தீபாவளி சிறப்புச் சிறுகதை 

தாட்சு எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வருவதற்கு முன்னர் அவளைக் குறித்த நான்கு வதந்திகளைக் கேள்விப்பட்டிருந்தேன். அவையாவன:

வதந்தி 1

அவளுக்கு இருபத்து மூன்று காதலர்கள் இருக்கிறார்கள். முறை வைத்துக்கொண்டு தினம் ஒருவனுடன் மாலை வேளைகளில் வெளியே செல்வாள். அவளது அனைத்துக் காதலர்களுக்கும் அவளைக் குறித்தும் அவளது பிற காதலர்களைக் குறித்தும் தெரியும். ஆனால் அதைப் பற்றி யாரும் கேட்பதில்லை. ஒவ்வொரு காதலனும் தனக்கு வழங்கப்பட்ட தினத்தை மகிமைப்படுத்திக்கொள்வதில் மட்டுமே கவனமாக இருப்பான். மாதத்தில் ஒரு நாள் மட்டுமே அவளது காதலனாக இருக்க முடிந்தாலும் அது குறித்த பெருமிதம் அவர்களுக்கு எப்போதும் உண்டு.

வதந்தி 2

தனது காதலர்களுடன் தாட்சு சினிமாவுக்கோ பூங்காக்களுக்கோ மால் போன்ற செலவு வைக்கும் இடங்களுக்கோ செல்வதில்லை. கடவுள் நம்பிக்கை அற்றவள் என்பதால் அவள் கோயில்களுக்கும் செல்ல மாட்டாள். ஒவ்வொரு நாளும் அவள் பணியாற்றும் வீடுகளில் வேலை செய்து முடித்த பின்னர், அன்றைய தினத்தின் காதலனுக்கு போன் செய்வாள். அவனை சுடுகாட்டுக்கு வரச் சொல்லிவிட்டு தாட்சுவும் அங்கே செல்வாள். மாலை வேளைகளில் குறைந்தது ஒரு மணி நேரமாவது அவள் சுடுகாட்டில் இருக்க விரும்புவாள். காதலர்களுடன் மனம் விட்டுப் பேசுவதற்கு சுடுகாடே சிறந்த இடம் என்பது அவளது கருத்து.

வதந்தி 3

தாட்சு சிறிது காலம் மன நலம் பாதிக்கப்பட்டு ஏர்வாடியில் இருந்தாள். ஒரு கொலை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகவே அவள் பைத்தியமாக நடிக்கிறாள் என்று அப்போது பேச்சு இருந்தது. உண்மையிலேயே அவளுக்கு அப்படித்தான் ஆனது என்றும் பைத்தியம் முற்றிய நிலையில்தான் அவள் அந்தக் கொலையைச் செய்தாள் என்றும் அவளது  தோழியும் எங்கள் குடியிருப்புப் பகுதியில் வீட்டு வேலைகள் செய்யும் இன்னொருத்தியுமான ஞான சுந்தரி சொன்னாள்.

வதந்தி 4

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தாட்சு சுடுகாட்டுக்குச் செல்வதில்லை. அந்தத் தினங்களில் அவள் தனது கணவனுடன் வீட்டில் இருப்பாள். அவனுக்குப் பிடித்தவற்றைச் சமைத்துப் போட்டு, அவனோடு பேசிக்கொண்டே டிவி பார்ப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும். தாட்சு தன் கணவனை மிகவும் நேசிப்பவள். அவனோடு இருக்கும் நாள்களில்  அவளே டாஸ்மாக் சென்று அவனுக்குப் பிடித்த விஎஸ்ஓபி பிராந்தியும் தொடுகறியாக போட்டியும் வாங்கி வருவாள். அவன் குடித்து, சாப்பிட்டு, கொஞ்சி முடித்து உறங்கத் தொடங்கிய பின்பு நெடுநேரம் அவனுக்குக் கால் அமுக்கி விடுவாள். தாட்சுவின் கணவன் நகராட்சி துப்புரவுத் தொழிலாளியாக இருந்தவன். ஒருமுறை ஏதோ கிருமித் தாக்குதலுக்கு உள்ளாகி, உயிரே போய்விடும் கட்டம் வரை சென்று மீண்டு வந்தான். அதன் பிறகு தாட்சு அவனை அந்த வேலைக்குப் போகவேண்டாம் என்று சொல்லிவிட்டாள். சுமார் ஒன்பது மாத காலம் அவளே சம்பாதித்துத்தான் அவனுக்குச் சோறு போட்டாள். அதன் பிறகுதான் அவனுக்கு ஆரிஃப் பிரியாணிக் கடையில் பாத்திரம் கழுவும் வேலை கிடைத்தது.

