ஒவ்வொரு விதமாக வேண்டுகோள்களை முன் வைக்க முடியும். அவற்றுக்கான மறுமொழிகள் – அவை மிகவும் மாறுபட்டதாகவும் அமையலாம் இல்லையா? வேண்டுமென்றால் கைவிட்டுவிடவும், கண்டுகொள்ளாமலிருக்கவும் கூட முடியும்.

இவை மூன்று தாய்மார்களின் வேண்டுகோள்கள்…

I

என்டயா? என்ட பேர் ஸ்ரீநாச்சி. காவன்னா ஸ்ரீநாச்சி. என்ட பேர்ல என்ன இருக்கப் போகுது? மனுஷனா வாழச் சுதந்திரம் இல்லண்டா பேருல மட்டும் என்ன பயனிருக்கப் போகுது? மண்ணோட முட்டி மோதி ஏலுமான விதத்தில எதையாவது வேக வச்சுத் திண்டுபோட்டு யாருக்கும் எந்தத் தீங்குமில்லாம சீவிச்சு வந்த சனங்கள் நாங்கள். தெரிஞ்ச காலத்துல இருந்து யுத்தத்தால அடி வாங்குறம். ஆனா எல்லாரும் எங்களுக்காகத்தான் யுத்தம் செய்யுறமெண்டு சொல்றாங்கள். வீடு வாசல், பயிர் பச்சைகள், ஆடு மாடுகள் எல்லாம் எத்தனை தடவைதான் இல்லாமப் போச்சுது. உடுத்திருந்த உடுப்புகள் மட்டும் மிஞ்சியிருந்த நேரங்களும் இருந்தது.

ஆனா நாங்க யாரிட்டயும் எதையும் கேட்டுப் போனதில்ல. யாரையும் குத்தம் குறை சொல்லேல்ல. எங்களால இயலுமான விதத்துல எங்கட காரியங்களைச் செஞ்சு கொண்டம். வளர்ந்து கல்யாணம் கட்டி பிள்ளை பெத்தம். பிள்ளைகள நல்லாப் படிக்க வச்சு நல்லொரு இடத்துக்கு அனுப்ப வேணுமெண்டது மட்டும்தான் எங்கடை வாழ்க்கைல இருந்த ஒரே ஆசை. ஆனா, பார்க்கப் போனா பிள்ளையளுக்கெண்டு இருந்தது எங்களோடதையும் விட மோசமான காலம்.

எனக்கு நாலு பிள்ளையள். ஒரேயொரு மகன். அந்தப் பெடியனும் படிக்க நல்லாப் பாடுபட்டான். ஐயோ… எண்டாலும் என்ன செய்யுறது? எல்லாம் கரைஞ்சு போச்சுது. பெடியனை பலவந்தமாக் கடத்திக் கொண்டு போயிட்டினம். கொண்டு போய் இப்ப ஒரு வருஷத்துக்கும் மேலாகுது. காலையிலேயே ஸ்கூலுக்குப் போயிட்டு வந்தவன், பகலைக்கு போட்டு வச்சிருந்த சோத்தைக் கூடச் சாப்பிடாம ‘அம்மா நான் ட்யூஷனுக்குப் போயிட்டு வந்து சாப்பிடுறன்’ எண்டு சொல்லிட்டு மாலை வகுப்புக்குப் போனான். களுவாஞ்சிக்குடிக்குத் திரும்புற இடத்துல ஒரு ட்யூஷன் வகுப்பு இருக்கல்லோ? அதுக்குத்தான். அந்த வகுப்பு முடிஞ்சு இன்னொரு பெடியனோட சைக்கிள்ல வீட்டுக்கு வர வந்தானாம். அந்தி நாலரைக்குப் போல ரெண்டு பேரையுமே சைக்கிளோட கொண்டு போயிட்டினம். மற்றப் பெடியனையெண்டா கொஞ்ச நாட்கள்லயே திருப்பி அனுப்பிட்டினம். அந்தப் பெடியனோட அம்மா, அப்பாக்குத் தெரிஞ்சவையள் பெரிய பதவிகள்ல இருக்கினமாம். எங்கடை பெடியன எனக்குத் திரும்பக் காணக் கிடைக்கவேயில்ல.

அதுதான் உங்களிட்ட ஒரு உதவி கேட்டு வந்தனான். முடியாதெண்டு மட்டும் சொல்லிடாதீங்கோ. அந்த உதவியை எனக்கு எப்படியாவது செஞ்சு தாங்கோ. பெடியனைப் பார்க்கப் போக காசு கொஞ்சம் தாங்கோ. சும்மா வேண்டாம். கடனாத் தாங்கோ. நான் முடிஞ்சளவு கெதியா திருப்பித் தருவன். நானே காசுழைச்சுச் சேமிச்சுப் பார்க்கப் போறதெண்டால் அதுக்கு கனக்க நாளாகும். நிறைய யோசிச்சுப் பார்த்துத்தான் கடைசியா நான் இந்த முடிவை எடுத்தனான். நாங்க ஒருக்கிலும் ஒருத்தரிட்டையும் கையேந்திய ஆட்களில்ல. பெடியன்ட முகத்தைப் பார்க்குறதுக்குத்தான்… இல்லாட்டி பட்டினி கிடந்து செத்தாலும் கூட இப்படிக் கேட்டு வர மாட்டன். தப்பா நினைக்காதீங்கோ. ஊரில ஒருத்தரிட்டயும் இப்படிக் கேட்க என்னவோ மாதிரிக் கிடக்கு… அடுத்தது, ஊரிலையும் எல்லாரும் எங்களைப் போலத்தான். எல்லாரும் ஒரே நிலைமைக்கு விழுந்துட்டினம்.

பெடியனை இஞ்சயே கண்டிருந்தா பிரச்சினை ஒண்டுமில்லதான். ஆனா அதைச் செய்ய முடியாமப் போயிட்டுது. கொண்டு போன நாள்லருந்து ஓரோரிடமா அலைஞ்சு திரிஞ்சனான். பேரைச் சொல்லிக் கேட்டால் அப்படியொருத்தரை எங்களுக்குத் தெரியாதெண்டுதான் எல்லாரும் சொன்னவங்கள். பிறகுதான் காரணம் தெரிஞ்சது. பிள்ளையளக் கொண்டு போன உடனே பேரை மாத்தி புதிய புதிய பேர்களை வைப்பாங்களாம். அதனால புதுசா சந்திக்குற ஆட்களெல்லாருக்குமே அந்தப் பிள்ளையள புதிய பேர்களக் கொண்டுதானே தெரியும்? என்ட பெடியனுக்கு ஒரு அழகான பேர் இருந்துச்சுது. அந்தப் பேரைக் கூட நாந்தான் வச்சனான். எண்டாலும் பெடியன் உசிரோட இருக்கும்போதே அந்தப் பேரால ஒரு பிரயோசனமும் இல்லாமப் போயிட்டுது. அதனாலதான் பேரால என்ன பயனிருக்கப் போகுதெண்டு நான் உங்களக் கேட்டனான். அதாலதான் என்ட பெடியனை இன்னும் கண்டுபிடிக்க முடியேல்ல. பெடியன் இருந்த இடங்களுக்கும் போயிருப்பன். ஆனா முகத்தைக் கூடப் பார்க்கக் கிடைக்கேல்ல. அம்மாவும் கை விட்டுட்டாளெண்டு பெடியன் நினைச்சுக் கொண்டிருப்பானோ தெரியாது. அதனாலதான் பெடியனுக்கு ஏதெண்டாலும் பிரச்சினை வர முன்ன அவனைப் பார்க்க வேணும்.

