருந்தீர்களா?’

‘காய்ச்சல் / சளி / மூச்சுத் திணறல் நோய்களுக்கு சமீபத்தில் சிகிச்சை பெற்றீர்களா?’

இரண்டுக்கும் ‘இல்லை’

‘ஃப்யூஜிட்டா மருத்துவ பல்கலைக்கழக பயிலரங்கிற்காக வந்திருப்பவரா?’

‘ஆம்’

‘கனிவுடன் வரவேற்கிறோம். உங்களுக்கான அறை ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது’

‘நன்றி’

‘நிர்வாக காரணங்களுக்காக, தயவு செய்து தங்களது கடவுச்சீட்டைக் காட்டமுடியுமா?’

அட்டைகள், பதில்கள், சம்பிரதாயங்களெல்லாம் முடிந்ததும், ஒரு சிறிய படிவத்தை நிரப்பி, பல்கலைக்கழக சார்பில் அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் கைய்யொப்பமிட சொன்னாள். முன்னர் நின்றிருந்தவனும் அதில் கையொப்பமிட்டதைக் கவனித்திருந்தேன். குறிப்பேட்டைத் தள்ளிவைக்கும் போதுதான் அவனது பெயரைப் பார்த்தேன் – முதற்பாதி கிறுக்கெழுத்தில் இருந்ததால் புரியவில்லை.

இரண்டாம் பாதி பெரிய எழுத்துகளால் தெளிவாக எழுதப்பட்டிருந்தது – செரென்காவ் – ருஷ்ய பெயர். அவனைத்தான் முதலில் ஆங்கிலேயன் என்று நினைத்திருக்கிறேன். எழுபது வருடங்களை கடந்து வந்துவிட்டாலும் துரைமார்கள் மீதிருக்கும் விசுவாசம் நமக்கெப்போதும் குறையப்போவதேயில்லை.

அறை எண்: 323. கதவுகளில் பொறிக்கப்பட்டிருக்கும் இலக்கங்களைப் பார்த்தபடியே நடந்துகொண்டிருந்தேன். 320, 321… அடுத்த அறை திறந்திருந்திருந்து… கடந்து 323க்கு செல்வதற்கு முன் திறந்திருந்த அறையினுள் அந்த ருஷ்யன் நிற்பதைக் கவனித்தேன். அவனும் பார்த்துவிட்டான்.

முகமனுக்கான ‘ஹை’களைப் பரிமாறிக்கொண்டோம்.

என் அறையை திறந்துகொண்டிருந்த போது, அவன் வெளியே வந்து பேச்சு கொடுத்தான்.

‘நீயும் இந்த பயிலரங்கிற்காகத்தான் வந்திருக்கிறாயா?’ – அந்த குரலிலிருந்த மிடுக்கை வைத்து சொன்னால், அவனது you நிச்சயம் ‘நீங்களும்’ என்பதாக இருக்கமுடியாது.

‘ஆமாம். நீயுமா?’ – மனதிற்குள் ‘நீ’ என்று வைத்துதான் பேசினேன்.

‘நல்லது. நான் டெனிஸ்’ என்று கையை நீட்டினான். என் பெயரைச் சொல்லி கைக் குலுக்கினேன்.

‘எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறாய்?’

‘இந்தியா’

‘நான் மிகச் சரியாகவே ஊகித்திருந்தேன். ருஷ்ய பல்கலைக்கழகத்தில் உன்னைப்போலவே ஒரு சிலோன்காரன் என்னுடன் படித்தான்’

‘சிலோன் என்பது இலங்கை. வேறு நாடு. இந்தியா அல்ல’ என்று நிதானமாக சொன்னேன்.

‘ஓ..பரவாயில்லை. முகவெட்டுகள் ஒரே மாதிரியாக இருப்பதால் குழப்பிக்கொண்டுவிட்டேன்’

‘பரவாயில்லை’ – விடைபெற்றுக்கொண்டோம். எனக்கு ஏனோ அப்போதே அவனைப் பிடிக்கவில்லை.

**

அந்த பின்மதியத்தில் அறையின் கதவு தட்டப்பட்டது. தெரியாத தேசத்தில் அறிமுகமான அந்த முதல் மனிதனாகத்தான் இருக்கவேண்டும் என்று மனதிற்கு பட்டது.

அவனேதான்.

‘ஹல்லோ.. மதிய வணக்கம்’

‘உள்ளே வா’

‘அதற்குள் அனைத்தையும் அடுக்கி நெறிப்படுத்தியிருக்கிறாய். அட்டகாசம்’ – கண்களால் அறையை மேய்ந்தபடி சொன்னான்.

அவன் உள்ளே நுழையும்போது கூகிள் மொழிமாற்று செயலி மூலம், அறையிலிருந்த ஜப்பானிய மாத இதழை வாசித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன். செயலியைப் பரிசோத்து பார்த்தேன் என்று சொல்லலாம். அந்த இதழைக் கையிலெடுத்து அவனும் புரட்டிப்பார்த்தான்.

‘உட்காரு செரென்காவ்’

‘ஆ.. என்ன சொல்லி அழைத்தாய்.. அந்த பெயர் உனக்கெப்படி தெரியும்?’

‘வரவேற்பு பதிவேட்டில் பார்த்திருந்தேன்’

‘ச்செரங்க்காஃப் – அப்படி உச்சரிக்கவேண்டும். நீ வேறு ஏதோ சொன்னாய்’ என்று சிரித்தான்

‘காஃப்..’ என்று ஒருமுறை உச்சரித்து பார்த்தேன்

‘ஆம்.. ச்செரங்க்காஃப்’

‘volkswagen என்பதிலும் v-ஐ f-என்ற ஓசையுடன்தான் உச்சரிக்கவேண்டும்.. அதை யோசித்துப்பார்த்தேன்.’ – இந்த ஒப்பீட்டை அவன் ரசிக்கவில்லை. ‘உன்னை ச்செரன் என்று அழைத்துக்கொள்கிறேன்’

‘இல்லை. கண்டிப்பாக இல்லை. அப்படியாக குடும்பப்பெயர்களைச் சுருக்கி அழைப்பதை நாங்கள் விரும்பவதில்லை. நீ டெனிஸ் என்று அழைத்தால் மகிழ்ச்சி’

அந்த உடனடி மறுப்பு சுருக்கென்று இருந்தது. ஏன் நம்மால் இப்படியெல்லாம் கறார்த்தனமாக பேசமுடியவில்லை? சிலர், பெயருக்கு பின்னாலிருக்கும் அப்பாவின் பெயரைக் கொண்டு அழைப்பார்கள், சிலர் அதையே பாதியாக சுருக்கி அழைப்பார்கள். அவையெதற்கும் எப்போதும் எதிர்ப்பு காட்டியதில்லை.

பேச்சு இருவரின் பொதுத்தளமான துறைசார் விருப்பங்கள் லட்சியங்களென கொஞ்சம் அலைந்தது.

மேசை மீது நான் வைத்திருந்த புத்தகங்களைக் கையிலெடுத்து பார்த்தபடி, ‘இது என்ன மொழி?’ என்றான்.

‘தமிழ்’

‘மருத்துவ புத்தகங்களா?’