2

மேற்சொன்ன அனைத்தையும் வதந்தி என்றே குறிப்பிட விரும்புகிறேன். எதுவும்  நிரூபிக்கப்பட்டதல்ல. காலை நடைப் பயிற்சியின்போது சக குடியிருப்புவாசிகள் மூலமாக நான் அறிந்தவை இவை.  என் மனைவிக்கும் இதெல்லாம் தெரிந்திருக்கும் எனினும் இப்போது நினைவுகூரத் தோன்றியது. ஆனால், நான் சொல்லத் தொடங்கியதுமே அவள் தடுத்தாள். அதெல்லாம் இருக்கட்டும்.  தாட்சு வேலையில் இருக்கும் நேரம் நான் அறையை விட்டு வெளியே வர வேண்டாம்.

இது எனக்கு நியாயமாகப் படவில்லை. ஆனால் அவசியம் என்று சொன்னாள். நான் கேள்விப்பட்டிராத ஐந்தாவது வதந்தி ஒன்றை என் மனைவி கேள்விப்பட்டிருந்தாள். அதாவது, தாட்சுவுக்கு ஒரு குணம் உண்டு. அவள் வேலை பார்த்த பெரும்பாலான வீடுகளில் அவள் வேலையை விட்டு நின்றதற்கான காரணம் ஒன்றுதான். ‘அந்த வீட்டு ஐயா சரியா இல்ல. ஒரு மாதிரி பார்க்கறாரு’ என்று சொல்லிவிடுவாள். வேலையில் இருந்து நின்றுகொள்ள அவள் பெருந்தன்மையுடன் வேறு ஏதேனும் காரணங்கள் சொல்லலாம்தான். ஏனோ அவள் இந்தக் காரணத்தைத்தான் பெரும்பாலும் சொல்லியிருக்கிறாள். இதனால் குறிப்பிட்ட பெரிய மனிதர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளவேண்டிய தர்ம சங்கடமான வினாக்களைக் குறித்து அவள் கவலைப்படுவதே இல்லை.

எனவே தாட்சு பணிக்கு வரும்போது நான் அறையை விட்டு வெளியே வரக்கூடாது. ஒரு மணி நேரத்தில் அவள் வேலைகளை முடித்துவிட்டுப் போய்விடுவாள். அதன் பிறகு வரலாம்.

நான் சொன்னேன், இது உதவாத வழி. வேறு யாரையாவது வேலைக்கு அமர்த்தலாம்.

ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்தது. என் மனைவி ஏற்கெனவே தாட்சுவிடம் சம்பளம் உள்பட அனைத்தையும் பேசி அடுத்த நாள் முதல் பணிக்கு வரச் சொல்லிவிட்டிருந்தாள். ‘ஆளுக்கு ஒரு விதமா அவளப் பத்தி சொன்னாலும் எல்லாரும் சொல்ற ஒரு ப்ளஸ் பாயிண்ட், அவ வேலை சுத்தம்.’

இனி நான் என்ன செய்ய?

சரி. என் பிரச்னைக்கு வருகிறேன். நான் பல வருடங்களாக வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பவன். தொள்ளாயிரம் சதுர அடி பரப்புள்ள என் வீட்டுக்குள் பத்துக்குப் பன்னிரண்டு அடி அளவில் எனக்கொரு தனி அறை இருக்கிறது. அங்கே என் மக்கிண்டாஷ் மடிக் கணினியும் என் வாழ்நாள் சேகரிப்பான சுமார் மூவாயிரம புத்தகங்களும் எனக்கு மானசீக பீமபுஷ்டி வழங்கும் சித்தர்களின் உருவப் படங்களும் இருக்கும். நாளெல்லாம் வேல் கப் சாம்பிராணி புகைந்து புகைந்து அறை எப்போதும் புகை மண்டலமாகவே காட்சியளிக்கும். படிப்பதும் எழுதுவதும் என் பணி.  அதைக் காதலுடன் செய்வேன். இந்த இரண்டு பணிகளையும் செய்யாத நேரங்களில் அறையைவிட்டு வெளியே வருவேன். அது எப்போது நிகழும் என்று சொல்ல முடியாது. தாட்சு வேலை செய்ய வரும்போது மட்டும் இனி கவனமாக வராதிருக்க வேண்டும் என்று என் மனைவி சொன்னாள்.