                யாருக்குத் தெரியும்? போர் வன்னிக்கும் போகப் போகுதெண்டு எல்லாரும் சொல்றவங்கள். அப்படியெண்டால் என்ட பெடியனும் யாருமில்லாத அநாதை மாதிரிதானே சாக வேண்டி வரும். என்ட பெடியன் புலியில்ல. இஞ்ச போர்க்காலத்துல பிள்ளையள் எல்லாரையும் பிடிச்சு வன்னிக்குக் கொண்டு போயிட்டினமாம். என்ட பெடியனை மாதிரி பலவந்தமா பிடிச்சுக் கொண்டு போன, அம்மா வாற வரைக்கும் காத்துக் கொண்டிருக்கிற பிள்ளையள் எத்தனை இருப்பினம் அங்க? செத்துக் கூடப் போயிருப்பினம். கடைசில புலியெண்டு சொல்லி டீவிலயும் காட்டியிருப்பினம். எங்கட தூரத்துச் சொந்தங்காரப் பதினெட்டு வயசுப் பெடியனொருத்தன கடத்தி வன்னிக்குக் கொண்டு போனவங்களாம். அந்தப் பெடியன் அங்க செத்துப் போயிட்டான். அநாதைப் பொணம் மாதிரி மண்ணுல புதைச்சுப் போட்டிருக்கினம். ஐயோ… அந்த அம்மா எப்படித் தாங்குவாள்? கஷ்டம் துன்பங்கள் அனுபவிச்சு பிள்ளைகளைப் பெத்து வளர்க்குறது இப்படி ஊர் பேர் தெரியாத இடங்கள்ல அநாதைப் பொணம் மாதிரி புதைக்கப்படுறதுக்கா? எனக்குக் கெதியாப் போக வேணும். ஒரு தடவை பெடியனோட முகத்தப் பார்த்து அம்மா அவனுக்கெண்டு இருக்குறத அவன் உணர்ந்தது எனக்கு விளங்கினா… எனக்கு அது போதும்.

பிள்ளையளப் பெத்து வளர்த்து ஆளாக்கி கடைசி காலத்துல நிம்மதியா இருக்கலாமெண்டு பார்த்தா, இப்ப நடக்குறதையெல்லாம் கனவுல கூட நெனச்சுப் பார்த்திருந்தமா? இப்ப இந்தப் பகுதியில புலி இல்லாததால எல்லாரும் சுதந்திரமா நிம்மதியா இருக்குறமெண்டு டீவியில பெரிய பெரிய ஆட்களெல்லாம் சொல்லினமாம். அப்படி எப்படி எங்களுக்கு நிம்மதி கிடைக்கும்? நிம்மதி கிடைக்க எங்கடை பிள்ளையள் வீட்ட திரும்பி வர வேணுமே. எங்கட பிள்ளையளப் பத்தி யாருமே எங்கேயுமே கதைக்கேல்ல. பிள்ளையள வந்து சரணடையச் சொல்லியெண்டா சொன்னவங்களாம். அத அவ்வளவு லேசாச் செய்ய ஏலுமெண்டாத்தான் எத்தனை பேர் அங்க எஞ்சியிருப்பினமோ தெரியாது. அடுத்தது… இஞ்ச நாங்க நிம்மதியா இருக்க வேணுமெண்டா பிள்ளையள பலவந்தமா பிடிச்சுக் கொண்டு போறது நிறுத்தப்பட வேணும்தானே? அதுவும் நடக்கேல்ல. போன கிழமையும் எங்கடை ஊரிலயே மூணு பிள்ளையளக் கடத்திக் கொண்டு போயிட்டினமாம். இந்தத் தடவை கருணா பார்ட்டியாம். இனி எங்க நிம்மதியோ, விடுதலையோ இருக்குது? அந்த டீவியில கதைக்குற ஐயாக்களுக்கு இதெல்லாம் தெரியாதோ? இல்லையெண்டா தெரிஞ்சு கொண்டு தெரியாத மாதிரி இருக்கினமோ? எங்களுக்கு எப்படி இதெல்லாம் விளங்கும்? இதைத் தேடிப் பார்க்கிறதாலயும் பிரயோசனமும் ஒண்டுமில்ல. நாங்க பாடுபட்டு உழைச்சாத்தான் எங்கடை பிள்ளையளுக்கு ஒரு வேளையாவது சாப்பாடு கொடுக்கலாம்.

பெடியனைப் பார்க்க வேணுமெண்டால் வவுனியாவுக்குப் போய் சில நாட்கள் தங்க வேண்டி வரும். அனுமதி கிடைக்குற வரைக்கும் லொட்ஜொண்டுல இருக்க வேணும். கடையிலதான் சாப்பிட வேண்டி வரும். எல்லாத்துக்கும் காசுதானே தேவை. வன்னிக்குப் போனாலும் ‘இதோ இருக்குறார் அம்மாட பிள்ள. பார்த்துட்டுப் போங்கோ’ எண்டு யாரும் பிள்ளையை என்கிட்ட கொண்டு வந்து காட்டுவினமோ? இல்லையே. பிள்ளை இருக்குற இடத்தத் தேடிக் கண்டுபிடிக்க நானேதான் அங்க இஞ்ச அலைய வேண்டியிருக்கும். எண்டாலும் எப்பவாவது பிள்ளைய இந்த ரெண்டு கண்ணாலயும் கண்ட பிறகுதான் நான் திரும்பி வருவன். அதுக்கு ஏழெட்டு நாளாவது எடுக்குமெண்டு நினைக்குறன். அதுக்குக் கூடவும் ஆகலாம். எல்லாத்துக்கும் தயாராத்தான் போக வேணும். அதுக்கு நிறையக் காசு கையில வச்சிருக்க வேணுமே. அத்தோட பிள்ளைக்கு சாப்பிடப் பிரியமான எதையாவது கொஞ்சக் காலம் கெடாமல் வச்சுக் கொள்ற மாதிரி சமைச்சு எடுத்துக் கொண்டும் போக வேணும். அதனாலதான் இஞ்ச வாறதுக்கு மனச தயார் படுத்திக் கொண்டனான். தானமா மட்டும் காசைக் கொடுக்காதேயுங்கோ எனக்கு. அடுத்தவங்களோட உழைப்புல சம்பாதிச்ச காச தானமா வாங்கிப் பழக்கமில்ல எங்களுக்கு ஒருக்கிலும். கடனாக் கொடுங்கோ. கெதியாத் திருப்பிக் கொடுப்பன்.