‘இல்லை. இலக்கியம். பயணத்திற்காக கொண்டுவந்திருந்தேன்’

‘அருமை.’

‘உங்கள் நாட்டு படைப்புகளையும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன்’ – இதைச் சொல்லியிருக்க வேண்டாம் என்று உடனே தோன்றியது.

‘அப்படியா? உனக்கு ருஷ்ய மொழி தெரியுமா?’

‘இல்லை. மொழிப்பெயர்ப்புகளைச் சொல்கிறேன்’

‘அப்போது நீ எங்கள் படைப்புகளை வாசிக்கவில்லை. மொழிப்பெயர்ப்புகள் என்பது வேறு ஏதோ. அவற்றில் அசலின் ஜீவன் இருக்கமுடியாது.’

நான் எதுவும் பதில் சொல்லவில்லை.

‘யாரையெல்லாம் வாசித்திருக்கிறாய்?’

‘தஸ்தயேவ்ஸ்கி, செகாவ்…’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையில் குறுக்கிட்டு, ‘ச்செக்காஃப்’ என்று திருத்தினான்.

‘இது என்ன உனக்கு மனநோயா?’ – ஒரு சிரிப்போடு கேட்டேன்

‘எது?’ என்றான் சிரித்துக்கொண்டே

‘உச்சரிப்பில் பிழை கண்டுப்பிடிப்பது..’

பலமாக சிரித்துக்கொண்டான்.

தான் முன்னரே இருமுறை அந்தப் பல்கலைக்கழகத்திற்கு வந்திருப்பதாகவும், நகோயா பற்றி ஓரளவு தனக்கு தெரியும் என்றும், ஏதேனும் உதவி வேண்டுமானால் தயங்காமல் கேட்டுவிடுமாறும், எங்கேனும் சுற்றிப்பார்க்க வேண்டுமானால் தானும் துணைக்கு வருவதாகவும் அவன் சொல்லிக்கொண்டிருந்தான். நிஜமாகவே எனக்கு கொஞ்சம் நிம்மதி பிறந்தது. பெரும்பாலும், இதுப்போல தற்செயலாக எல்லாம் சரியாக அமைந்துவிடுவது கொஞ்சம் ஆச்சர்யமாகவும் இருந்தது.

‘மாலை க்ரெளன் ப்ளாஸாவில், வரவேற்பு விருந்து இருக்கிறது தெரியும்தானே? நீ சற்று ஓய்வெடுத்துக்கொள். புறப்படும்போது நான் சொல்கிறேன்’

இப்போது அவனைக் கொஞ்சம் பிடித்துவிட்டதைப் போல இருந்தது.

**

ஆர்ப்பாட்டமில்லாத வரவேற்பு விருந்து – பல்கலைக்கழக தலைமை மருத்துவர் முன்னின்று நிகழ்வை ஒருங்கிணைத்துக்கொண்டார். ஒவ்வொருவராக ரத்தின சுருக்கமாக தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள். டெனிஸ் மட்டும் ஏற்கனவே தான் அங்கு வந்திருப்பதையும், அந்த பல்கலைக்கழகத்தின் பெருமைகளையும் குறிப்பிட்டு சொல்லி தொழிற்முறை மேடை பேச்சாளன் போல கொஞ்சம் நீளமாக கதையளந்துகொண்டிருந்தான். செயல்முறை தேர்வுகளில் அதிக மதிப்பெண் வாங்கிட, பேராசியரைப் பற்றி அளவிற்கதிகமாக வியந்தோதும் கல்லூரி தோழியொருத்தியின் நினைவு எனக்கு வந்துபோனது.

அறிமுகப் படலம் முடிந்ததும், எல்லோரும் கூடி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். பல நாடுகளுக்கு நடுவிலான ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நிகழ்வைப் போல காண்போருக்கு தோன்றும் காட்சி.

‘சரி வா உணவிற்கு போகலாம்’ டெனிஸ் அழைத்தான். நான் ஒரு திசையில் நகர, எதிர் திசையில் கைக்காட்டி கேட்டான்.

‘மது எடுத்துக்கொள்ளவில்லையா?’

‘இல்லை. வேண்டாம்.’

‘ஜப்பானுடைய பிரத்யேக மதுவகை ஒன்று இருக்கிறது.. சாகே.. நீ முயற்சிக்கவில்லையெனில் உன்னுடைய இந்தப் பயணம் அர்த்தமற்றது என்று இப்போதே சான்றளித்துவிடுவேன்’

‘நீ எடுத்துக்கொள். நான் உணவிற்கு போகிறேன்’

அவனிடம் பதிலில்லை என்பதால், ’அல்லது ஒன்றும் பிரச்சனையில்லை.. நான் காத்திருக்கிறேன். நீ வந்ததும் ஒன்றாகவே உணவிற்கு போகலாம்’ என்றேன்.

‘நான் ஒன்றும் குடிகாரனெல்லாம் இல்லை. ஒரு நாகரிகத்திற்காகத்தான் குடிக்கலாம் என்று சொன்னேன், அவ்வளதுதான்..’

‘அட.. நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை. ரஷ்யாவிற்கு வோட்காதானே தேசிய பானம்? பார்.. இங்கே வோட்கா கூட இருக்கிறது… நீ குடித்துவிட்டு வா’

கணநேர மெளனம். ’இதைத்தான் உன் மொழிப்பெயர்ப்பு இலக்கியங்களிலிருந்து நீ கற்றுக்கொண்டாயா?’

‘மன்னிக்கவும். என்ன சொன்னாய்..’, முதன்முறையே சரியாகத்தான் கேட்டிருந்தது.

அவன் நிதானமாக மீண்டும் அதையே சொன்னான். அமிலத்தில் தோய்த்தெடுத்த வார்த்தைகள். ஆனால் அதே நிர்மலமான முகம். நான்தான் கொஞ்சம் குழம்பிப் போனேன்.

ஒரு புன்னகையை மட்டும் காட்டிவிட்டு, உணவு மேசைக்கு நகர்ந்துவிட்டேன். அவன் மதுபானங்கள் இருந்த மேசைக்கு போய்விட்டான் என்பது என் முதுகுக்கு பின்னால் தெரிந்தது.

உணவின் போது, யார் இந்த உரசலை அப்போது ஆரம்பித்து வைத்தது என்று யோசித்து பார்த்தேன். அந்த மதுவகையை ருஷ்யாவின் தேசிய பானம் என்று நான் சொல்லியதில் எந்த பொய்யும் இல்லை. ஒரு நகைச்சுவை என்ற அளவில் கூட அதில் எதுவுமில்லை. அது ஒரு fact. அதற்கு பதிலீடாக தொடுக்கப்பட்ட கணை – அதில் எத்தனை கசப்பு. காத்திருந்தவன் போல கொஞ்சமும் யோசிக்காமல்தான் அதைச் சொன்னான். ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த ஒரு கருத்து; வக்கிரமான ஒரு பார்வையைத் தீர்மானமாக்கிக் கொண்டு, வாய்ப்பு கிடைக்கும்போது வீழ்த்தும் சிறுபுத்தி. நிமிர்ந்து அவனைப் பார்த்தேன் – மலேசியாவிலிருந்து வந்திருந்த ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டு மதுவருந்திக் கொண்டிருந்தான்.