அவள் ஒன்றும் பெரிய அழகி இல்லை. சிறிது கூர்ந்து யோசித்தால் அவள் சாதாரண அழகிகூட இல்லைதான். ஆனால் தாட்சுவின் கட்டுடல் எந்த ஆணையும் வினாடிப் பொழுதாவது நின்று பார்க்கச் சொல்லும். அப்படிப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே அவள் தொப்புளுக்குக் கீழே புடைவை கட்டுவாள். அவள் எப்போதும் அணியும் ரவிக்கைகளின் முதுகுப் பக்கம் ஒரு மேம்பாலத்தைக் கவிழ்த்து வைத்தாற்போலவே இருக்கும். முக்கால்வாசி முதுகை எப்போதும் காட்டிக்கொண்டிருப்பதில் அவளுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் யாரும் பார்த்துவிடக் கூடாது. பார்த்தால், ஐயா சரியில்லை.

வாதம் புரிய வழியில்லை. மறுநாள் தாட்சு வேலைக்கு வந்துவிட்டாள். அப்போது நான் குளித்துக்கொண்டிருந்தேன். முதலில் என் அறையைப் பெருக்கித் துடைத்துவிடும்படி என் மனைவி தாட்சுவிடம் சொன்னது கேட்டது.  நான் குளித்து முடித்து வெளியே வந்தபோது அறை சுத்தமாக இருந்தது. அவள் மற்ற இடங்களில் பெருக்கித் துடைத்து, பாத்திரம் துலக்கி, துணி துவைத்து முடித்துவிட்டுக் கிளம்பிச் சென்ற பிறகுதான் நான் அறையைவிட்டு வெளியே  வந்தேன். என் மனைவி கேட்டாள், ‘வேலை எப்படி?’

ஒரு நேர்த்தி இருந்தது. வேலையை வேலையாகச் செய்வதற்கும் கலையாகப் பயில்வதற்குமான வேறுபாட்டை நான் அறிவேன். தாட்சு அப்பழுக்கற்ற ஒரு இல்லப் பணிக் கலைஞர். ஆனால் நான் அவளை நேரடியாகச் சந்திக்கவோ பாராட்டவோகூட வேண்டாம் என்று என் மனைவி சொன்னாள். என்னிடம் அவள் எதிர்பார்த்ததெல்லாம் ஒன்றுதான். தாட்சு வரும்போது நான் குளிக்கப் போகவேண்டும். அவள் என் அறையை சுத்தம் செய்துவிட்டு வெளியேறிய பின்னர் நான் குளியலறையில் இருந்து வந்தால் போதும். அதேபோல, அவள் வேலை முடித்துப் போன பிறகு அறையை விட்டு வெளியே வரலாம்.