இப்பயெண்டா எனக்கும் தோணுதுதான். கடவுளே! எதுக்கு நாங்க பிள்ளையளப் பெத்து வளர்த்தமெண்டு. புட்டத்தைத் தனியாக் கழுவிக் கொள்ளத் தெரிஞ்ச காலத்துலேந்து பிள்ளையளெல்லாம் பயத்துல நடுங்கிக் கொண்டுதானே இருக்கினம். நிஜமாவே நிம்மதியில்ல. நாங்கள் செத்துப் போய் புதைச்சாலும் கூட நிம்மதியிருக்காதெண்டுதான் தோணுது இப்பல்லாம். வாகரை மயானத்துக்கு நடந்திருக்கிறதப் பார்த்தீங்கதானே. சுனாமி வந்தப்ப ஒரு பக்கத்த கடல் கொண்டு போச்சுது. போர் வந்தாப் பிறகு எஞ்சிய பக்கமெல்லாத்தையும் புல்டோசர் போட்டு, மொத்த மயானத்திலேயும் தென்னம்பிள்ளையளை நட்டிருந்தினம். தென்னைகள் திணைக்களமெண்டோ என்னமோ போட் ஒண்டையும் நட்டிருந்தவங்கள். அங்க தென்னைகளெல்லாம் வெயிலில வாடிப் போய்ச் செத்துக் கிடக்கிறத போன கிழமை கண்டன். என்னண்டாலும் அங்க புதைக்கப்பட்டிருந்தது எங்கடை பிள்ளையளல்லோ எண்டுதான் நான் கேட்குறனான். அதைக் கண்டதும் என்ட மனசு சரியா நொந்து போயிட்டது. தாயொருத்தியால எத்தனையத்தான் தாங்கிக் கொள்ள ஏலும்?

நாங்க யாருமே புலிகளப் பெத்துப் போடேல்ல. நாங்க பிள்ளையளத்தான் பெத்து வளர்த்தம். எங்கட கையாலாகாத்தனத்துக்கு நாங்க யாருக்கும் சாபம் கொடுக்கவுமில்ல. நாங்க மனுஷனா வாழத்தான் பாடுபட்டம். ஆனா கடசில என்ன நடந்தது? எங்கடை பிள்ளையள் புலிகளாக ஆகிட்டாங்களெண்டு வையுங்கோ. ஆனா யார் அப்படி அவங்களை ஆக வச்சது? நாங்களா? பாவப்பட்ட நாங்களா?

அங்க புதையுண்டு கிடந்ததெல்லாம் என்னைப் போலவே பாவப்பட்ட தாய்மாரோட பிள்ளையள்தான். என்ட பிள்ளையைப் போலவே கஷ்டத்துல பிறந்து வாழப் பாடுபட்ட பிள்ளையள்…!

ஹ்ம்ம்… நான் போறன். வன்னிக்குப் போறதுக்கு முன்ன பொம்பிளைப் பிள்ளையள் மூணு பேர்டயும் குறை நிறைகளப் பூர்த்தி செஞ்சுட்டுப் போக வேணும். இந்தக் காலகட்டத்துல பொம்பிளைப் பிள்ளையளப் பிடிச்சுக் கொண்டு போறதில்லன்றதால நிம்மதி. அதனாலதான் அந்தளவு பயமில்லாமக் கிடக்கு. சரி… அடுத்த தடவை வரும்போது இங்காலேயே வன்னிக்குப் போகத் தயாராத்தான் வருவன். சரி தானே?

II

நான் வந்திருக்குறது ஒரு உதவி கேட்டு. தப்பா நினைக்காதீங்கோ. யாரையும் குறை சொல்ல வந்த பயணமல்ல இது. என்ன நடந்தாலும் நாங்க ஒரு நாளும் யாருக்கும் குற்றம் குறை சொன்னதில்ல. இனிமேல சொல்லப் போறதுமில்ல. தரையில ஒரு காலையும், குழியில ஒரு காலையும் வச்சுக் கொண்டு யாரையும் கோவிச்சுக் கொண்டு என்னதான் செய்றது? போகேக்க கொண்டு போகப் போறமா? இது எங்கட விதி. தமிழனாப் பொறந்த பாவத்தை நாங்க வாழ்ந்துதான் தீர்க்க வேண்டியிருக்குது…

நான் கண்ண மூட முன்ன இதோ இந்தப் பிள்ளையள் ரெண்டு பேரையும் வீட்டுக்குக் கொண்டு வந்து தந்தாப் போதும். வேற ஒண்டும் வேணாம். நாங்க ஏலுமான எல்லா இடங்களுக்கும் அலைஞ்சு திரிஞ்சம். செய்ய முடிஞ்சதெல்லாம் செஞ்சம். இதுக்குப் பிறகு நாங்க செய்றதுக்கு ஒண்டும் மிச்சமில்ல. எங்கட கடவுள் இல்லையோ தெரியாது. வெலிகந்தைக்குப் போகட்டுமாம், கொழும்புக்குப் போகட்டுமாம், அமைச்சர சந்திக்கட்டுமாம், ஜனாதிபதிக்கு எழுதிப் போடட்டுமாம், செஞ்சிலுவைக்குப் போகட்டுமாம்… ஐயோ தாங்கேல்ல. மகள் அந்த சில இடங்களுக்குப் போனவள்தான். அவளும் அவள்ட புருஷனும் இன்னமும் அலைஞ்சு திரிஞ்சு கொண்டுதான் இருக்குதுகள். இண்டைக்கும் வெலிகந்தைக்குப் போயிருக்கினம். எங்க…? எங்கேயும் ஒண்டுமே நடக்கேல்லயே.

எனக்கெண்டால் இதையெல்லாம் செய்ய இப்ப உடம்புல பலமே இல்ல. என்ட புருஷனும் இப்ப ஏலாமக் கிடக்கார். இப்ப கை கால்ல சீவனெல்லாம் ஓய்ஞ்சு போயிருக்குது. எவ்வளவு பாடுபட்ட மனுஷன்? மகளுக்கும் இப்ப போதுமாப் போயிருக்கும். ஒழுங்கான சாப்பாடில்ல. எப்படியும் அலைஞ்சு திரிஞ்சு மட்டும் போதாதே. பிறகு மற்றப் பிள்ளைகள் என்னத்த சாப்பிடுறது?

               எங்களாலயும் இப்ப பிள்ளையளுக்கு உதவி செய்ய வழியில்ல. இருந்த எல்லாத்தையும் இழந்துட்டம்.  நாங்க குடும்பிமலையில முருதான கிராமத்தில இருந்தம். நாங்க பொறந்து வளர்ந்ததெல்லாம் அங்கதான். முந்தி எங்களிட்ட பெரிய வீடு இருந்தது. ரெண்டு பக்கமும் பெரிய மண்டபம் வச்ச வீடு. எங்களிட்ட நிறைய ஆடு மாடுகள் இருந்துச்சுது. எண்பதுகள்ல தொடங்கின போருல எங்கட வீட்டுக்கு மட்டும் நாலு தடவ தீ வச்சாங்கள். ராணுவம் வந்தா வீடுகளுக்குத் தீ வச்சுட்டு வயல் பயிர் பச்சைகளுக்கு மேலால டோஸர் பண்ணிக் கொண்டு போகும். ஒண்டுமே மிஞ்சாது. நாங்க ஒவ்வொரு தடவையும் கையில கிடைக்குறத எடுத்துக் கொண்டு ஓடுவம். பிறகு ஒவ்வொரு தடவையும் நாங்க வீடு வாசல்களை நல்லாக் கட்டிக் கொண்டம். ஒவ்வொரு தடவையும் இனி ஒண்டும் நடக்காதெண்டுதானே நினைச்சம். அத்தோடு அந்தக் காலத்துல எங்க ரெண்டு பேருட்டயும் மனசுலயும் சக்தியும், தைரியமும் இருந்தது.

