வசந்தகுமாரா,

நலமாய் இருப்பாய் என நம்புகிறேன். என் கடிதம் உனக்கு ஒரு பொருட்டென்று ஆகுமா? எனத் தெரியவில்லை. ஆனால் எனக்கு உன்னை விட்டால் யாருமில்லை என்றே தோன்றுகிறது. உன்னிடத்தில் மட்டுமே என்னால்  என் அகம் முழுக்க திறந்து நிற்க முடியுமென நினைக்கிறேன். உன்னால் மட்டுமே  எவ்வித  பரிதாபத்தையும், பச்சாதாபத்தையும், இரக்கத்தையும் என்மேல் கொட்டாமல் என்னை இயல்பாக அணுக முடியுமென்று நம்புகிறேன்.போலியற்ற ஒரு அன்பின் சொல்லுக்காக, ஒரு உறவின்  தொடர்பிற்காக மனம் ஏங்கத்துவங்கி இருக்கிறது. நான் எவ்வளவு நம்பிக்கையானவன் என நீ அறிவாய். நாம் கருவாய் உருவெடுத்த கணத்திலிருந்து அதை நீ அறிந்திருப்பாய். உன்னை பின் தள்ளியே  நான் முதலில் ஜனித்திருப்பேன். அதையே அறிவியலும் சொல்கிறது. என் அறிவின் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையால் நிறைந்திருந்த என் அகந்தையை, படிப்பில் நான் காட்டிய வேகத்தை, உன்னை மிகச்சாதாரணமாகக் கையாண்ட விதத்தை என உன் நினைவில் நிறையத் தேங்கியிருக்கலாம். எனக்கு அவற்றிலும் முக்கியமானதாககக் கருதிய சிலவற்றை நினைவில் சேகாரம் செய்துகொள்ள வேண்டியிருந்ததால் நமது பால்யம், நமக்கிடைத்தான உறவு அது சார்ந்த நினைவுகள் என எவற்றையும் துல்லியமாக நினைவில் தேக்கிக் கொள்ளாமல் புறம் தள்ளியபடியே முன்னேறினேன்.

நீ அறிந்தவைகளிலிருந்து உன் வாழ்வைத் தெரிவுசெய்தாய். நான் அறியாதவைகளிலிருந்து என் வாழ்வை தெரிவுசெய்தேன். அதுவே உன்னில் நிதானமாகவும் என்னில் வேகமாகவும் வெளிப்பட்டிருக்கலாம்.  நீ அறிந்தவற்றை தொகுத்துக் கொண்டாய் நான் அறியாதவற்றைத் தொகுத்துக் கொண்டேன்..அறியாதவைகளை நோக்கியே நகர்ந்தேன் அவற்றை அறிந்த பின் மேலும் அறியாதவற்றைத் தொகுக்கலானேன். நான் கடந்து போய்க்கொண்டே இருந்தேன்.நீ நின்று திளைத்தாய், நிதானமாய் ரசித்தாய். நான் ஒரு காட்டுத் தீ, காட்டுக் குதிரை என்றெல்லாம் கற்பனையில் திளைத்தேன். உன் மீது பச்சாதாபப்பட்டிருக்கிறேன். பரிதாபத்திற்குரியவன் என நினைத்திருக்கிறேன்.அறிவியலை நீ வகுப்பெடுப்பவன், நான் வார்த்தெடுப்பவன் என திமிரோடு திளைத்துக்கிடந்தேன்.யாரும் ஏறி அடையா உயரங்களை, யாரும் முழுகியறியா ஆழங்களை நான் அறிந்திருக்கிறேன் என பெருங்கனவோடு திரிந்திருக்கிறேன்.

