இறக்கச் சந்தர்ப்பம் வாய்த்த நேரத்தில்

ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்திலிருந்து கிளம்பி மேலேறியவுடனேயே விமானத்துக்குள் விளக்குகள் அணைந்து அணைந்து எரியத் தொடங்கின. ஏர் ஹோஸ்டஸ்கள் இருக்கைகளுக்கிடையிலான பாதைகள் வேகமாக ஓடினார்கள். கேப்டனிடமிருந்து அறிவிப்பு வந்தது: “ஒரு சிறிய பிரச்சினை. சீக்கிரத்தில் சரியாகிவிடுமென நம்புகிறோம்.”  ஒரு ஏர் ஹோஸ்டஸ் அச்சமயத்தில் என்னருகே “ஓ, நோ…..fire” என்று கத்தியபடி ஓடினார். “கடவுளே” என்று சிலர் கூவியது தெளிவாகக் கேட்டது. என்னருகே அமர்ந்திருந்தவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டார். என்னையும் பதற்றம் தொற்றியது. விமானம் தடக்கென கீழே இறங்கத்தொடங்கிய அந்தக் கணத்தில் சில முகங்களோடு சில பாவனைகளும் மனதில் தோன்றின. உடனடியாக ஒரு ஜோடி உதடுகளும் என்முன் வரத் தவறவில்லை.  அவற்றை அக்கணத்திலேயே முத்தமிட வேண்டுமென்றும் முத்தமிடும்போதே அவற்றில் வேறு நபர்களின் வியர்வையைக் கண்டுபிடித்துவிட வேண்டுமென்றும் கண்டுபிடிக்கும்போதே உதடுகளைப் பொசுக்கிவிட வேண்டுமென்றும் பொசுக்கிவிட்ட மறுநொடி அவற்றை உயிர்ப்பித்துவிட வேண்டுமென்றும் அந்த உதடுகளில் ஒன்று என்னிடம் கேட்க வேண்டிய மன்னிப்பைக் கேட்கும்போதே மன்னித்துவிடுவேனென்றும் இன்னொன்றிடம் கூற வேண்டிய சமாதானத்தைக்  கோரும்முன்பே கூறிவிடுவேனென்றும்….

****************************

நாட்டார் வரலாறு

ஊரில்லாத ஓர் இடத்தில் கிராமமிருந்த விவரத்தை அறியக் கேட்டபோது கிடைத்தது: ஒரு மாட்டுவண்டியின் மாடுகள் எதையோ கண்டு மிரண்டு பாய்ந்து மோதியதால் ஒரு டெம்போ அதற்கு முன்னால் நின்றுகொண்டிருந்த கார் மீது மோத அது இன்னொரு கார் மீது மோத அந்தக் கார் அதற்கு முன்னால் நின்றுகொண்டிருந்த மினி பஸ் மீது மோத மினி பஸ் ஒரு லாரி மீது மோத லாரி வேகமாக ரயில்வே கேட்டை உடைத்து அப்போதுதான் வந்துகொண்டிருந்த ஒரு விரைவு ரயிலை நிலைகுலையச் செய்ய ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரள அதிலொன்றிலிருந்து பிய்ந்து விசிறியடிக்கப்பட்ட குஷன்களோடு கூடிய பெர்த்கள் இரண்டு கேட்டுக்கு அந்தப் புறம் நின்றுகொண்டிருந்த ஒரு ஆட்டோவில் மோத ஆட்டோ தடுமாறி சற்று பின்னால் நகர்ந்து அதன் பின்னால் நின்றுகொண்டிருந்த இரண்டு பைக்குகளை சாய்க்க ஒரு பைக் சாய்ந்த வேகத்தில் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சைக்கிளை பக்கத்து வயலுக்குள் கவிழ்க்க இன்னொரு பைக் அதன் பின்னால் நின்றுகொண்டிருந்த குட்டி யானையை வேகமாக இடிக்க குட்டி யானை பின்னால் நின்றிருந்த கார்மீது மோத அது இன்னொன்றின் மீது அது இன்னொன்றின் மீது என சில மீட்டர் தொலைவில் அதே சாலையிலிருந்து குடிசையின் மீது மோதும் சமயத்தில் அதன் எஞ்சினில் தீப்பற்ற குடிசை பற்றியெரிய அது பக்கத்துக் குடிசையைப் பற்ற அது பக்கத்துக் குடிசை அதன் பக்கத்துக் குடிசை அதன் பக்கத்து ஓட்டுவீடு என அந்தக் கிராமத்தின் பதினேழு வீடுகள் எரிந்து பதினெட்டாவது வீட்டுக்குத் தீப்பற்றும் நொடிக்கு முந்தைய நொடியில் அதிலிருந்து வெளியே வந்த மெலிந்த முதியவன் ஒருவன் எவரும் பார்க்கவில்லை என நினைத்து போதும் என்று தலையாட்டியதை எவரும் பார்க்காதபோதும் காற்று பார்த்துவிட்டு புகையைக் கக்கியபடி பக்கத்து ஊருக்கு வந்து கூறியது.