இப்ப இனிமேல அங்க போக ஏலாது. போனாலும் அங்க போய்ப் பாடுபட இப்ப எங்க ரெண்டு பேருட்டையும் சக்தியுமில்ல. எல்லாத்தையும் புதுசாத் தொடங்க வேணுமே!

அதோ… கேட்குதா? அதோ… அதோ… தொடர்ந்து அடிக்கிறாங்கள். ராத்திரி பகலெண்டு வித்தியாசமில்ல. தொடர்ச்சியா இப்படித்தான். அடிக்குற அடியில எதுவும் மிஞ்சுமெண்டு சொல்ல முடியாது. நாங்க கடைசியா வரும்போது நல்லாக் காய்க்குற நாப்பது தென்னை மரம் இருந்துச்சுது. இன்னும் ஒவ்வொரு விதமான பயிர் பச்சைகள், மரங்கள். எங்களிட்ட வயலெண்டால் இருக்கேல்ல. அதனால அவர் வேற ஆட்களிட வயலை குத்தகைக்கு எடுத்து விதைச்சு வந்தார். ஒரு குறையில்லாம வாழ்ந்து வந்தம். இடைக்கிடை யுத்தத்தால வந்த வினையில்லாம இருந்திருந்தா… மிகவும் அமைதியான வாழ்க்கையொண்டுதான் எங்களிட்ட இருந்தது.

இனி மிச்சக் காலத்தை பிள்ளையள்ட தயவுலதான் ஓட்ட வேணும். இன்னும் கன காலம் இருக்கப் போறதில்ல. காலம் நெருங்கிடுச்செண்டுதான் எனக்கு அடிக்கடி தோணுது. பிள்ளையள் ரெண்டு பேரையும் கண்ணால கண்டால் நிம்மதியாச் சாக ஏலும் எங்க ரெண்டு பேராலயும்.

அரசாங்கத்துல பெரிய இடங்களுக்கு, அந்த மனித உரிமைகள் பத்தியெல்லாம் கதைக்குற கொழும்பாட்களிட்டச் சொல்லி எங்களுக்கு இந்தப் பிள்ளையள் ரெண்டு பேரையும் எப்படியாவது கொண்டு வந்து தர உங்களுக்கு ஏலாதா? வெளிநாட்டுலருந்து பெரிய பெரிய அம்மாக்களும், ஐயாக்களும் பல தடவைகள் இஞ்ச வந்து பிள்ளையளக் கடத்திக் கொண்டு போறதப் பத்திக் கதைச்சவங்களெண்டு மகள் சொன்னவள். யார்கிட்ட சொன்னாலும் பரவாயில்ல பிள்ளையைக் கொண்டு வர ஏலுமெண்டால்.

என்ட மகனையும் கொண்டு போனவங்கள். அது தொண்ணூறாம் ஆண்டுல. போர்ல பாதிக்கப்பட்டதால பிள்ளையளக் கூட்டிக் கொண்டு இஞ்ச வந்து அவையள இஞ்ச ஸ்கூல்ல சேர்த்திருந்தம். ஆடு மாடுகளப் பார்த்துட்டு வருவமெண்டு நானும் அவரும் முருதானக்குப் போயிருந்தம். அண்டைக்கு ராத்திரிதான் அவையள் இந்தப் பக்கம் வந்து கனக்கப் பிள்ளையளக் கொண்டு போயிருந்தவங்கள். என்ட மகனையும் கொண்டு போயிருந்திச்சினம். எங்களுக்கு ஏழு பிள்ளையள். ஆறாவது பிள்ளையத்தான் அவையள் கொண்டு போனவையள். அவனுக்கு அப்ப பதினாலு வயசு. விருப்பத்தோட ஸ்கூலுக்குப் போனது அந்தப் பிள்ளை மாத்திரம்தான். அப்பாவைப் போல நல்ல அழகா இருப்பான்… என்னைப் போல கருப்பில்ல.

என்ட மகனும் உயிரோடிருக்கானெண்டு ஒவ்வொத்தரும் சொல்றவையள்தான். எண்டாலும்… எனக்கு நம்பிக்கையில்ல. இருந்திருந்தா இவ்வளவு காலத்துக்கும் அம்மா அப்பாவைப் பார்க்க வராம இருந்திருப்பானா? இருப்பானெண்டால்… ம்ம்… நல்ல இளந்தாரியா இருப்பான் இப்ப. ஹ்ம்ம்… இப்ப அதையெல்லாம் கதைச்சு வேலயில்ல. அந்தக் காலத்தில நான் ஒவ்வொரு நாளும் சோற்றையும் போட்டு வச்சுட்டு கதவத் திறந்து வச்சுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தனான்தான். எப்பண்டாலும் ‘அம்மா’ எண்டு கூப்பிட்டுக் கொண்டு மகன் வருவானெண்டு… அந்தக் காலத்தில அவர் என்ட மனசைத் தேற்றுவார். கவலைப்பட்டுக் கவலைப்பட்டே எனக்கு விசர் பிடிக்குமெண்டு அவர் பயந்து போயிருந்தவர். கண்கள் பூத்துப் போற வரைக்கும் பார்த்துக் கொண்டிருந்தும் அவன் வரேல்ல. இப்ப பதினேழு வருசமாச்சுது. அந்த மகனைப் பற்றியெண்டால் இப்ப ஒரு எதிர்பார்ப்புமில்ல. இருந்தாலும் அவன் எல்.டீ.டீ.ஈ காரனில்லண்டு என்னால சொல்ல ஏலுமா என்ன?!

சின்னப் பிள்ளையள் ரெண்டு பேரையும்தான் எப்படியாவது கூட்டிக் கொண்டு வர வேணும். மூத்த மகளிண்ட பெடியனுக்கு இப்ப இருபது வயசு. அந்தப் பெடியனெண்டால் காரைதீவுல இருக்குறானாம். மகள் பார்க்கப் போயிருந்தவள். மகன் ஒரே அழுகையாம். ‘ஐயோ அம்மா என்னால இருக்கேலாது. எப்படியாவது என்னை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போங்கோ’ எண்டு. எப்படிக் கூட்டிக் கொண்டு வாரது? இஞ்ச இருந்த மகளோட பெடியனுக்கு இப்பதான் பதினஞ்சு வயசு. அவனைக் கொண்டு போன காலத்திலயே கேள்விப்பட்டம் வாகரைப் போருல அவனுக்கு குண்டு பட்டுச்சுதெண்டு. நெஞ்சுல பட்டிருந்தது. செஞ்சிலுவையில இருந்தும், இன்னம் சின்னப் பிள்ளையளுக்காக வேல செய்ற ஒரு குழுவிலருந்தும் ஐயாக்கள் வந்தவங்கள். எல்லாரும் அந்தப் பெடியன வீட்ட கூட்டிக் கொண்டு வரப் பாடுபட்டினம். எண்டாலும் அதைச் செய்ய முடியாமப் போச்சுது. அங்கயே இருக்குறதுதான் பாதுகாப்பு, நல்லா மருந்து மாத்திரையெல்லாம் கொடுத்து குணப்படுத்துறம் எண்டு அவையள் சொன்னவங்களாம். ஆனா கிட்டடியிலருந்து அவனிட்ட இருந்து ஒரு தகவலுமில்ல. அவனிருந்த முகாமை மூடிப் போட்டுப் போயிட்டினமாம். வெலிகந்தையில, சிங்களப் பகுதியில இருக்கிறதா வந்த தகவல நம்பித்தான் இண்டைக்கு மகளும், மகள்ட புருஷனும் பார்க்கப் போயிருக்கினம்.

