இரண்டு குருவிகள் மரத்தினின்று
அப்போதுதான் பறந்தன
ஒன்றின் ரெக்கை வாலுக்கும்
அடுத்தொன்றின் தொண்டைக் குழிக்குமிடையே
ரம்மியமாக  ஒலித்தது
இலையோசைகளோடு ஒரு மிடற்றிசை
மரத்திடம் கேட்டேன்
அவ்விசை எதனுடையது ?
பல்லாயிரத்தி சொச்ச இலைகளும்
பறப்பதுபோல் சொல்கின்றன
என்னுடையது
என்னுடையது
என்னுடையது
என்னுடையது…
=======
விழிப்பு
சில கனவுமரங்களின்  மீது
கனியை எட்டும் வரைதான் நெருங்க முடியும்
அதற்கென்னை தெரியுமோ என்னமோ
தனக்கான கைகளை கண்டடைந்ததாய்
காம்பை விண்டுகொள்ள  பனியொழுக அசையுறுகிறது கனி
கையில் விழுமோ என்னமோ
இ-திவ்யமான குழப்பத்தில் திளைக்கும்
மத்தியில்தான்
இரண்டுக்கும் இடம் தராமல்
வீட்டின் எங்கிருந்தோ  ஒரு மூலையிலிருந்து
குறிதப்பி  பாய்ந்தது
ஒரு  கல்லின் குரலில்.