என்ன பேசிவிடப்போகிறான் – ‘நான் முன்னரே இங்கு வந்திருக்கிறேன். ஜப்பானைப் பற்றி எனக்கு தலைகீழாக தெரியும். என்ன உதவி வேண்டுமானாலும்…’ – அதே புராணமாகத்தான் இருக்கவேண்டும்.

அவனும் சரியாக அதே கணத்தில் என்னைத் திரும்பிப் பார்த்தான். நான் கையை உயர்த்திக் காட்டினான். உண்டு முடித்துவிட்டாயா என்று செய்கையில் கேட்டான். நான் பதில் சமிக்ஞை காட்டுவதற்குள் மீண்டும் அவளிடம் பேச ஆரம்பித்திருந்தான்.

**

அதிகாலை ஐந்தரை மணிக்கு அழைப்பு மணி ஒலித்தது.

‘நேற்று சீக்கிரம் அங்கிருந்து வந்துவிட்டாய். அதன் பின்னர் ஒரு சிறிய இசை நிகழ்ச்சி நடந்தது.’

‘ஓ.. பரவாயில்லை. அசதியாக இருந்தது. உறங்கலாம் என்று வந்துவிட்டேன்’

‘நான் நினைத்ததுதான் சரிதான். அதனால்தான் இரவில் தொந்தரவு செய்யவில்லை. விஷயம் இதுதான். இன்று ஏழு மணிக்கெல்லாம் நிகழ்வு ஆரம்பமாகிறது. புறப்பட்டு தயாராய் இரு. இங்கிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் நடக்கவேண்டும்.’

சொல்லிவிட்டு அவன் நகர்ந்ததும், முகத்தைக் கழுவிக்கொண்டு வந்து முந்தைய இரவு நிகழ்ந்ததை யோசித்துப் பார்த்தேன்.

‘ருஷ்யாவின் தேசிய பானம்’ என்பது உண்மையாகவே இருந்தாலும், ஒருவிதமான பரிகசிக்கும் தொனியில், அவனைச் சீண்டவே அப்படி சொல்லியிருக்கிறேன். அப்படி அவ்விடத்தில் சொல்வதற்கு வேறெந்த முகாந்திரமும் இருக்கவில்லை. எனக்குதான் அவனுடன் மோதவேண்டுமென்ற எண்ணம் இருந்திருக்கிறது என்று திடீரென தோன்றியது. அப்படியில்லை என்று மறுப்பதற்கு காரணங்களை யோசித்துப் பார்த்தேன். ஒன்று கூட பிடிபடவில்லை.

சரி, ஏன் அவனிடம் மோத முனைகிறேன் என்பதற்கு காரணம் யோசித்துப் பார்த்தேன். சாத்தியங்கள் குடைய ஆரம்பித்தன – ஒரு வெள்ளைக்காரனிடம் தன்னை நிரூபிக்க நினைக்கும் தத்தளிப்பு, அல்லது அதுதான் நம் பிராந்தியத்து இளைஞனுக்கென நிந்திக்கப்பட்ட எதார்த்தம், அல்லது உள்ளுக்குள் ஊறிப்போயிருக்கும் ஏதோவொரு பெருமித உணர்வு தன்னை மீறி, இன்னொருவனுக்கு முன் ஆட்டம் காணும்போது உண்டாகும் பதற்றம், அல்லது ஏன் இப்படி சிறுமையாக உணரவேண்டும் என்ற தன்மீதேயான கோபம் புறத்தில் வெளிப்படுத்தும் மீறல் – இன்னதென்று எதிலுமே ஒரு புள்ளியை வைத்துவிட முடியவில்லை. நிலையான்மை ஒரு மாதிரி அயர்ச்சியாக இருந்தது.

ஆனால், வரும் நாட்களிலும் இது இப்படித்தான் இருக்கப்போகிறது என்பது மட்டும் தெளிவாகப் புரிந்துபோயிற்று.

**

பாண்ட்டேன்  மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் ஏற்பாடாகியிருந்த பயிலரங்கிற்குள் நுழைந்ததும், முதலில் கண்ணில் பட்டது ஓர் இந்திய துணைக்கண்டத்து முகம். கடலில் தத்தளிப்பவன் பார்வையில் தெரியும் கரை கொடுக்கும் உத்வேகம்.

குதூகலத்தில், தாவிச் சென்று கையைப் பிடித்து பெயரைக் கேட்டேன்.

‘சந்தீப்சிங் என் பெயர். பயிலரங்கிற்காக வந்திருக்கிறீர்களா?’ – ஹிந்தியில் பதிலளித்தான்

‘ஆமாம். நீங்களுமா?’

‘நீங்கள் மதராஸியா? ஹிந்தி தெரியாதா?’

‘என்னால் புரிந்துகொள்ள முடியும். பேச வராது’ என்றேன். அப்படி நான் சொல்லியிருக்க வேண்டாம் என்று அவன் மேற்கொண்டு பேசிய உத்திரப்பிரதேசத்து ஹிந்தி உணரச்செய்தது.

அவன் கடந்த இரு மாதங்களாகவே அங்குதான் இருப்பதாகவும், சிறப்பு பயிற்சிக்காக மூன்று மாதங்கள் அந்த மருத்துவமனையில் பணியாற்றுவதாகவும், மருத்துவமனை உள்ளேயே பணி மருத்துவருக்கான அறையில் தங்கியிருப்பதாகவும், என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்றும் அவனது நீண்ட ஆலாபனையிலிருந்து இங்குமங்குமாக கொஞ்சம் வார்த்தைகளைப் பிடித்து நானே அர்த்தப்படுத்திக்கொண்டேன்.

‘என்னால் உங்களுடைய ஹிந்தியைப் புரிந்துகொள்ள முடியவில்லை’ – கிட்டத்தட்ட கையெடுத்து கும்பிட்டுவிட்டேன்.

பிறகுதான் அவனுக்கு ஆங்கிலத்தில் தகராறு என்பது புரியவந்தது. நாற்பத்தி நான்கை ‘ப்பார்ட்டி ப்போர்’ என்று உச்சரிக்குமளவிற்கு ஹிந்தியில் ஊறியவன். அப்போது அசம்மந்தமாக எனக்கு, அவனை டெனிஸிடமிருந்து இந்த விஷயத்தில் பாதுகாக்க வேண்டுமென்றுதான் முதலில் தோன்றியது – ஐயோ, இதென்ன திடீர் கூடுதல் பொறுப்பு?

அதே நேரம், அந்தப் புது இடத்தில், டெனிஸையே சார்ந்திருக்கவேண்டிய நிர்பந்தம் இனியில்லை என்ற சுதந்திரம் உற்சாகமாக இருந்தது.

ஆனால், அடுத்தடுத்த நாட்களில், சந்தீப்பால் பயிலரங்க நேரத்திலான சிறு சிறு உதவிகளை மட்டும்தான் செய்யமுடிந்தது. புகாரெதுவும் இல்லை – பயிற்சி மாணவனுக்கான பணிச்சுமை எனக்கு தெரியும்.