ஐயோ… எப்படியாவது இந்தப் பிள்ளையள் ரெண்டு பேரையும் கொண்டு வந்து தாங்கோ. பிள்ளையளக் கொண்டு போயும் இப்ப ஒரு வருஷம் கடந்துட்டுது. சரியாச் சொன்னால் அண்டைக்கு ஜூன் பதிமூண்டு. பதினாலாம் தேதி எண்ட இளைய மகன் கல்யாணம் முடிக்கவிருந்தவன். பதிமூண்டாம் தேதி ராத்திரி இந்த அயலட்டைப் பிள்ளையள், எங்கடை பேரப் பிள்ளையளெல்லாரும் இஞ்ச இருந்தவங்கள். அடுத்த நாள் கல்யாணத்துக்கு வேலைகள் இருந்துச்சுதே. ஒருத்தருக்கும் தெரியாம அண்டைக்கு ராத்திரி வீட்ட சுத்தி வளைச்சு இஞ்ச இருந்த ஒன்பது பெடியன்களைக் கடத்திக் கொண்டு போயிட்டினம் கருணா பார்ட்டியாட்கள். அடுத்த நாள் கல்யாணம் கட்டவிருந்த பெடியனையும் கொண்டு போயிட்டினம். அந்தப் பெடியனையும், இன்னும் சுகமில்லாமக் கிடந்த வேறொரு பெடியனையும் ரெண்டு மூண்டு நாளைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பி வச்சிருந்தாங்கள்.

ஐயோ… என்ட பேரப் பிள்ளையளிரண்டும்… என்ட கண்ணுல இப்ப கண்ணீரில்ல பிள்ள. நிம்மதியாக் கண்ண மூடுறதுதான் என்ட தேவை இப்ப. இவ்வளவு காலமும் சீவிச்சது போதும். அம்பத்தஞ்சு வயசாகுது இப்ப. அவருக்கு இப்ப அறுபதெண்டு நினைக்குறன்…!

III

இல்ல… இல்ல… எதையும் ஏத்துக் கொள்ள நான் விருப்பமெண்டு சொல்லேல்ல. அது வேற கதை. கனத்த இருட்டோட பெரிய மழையொண்டு வரேக்க நான் நல்லாப் பயந்து போனன். பெய்ஞ்சுதெண்டால்… ஐயோ… எங்கடை வீட்டுக்குள்ள நிண்டுகொண்டிருக்கவாவது ஒரு இடமில்ல. அவரும் நோயாளி. எங்களுக்கெண்டால் இஞ்ச என்ன நடந்தாலும் பரவாயில்ல. ஆனா அவருக்கு என்னவாவது நடந்தால்? அதுக்குத்தான் நான் நல்லாப் பயந்து போயிருந்தன். அதனாலதான் நான் ‘முருகா… மழை பெய்யக் கூடாது’ எண்டு கத்தினனான். அப்பதான் உண்மையில எனக்குத் தோணுச்சு எத்தன பேர் இந்த மழையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பினமெண்டு. அதனால சுயநலமா நான் மட்டும் மழை வேணாமெண்டு பிரார்த்திக்கிறது சரியா? எண்டாலும் ‘மழை பெய்யணும் முருகா… நல்லாப் பெய்யணும்’ எண்டு வேண்டுற மனசும் எனக்கிருக்கேல்ல. அதனாலதான் நான் ‘முருகா… எனக்கெண்டா ஒண்டும் விளங்கேல்ல. உனக்கு நல்லதெண்டு படுறதச் செய்’ எண்டு சொன்னனான்.

                மழையெண்டாலென்ன? மழைக்கு மேல மழையா ஏழு அடை மழை பெஞ்சாலும் தாங்கிக் கொள்றது பெரிசில்ல. ஆனா உலகத்துல நடக்குற அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு சீவிக்கிறதுதான் கஷ்டமாக் கிடக்கு. அதுகளைச் சும்மா விடவும் ஏலாது. அதனாலதான் எல்லாரிட்டயும் சொல்றனான். வாயை மூடிக் கொண்டிருந்தால்… பிள்ளையள மட்டுமில்ல தலையில இருக்குற முடியையும் பிடுங்கிக் கொண்டு போவாங்கள். அந்தளவுக்கு இந்தக் கால கட்டத்துல ஒண்டையுமே நம்பேலாமக் கிடக்கு உலகத்துல நடக்குறதையெல்லாம் பார்க்கேக்க. யாராவது வந்து பிள்ளையளக் கொண்டு போவினமோ, சுட்டுப் போடுவினமோ, சித்திரவதை செய்வினமோ, காணாமலாக்குவினமோ எண்டு பயந்து பயந்தே இப்பல்லாம் ராத்திரில எனக்குக் கொஞ்சம் கூட கண்ணசர முடியாமக் கிடக்கு. கண்ணசந்த உடனே ‘அம்மா’ என்டொரு குரல் கேட்கும். அதனால விடியும்வரைக்கும் உட்கார்ந்து கொண்டிருப்பன்.

தென்னோலை பின்னுறத விடுவம்… தேங்காயொண்டு வாங்கக் கூட வழியில்லாம நாங்க இருக்குறம் இப்ப. எண்பத்தொன்பதுக்குப் பிறகு பிள்ளையள் அஞ்சு பேருக்கும் அவருக்கும் சாப்பாடு தேடி உழைச்சுக் கொண்டிருக்குறது நான்தான். அவருக்கு வேலையொண்டும் செய்யேலாம முதுகெலும்பு உடைஞ்சு போயிருக்குது… உடையேல்ல… உடைச்சவங்கள். ட்ரக்டர்ல இயக்கத்துக்குச் சாமான்கள் கொண்டு போகேக்க காட்டுக்குள்ள வச்சு ராணுவம் பிடிச்சு அடிச்சவங்கள். அதுக்குப் பிறகு ரெண்டாவது மகன் களப்புல வலை வீசப் போனவன். வீட்ட எல்லாருக்கும் சாப்பிடக் கொடுக்க, சின்னவங்கள் மூண்டு பேருக்கும் ஸ்கூல் தேவைகளச் செஞ்சு கொடுக்க எல்லாத்துக்கும் நான் மட்டும் தனியாக் கஷ்டப்பட்டாக் காணாதுதானே. ஆனா நான் அவனை ஸ்கூலுக்குப் போகாம நிக்கச் சொல்லிச் சொல்லவேயில்ல. அவனே முடிவெடுத்துப் போனவன். அது பெரிய உதவியா இருந்ததுதான். பொம்பிளை எவ்வளவுதான் வேல செஞ்சாலும் ஆம்பிளை போல உழைக்க ஏலாதே. இப்ப அவனும் வீட்ட விட்டு வெளிய இறங்கிறதில்ல. அவன் மற்றவங்களப் போல இல்ல… சரியான பயம். என்ன செய்யுறது அஞ்சு விரலும் ஒண்டு போல இல்லயே. எண்டாலும் அவன்ட மனசு நல்லம். நல்ல பாசம்.

