ஓளசேப்பச்சன் கதாபாத்திரம் ரொம்ப குடிக்கிறது. தொடர்ந்து ஏப்பம் விடுகிறது. பலரையும் ஏசுகிறது. யாரையும் பேசவிடாமல் அதுவே பேசிக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற பாத்திரங்களை ஜெயமோகன் கொஞ்சம் கட்டுக்குள் வைக்க வேண்டும். கதை சொல்லியையும் அந்த பாத்திரத்திற்கு எதிரே உட்கார வைத்த பிறகு சும்மா ஏப்பம் விடுவதை எண்ணிக்கொண்டிருந்தால் சரியாக வராது. ஒளசேப்பச்சனின் அபத்தமான கருத்துக்களை மறுத்து ரெண்டு வார்த்தை பேச வேண்டும். ஒளசேப்பச்சன் உளறுவதையெல்லாம் குறிப்பெடுத்து பதிவுசெய்வதற்கா கதைசொல்லி மற்ற பாத்திரங்களுடன் உட்கார்ந்திருக்கிறான். பாருங்கள், அந்தப் பாத்திரம் மோடியை ஃபூயரர் என்று சொல்கிறது. நல்லவேளையாகப் போயிற்று. ஃபூயரரை பாஜககாரர்களுக்கு ரொம்ப பிடிக்கும். பெருமிதமாக உணர்வார்கள். மாற்றாக கதைசொல்லியையும், எலி ராஜவையும் நோக்கி வசவை பொழிவதைப் போல மோடியைப் பற்றியும் சில வசவுகளைச் சொன்னால் என்ன ஆவது? ஜெயமோகன்தானே சங்கிகளுக்கு பதில் சொல்லவேண்டி வரும்?
நம் வீட்டில் பார்ட்டி வைத்தாலே யாராவது சலம்பல் கேஸ் மரியாதைக்குரிய நண்பர்களை புண்படுத்திவிட்டால் நாம் தான் மன்னிப்புக் கேட்கிறோம். நமக்கென்று ஒரு பொறுப்பு இருக்கிறதல்லவா? அப்போது என் கதையில் கதாபாத்திரம் பேசினால் நான் என்ன செய்வது என்று எல்லா நேரத்திலும் கேட்க முடியாது. சில கூற்றுக்களை கதைக்குள்ளேயே மறுத்திருந்தால் கூட பிரச்சினையிருக்காது. பொறுப்புள்ள எழுத்தாளர்கள் அதைத்தான் செய்வார்கள்.
பத்துலட்சம் காலடிகள் கதையின் பிரச்சினை ஜாதி, அழகு குறித்த பேச்சு மட்டும் இல்லை. அது சற்றே தீவிரமான மானுடவியல் தர்க்கம் சார்ந்தது. எனவே இந்தக் கட்டுரையும் விரிவாகவும் சீரியசாகவும் அமைவது தவிர்க்க இயலாதது. கதையைப் படிப்பது போல ஜாலியாக இருக்காதுதான். கொஞ்சம் ஆராய்ச்சியாகத்தான் இருக்கும். ஜெயமோகன் வெளிப்படுத்தும் மனோபாவம் அவருக்கு மட்டுமே உரியதில்லை என்பதால் நாம் அதை விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தத்தான் வேண்டும்.
ஜெயமோகனின் கட்டுரைகள் பலவற்றை கறாராகவும், கடுமையாகவும் விமர்சித்து, கண்டித்து எழுதியுள்ளேன். ஜெயமோகன் எழுத்துக்கள் குறித்த விமர்சனம் விஷ்ணுபுரம் நாவலிலிருந்துதான் துவங்கியது. அந்த ஆங்கில கட்டுரை புரூஃப் பார்க்கப்பட்ட நிலையில் பத்திரிகை நின்றுவிட்டது. இருபதாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் இப்போது மீண்டும் தமிழில் விரிவாக எழுதவேண்டும். மற்றபடி அவ்வப்போது படித்து வருகிறேன் என்றாலும் அவர் புனைவெழுத்து எதற்கும் விமர்சனம் எழுதும் சந்தர்ப்பம் அமைந்ததில்லை. புனைவெழுத்துக்களை தொடர்ந்து படிக்கவும் சாத்தியமாகவில்லை. இப்போது எழுதி வரும் கதைகளிலும் பலவற்றில் இதே ஒளசேப்பச்சனும், இந்த நண்பர்கள் குழுவும் இடம்பெறுவதாகத் தெரிகிறது. நான் அவற்றை படிக்கவில்லை. அவ்வப்போது நான் படித்த அளவில் ஜெயமோகன் புனைவுகளுக்கும், அரசியலுக்கும் பொதுவான தத்துவார்த்த அடித்தளம் இருக்கிறது என்பதுதான் என் எண்ணம். பத்துலட்சம் காலடிகள் சிறுகதையில் விஷ்ணுபரம் போலவே அதை மீண்டும் இனம் காண முடிகிறது. இந்த விமர்சனக் கட்டுரையை எழுத முடிவு செய்ய அது ஒரு காரணம்
மற்றொரு காரணம், கதையை குறித்து முகநூலில் கண்ட பதிவுகள். அவற்றில் ஒருவகையான பதிவுகள் பிரமிப்பையும், பாராட்டுதல்களையும் கொண்டவை. ஜெயமோகன் கொரோனா ஊரடங்கு துவங்கியதிலிருந்து தொடர்ந்து சிறுகதைகள் எழுதி தனது தளத்தில் வெளியிட்டு வருகிறார். அதில் வேறு எந்த கதையும் என் பார்வைக்கு எட்டியவரை முகநூலில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டு கொண்டாடப்படவில்லை. அதே சமயம் இந்த கதையில் வரும் “ஜாதிப்படிநிலையில் கீழே செல்லச் செல்ல அழகு குறையும்” என்ற கூற்றிற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. அதையொட்டி ஜெயமோகனும், பிறரும் சில விளக்கங்களை கூறினர். இந்த இரண்டு முரண்பட்ட எதிர்வினைகளும் பரிசீலனைக்கு உரிய விஷயங்களாக இருந்ததும் இந்த கட்டுரையை எழுத முனைவதற்குக் காரணம் எனலாம். கூடியவரை சுருக்கமாகவும், நேரடியாகவும் எழுத எண்ணுகிறேன். கட்டுரையை நான்கு பகுதிகளாக பிரித்துக்கொள்வோம். கதையாடல் தர்க்கம், துப்புத்துலக்குதலின் தர்க்கம், மானுடவியல் தர்க்கம், அழகும்-இனக்கலப்பும், ஆகியவை அந்த நான்கு பகுதிகள்.