சந்தீப்சிங்கை ஒரு கோமாளி போலவே டெனிஸ் பார்ப்பதாக எனக்கொரு சூசக உணர்வு. மூவருமாக கூடிப் பேசிக்கொள்ளும் தருணங்களில், டெனிஸ் சாதாரணமாக சிரிக்கிறானா, இல்லை அதிலெதுவும் பரிகாசம் இருக்கிறதா என்று சவாலும் நெருக்கடியுமாகவே என் பொழுது கழிந்தது. சந்தீப்சிங்கை வைத்து என்னை காலி செய்ய அவன் முயற்சிப்பதாக தோன்றிய மூன்றாவது நாளிலிருந்து, மூவரும் தனியாக சந்தித்துக்கொள்ளும் தருணங்களை வலிந்து தவிர்க்க ஆரம்பித்தேன்.

இதையெல்லாம் வெளிப்படையாக டெனிஸிடம் உடைத்துப் பேசிவிட நினைத்தேன். அவனது அருகாமை உண்டாக்கும் மனச்சலனம் அநாவசியமாக அமைதியிழக்கச் செய்வதாக தோன்றியது. அது நிஜமாகவே அநாவசியம்தானா என்று யோசித்து அதிலிருந்து மீள முயற்சிக்கும் நேரத்தில் டெனிஸ் அடுத்த அடியைக் கொடுப்பதாகப் படும். அவனே குற்றவாளி; அவனே மீட்பன். இந்த கண்ணியில் நான் வசமாக அகப்பட்டுக்கொண்டுவிட்டேன்.

காலையும் மாலையும் நடந்து வரும் மூன்று கிலோமீட்டர் தூரம், மூன்று உணவு இடைவேளைகள் – இவை மட்டும்தான் பேசிக்கொள்ள வாய்ப்பிருக்கும் நேரம். மற்றபடி கருத்தரங்க உரைகள், மாதிரி அறுவை அரங்க பயிற்சிகள், கேள்வி பதில் நேரங்கள், விவாதங்கள் என்று ஒரு நாளுக்கு பன்னிரெண்டு மணி நேரங்களுக்கு மேல் நம்மை முழுமையாக உட்படுத்தும் அட்டவணை.

மூன்றாவது நாள் முடிவில் சில முடிவுகளை யோசித்தேன். அதன்படி காலையில் அவனுக்கு முன்னரே புறப்பட்டு, சம்பிரதாயமாக அவனிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிடுவது; உணவு இடைவேளையின் போது ஒரு பெரிய குழுவிற்குள் போய் அமர்ந்துகொண்டு அவனுடனான தனிப்பட்ட உரையாடலைத் தவிர்ப்பது; அன்றைய நாளின் கடைசி அமர்வு அசுவாரஸ்யமாக இருக்கும்பட்சத்தில் முன்னரே புறப்பட்டு அறைக்கு வந்துவிடுவது. வெளியே நோய்தொற்று அபாயம் இருப்பதால், எங்கும் ஊர் சுற்றப் போவதில்லை என்று முன்னரே முடிவு செய்தாகிவிட்டது. அறைக்கு திரும்பியதும், பொத்தென மெத்தையில் சரிந்துவிடுவதோடு அந்த நாள் நிறைவடைந்துவிடும்.

அடுத்த இரண்டு நாட்களை இப்படியாக வெற்றிகரமாக ஓட்டிவிட்டேன். இன்னும் ஐந்தே நாட்கள் என்று கணக்கிட்ட போது, ஏதோ அவனுக்கு பயந்து நான் பதுங்குவதைப் போன்ற எண்ணம் வந்தது.

**

அடுத்த காலையும் என் கணக்குப்படியே சீக்கிரம் புறப்பட்டு போய்விட்டேன். பேச்சுத்துணையின்றி மைனஸ் டிகிரி குளிரில் அந்த தூரத்தைக் கடப்பது முதலில் அலுப்பாகத்தான் இருந்தது. தோலினாலான நீண்ட மேலங்கி, கம்பளி கையுறைகள், குரங்கு குல்லா, இந்த பாழாய்ப்போன தொற்றுக்கெதிரான என்95 முகக்கவசம் – இவையத்தனையும் சுமந்து கொண்டு கிட்டத்தட்ட ஓடுவதைப் போல நடைபாதையில் போய்க்கொண்டிருக்கும் போது, ரொம்பவே சிறிய குட்டை பாவாடையுடன், மெல்லிய முகக்கவசம் அணிந்திருக்கும் இளம்பெண்ணொருத்தி சர்வசாதாரணமாக நடந்தே நம்மைக் கடந்துப் போய்க்கொண்டிருப்பாள். அவளது இரு கால்களுக்கு இடையில் புகுந்துவரும் குளிர்காற்றை நேரடியாக என் தண்டுவடத்தில் உணர்ந்துகொண்டிருப்பேன். அந்த நாட்டினரின் முகமெல்லாம் ஒரே ஜாடையிலிருக்கும் என்ற கற்பிதத்தை உடைத்து, கவசங்களையும் மீறி முக லட்சணங்கள் பிடிபட ஆரம்பித்திருந்தன. இப்படியாகத்தான் தனியான அந்த நடை பயணம் சுவாரஸ்யமாகிவிட்டிருந்தது.

அன்று மாலை வழக்கத்தைவிட இரண்டு மணி நேரங்கள் முன்னதாகவே கூட்டத்தைக் கலைத்துவிட்டார்கள். வேறு வழியில்லை; டெனிஸுடன்தான் அறைக்கு திரும்பியாக வேண்டும்.

‘வரும் வழியில் ஓர் இந்திய உணவகம் இருப்பதைப் பார்த்தேன் – பிந்திக்கா. இரவு உணவை அங்கே வைத்துக்கொள்ளலாமா?’

‘இல்லை வேண்டாம்’ உடனே மறுத்துவிட்டேன். நாட்டின் பெயரை ஒரு விவாதத்திற்குள் கொண்டுவந்துவிடும் எந்த ஒரு வாய்ப்பையும் நான் அவனுக்கு அனுமதிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். இருவருக்குமிடையிலான பனிப்போருக்கு அதுதான் மையப்புள்ளி என்று மனம் அருதியிட்டிருந்தது. இத்தனைக்கும் கிரிக்கெட் பார்க்கும் நேரத்தைத் தவிர, நான் அப்படியொன்றும் தேசப்பற்று பீறிடும் ஆளெல்லாம் இல்லை. எதிரியென்று ஒருவன் முளைக்கும்போது இப்படியான பிரயோஜனமற்ற உணர்ச்சிகளெல்லாம் பெருக்கெடுத்துவிடுகின்றன. அவைதான் உள்நாட்டில் வெறுத்தொதுக்கும் உத்திரப்பிரதேசத்துக்காரனைக் இப்போது காபந்து பண்ணச் சொல்லி பணிக்கிறது.

‘ஏன்? ஏற்கனவே முயற்சித்து பார்த்து திருப்தியில்லையா?’

‘அப்படியில்லை. இருக்கும் பத்து நாட்களில் இந்த ஊர் உணவுகளையே எடுத்துக்கொள்ளலாம் என்றுதான்’

‘அதுவும் சரிதான். எனக்கு கொஞ்சம் பொருட்கள் வாங்கவேண்டும். அந்த லாஸன் அங்காடிக்கு போய்விட்டு அறைக்கு செல்லலாம்’

லாஸனிலிருந்த பணிப்பெண்ணுக்கு மிகவும் பழக்கப்பட்ட வடக்கிந்திய முகம். அடையாள அட்டை, அவளது பெயர் ‘பாயல்’ என்று அறிவித்தது. நான் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

‘நீங்கள் இந்தியரா?’ அவளே கேட்டாள்

‘ஆம். நீங்களுமா?’