நான் இப்ப வேலைக்குப் போறதுமில்ல. பிள்ளையளப் பாதுகாக்குறதுக்கே அங்கே இங்கேயெண்டு அலைஞ்சு கொண்டிருக்குறன். தென்னோலையும் இப்ப இருபத்தஞ்சு, முப்பது ரூவாவாமே. கூரைக்குக் குறைஞ்சது இருநூறு தென்னோலையாவது தேவைப்படும். அதுக்கு எங்க போறது? நனையுற மாதிரி நனையட்டும். எனக்கு மூத்தவனையும், மூண்டாமவனையும் பாதுகாப்பா வைக்க ஒரு இடத்தைத் தேடித் தாங்கோ. இனியும் என்னால அதைச் செய்யேலாமக் கிடக்கு. அதனாலதான் நான் இப்ப யாரிட்டயாவது சொல்லிப் பார்க்கலாமெண்டு இஞ்ச வந்தனான். எங்கண்டாலும் பரவாயில்ல பாதுகாப்பு இருக்குமெண்டால்.

மகன்களைப் பெத்ததுக்குப் பதிலா அஞ்சு மகள்களைப் பெத்திருந்தா நல்லா இருந்திருக்குமெண்டு இப்பல்லாம் தோணுது. அப்படிச் சொல்லவும் ஏலாது. போன தடவை ஒப்பந்தம் வந்த உடனே எல்லா இடத்திலயும் ஒஃபீஸ் போட்டு பெடியன்களையும், பெட்டையளையும் கொண்டு போனவங்கள். அது வன்னி ஆட்கள். கருணா ஆட்களெண்டா அவ்வளவா பெட்டையளத் துரத்திப் பிடிக்கேல்ல. பாதுகாக்க முடியாதெண்டதால இருக்கும். அந்த நீலமணியோட ரெண்டாவது மகளையெண்டால் வீட்டுக்கே வந்து கேட்டவங்களாம். ‘வீட்டுல கஷ்டம் எண்டதால நாங்களே செலவழிச்சு ஹொஸ்டல்ல போட்டுப் படிப்பிக்கிறம்’ எண்டாங்களாம். ஒன்பதாம் வகுப்பெண்டாலும் நல்லா வளர்த்தியா வடிவா இருந்த பெட்டை. ‘வெட்டிக் கடல்ல போட்டாலும் கொடுக்க மட்டும் வேண்டாம்’ எண்டு நான் சொன்னனான். ‘இப்படி ஏமாத்திக் கூட்டிக் கொண்டு போறது உள்ள இருக்குற யாருக்காவது கல்யாணம் கட்டி வைக்க’ எண்டு நீலமணியும் சொன்னவள். இப்ப அந்தப் பெட்டையும் ஸ்கூலுக்குப் போக ஏலாதெண்டு சொல்றவளாம் பயத்துல. நீலமணியின்ட மகனையும் அவையள் கொண்டு போனவையள்தானே. மகனைப் பெத்தாலும், மகளைப் பெத்தாலும் கடைசில எல்லாம் ஒண்டுதான்.

பிள்ளையளிட்ட இருந்து நான் ஒண்டுமே எதிர்பார்க்கேல்ல. எங்களுக்கு ஒண்டும் வேண்டாம். அவையள் நிம்மதியா இருந்தாக் காணும்.

எப்படியாவது எனக்கு இந்தப் பிள்ளையள் ரெண்டு பேரையும் பாதுகாப்பா எங்கயாவது அனுப்பித் தாங்கோ. ஒரே இடத்துல இல்லண்டாலும் பரவாயில்ல. ரெண்டாமவனையும், இளையவனையும், பெட்டையையும் எப்படியாவது என்னால வீட்ட வச்சுப் பாதுகாத்துக் கொள்ள ஏலும். அவையள் மேல யாராவது கைய வச்சால்… நெசமாச் சொல்றன்… நான் எல்லாரையும் கொன்னுட்டுச் சாவன். ஆனா இவையள் ரெண்டு பேரும் தப்பிச்சு வந்தவையள்தானே. அதுதான் எனக்குப் பயமாக் கிடக்கு. யார் எங்கிருந்து பார்த்துக் கொண்டிருப்பினமோ தெரியேல்ல.

மூத்தவனைக் கொண்டு போனப்பவும் நான் பின்னாலயே ஓடினனான். அவனும் ஸ்கூலுக்குப் போய்க் கொண்டிருந்தவன். அவன் நல்லாப் படிக்கிறதக் கண்டுட்டு நானும் பூரிச்சுப் போயிருந்தனான். அவனைத் தேடி எல்லா இடங்களுக்கும் அலைஞ்சு திரிஞ்சு போய் அவையளத் திட்டினன். பெடியனைத் திருப்பிக் கொடுங்கோவெண்டு கேட்டனான். ‘எங்களிட்ட ஆட்கள் இல்லையெண்டா செடிகொடிகள வச்சுக் கொண்டா நாங்க யுத்தம் செய்றது?’ எண்டு அவையள் என்னிட்ட கேட்டவங்கள். ‘நீங்கள் யாரை வேணுமெண்டாலும் கொண்டு போய் யுத்தம் செய்யுங்கோ. எண்ட பிள்ளையத் திருப்பிக் கொடுங்கோ’ எண்டு கேட்டனான். அப்ப ‘முந்தி மாதிரி ராணுவம் வந்து துப்புரவாக்கிக் கொண்டு போற வரைக்கும் பார்த்துக் கொண்டிருக்க விருப்பமோ?’ எண்டு கேட்டவங்கள். ‘முருகா… அப்படியொரு அழிவையெண்டா என்ட இந்தக் கண் ரெண்டாலயும் நான் திரும்பக் காணக் கூடாது’ எண்டு சொன்னனான். இயக்கமும் ஒரு குடும்பத்திலிருந்து கட்டாயம் ஒரு பிள்ளைய இயக்கத்துக்குத் தர வேணுமெண்டு சொன்னது. அதனால நான் வாய மூடிக் கொண்டு திரும்பி வந்தனான். என்ன செய்யுறது? எங்களுக்கெண்டு கதைக்கவோ வாயைத் திறக்கவோ கூட யாரிருக்கினம்? எண்டாலும் மகன் எப்பவாவது என்னைத் தேடிக் கொண்டு வருவானெண்டு எனக்குத் தெரியும். அவன் தைரியசாலி. என்னை மாதிரியே நல்ல பொறுமசாலி.