3

ம்ப மாட்டீர்கள். சுமார் ஐந்து மாத காலம் தாட்சு தினமும் எங்கள் வீட்டு வேலைக்கு வந்து போனாள். ஐந்து மாதங்களில் ஒருநாள்கூட நான் அவளைப் பார்க்கவில்லை. இதற்குள் தாட்சுவுக்கும் என் மனைவிக்கும் ஒத்துப் போய்விட்டது. முதலில் அவ்வளவாகப் பேச்சுக் கொடுக்காமல் வேலையை மட்டும் செய்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தவள், மெல்ல மெல்ல என் மனைவியிடம் பேசத் தொடங்கினாள். எங்கள் வீட்டில் இதற்குமுன் வேலைக்கு வந்த மற்ற பெண்களைப் போலவே தாட்சுவின் முதல் வினாவும் ‘சார் இவ்ள புக்ஸையும் படிச்சிருக்காரா?’ என்பதாகவே இருந்திருக்கிறது. அவளது அடுத்த வினாதான் என் மனைவியையே சிறிது சிந்திக்க வைத்தது. ‘சார் ஏன் சாமி கும்பிடாம சாமியாருங்கள மட்டும் கும்புடுறாரு?’ பிறகு என் மேசைக்கு அடியில் எப்போதும் உதிர்ந்திருக்கும் மாவாத் தூள் குறித்தும் நான் கசக்கிப் போடும் பொட்டலக் குப்பைகளைக் குறித்தும் கேட்டிருக்கிறாள். ‘இதெல்லாம் தப்புன்னு நீங்க சொல்ல மாட்டிங்களா?’ சிலநாள் நான் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வராமல் இருக்க நேரிடும்.  அந்தச் சில நாள்களில் பலநாள் மாலை ஆறு மணிக்குமேல் வெளியே கிளம்பிப் போய்விட்டு மறுநாள் காலை எட்டு ஒன்பது மணிக்கு வீடு திரும்புவேன். இதைக் குறித்தும் தாட்சு என் மனைவியிடம் கேட்டிருக்கிறாள். ‘பொண்டாட்டி புள்ள வீட்ல இருக்கப்ப நைட்ல வெளிய தங்குறதெல்லாம் சரியே இல்ல. நீங்க கேக்க மாட்டிங்களா? எந்நேரமானாலும் வீட்டுக்கு வந்திரணும்னு கண்டிசனா சொல்லிடுங்க.’

இதுதான் சாக்கு என்று அன்றைக்கு என் மனைவி தாட்சுவிடம் கேட்டிருக்கிறாள். ‘நீ கூட வேல முடிச்சிட்டு, இருட்டுற நேரத்துக்கு சுடுகாட்டுக்குப் போவியாமே?’

தாட்சுவுக்கு வெட்கம் வந்துவிட்டது. ‘ஐயே, தெரிஞ்சிடுச்சா? ஆமாம்மா. எனக்கு சுடுகாடுதான் பிடிக்கும். அங்கதான் நிம்மதியா பொழுது போவும்.’

தாட்சுவுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. அவள் வீட்டில் சாமி படங்களும் கிடையாது. அவள் பண்டிகைகள் கொண்டாடுவதில்லை. தன் வீட்டில் கோலம் போடுவது, விளக்கேற்றுவது போன்றவற்றை அவள் செய்வதில்லை. ஆனால் அவளுக்குப் பேய் பிசாசுகளின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் பற்றும் உண்டு. இதை அவளே என் மனைவியிடம் சொல்லியிருக்கிறாள். ‘அதுங்களாச்சும் அப்பப்ப கண்ணுக்குத் தெரியும்; கேள்வி கேட்டா பதில் சொல்லும். முடிஞ்ச உதவிய செய்யும். சாமி ஒரு தண்டக் கருமாந்திரம். ஒண்ணித்துக்கும் உதவாது.’

என் மனைவிக்கு மிகுந்த வியப்பாகிவிட்டது. ‘நீ பேயோட பேசுவியா?’ என்று கேட்டிருக்கிறாள்.

‘பேசுவேனே.’

‘என்ன பேசுவ?’

‘கஸ்டத்த சொல்லிப் புலம்புவேன். கஸ்டம் தீர அதுங்க எதுனா வழி சொல்லும்.’

‘எப்டி, எப்டி?’

தாட்சுவின் கணவனுக்கு ஒரு சமயம் பால்வினை நோய் வந்துவிட்டது. ‘எங்க போயி எவளோட பொரண்ட?’ என்று அவள் கேட்டதற்குக் கண்மண் தெரியாமல் அடித்து ரத்த காயப்படுத்தியிருக்கிறான். அவள் முடியைப் பிடித்து இழுத்துச் சென்று வீட்டுக்கு வெளியே இருந்த சிமெண்டு குப்பைத் தொட்டியின்மீது ஆங்காரமாகத் தள்ளியிருக்கிறான். அதில் தலை மோதி தாட்சுவுக்கு இரண்டு தையல் போடவேண்டியதானது.