‘இல்லை. நான் நேபாளி’ – சிரிக்கும்போது அந்த முகம் இயல்பைவிட கொஞ்சம் அவலட்சணமாகிவிட்டதைப் போல இருந்தது.

வெளியே வந்ததும் டெனிஸ் கேட்டான், ‘அவள் உங்கள் நாட்டினளா?’

‘நேபாளி’

‘எல்லாம் ஒன்றுதானே..’

‘மறுபடியும் இதைச் செய்யாதே. நீ அத்தனை முட்டாளில்லை என்பது எனக்கு தெரியும். நிச்சயமாக உனக்கு தெரிந்திருக்கும், இந்தியா வேறு, நேபாள் வேறு, இலங்கை வேறு. அனைத்தையும் ஒரே அடைப்பிற்குள் வம்படியாக வைத்து சிறுமைப்படுத்த முயல்கிறாய். செரென்காவ் என்ற உன்னுடைய குடும்பப் பெயரை சுருக்குவதை எப்படி நீ அனுமதிக்க மாட்டாயோ, அதேப்போல இதை என்னாலும் அனுமதிக்க முடியாது’

நடையை நிறுத்தி நான் இப்படி சத்தம் போடுவேன் என்று அவன் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. எனக்குமே நான் செய்தது வியப்பாகத்தான் இருந்தது. இந்தவொரு வெடிப்புக்காக அந்த நடையின் அத்தனை தூரத்திலும் நான் காத்துக்கொண்டிருந்திருக்கவேண்டும். அவனைப் போல கறாராக பேசிப்பார்க்கும் ஆசைதான் இப்படி எனக்கு வெளிப்பட்டிருக்கவேண்டும்.

‘உனக்கு நிறைய கோபம் வருகிறது’

‘கோபமில்லை. மனதில் பட்டதைத்தான் சொன்னேன்’

கொஞ்சம் தூரத்திற்கு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

‘உனக்கு திருமணம் ஆகிவிட்டதா?’ சம்மந்தேயில்லாமல் திடீரென இப்படி கேட்டான். பேச்சை இயல்பிற்கு கொண்டுவர முயல்கிறான் என்று பட்டது.

‘ஆகிவிட்டது. குழந்தையும் இருக்கிறது. உனக்கு?’

‘விவாகரத்து ஆகிவிட்டது’ – சொல்லிவிட்டு சிரித்தான். கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், அவர்கள் கலாச்சாரத்திற்கு அது சாதாரணமாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

‘நான் பார்த்தவரை இந்தியர்களுக்கு கொஞ்சம் கோபம் அதிகமாகத்தான் வருகிறது.’

‘அப்படி பொதுமைப்படுத்த அவசியமில்லை’

‘இல்லை.. ருஷ்ய பல்கலைக் கழகத்திலும் நிறைய இந்தியர்களிடம் இதைக் கவனித்திருக்கிறேன்.. இத்தனைக்கும் அவர்களின் தேவைக்காக அண்டி வந்திருக்கும் இடம். அங்கேயே அப்படித்தான் நடந்துகொள்வார்கள்’

‘தேவை என்றெல்லாம் இல்லை. இந்தியாவில் ஆகும் செலவில் உங்கள் நாட்டில் மூன்றில் ஒரு பங்குதான் ஆகும். அதுதான் காரணம்.’

அவர்களது கல்விக்கான செலவு மலிவு என்று சொல்லவந்ததை அவர்களின் மருத்துவக்கல்வி மலினமானது என்று நான் சொல்லியதாக உடனே மறுக்க முன்வந்தான். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றுதான் தோன்றியது.

‘ஆமாம். ருஷ்ய மருத்துவக் கல்வியை இந்தியாவில் யாரும் அவ்வளவு பொருட்படுத்துவதில்லை. மீண்டும் உள்ளே நுழையும் முன்னர், தகுதித் தேர்வொன்று வைத்து, அதில் தேர்வாகும் ஆட்களுக்கு மீண்டும் எங்கள் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு வருடம் பயிற்சி அளித்தப்பிறகுதான், நீங்கள் அளிக்கும் பட்டத்தையே அங்கீகரிப்போம்’

இருக்கா இல்லையா என்றிருந்த உரசல், இந்த புள்ளியில் பட்டவர்த்தனமாவிட்டது. மேற்கொண்டு இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அன்றுதான் அந்நாட்களின் நிம்மதியான உறக்கத்தை நான் அரவணைத்துக்கொண்டேன்.

3

அன்றைய தினம் அறுவை சிகிச்சைக்கு வரப்போகும் நோயாளியின் சுருக்கமான நோயறிக்கை வாசிக்கப்பட்டு, ஸ்கேன் படங்கள் மற்றும் அவற்றின் முப்பரிமான கோணங்களின் வழியான திட்டங்கள் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

சந்தீப்தான் நோயறிக்கையை வாசித்தான். இரண்டு மூன்று இடங்களில் மொழி தடுமாற, பதற்றத்தில் விவரங்களைக் கொஞ்சம் ஏறுக்குமாறாக வாசித்துவிட்டான். மூத்த பேராசியர் ஒருவர் அதைச் சுட்டிக்காட்டி சரிசெய்யும்போது பின்னாலிருந்து டெனிஸின் சிரிப்பு கேட்டது. நிச்சயம் எனக்கு கேட்கவேண்டுமென்றுதான் அதை அவன் செய்திருக்கவேண்டும்.

விவாத நேரத்தின்போது டெனிஸ் எழுந்தான். ‘இந்த நோயாளிக்கு இத்தனை சிக்கலான அறுவை சிகிச்சையை செய்யவேண்டியதன் அவசியத்தை நாம் கலந்தாலோசிக்க வேண்டுமென நினைக்கிறேன். ஏற்கனவே அந்த மூதாட்டி அறுபத்தைந்து வயதைக் கடந்திருக்கிறாள். மூளையிலிருக்கும் அந்த ரத்தக்குழாய் கட்டியும் இன்னும் வெடித்துவிடவில்லை. அப்படியான அசம்பாவிதம் நடப்பதற்கு சாத்தியம் ஓராண்டுக்கு நான்கு விழுக்காட்டுக்கும் குறைவுதான். வெடிப்பு நிகழும்பட்சத்தில் ஓர் அவசர சிகிச்சையை நாம் திட்டமிட்டுக்கொள்ளலாம். இருக்கும்வரை நிம்மதியாக அவர் இருக்கட்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் சொல்கிறேன்’ – அவனது வழக்கமான ஆங்கிலமாக இல்லாமல் இது வலிந்த பிரித்தானிய பாணியிலிருந்தது.