இந்தத் துவக்குகள நீட்டிக் கொண்டு போற வாற பெடியன்களைக் காணேக்க எல்லாம் எந்நாளும் என்ட மனசு பாடுபடும். ‘முருகா… எங்கடை பிள்ளையள்… எங்கடை பிள்ளையளுக்கு பிள்ளையளாவே வாழக் கூடிய ஒரு உலகத்தை உண்டாக்கித் தா’ எண்டே எப்பவும் நான் எந்நாளும் பிரார்த்திச்சனான்.

திருக்கோயில் தீர்த்தம் நாள்ல கோயில் தோட்டத்திலயும் குறுக்குத் தெருக்கள்லயும் பெரிய பெரிய துவக்குகளை ஏந்திக் கொண்டு அங்கயிங்க தைரியமாப் பெடியன்கள் திரிஞ்சதைக் கண்டீங்கள்தானே. அங்க இருந்த சில பெடியன்களால நேராப் பிடிச்சு மூத்திரம் பெய்யக் கூட ஏலாம இருக்கும். ஆனா சுமந்து கொண்டு திரியுறது ரொக்கட்டுகளுக்கும் அடிக்கிற துவக்காம். முருகா… அதால யாரச் சுடுறம், எதுக்குச் சுடுறமெண்டாவது அவையளுக்கு விளங்குமாவெண்டுதான் நான் கேட்குறனான். பூனை மயிர் மீச கூட முளைக்காதவையளுக்குக் கல்யாணம் பேசுறது பெரியவனுங்களோட ஆசாபாசங்களத் தீர்த்துக் கொள்றதுக்குத்தான் இல்லையா? அதனாலதான் நான் சொல்றனான். இது சரிப்பட்டு வராது.

துவக்கைத் தோளில தூக்கி வச்சுக் கொண்டா, அவையள்ட தைரியத்தப் பார்க்க வேணுமே. முடியை அளவா வெட்டி பவுடர் தேய்ச்சு, தோய்ச்ச களிசான் சூட்டை அணிஞ்சு கொண்டால் என்னமோ ராஜாக்கள் நகர்வலம் போற மாதிரித்தான் அவையள்ட நடையும் பாவனையும். எண்டாலும் றோட்டில போற ஒருத்தன் கூட, ஒருத்தி கூட அவையளத் திரும்பியும் பார்க்கிறேல்ல. பயத்துக்கில்ல. அருவெறுப்பா இருக்கும்தானே. அவையள் அவையளிண்ட உலகத்துல… வாழ்க்கை முழுக்க இப்படியே துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு திரியுறதா? பெரியவங்களா ஆனாப் பிறகு இவையள் என்ன செய்வாங்கள்…. இப்படித் துவக்கோடே சீவிச்சுக் கொண்டு திரிஞ்சால் தலை வீங்குமே தவிர மூளை வளருமா?  எல்லாத்தையும் துவக்கைக் கொண்டே செய்ய வேண்டி வரும்.

                மூண்டாம் மகனைக் கொண்டு போனப்ப நான் கை விடவேயில்ல. இப்படி தெரு முழுக்க அங்க இங்க நிண்டுகொண்டு சுத்தியிருக்குற ஆட்களிட்டயிருந்து தப்ப, கோழைகள மாதிரி வீட்டுக்குள்ளயே பிள்ளையள சீவிக்க விட ஏலுமா? நான் பின்னாலயே ஓடினனான். ‘இயக்கத்துக்கு ஒரு பிள்ளையக் கொடுக்க ஏலுமெண்டா ஏன் எங்களுக்கு ஒரு பிள்ளையத் தரேலாது?’ எண்டு என்னட்டக் கேட்டவங்கள். ‘ஒருத்தனைக் கொடுத்தது யுத்தத்துக்கெண்டுதானே? இப்ப இன்னொருத்தன் என்னத்துக்கு?’ எண்டு அவையளிட்டக் கேட்டனான். கருணா குழுவோட பெரிய இடங்களுக்கெல்லாம் போய்ச் சொன்னனான். பதினெட்டு வயசுக்குக் கீழ உள்ள பிள்ளையள இப்படிக் கொண்டு போகத் தடை விதிச்சிருக்கினமாமே. அங்க இருந்தவையள் பிள்ளைய விரைவாத் திருப்பியனுப்ப ஏற்பாடு செய்றதாச் சொன்னவங்கள். சாதாரண தரப் பரீட்சை எழுதக் கூட இன்னும் ஒன்றிரண்டு வருஷம் படிக்க வேண்டியிருந்த பெடியன் இவன். எண்டாலும் ஒருத்தருடைய வாக்குறுதியாலும் ஒரு பயனுமிருக்கேல்ல.

பெடியன் வந்தான். ஒருத்தரும் கொண்டு வந்து விடேல்ல. அவனாவே தப்பிச்சு வந்தவன். அடுத்த நாளே வீட்ட ஆட்கள் வந்திட்டினம் ‘பெடியனெங்க? தப்பி வந்தவன்தானே?’ எண்டு கேட்டுக் கொண்டு. ‘இஞ்ச… என்ட பெடியனை நீங்கதானே கடத்திக் கொண்டு போனனீங்கள். எண்டால் நீங்கதானே பாதுகாப்பா வச்சிருந்து இஞ்ச கொண்டு வந்து விட வேணும்? இஞ்ச என்ட பெடியன் வரேல்ல’ எண்டு சொன்னன். அவையள் திரும்பிப் போனாலும் கூட என்னை நம்பேல்ல எண்டது எனக்கு விளங்கிட்டுது. அந்த நேரம் பார்த்து வலை வீசப் போயிருந்த என்ட ரெண்டாவது மகன் அங்க வந்திட்டான். அவையள் பாய்ஞ்சு அவனைப் பிடிச்சிட்டினம். கொல்லக் கொண்டு போற கன்னுக்குட்டி போல அவன் என்னப் பார்த்தான். நானும் அவையள்ட பின்னாலேயே ஓடி அவனைக் கொண்டு போன இடம் வரைக்கும் போனனான். பிள்ளைய வெளிய விடும்வரைக்கும் அங்கயே குந்திக் கொண்டிருந்தன். பெடியனக் கையோடு கூட்டிக் கொண்டுதான் வீட்ட வந்தன். எண்டாலும் அவையள் திரும்ப வருவினமெண்டு நான் பயந்தனான். பயந்தது போலவே அடுத்த நாள் திரும்பவும் வந்தாங்கள்.