உனக்கு ஞாபகம் இருக்கலாம், அறிவியல் ஆய்வாளர்களை அவர்களின் ஆராய்ச்சி முறைகளையும் மிகுந்த ஏளனத்தோடு விமர்சித்து (ப்ளுயட் டைனமிக்சிற்கும் பென்னிஸ் எரக்ஸனுக்கும் என்ன தொடர்பு )சர்வதேச ஆய்விதழில் வெளிவந்து பல  விஞ்ஞானிகளைக் கோபப்படுத்தி என்னை பிரபலப்படுத்திய என் முதல் கட்டுரையை. ஆய்வுகள் போகும் பாதை குறித்தான கேள்வி அது. அமெரிக்காவின் கார்ல் சாகனோடு  கார்னலில் இணைந்து பணியாற்றிய கேரிஸ் கிரான்டோடு இணைந்து ரஷ்ய விஞ்ஞானி  விளாடிமிர் முஸ்க் பெலின்ஷ்கியின் வழிகாட்டுதலில் ரஷ்யாவில் என் ஆய்வு துவங்கியது. அமெரிக்காவின் SETI(SEARCH FOR EXTRA TERRESTRIAL INTELLIGENCE)க்கு இணையாக SPACE RESEARCH INSTITUTE OF RUSSIAN ACADEMY OF SCIENCE ஆல் வேற்றுகிரக வாழ்க்கையை ஆராய ஆரம்பிக்கப்பட்ட துணை ஆராய்ச்சி நிறுவனமொன்றின் ஆறு முக்கிய நெறியாளர்களில் நானும்  ஒருவனாக பணியமர்த்தப்பட்டேன். ” சோவியத் விண்ணியல்” சஞ்சிகையில் வெளிவந்த எனது ஆய்வு கட்டுரைகள் பலவற்றை நீயும் படித்திருப்பாய் என நம்புகிறேன். இவ்வளவு விளக்கமாக என் பணி சார்ந்த தகவல்களை இங்கு யாரிடமும் பகிர்ந்திருக்க மாட்டேன் என நம்புகிறேன். நீ ஒருமுறை கேட்டபொழுது கூட வெறும்” ரஷ்யாவில்” என சொல்லியிருக்கிறேன். ரஷ்யாவில் எங்கே எனக் கேட்டபொழுது “முராமன்ஷ்க் ஓப்லாஸ்ட் பிராந்தியத்தில் கபினி மலைத்தொடரில் கிரோஷ்க் என்னும் ஆய்வுக்கூடத்தில்” என எரிச்சலாக சொன்ன நினைவு. எங்கள் ஆய்வுக்கூடத்தின் பணி ஒலி,ஒளி அலைகள் மற்றும் சமிஞ்சைகளை  விண்ணில் செலுத்தி வேற்றுகிரகத்தில் உயிரினங்கள் இருந்தால் அவற்றை தொடர்புகொள்ளுதல் அல்லது ஈர்த்தல். சேகனோடு சேர்ந்து நாங்கள் வகுத்த”தொழில்நுட்ப நாகரீகங்களே” எங்களை பிரபலமாக்கியது.

நம் பிரபஞ்சத்தில் பூமி உருவாகி 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது.  மனித இனம் உருவாகி சில லட்சம் ஆண்டுகளே ஆகிறது. நமது தொழில்நுட்பம் வளரத்துவங்கி இருநூறு முந்நூறூ வருடங்களே ஆகியிருக்கிறது. இலட்சம் ஆண்டுகளாக வாழ்ந்த மனித இனம்  மின்சாரம் என்னும் சத்தியையும் , கனிம எண்ணெயிலிருந்து இயங்கு சத்தியையும் கண்டடைய இவ்வளவு ஆண்டுகள் எடுத்து கொண்டுள்ளது. பூமியைத் தாண்டிப் போக, நுண்ணுயிரினங்களைக் கண்டறிய, நோய்களை எதிர்த்துப் போரிட என இத்யாதிகளுக்கு இவ்வளவு காலம் எடுத்துகொண்டுள்ளது. நமது பால்வெளியில் 300 பில்லியனுக்கும் மேலான நட்சத்திரங்களும் கோள்களும் உண்டு. அவற்றில் பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக உயிரினங்கள் வசிக்கலாம். அவர்கள் தமது தொழில்நுட்பத்தில் எந்த நிலையை இவ்வளவு நாட்களில் அடைந்திருப்பார்கள் என்பதை தெர்மோடைனமிக்ஸின் விதிகளை கொண்டு நாகரீகங்களாக வகைப்படுத்தினோம்.நாகரீகம் 1,2,3,4,5,6 என வகைப்படுத்தினோம். ஒரு உதாரணத்திற்கு 6ம் நிலை நாகரீகத்தை அடைந்து அதைப் பயன்படுத்தும் வேற்றுலகவாசிகள் 1000 ட்ரில்லியன் டிகிரி வெப்பத்தைக் கையாளக்கூடியவர்களாக இருப்பார்கள்.அதன் மூலமாக ஒரு பிரபஞ்சத்தையே உருவாக்கவும் அழிக்கவும் கூடிய ஆற்றல் மிக்கதாக அவர்கள் நாகரிகம் இருக்கும் என நாங்கள் வெளியிட்ட கூட்டு ஆய்வறிக்கை பெருத்த அதிர்வுகளை உருவாக்கியது. உலக நாடுகளுக்கு வேறொரு வகையான பயம் தொற்றியது. அவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட வேற்றுலகவாசிகள் பூமியைத் தாக்கினால் என்ன செய்வது என்றெல்லாம் சிந்திக்கத் துவங்கின. எங்களின் ஆராய்ச்சி அறிக்கை வெறும் கற்பனை எனவும் சில விஞ்ஞானிகள் கேலி செய்தனர்.