துயரத்தின் கனம் பொறுக்கமாட்டாமல் சுடுகாட்டுக்குச் சென்று ஓர் இரவெல்லாம்  அழுதிருக்கிறாள். அவள் துக்கத்தைக் கண்ட ஒரு பேய், ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில்  டாய்லெட் சுத்தம் செய்யும் ஆசிடைக் கொடுத்து, உன் புருஷன் மூன்று ரவுண்டு குடித்து முடித்த பிறகு நான்காவது ரவுண்டாக கிளாசில் ஊற்றிவிடு என்று சொல்லியிருக்கிறது. உண்மையில் அது ஆசிட் என்று தாட்சுவுக்குத் தெரியாது. கணவனின் நோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்து என்றுதான் நினைத்தாள்.

‘ஐயோ, அப்றம்?’

‘செத்துட்டாரு’ என்று தாட்சு சொன்னாள்.

என் மனைவிக்கு அதிர்ச்சி தாளவில்லை. ‘அப்ப இவன்?’

‘அவரோட தம்பி. இவன் மூத்தவன் மாதிரி இல்ல…. தப்புத்தண்டா வழிக்குப் போவமாட்டான்; இவன கட்டிக்கினு இருந்துக்கன்னு எங்கத்த – அதா, அவுங்கம்மா ஆவியா வந்து சொல்லிட்டுப் போச்சி. சர்தான் பெரியவங்க சொல்லுதாங்களேன்னு சேத்துக்கிட்டேன்.’

4

தாட்சுவுக்கு சொந்த ஊர் விக்கிரவாண்டிக்கு அருகே ஓலக்கூர் என்று ஒரு கிராமம். அடிக்கடி அவளுக்கு ஊரில் இருந்து போன் வரும். ஒவ்வொரு போன் வரும்போதும் ஊரில் யாரோ இறந்துவிட்டதாகச் சொல்லுவாள். மரணச் செய்திகளை அவள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக என் மனைவி சொன்னாள். பாத்திரம் துலக்கிக்கொண்டிருக்கும்போது எங்காவது பறையடிக்கும் சத்தம் கேட்டால் போதும். உடனே ‘அம்மா, மோள சத்தம் கேக்குதும்மா. மேட்டுத்தெரு முருகேசண்ணன்தான் போயிட்டாருன்னு நினைக்கறேன்.  அவருக்குத்தான் இழுத்துக்கினு இருந்திச்சி’ என்பாள். உடனே வேலையைத் துரிதப்படுத்துவாள். பரபரவென அனைத்தையும் செய்து முடித்துவிட்டு முந்தானையில் ஈரக்கையைத் துடைத்துக்கொண்டே, ‘சாவுக்குப் போயிட்டு வந்திடுறேம்மா’ என்று மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு வெளியேறிவிடுவாள். எந்தச் சாவுக்கும் அவள் வெறுமனே போய் துக்கம் கேட்டுவிட்டுத் திரும்பி வந்ததில்லை என்று என் மனைவி சொன்னாள். அடக்கம் செய்யும் வரை உடன் இருந்து ஒப்பாரி வைத்துவிட்டு, இழவு வீட்டில் ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுத்தான் வீடு திரும்புவாள்.

அவள் இளம் வயதில் பெரிய கஷ்டங்களைச் சந்தித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. மரணங்களோடு நட்பு கொள்வது ஒன்றே அது பற்றிய அச்சத்திலிருந்து விடுபடும் வழி என்று நினைத்திருக்கலாம். அல்லது மரணத்தைக் காட்டிலும் கொடூரமான அனுபவங்களை எதிர்கொண்டிருக்கலாம். வாழ்க்கை யாருக்கு எதைத் தரும் என்று எவர் அறிவார்?

என்றோ ஒருநாள் சந்தர்ப்பம் கிடைத்தபோது என் மனைவி தாட்சுவிடம் இதைப் பற்றிப் பேசிப் பார்த்திருக்கிறாள். ‘அப்டியெல்லாம் ஒண்ணும் இல்லியேம்மா. சின்ன வயசுல இப்பம்போலவே ஜாலியாத்தான் இருப்பேன்’ என்று தாட்சு பதில் சொன்னாள்.  அவளது ஒரு தங்கையை விழுப்புரத்தில் ஒரு பலசரக்குக் கடைக்காரனுக்குக் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். குழந்தை குட்டிகளுடன் அவள் அங்கே நன்றாகத்தான் வாழ்கிறாள். தம்பி ஒருவன் இருக்கிறான். அவன் கருங்குழியில் மின்சார வாரிய லைன்மேனாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறான். அவனுக்கும் திருமணமாகி ஒரு  குழந்தை இருக்கிறது. பேரக் குழந்தைகள் வரை பார்த்துவிட்டுத்தான் தாட்சுவின் பெற்றோரும் இறந்திருக்கின்றனர்.