அரங்கிலிருந்த மூத்த பேராசிரியர் பதிலளிக்க எழுந்தார்,

‘நன்றி இளைஞனே.. உன்னுடைய கேள்வியை நான் மூன்று பாகங்களாக எடுத்துக்கொண்டு பதிலளிக்கிறேன். முதலில் இந்த அளவிலான கட்டி வெடித்தால், நாம் அவளை அறுவை அரங்கிற்கு கொண்டு வர முடியாது; பிணவறைக்குதான் எடுத்து செல்லவேண்டியிருக்கும். இரண்டாவது இந்த அறுவை சிகிச்சை சிக்கலானதா இல்லையா என்பதை இன்னும் சிறிது நேரத்தில் நீ பார்க்கப் போகிறாய்’ – நட்சத்திர அந்தஸ்துள்ள கதாநாயகன் பேசும் கரகோஷத்திற்கான வசனம் போல அது இருந்தது. கிட்டத்தட்ட கைத்தட்டும் நிலையில்தான் நான் இருந்தேன். ஆனால் அதற்கான இடைவெளி கொடுக்காமல் அவர் தொடர்ந்து பேசினார்.

‘இளைஞனே மன்னிக்கவேண்டும்.. நீ எந்த நாட்டினன்?’

‘ரஷ்யா’ – டெனிஸுடைய குரலில் வீழ்த்தப்படப்போகும் அச்சம் தரும் ஒரு சிறிய தொய்வு இருந்தது.

‘உங்கள் நாட்டின் சராசரி ஆயுட்காலத்தின்படி அவள் மரண படுக்கைக்கு அருகில் வந்துவிட்டாள். எங்கள் கணக்கின் படி அவளுக்கு இன்னும் இருபது ஆரோக்கியமான வருடங்கள் எஞ்சியிருக்கின்றன. அதை கட்டாயம் அவளுக்கு நாங்கள் மீட்டுக் கொடுக்கவேண்டும்’ – கனிவாக சிரித்துக்கொண்டுதான் சொன்னார். வேறு சிலரும் அதை ஆமோதித்து கொஞ்சம் சிரித்தார்கள். ஆனால் நான் அதற்கு சிரித்ததுதான் அவனை நிதானமிழக்கச் செய்தது.

பின்னாலிருந்து என் தோளில் அவன் கை வைக்க, நான் திரும்ப எத்தனிப்பதற்குள், பல்லைக் கடித்துக்கொண்டு அதைச் சொன்னான்.

‘உன் இந்தியப் பொறுக்கித்தனத்தை என்னிடம் காட்டாதே’

4

விளக்குகள் இயக்கப்பட்ட அந்த மிக கணத்தில் நான் அவனை எதிர்கொள்ள தயாராக இருக்கவில்லை.

துளியும் கசப்பையோ மறுவிளைவையோ உண்டாக்கிடாத முடிவுகளைத்தான் அவசர நேரத்தில் எடுக்கவேண்டுமென்று எனக்கான ஒரு நெறிமுறை வைத்திருக்கிறேன். அந்த விதத்தில் அவன் கண்களையே சந்திக்காமல் அரங்கைவிட்டு வெளியேறிவிடலாம் என்று மேசையிலிருந்த என் மேலங்கியை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு நகர ஆரம்பித்தேன். நாற்காலிகளைக் கூட நிசப்தமாக நகர்த்தி வைக்கும் பண்பட்ட அந்த சூழலில் அதுதான் சரியான முடிவாக இருக்கமுடியும்.

ஒரு பெரிய கரம் அழுத்தமாக என் முதுகில் பதிந்தது. கூடவே, ‘என்னை மன்னித்துக்கொள்’ என்ற வார்த்தைகளும் காதில் விழுந்தன.

அவனால் அப்படியான வார்த்தைகளை உச்சரிக்கமுடியும் என்ற எண்ணமே அதுவரையிலான பழக்கத்தில் எனக்கு தோன்றவே இல்லை. அவனது சாம்பல் நிற கண்களில் நிஜமாகவே மன்னிப்பை இறைஞ்சும் தட்பம் இருந்தது.

‘இங்கிருந்தவர்கள் மீதான அந்தத் தருணத்து கோபமது. ஏதோவோர் அவமான உணர்வு கிண்டப்பட்டுவிட்டது. பழகியவன் என்ற முறையில் நீ பலிகடா ஆகிவிட்டாய். அது இப்படியாகத்தான் இருக்கமுடியும். மீண்டும் சொல்கிறேன். என்னை மன்னித்துக் கொள்’ – சிலரால்தான் இப்படி சட்டென நம்மை உடைத்து மிருதுவாக்கிவிடும் விதத்தில் பேசிவிட முடிகிறது.

அவனது புஜத்தை சினேகபாவத்துடன் இறுக்கிபிடித்துவிட்டு ஒரு வெற்றுப்புன்னகையுடன் அங்கிருந்து வெளியேறினேன்.

எதையோ இழந்த உணர்வு என்னைத் தொற்றிக்கொண்டது. அவனுடனான விளையாட்டு பாதியில் முடிந்துவிட்டதற்கான சோர்வு போலத்தான் அது தெரிந்தது. முடிவில் என் கை ஓங்க முடியாமல் போய்விட்டதன் ஏமாற்றமாக இருக்கவேண்டும். மன முரண்பாட்டு மோதல்களில் முதலில் தோற்றுவிட்டதாக சரணடைபவன்தானே அந்த போரின் நெறிமுறைப்படி வென்றவனாகி விடுகிறான். ஆம். அந்த மன்னிப்பு என்னை மிக மோசமாக தோற்கடித்திருந்தது.

அதுவரையிலான அந்த வாரத்தில் வெளிப்பட்ட வெகு இயல்பான முகம் அவனுக்கு இனி சாத்தியமேயில்லை – என்னைக் காயப்படுத்திவிட்டதை ஈடுகட்டும் போலி அறவுணர்ச்சிகளை இனி என்னிடம் கட்டவிழ்க்கப்போகிறான். அடுத்த இரு நாட்களும் அப்படியான தர்மசங்கட நிகழ்வுகளை அனுசரித்தே ஆகவேண்டும். பிடிக்காத மேடை நாடகம் ஒன்றிற்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.

அந்தப் பேராசியரைப் பற்றி மதிய உணவின் போது எல்லோரும் ரொம்பவே வியந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் டெனிஸுக்கு எதிராக ஒரு கட்சியாக திரண்டுவிட்டார்கள் – நான் இப்போது அவன் பக்கம் நிற்கவேண்டும் என்று எனக்கு அனிச்சையாக தோன்றியது. ஆளைக் காணவில்லை. சந்தீப்சிங்கிடம் விசாரித்தேன் – அவன் அறுவை அரங்கிலிருந்து அப்படியே புறப்பட்டு போய்விட்டதாக சொன்னான்.

தன் பலவீனத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளும் ரொம்பவே பக்குமற்ற ஒருவனாக டெனிஸ் அந்தக் கணத்தில் எனக்கு தெரிந்தான். எந்தவொரு முன்யோசனையுமின்றி இனி அவனுடைய அத்தனை பிழைகளையும் மன்னித்துவிடலாம் என்று தோன்றியது.

மாலை, அறைக்கு திரும்பும் வழியில் லாஸன் அங்காடிக்கு போகவேண்டிய வேலையிருந்தது. பாயல் ஏற்கனவே அறிமுகமாகியிருப்பதற்கான புன்னகையைக் காட்டினாள். அந்த நொடியில் அவள் மீதும் ஆத்திரம் பொங்கியது.