நான் மிகத் தீவிரமாக வேற்றுலகவாசிகளை ஈர்ப்பது குறித்து ஆராயத் துவங்கினேன். அவ்வாராய்ச்கிக்கூட இயற்பியல் விதிகளெல்லாம் செவ்வியல் இயற்பியல் சார்ந்தது. அவற்றை புதுப்பித்து குவாண்டம்  இயற்பியல் சார்ந்ததாக மாற்றினேன். ஒரு கட்டத்தில் அங்கிருந்த பெரிய ஏரியொன்றே வற்றிவிட்டது. எங்கள் ஆராய்ச்சியே அதற்கு காரணமெனவும், அந்த மலைப்பகுதியையே நாங்கள் பாலை நிலமாக்க போகிறோம் எனவும் சூழலியல் ஆய்வாளர்கள் எழுதினார்கள்,பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தினார்கள். நாங்கள் உருவாக்கிய ஈர்ப்பலைகளின் வெப்பத்தால் நாங்களே ஒரு நாள் பொசுங்கிவிடுவோம் என நினைக்கத் துவங்கினேன்.வெறுமையாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அப்பொழுதுதான் ஒருநாள் எங்கள் தொலைக்காட்டிப் பதிவுகளில் விண்ணிலிருந்து வந்த விசித்திர உருவங்கள் பதிவாகியிருந்தன.

மொத்தம் ஆறு வேற்றுலகவாசிகள் அங்கு வந்து சென்றிருந்தன. குறைந்தபட்சம் ஒரு வேற்றுலகவாசியையாவது உயிருடன் பிடிக்க முடிவானது. எங்கள் வரையறைப்படி அவர்கள் மூன்றாம் நிலை நாகரீகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதாவது நானோ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளங்கை அளவு ரோபோக்களை தயார் செய்யக்கூடியவர்கள். உயிர் ரோபோக்களை உருவாக்கக்கூடிய  அளவும்  கூட அவர்களின் நாகரிகம் வளர்ந்து இருக்கலாம். எப்படியாயினும் வேற்றுலகவாசிகளை பிடிப்பதற்கான பணி துவங்கியது .

நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? எங்கள் ஆராய்ச்சியினால் ஒரு பெரிய ஏரியே வற்றிப்போனது என்று, அந்த ஏரியின் மீது எனக்கு  மிகப்பெரிய பரிவு உண்டு. அதன் கரைகளில் சில மணி நேரங்கள் நடை போவதுண்டு. பிர்ச், சிடார் மரங்கள் சூழ்ந்த அதன் கரைகள் ஒரு ஆழ்ந்த அமைதியைத் தருவதெனினும், நான் நிறைவுறா அகம் கொண்டவன் என்பதால் என்னை அந்த அமைதி மேலும் கொதிப்பாக்கிச் சவால் விடுவதாகவே இருக்கும். அமைதியாகவும், மெதுவாகவும் நடந்து செல்லவேண்டிய சவ ஊர்வலத்தில் வேகமாகவும், பரபரப்பாகவும் நடந்து செல்லும் ஒருவனைப் போல உளம் அடங்காதவனாக நான் நடைபோட்டு கொண்டிருப்பதை யாராவது பார்த்தால் நிச்சயம் சிரிப்பார்கள். அப்படியான ஒரு மாலை நடையில் வற்றிய ஏரியில் குட்டை போல ஆங்காங்கே தேங்கியிருந்த தண்ணீரில் விசித்திரமான ஒரு அசைவைக் கண்டேன் பறக்க எத்தனிக்கும் பறவை ஒன்றை நீரில் அழுத்துவது போன்ற அலைவுகள். ஆர்வமூட்டுவதாகவும்  அதேவேளை பயமூட்டுவதாகவும் இருந்தது, தனித்து அங்கு செல்லக்கூடாது என எங்கள் ஆட்களை கைபேசியில் அழைத்தேன். ஆட்கள் சூழ அவ்விடத்தை  அடைந்த பொழுது  அது அவ்விதம் முடியுமென நான் எதிர்பார்க்கவில்லை. வெகுசாமர்த்தியத்தைக் காட்டி முடிக்கவேண்டும் எனத் திட்டமிட்டு காத்திருந்த வேலை அவ்வளவு சுலபமாய் முடிந்திருந்தது, ஆம் அது ஒரு வேற்றுகிரகவாசிதான். தவறிப்போய் தண்ணீரில் தரையிறங்கியிருக்கலாம் எனக் கணித்தேன். சரியாக நான்கடி உயரம் இருந்தது.தொடுகையில் வழவழப்பு காட்டுவதாக இருந்தது. மூட்டுகளோ, விரல்களோ இல்லாத நீட்டப்பட்ட குழல் போன்ற கை, கால்கள், செவ்வக வடிவ உடல், தலை என ஒன்று தனியாக இல்லை. செவ்வக வடிவத்தின் மேற்பகுதியில்  இரண்டு துளைகள் போன்ற அமைப்புகள் இருந்தது. அவை கண்களாக இருக்கலாம். காதுகளைக் காணவில்லை. இனப்பெருக்க உறுப்புகள் இல்லை, கழிவுகள் வெளியேற்ற உறுப்புகள் இல்லை. அதனை தொடுகையில் உள்ள வழவழப்பு உணர்வு அருவெறுப்பு ஊட்டுவதாக இருந்தது. அதனை ஒரு கண்ணாடிக் கூண்டில் அடைத்து வைத்தோம். அது எந்த நாகரீக வகையைச் சேர்ந்தது என்றும் எத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இங்கு வந்தது என்பதை ஆராய்வதும்தான் முதன்மையான நோக்கம். அதன் உடற்கூறை ஆராய சில உயிரியல் ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவ்வுயிரினம் கண்ணாடி அறைக்குள்  அடைக்கப்பட்டிருந்தது. அது எவ்வித எதிர்ப்பையும் காட்டுவதாக தெரியவில்லை .எவ்விதமாகவும் அது குறித்த எந்த மேலதிக தகவல்களையும் எங்களால் பெற முடியவில்லை. கண்ணாடி அறைக்குள் சில நேரங்களில் அது அங்கும் இங்கும் அலைவுறும் மற்ற நேரங்களில் அமைதியாகவே இருக்கும். உயிரியல் ஆய்வாளர்கள் சில நாட்கள் அதை தொட்டுத் தூக்கி  ஆய்ந்தனர். அந்தப் பிராந்தியம் முழுக்க எங்கள் ஆட்கள் அது பறந்து வந்த பொறியைத் தேடி அலைந்தனர். எதுவும் கிடைக்கவில்லை. அதற்கு உணவாக பல உலோகங்களை அதன் முன்பாக வைத்துப் பார்த்தோம். பிறகு பழங்கள், மரக்கிளைகள், இலைகள் என வைத்த எதையும் அது ஒன்றும் செய்யவில்லை. சில நேரங்களில் அதன் செவ்வக வடிவின் மீது துளைகள் பாதரசக் குமிழ்கள் போன்று தெரியும். பிறகு அது காணாமல் போய்விடும். அந்தப் பாதரச குமிழ்கள் அது அழுவதாகக் காட்டுவது போல இருக்கும். அதன் மீது ஒரு பரிவு தோன்றும். அதன் உடலிலிருந்து ஏதேனும் கதிர்வீச்சு உருவாகிறதா என ஆராய்ந்தேன். ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் அது ஓயாமல் அபயக்குரல் எழுப்புகிறது என நினைத்தேன். அது பிடிபட்ட மூன்றாம் நாள் இரவு அதனோடு உரையாடினேன். உரையாடினேன் என்றால் விதவிதமான அலைவரிசையில் கதிர்வீச்சுகளை உருவாக்கி அதன் மீது செலுத்தி அதன் அசைவுகளைக் குறிப்பெடுத்தேன். எதோ ஒரு தைரியத்தில் கண்ணாடி கூண்டைத் திறந்து உள்நுழைந்து அதை தொட்டுப்பார்த்தேன். அதன் துளைகளில் மீண்டும் பாதரசக்குழிகள் அப்பொழுதுதான் அதை கண்டறிந்தேன். வெறும் குச்சிகள் போன்று நீட்டப்பட்டிருந்த அதன் கைகளில் ஒன்று என் கையைத் தீண்டியது தண்ணீர் உடலில் பட்டு பரவுவது போன்று சிலிர்ப்பு. கை போன்று நீண்டிருந்த விரல்களற்ற அதன் உறுப்பு அப்படியே உருகி வழிவது  போன்று என் கைகளில் விரல் போன்று வழிந்து பற்றிக்கொண்டது. அதன் கண் என்று நான் யூகித்திருந்த குழிப்பரப்பில் மீண்டும் பாதரச குமிழ்கள்.அது என் கைகளைப் பற்றிக்கொண்டு அழுவதாக எனக்குப்பட்டது. இப்படியே இந்த கூண்டைத் திறந்து விட்டு விட்டால் என்ன என தோன்றியது. இறுதியாக நான் தான் அந்த கூண்டைத் திறந்தேன் என்பது அந்த அறையின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, ஒருவேளை அது தப்பித்துப் போய்விட்டால் அதற்கு நான்தான் காரணம் எனக் கண்டுபிடிக்கப்படலாம். ஆனால் அது குற்றச்செயல் என தண்டனையளிப்பதற்கான எந்தச் சட்டமும் அங்கு இல்லை. எனக்குள் பெரும் மனப்போராட்டம், ஆனாலும் அந்தக் கூண்டை திறந்து விட்டுவிட்டு சென்று படுத்துக்கொண்டேன்.