அவள் இந்த விவரங்களைச் சொல்லிக்கொண்டே வந்தபோது, ‘நீ மட்டும் ஏன் இப்படி கஷ்டப்படற?’ என்று விடாமல் என் மனைவி கேட்டாள்.

‘எனக்கென்னம்மா கஸ்டம்? நான் நல்லாத்தானே இருக்குறேன்?’

‘இல்ல தாட்சு. நான் அதச் சொல்லல. நீ நல்லவ. நல்லா வேல செய்யிற. லீவு போடுறதில்ல. நேரத்துக்கு வர்ற. அநாவசிய வம்புப் பேச்சு இல்ல. ஆனா இந்த அபார்ட்மெண்ட் பூரா ஒன்ன பத்தி என்னல்லாம் பேசுறாங்க தெரியுமா?’

‘பேசுறவங்கள நாம என்னம்மா செய்ய முடியும்? நம்ம வாழ்க்கைய அவுங்களா வாழுறாங்க?’ என்று தாட்சு சொல்லியிருக்கிறாள். என் மனைவி இந்த பதிலில் அசந்துபோய்விட்டாள்.

‘அதுசரி. அடுத்தவங்களால வாழ முடியாத வாழ்க்கைய நீ வாழறப்பதான் அவங்களுக்குப் பொறாமை வருது. அதுதான் பொரணி பேச வெக்குது.’

‘என்னாத்தம்மா சொல்றிங்க?’

‘எல்லாந்தெரியும். ஒனக்கு ஏகப்பட்ட பாய் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களாமே.’

தாட்சுவுக்கு வெட்கம் வந்துவிட்டது. ‘ஐய… அதெல்லாம் சும்மா.’

‘சும்மா சொல்லாத.’

‘இல்லம்மா. நெசமாவே அதெல்லாம் பேய்ங்க. மத்தவங்க கண்ணுக்கு பசங்க மாதிரி தெரியும். ஆனா பேய்ங்கதான்.’

‘அடிப்பாவி!’

‘நம்ப மாட்றிங்க இல்ல? அதுனாலதான் நான் இத பேசுறதே இல்ல. நெசத்துல பேய்ங்க  மனுசங்களவிட தங்கமா பழகும்மா.’

5

தாட்சுவுக்கு ஒரு புடைவை வாங்கித் தர விரும்புவதாக என் மனைவி சொன்னாள். பேச்சு வாக்கில் அவள் தனக்குப் பிறந்த நாள் நெருங்குவதைக் குறிப்பிட்டிருக்கிறாள். ‘வருசம் தொண்ணூறு. நாலாம் மாசம். பன்னெண்டாந் தேதி.’

‘பாவம் அவளுக்கு இதெல்லாம் கொண்டாடிப் பழக்கமே இல்லியாம்.’

‘ஏன், பேய்ங்க கேக் வெட்டாதாமா?’

‘தெரியல. வந்தா கேக்கறேன்’ என்று சொல்லிவிட்டு என் மனைவி கடைக்குச் சென்று ஒரு புடைவை எடுத்து வந்தாள். தாட்சுவின் பிறந்த நாள் அன்று பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள் குங்குமத்துடன் புடைவை ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்து, பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னாள். தாட்சுவுக்கு அது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.  ஏனென்றால் அவள் அதை எதிர்பார்த்திருக்கவில்லை.

‘மஞ்ச குங்குமம் எல்லாம் வச்சிக்கறதே இல்லம்மா. ஸ்டைலுக்கு ஸ்டிக்கர் பொட்டுதான் எப்பமும்.’

‘பரவால்ல. எடுத்துட்டுப் போ’ என்று என் மனைவி சொன்னாள். அவள் மறுக்கவில்லை. அவருகிட்ட காட்னா சந்தோசப்படுவாரு என்று சொன்னபடி வாங்கிக்கொண்டாள்.