322 பூட்டியிருந்தது. வரவேற்பில் விசாரித்தேன். காலையில் கொடுத்துவிட்டுப்போன சாவி இன்னும் வாங்கிக்கொள்ளப்படவில்லை என்றார்கள். அந்தப் பயிலரங்கிற்கென உருவாக்கப்பட்டிருந்த வாட்ஸ்ப் குழுமத்திலிருந்து அவனது எண்ணை எடுத்தேன்.

‘டெனிஸ், எங்கே இருக்கிறாய்?’

அவனிடமிருந்து பதில் வரவில்லை. இரண்டு முறை முழு அழைப்புமணி சென்றுமுடிந்தது. அவன் எந்த அளவிற்கு நிதானமற்றவன் என்ற அளவீட்டிற்கான முள் இங்குமங்குமாக ஊசலாடிக்கொண்டிருந்தது. அத்தனை சாத்தியமான விபரீதங்களும் மனதில் தோன்றியபடி இருந்தன.

சற்று நேரத்தில் பக்கத்து அறை திறக்கப்படும் ஓசை கேட்டு வெளியே ஓடிச்சென்று பார்த்தேன்.

‘நண்பன் ஒருவன் இங்கு சாக்கேயில் இருக்கிறான். அவனைச் சந்திக்க போயிருந்தேன்’ – வோட்கா நெடி குப்பென்று அந்த குறுகிய வளாகத்தை நிறைத்தது.

நான் அவனையேப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தேன்.

‘சரி. போய் ஓய்வெடு. காலை புறப்படும்போது சொல். சேர்ந்து போகலாம்’ என்றான்

‘சரி டெனிஸ். சொல்கிறேன்’ – சொல்லிவிட்டு நான் அறைக்குள் வரும்போதே எனக்கு தோன்றியது, நிச்சயம் காலையில் அவன் எனக்கு முன்னரே கிளம்பிப்போய்விடுவான் என்று.

**

அடுத்த நாள் காலை, சுறுசுறுப்பான கிழவர்களையும், குங்ஃபூ படத்தில் வருவதைப் போன்ற இளைஞர்களையும், குட்டை பாவாடைகளையும் கடந்துப்போய் மருத்துவமனைக்குள் நுழைந்தப்போது, அரங்கத்தின் முதல் வரிசையில் டெனிஸ் அமர்ந்திருந்தான். அவனது விலகலை அனுமதிப்பதுதான் சரியென்று பட்டது. அவனைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதென முடிவு செய்தேன் – வந்திருக்கும் முப்பது முகங்களுள் இவனொரு வெள்ளை முகம், அவ்வளவுதான். அன்றும் அடுத்த நாளும் மட்டுமே எஞ்சியிருந்தன.

அன்று மாலை வரை அவனை நான் நிஜமாகவே பொருட்படுத்தவில்லை என்பதை யோசிக்கும்போது கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது – எப்போதாவது இப்படி மனம், நிர்ணயத்த திசையிலிருந்து பிசகாமல் நின்று கொஞ்சம் பெருமிதப்பட்டுக்கொள்ள அனுமதிக்கும்.

மாலை வீதியில் அறையை நோக்கி நடந்துகொண்டிருந்தப்போது,

‘உனக்கென்ன இன்றிரவே விமானம் புறப்படப்போகிறதா? ஏன் இந்த ஓட்டம்’ பின்னாலிருந்து டெனிஸின் குரல் கேட்டது. அவனிடமிருந்து தப்பி ஓடுவதாக அவனுக்கு தோன்றியிருக்கக்கூடும்.

‘எனக்கு இந்த குளிரை ஒய்யாரமாகவெல்லாம் ரசிக்க முடியவில்லை. அதனால்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்’

‘நாளையிலிருந்து இந்த சாலையின் இந்த குளிர் நமக்கு சொந்தமில்லை. பொறுமையாகவே போகலாம், நில்’

‘சரி’

ஹோரி நதிக்கரையருகில் வரும்போது, நடையை இன்னும் பொறுமையாக்கினான். அந்த நதியில் அப்படி ரசித்துப்பார்க்கும்படி ஒன்றும் விசேஷமாக எனக்கு படவில்லை. பாலத்தின் சுவற்றில் கை வைத்துக்கொண்டு கொஞ்சம் நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். நிறைய பறவைகள் நதியில் இருமருங்கிலும் இருப்பதை அத்தனை நாட்களில் அன்றுதான் கவனித்தேன். அரை மணி நேரத்திற்கு மேல் அங்கேயே நின்றுகொண்டிருந்தோம்.

‘போக வேண்டுமா?’ குரலில் எந்த சுரத்துமில்லாமல் கேட்டான்.

‘இல்லை. நீ சொல்லும்போது புறப்படலாம்’

அவனது நீண்ட அமைதி ஏதோ தொந்தரவு செய்தது.

‘இன்னொரு திருமணம் செய்துகொள்ளலாம் என்று யோசித்திருக்கிறாயா?’ – முதன்முறையாக ஒரு நண்பன் என்ற உணர்வுடன் பேசியதாக அப்போது எனக்கு தெரிந்தது. அதே நேரம் ஏதோ வரம்பை மீறிவிட்ட பதற்றமும் உடன் சேர்ந்துகொண்டது. அவன் சொல்லப்போகும் பதில்தான் எனக்கோர் இருக்கையைக் கொடுக்கமுடியும்.

கொஞ்சம் யோசித்தபடி இருந்தவன் – ‘ரத்த உறவுகளின் சிக்கலென்று நான் நினைப்பது அதன் நிச்சயத்தன்மையைதான். பெற்றவர்களையோ சகோதரனையோ மகளையோ உன்னால் தேர்வு செய்யவோ, மாற்றிவிடவோ முடியாது. அது எனக்கு ரொம்பவே சலிப்பூட்டுவதாக தெரிகிறது. ஆனால் நண்பன்.. காதலி.. இதிலெல்லாம் அப்படியில்லை. உறவில் பிழையெனில் நீ ஒதுங்கிக்கொள்ளலாம்; அவர்கள் ஒதுங்கிக்கொள்ள அனுமதிக்காலம். இந்த கொலைகள ஆய்வகத்தில், சோதனை எலிகளாக வாழ வந்திருக்கும் நமக்கு, இப்படியான பரிசோதனை உறவுகள்தான் நம் இருப்பை சுவாரஸ்யப்படுத்த முடியும்.’ – சொல்லிவிட்டு புன்னகைத்தான்.

அவன் ஏதோ விசித்திரமாக யோசிக்கிறான் என்பதைவிட, நான் கேட்டதற்கு அவன் நேரடியாக பதில் சொல்ல விரும்பவில்லை என்பதாகத்தான் நான் அதைப் புரிந்துகொண்டேன்.

பறவைகளையே வெறித்துக்கொண்டிருந்தவன், பிந்திக்காவின் ஒளிப்பதாகையை நோக்கி கையைக் காட்டி, ‘இரவுணவிற்கு அங்கு செல்லலாமா?’ என்றான். எந்த பரிசீலனையுமின்றி சம்மதித்தேன்.