 

மறுநாள் அதிகாலை மிகச் சீக்கிரமாகவே எழுந்த நான் அதைப் பார்க்க ஓடினேன்.  கூண்டு திறந்திருந்தது. அது முன்பு போலவே நின்றது. சாமார்த்தியமற்ற ஒரு முட்டாளைப் போல எனத் தோன்றியவுடன் முதலில் கோபம்தான் வந்தது, யாருமேயற்ற அனாதையைப்போல எனத் தோன்றிய கணம்  எனக்கு  என் வாழ்வில் இரண்டாவது  முறையாக அழுகை வந்தது. முதல்முறை நான்காம் வகுப்பில் இரண்டாவது ரேங்க் வாங்கியதற்காக அழுதது. சட்டென அதன் குழிப்பரப்பிலும் பாதரச குமிழ்கள். என் உணர்வுகளை அடக்கியபடி நான் அதன் அறையைப் பூட்டிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.  அன்றும் உயிரியல் வல்லுனர் குழுவினர் அதனை ஆராய்ந்தனர்.அதற்கு என்ன உணவு தருவது எனவும் எம் உயிரியல் வல்லுனர் குழுவுக்குத் தெரியவில்லை.

அன்று இரவு மீண்டும் பலவிதமான அலைவரிசைகளைக் கொண்ட கதிர்வீச்சுகளை செலுத்தி ஆராய்ந்தேன். அன்றும் கூண்டுக்குள் சென்றேன் என் கைகளை பிடித்தது. அதன் குழிப்பரப்பில் மீண்டும் பாதரச குமிழ்கள் அன்று இரவும் கூண்டை திறந்து வைத்துவிட்டே வந்தேன்.