மறுநாள் அவள் வேலைக்கு வரவில்லை. இரண்டாம் நாளும் அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. போன் செய்து பார்த்தபோதும் பயனில்லை. அவளது போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தாட்சுவின் புருஷனுக்கு உடம்பு சரியில்லை என்று அவளது தோழி ஞான சுந்தரி மூலம் தகவல் கிடைத்தது.

சில தினங்களில் ஊரெங்கும் கிருமி அச்சம் தலைவிரித்தாட ஆரம்பித்திருந்தது. எங்கெங்கும் மக்கள் திடீர் திடீரென இறந்து போய்க்கொண்டிருந்தார்கள். தாட்சுவுக்குப் பெரிய இக்கட்டு ஏதும் நிகழ்ந்துவிடாதிருக்க வேண்டும் என்று என் மனைவி இரண்டு மூன்று முறை வருந்திப் புலம்பினாள். எங்கள் குடியிருப்பு வளாகத்தில் வெளியாள்களுக்கு அனுமதி இல்லை என்று சட்டம் இயற்றி வாயிற்கதவை இழுத்துப் பூட்டினார்கள்.  தாட்சுவின் சினேகிதி வருவதும் நின்றுபோனது. அடுத்த சில தினங்களில் தாட்சு இல்லாமல் வேலைகளைப் பங்கிட்டுச் செய்யப் பழகிக்கொண்டோம்.

வெளி உலகோடு தொடர்பே இல்லாமல் வாழத் தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகு எங்கள் குடியிருப்பு வளாகத்தின் வாயிற்கதவை ஒரு வழியாகத் திறந்தார்கள். பணியாளர்கள் இனி வரலாம் என்று உத்தரவானது. முகக்கவசம் அணிந்து கை உறைகளுடன் தாட்சு எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். என் மனைவிக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவளுக்குக் காப்பி கொடுத்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுத்தான் வேலை செய்யவே அனுமதித்தாள். ஆறு மாத கால ஊரடங்கு வாழ்க்கை எப்படியெல்லாம் போனது என்று தாட்சு உற்சாகமாக விவரித்தாள். வேலை இல்லை என்பதைத் தவிர வேறெந்த வித்தியாசத்தையும் தான் உணரவில்லை என்று சொன்னாள். யார் மரணத்துக்கும் செல்லவே உலகம் அச்சப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் எங்கு யார் இறந்த செய்தி அறிந்தாலும் தயங்காமல் அவள் முதலில் சென்று நின்றிருக்கிறாள். வழக்கம்போல தினமும் சுடுகாட்டுக்குப் போயிருக்கிறாள். பேய்களுடன் பேசிக் களித்திருக்கிறாள்.

‘உனக்கு பயமாவே இல்லியா?’

‘இல்லம்மா’

‘உன் புருஷன் எப்படி இருக்கான்?’

‘ம்ம். நல்லாருக்காரு.’

‘சரி போ. எப்பவும் நல்லா இரு’ என்று சொல்லிவிட்டு என் மனைவி அவள் வேலைகளைப் பார்க்கப் போய்விட்டாள்.

பிறகும் சில தினங்கள் கழிந்த பின்புதான் அச்செய்தி வந்தது. தாட்சுவின் புருஷன் கிருமித் தொற்றுக்கு ஆளான ஏழாம் நாளே இறந்துவிட்டிருக்கிறான். யார் உதவியும் இன்றி அவள் தன்னந்தனியாக அவனை எடுத்துச் சென்று அடக்கம் செய்திருக்கிறாள்.  நான்கு மாதங்களுக்குப் பிறகு வேறொருவனை சுடுகாட்டில் வைத்தே திருமணம் செய்துகொண்டு வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறாள்.

இது நிச்சயமாக தாட்சுவைக் குறித்த இன்னொரு வதந்தியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என் மனைவி கேட்டபோது, மிகவும் ஆச்சரியமூட்டும் பதிலை அவள் சொன்னாள்.

‘என்னம்மா செய்ய. செத்த நாலாநாளே எங்கூட்டுக்காரு பேயா வந்து கண்டிசனா சொல்லிட்டாரு. நீ தனியா இருந்தா கண்டவன் உத்து உத்துப் பாத்துக்கினே இருப்பான். உன் நிம்மதி பூடும்… அதனால இவன கட்டிக்கினு வாழ்ந்திருன்னு அவுருதா கைகாட்டி உட்டாரு.’