நகர நினைத்தப்போது, ‘உன்னை இங்கு ஒரு புகைப்படம் எடுத்து கொடுக்கிறேன் நில். நிச்சயம் உன் வீட்டிலிருப்பவர்கள் அதை விரும்புவார்கள்’ என்றான். சிரிப்பதைப் போல போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

5

கடைசி நாளில் அரை நாளுக்குதான் பயிலரங்கம் முடிவாகியிருந்தது. மாலையில் எனக்கு விமானம் என்பதால் நிகழ்வு முடிந்ததும் தாமதிக்காமல் அறைக்கு வந்துவிட்டேன். நான் அரங்கிலிருந்து புறப்படும்போது, டெனிஸிடம் அந்த மூத்த பேராசிரியர் மிகுந்த ஈடுபாட்டுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அந்த காட்சி எனக்கு ரொம்பவே மனநிறைவாக இருந்தது.

அறையை காலிசெய்துவிட்டு வரவேற்பு மேசையில் வந்து சாவியைத் திருப்பியளிக்கும்போது, டெனிஸ் விடுதிக்கு வந்து சேர்ந்தான்.

‘இத்தனை சீக்கிரம் புறப்பட்டுவிட்டாய்? இன்னும் நிறைய நேரம் இருக்கிறதே..’

‘நேரமிருந்தால் விமான நிலையத்தில், கொஞ்சம் சாக்லேட்டுகள், விளையாட்டு பொருட்களெல்லாம் வாங்கவேண்டும்.’

‘பொறு.. நானும் உடன் வருகிறேன்’ – யோசிக்காமல் சொன்னான்

‘இல்லை.. நீ ஓய்வெடு.. நள்ளிரவு விமானம் வேறு உனக்கு.. வீணாக அலையாதே..’

‘பெட்டியைக் கொடு’ – ஏற்கனவே பற்றியிருந்தான். கனாயமா இரயில் நிலையம் வரை அவன் அதை உருட்டிக்கொண்டுப் போக நான் பின்தொடர்ந்தேன். அங்கிருந்து சுபு விமான நிலையத்திற்கு அவனே இருவருக்கும் பயணச்சீட்டு வாங்கினான். ரயில் வர அரை மணி ஆகுமென்று அட்டவணை சொல்லியது. அங்கிருந்த காத்திருப்பு பலகையில் எதுவும் பேசாமல் அருகருகே அமர்ந்திருந்தப் போது கவிந்த மெளனம், ஒரு மாதிரி பதற்றமாக இருந்தது. ஒரு வழியாக வார்த்தைகளைத் திரட்டி, விமான நிலையம் வரை வரவேண்டாம் என்று சொல்லி அவனைக் கிளம்பச் செய்தேன்.

ஒப்புக்கொண்டதைப் போல எழுந்தவன், ‘இரு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போய், ஒரு பையுடன் திரும்பிவந்தான்.

‘இன்னும் மூன்று மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் இருக்கின்றன உனக்கு’ என்று கேலியாக சொன்னான்.

‘பரவாயில்லை. இப்படித்தான் பழகியிருக்கிறேன்’ சிரித்தேன்

‘என் பெயரைச் சொல்லி இறுதி அறிவிப்பு வரும்வரை நானெல்லாம் விமானத்திற்குள் நுழைந்ததேயில்லை’ என்று கண்ணை சிமிட்டிக்கொண்டு சொன்னான். அவசரமாக சொல்லிக்கொண்டு விடைபெறவேண்டும் போல இருந்தது. அவனது இந்த அணுகுமுறை, தேவையில்லாமல் என்னை பலவீனமாக்குவதைத் தவிர வேறொன்றும் செய்யப்போவதில்லை. எதையெல்லாமோ மாறி மாறி யோசித்து இறுதியாக அவனிடமொரு மன்னிப்பைக் கோரிவிடுவேன் என்று அச்சமாக இருந்தது. அதைத் தவிர்த்தே ஆகவேண்டும்.

‘டெனிஸ், நான் விடைபெறுகிறேன்’

சரியென்று வாஞ்சையாக கட்டிபிடித்துவிட்டு அந்தப் பையை என்னிடம் தந்து விடையளித்தான்.

ரயிலுக்குள் சென்று கையை அசைத்தப்போது அவன் நடக்க ஆரம்பித்திருந்தான். என்னைப் பற்றி அப்போது என்ன நினைத்தபடி போய்க்கொண்டிருப்பான் என்று யோசித்தவாறே அமர்ந்திருந்தேன். அவன் கொடுத்த பையைத் திறந்துப்பார்த்தேன் – சாக்லேட்டுகளும் விளையாட்டு பொருட்களும் – எதிர்ப்பார்த்ததுதான். ரயில், விமான நிலையம் நோக்கி சீறிக்கொண்டிருந்தது. ஒரு மிகப்பெரிய மலையை குடைந்த புத்தர் சிலை விசுக்கென பின்னோக்கி சென்றது.

உறவு என்பதன் நிரந்தரமற்றத்தனத்தைப் பற்றி அவன் பேசியது நினைவில் வந்தது. அவனது எனக்கான பரிசோதனை எந்த அளவிற்கு சோபித்தது என்று தெரிந்துகொள்ள ஆசையாக இருந்தது. ஒரு கணம் தத்ரூபமானதொரு சோதனை எலியாகவே என்னை உணர்ந்தேன். மனம் ஒரே நேரத்தில் இலகுவாகவும் கனமாகவும் இருந்தது – ஒரே நேரத்தில் வெற்றியடைந்துவிட்டதாகவும் இரக்கமின்றி வீழ்த்தப்பட்டிருப்பதாகவும்..

அந்த முழுப்பயணமும் பரிபூரண ஒன்றாக மனதில் தெரிந்தது. அதன் முழுமையை டெனிஸுடைய அந்த கடைசி இருபத்து நான்கு மணி நேர குறிப்பணர்த்தல்தான் சாத்தியப்படுத்தியது என்று தீர்க்கமாக தோன்றியது. மனதிற்குள் ஒரு முறை ‘ச்செரங்க்காஃப்’ என்று சொல்லிப் பார்த்தேன்.

அந்த நிலையை, அந்த உணர்வு குவியலை அதற்கான பசுமையோடு அப்படியே உறைய வைக்கவேண்டும் போல இருந்தது. மேற்கொண்டு அந்த உறவு வளரவோ தேயவோ அனுமதிக்கக்கூடாது; ஒரு புகைப்படத்தின் நிச்சலனத்தைப் போல அப்படியே அந்த நொடியில் அது பதிவாகிவிட வேண்டும் – அந்த ஓவியத்தின் வண்ணங்களை ஒவ்வொன்றாக உருவி, காலம் அதனை அம்மனமாக்கிவிடுவதை நான் அனுமதிக்க விரும்பவில்லை. அலைப்பேசியை எடுத்து, அவன் இனி என்னைத் தொடர்பு கொள்ள சாத்தியமான அத்தனை வழிகளையும் தடை செய்தேன். மூன்றரை கால மண்டலங்களைக் கடந்து மேற்கு திசை நோக்கிய பயணத்தைக் கணக்கிட்டு, கைக்கடிகாரத்தில் நேரத்தைக் குறைத்துவைத்தேன்.

கத்தே பசிஃபிக் விமானம் என்னை அங்கிருந்து அப்புறப்படுத்தக் காத்துக்கொண்டிருந்தது.

-முற்றும்-