மறுநாள் உயிரியல் ஆய்வாளர் பிர்தோஸோடு உரையாடியபோது சில தகவல்களை அளித்தார். அதாவது நம்மிடம் இருக்கும் இந்த உயிரினம் ஒரு குழந்தையாக இருக்கலாம் . அதன் உறுப்புகள் முழுமையாக வளரவில்லை. அதற்குரிய உணவை அதனால் புரிந்துகொள்ளவே இயலவில்லை எனவும் இந்த நிலை நீடித்தால் அதன் உடல் இயக்கம் நின்று  விடக்கூடும். மறைமுகமாக அது ஒருநாள்  இறந்து போகும் எனக் கூறினார். அந்தநாள் வருவதற்குள் அதன் உணவை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள் என பிர்தோஸின் குழுவினரிடம் வலியுறுத்தி விட்டு திரும்பினேன். ஆனால் அன்று இரவே அதன் உடல் இயக்கம் நின்று போனது. அது இறந்து போனது என அதை பரிசோதித்த பிர்தோஸ் அறிவித்தார்.

அன்றைய இரவு அவ்வளவு எடை மிக்கதாக ஆனது. அந்த உணர்வுகளை என்னால் துல்லியமாக சொல்லிவிட முடியவில்லை. முன்பு இது போன்ற உணர்ச்சிகள் தோன்றியதே இல்லை.அழுத்தம் நிறைந்த ஒரு தொடுகை என் கைகளை உறுத்திக்கொண்டே இருக்கிறது. உறக்கம் விருந்தாளியைப் போல எப்பொழுதாவது வருகிறது. யாருடனாவது இதை பகிர நினைத்தபோது உன் நினைவு வந்தது.

இங்கு மீண்டும் மீண்டும்  வேற்றுலகவாசிகளை ஈர்க்கும் அந்த அலைகளை  உருவாக்கி அவற்றை ஈர்த்து கொண்டு வர சொல்லி நிர்பந்திக்கிறார்கள். எவ்வளவு முயன்றும் அவைகள் வரவேயில்லை.

உன்னிடத்தில் சொல்லுகிறேன், உண்மையில் அதன்பின் துல்லியமான அதிர்வெண்ணில் அவ்வலைகள் உருவாகாதது போல சில மாற்றங்களை செய்து விட்டேன்.இன்னும் தவிப்பு அடங்கவேயில்லை. அந்த வேற்றுலக குழந்தையின் பாதரசக்குமிழ்கள் மின்னும் குழிக்கண்கள் நினைவைக் கொல்கிறது. நன்றாக இரு. அம்மா, அப்பாவை பார்த்துக்கொள், பிரேமாவையும் ,குழந்தைகளையும் கேட்டதாக சொல்.

 

அன்புடன்

நந்தகுமாரன்

மின்னஞ்சல் முடிவுற்றிருந்தது. எதுவும் தோன்றவில்லை. ஆனால் என் திருமணத்திற்கு கூட வராதவன் என் மனைவியின் பெயரை சரியாக சொன்னது ஆச்சர்யமாக இருந்தது, குழந்தைகள் எனப் பன்மையில்  குறிப்பிட்டிருப்பதும் எனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதை அவன் தெரிந்தே வைத்துள்ளான் போலும் என்ற எண்ணம் ஆச்சரியத்தின் பரப்பை அதிகப்படுத்தியது.

முன்பு அப்பா ஜோதி தரிசனம் பார்க்க ஆண்டுதோறும்  பூசத்திற்கு வடலூர் அழைத்துச் செல்வார்.  இப்பொழுதெல்லாம் அந்த நாளில் செல்லமுடியவில்லை என்றாலும் வாய்க்கிற நாளில் செல்வதுண்டு. கடிதம் கண்ட நான்காவது வாரம் வடலூர் சென்றிருந்தேன்.வலது கண்ணில் ஏனோ கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. ஞானசபை தரிசனம் முடித்த பின் அன்னதானக்கூடத்தை  நோக்கி நடந்தேன். அன்னதானக்கூடத்தை சுற்றி வழக்கமாக இருக்கும் கூட்டம் . அந்த கூட்டத்தில் தலை முக்காடிட்டு தூய வெண் உடையில் இருந்த அவனைக் கண்டேன். முக்காட்டினால் தலையை முழுக்க மூட முயற்சிப்பதாகத் தோன்றியது. சட்டென நகர்ந்து விட்டேன்.