இந்த நேரம் சின்னவனைப் பிடிச்சுக் கொண்டாங்கள். அவனுக்கு இப்பதான் ஒன்பது வயசு. மனசுல கருணை, பாசம் இருக்குறவை இப்படியெல்லாம் செய்வாங்களா எண்டு யோசிச்சுப் பாருங்கோ. சின்னவன் சத்தம் போட்டுக் கதறிக் கொண்டிருந்தான். எண்டாலும் நான் பின்னால துரத்திக் கொண்டு போகேல்ல. இந்தத் தடவையும் நான் அழுதுகொண்டு பின்னாலேயே ஓடி வருவனெண்டு நினைச்சிருப்பினம். இருங்கோ… இவனுகளுக்கு நல்ல பாடம் படிப்பிக்கிறனெண்டு நான் டெலிபோன் நம்பர்களத் தேடியெடுத்துக் கொண்டு எல்லா இடங்களுக்கும் கதைச்சன். நல்ல வேளையா நான் முன்னாடி போய் சந்திச்ச அதே ஆட்கள் அங்க இருந்தாங்க. நான் விஷயத்தச் சொன்னதும் அவையளுக்கும் திகைப்பா இருந்தது. ‘இதென்ன விளையாட்டாப் போச்சுதா? நாங்க ஒண்டும் இல்லாதவையள்தான். எண்டாலும் ஆயிரமாயிரம் கஷ்டங்கள் பட்டு பிள்ளையள வளர்க்குற அம்மாமாரோட இப்படி விளையாட விடக் கூடாதுதானே’ என்டு அவையளிட்ட கேட்டன்.

பிறகு நான் கொடுத்த நம்பருக்குக் கூப்பிட்டு பிள்ளையப் பொறுப்பேற்க டவுணிலிருக்குற ஒஃபீஸுக்கு வரச் சொன்னவங்கள். நான் சொன்னன் எனக்கு அங்க வர ஏலாது. பிள்ளையளுக்காக செயற்படுற அமைப்பொண்டு அங்க இருக்கு. பிள்ளைய அங்க கொண்டு வந்து விடுங்கோ… நான் அங்க வாறனெண்டு சொன்னனான். சொன்ன நேரத்துக்கு பிள்ளையைக் கூட்டிக் கொண்டு அங்க வந்தாங்கள். கையைப் பிடிச்சுக் கூட்டிக் கொண்டு வந்து என்ட கையில தந்து ‘இந்தாங்கோ உங்கடை பிள்ளை’ எண்டு சொல்லிட்டுத் திரும்பிப் போனவங்கள். ஆனா முகங்கள்ல கடும்கோபம் இருந்துச்சுது. எனக்கு அது முன்பே தெரிஞ்சதுதான். இப்ப கோபம் அதிகமாக இருக்கும் நான் பெரிய இடங்களோட கதைச்சு சின்ன இடங்களக் கஷ்டத்துல போட்டுட்டேனெண்டு. அதுக்குச் செய்ய ஒண்டுமில்ல. எனக்கு வேற வழியுமில்ல. அதனாலதான் இப்ப எனக்கு இந்த மூண்டாமவனைக் குறிச்சு சரியான பயமாக் கிடக்கு. கண்டுபிடிச்சாக் கொண்டு போயிடுவினம். கொண்டு போய் கோபத்துல என்ன செய்வாங்களெண்டு யாருக்குத் தெரியும்?!

அங்க நிறையப் பிள்ளையள் தப்பி வரப் பயத்துலதான் அங்கயே இருக்கினம். வந்தாங்களெண்டால் திரும்ப குடும்பத்துல வேற யாரையாவது கொண்டு போவாங்கள்தானே. கொண்டு போக பிள்ளையள் இல்லையெண்டா அம்மா, அப்பாவையாவது கொண்டு போவினம். அவர் படுத்த படுக்கையா வீட்டிலிருக்குறதால நல்லவேளையா தப்பிச்சார். இல்லாட்டி அவரைக் கொண்டு போய்க் கொடுமைப்படுத்துவாங்களோ எண்டு பயந்து நானும் அமைதியா இருப்பேன்தானே. எண்டாலும் பிள்ளையளப் பார்க்க அம்மாமார் போகேக்க எல்லாப் பிள்ளையளுமே அழுவாங்களாம்… எப்படியாவது யார்கிட்டயாவது சொல்லி வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போங்கோ… ஸ்கூலுக்கு அனுப்புங்கோ எண்டு சொல்லிச் சொல்லி. அதனாலதான் பிடிச்சுக் கொண்டு போன பிள்ளையளை ஒரு மாதம் ட்ரெய்னிங் கொடுத்து தூர எங்காவது அனுப்பி விடுறவை. அப்ப அம்மாமாரால அடிக்கடி போய்ப் பார்க்க ஏலாதுதானே. பிள்ளையளுக்கும் மெதுமெதுவா அழுதழுது வேண்டாமெண்டு போயிடும். அந்த வாழ்க்கை பழகிப் போயிடும். சில பேர் இப்படியே இருக்குறது நல்லதெண்டு நினைக்கத் தொடங்கி விடுவினம். ஏனெண்டால் துவக்கு கையிலிருந்தால் மத்தவங்களை விட ஒரு படி மேல எண்டுதானே தங்களை நினைச்சுக் கொள்வாங்கள். அடுத்தது கையில சம்பளக் காசும் கிடைக்குமே. எப்போவாவது அம்மாமார் வந்தால் கூட நல்ல தைரியத்தோடு ‘இந்தாங்கோ அம்மா காசு… தம்பி, தங்கச்சியளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கோ’ எண்டு சொல்ல ஏலும்தானே? ஆனா எனக்குத் தெரிஞ்ச நிறைய அம்மாமார் அந்தக் காசைக் கையாலயாவது தொடுறேல்ல. வீட்டு எல்லைக்குக் கூடக் கொண்டு வாரதுமில்ல. ‘எங்களுக்கு வேண்டாம். உனக்குப் பிடிச்சதை அதைக் கொண்டு செஞ்சு கொள்’ எண்டே சொல்வாங்கள்.

என்னோட நல்ல நேரத்துக்கு என்ட பிள்ளையளெல்லாரையும் முருகன் எனக்குத் திருப்பிக் கொடுத்துட்டான். எண்டாலும் இப்பதான் கஷ்டமான காலம்.

மூண்டாமவனுக்கெண்டால் இப்பவும் படிக்கத்தான் ஆசை. அப்படியேதாவது வழி செஞ்சால் பெரிய உதவியாயிருக்கும். மூத்தவனுக்கெண்டால் படிக்கவோ, பரீட்சை எழுதவோ அவ்வளவா விருப்பமில்லாதது போலத்தான் தெரியுது. ஏதாவது கைத்தொழிலொண்டைக் கத்துக் கொண்டால் போதும். இதொண்டுமில்லாட்டிலும் பரவாயில்ல. எப்படியாவது என்ட பிள்ளையளிண்ட உசுரைக் காப்பாத்திக் கொடுங்கோ. அது போதும்… முருகா… எப்படியாவது எனக்கு விரைவா உதவி கிடைக்க வழி செய்…

ஆசிரியர் குறிப்பு

குமாரி

                இலங்கையில் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதி வரும் சிங்களப் பெண் எழுத்தாளர் குமாரி, கவிஞர், பத்திக் கட்டுரையாளர், தெரு நாடகக் கலைஞர் என பன்முகம் கொண்ட படைப்பாளியும், கலைஞரும், சமூக செயற்பாட்டாளரும் ஆவார். இவரது தெரு நாடகங்களும், நூல்களும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்றவை. இச்சிறுகதையானது, சிங்கள மொழியில் வெளியாகியுள்ள இவரது  சிறுகதைத் தொகுப்பிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.