கதையாடல் தர்க்கம்
கதைசொல்லி உட்பட ஐந்து பேர் கொச்சியில் கடலோரம் அமர்ந்து நாட்டுச் சாராயம் சாப்பிடுகிறார்கள். அப்போது நடக்கும் உரையாடலில் விரியும் கதைதான் பத்து இலட்சம் காலடிகள். அந்த கதையைச் சொல்வது ஒளசேப்பச்சன் என்ற பாத்திரம். பாண்டித்தமிழ் எழுத்தாளன் என்றும், திருவாதாங்கூர் நாயரென்றும் அழைக்கப்படும் கதைசொல்லி மையமான பேசுபொருள் ஒன்றை, கடலில் செல்லும் பத்தேமாரி என்ற கப்பலை சுட்டுகிறார். மற்றபடி ஒளச்சேப்பன் சொன்னான், ஒளசேப்பச்சன் ஏப்பம் விட்டான் என்று சில இடைக் குறிப்புகளைத் தருவதுடன் அவர் பங்களிப்பு முடிந்துவிடுகிறது. குமாரன் மாஸ்டர், ஸ்ரீதரன், எலி ராஜு ஆகியோரும் கருதத்தக்க எந்த இடையீடும் செய்வதில்லை. ஒளசேப்பச்சனுக்கு உரையாடல் தூண்டலாக இருக்கிறார்கள் என்பதற்கு மேல் அவர்களைக் குறித்துச் சொல்ல எதுவும் இல்லை. கதைசொல்லி உட்பட அவர்கள் யாரது உணர்வுகளும், சிந்தனைகளும் வெளிப்படுவதும் இல்லை. இதனால் பெரும்பாலும் ஒளசேப்பச்சன் என்ற பாத்திரமே கதைசொல்லியாக மாறிவிடுகிறது. அவர் பத்தேமாரி என்ற கப்பலை மாப்பிள்ளை கலாசிகள் கட்டுவதை குறித்து பேசத் துவங்கி அவர்கள் சமூகக் கட்டமைப்பின் உள் ஒழுங்கை தான் உணர்ந்து கொண்ட ஒரு தருணத்தை சாங்கோபாங்கமாக கூறி முடிப்பதுதான் கதை. பத்து இலட்சம் காலடிகளை இணைத்து ஆற்றலை ஒருமுகப்படுத்தி வெளிப்படுத்தும்போது ஒரு அடிகூட தவறிவிடக்கூடாது என்று முத்தாய்ப்பாக அவர் சொல்லி முடிப்பதில் கதையின் தலைப்பு பெறப்படுகிறது.
முதலில் இந்த கதைசொல்லி என்றால் என்ன என்பதை வரையறுத்துவிட வேண்டும். கதை என்பது ஒரு மொழிதல் என்பதால் அதை நிகழ்த்துவது யார் என்பது கேள்வி. அதை நிகழ்த்துவது எழுத்தாளர் என்று நினைப்பது தேவையற்றது. கதையை தன்னிலை குரலாக ஒலித்தாலும் (ஃபர்ஸ்ட் பெர்சன் நேரேடிவ் எனப்படுவது), அசரீரியாக ஒலித்தாலும் அந்த குரல் கதைசொல்லியின் குரல்தான்; எழுத்தாளரின் குரல் அல்ல. சில சமயம் கதைசொல்லி முக்கிய பாத்திரமாக ஒரு குறிப்பிட்ட பெயருடன் கூட இருக்கலாம். பத்து இலட்சம் காலடிகள் சிறுகதையின் உள்ளே நிகழும் கதையை தன்னுடைய அனுபவமாகச் சொல்வது ஒளசேப்பச்சன் என்பதால், அவரே பெருமளவு கதைசொல்லியாக இருக்கிறார்.
ஒளசேப்பச்சன் கதைசொல்லியாகவும், கதாபாத்திரமாகவும் மாறி மாறி இருப்பது முக்கியமான பிரச்சினை அல்ல. ஏனெனில் பொதுவாக எந்த ஒரு கதையிலும் இயங்குவது கதைசொல்லியின் (narrator) குரல்தான். எழுத்தாளன் ஒரு நோக்குநிலையை, ஒரு சிந்தனையின் சாத்தியத்தை கதைசொல்லியின் குரலின் மூலம் வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம். அதனால் பிரதியின் நோக்கத்தை, அந்த நோக்கம் பிரதியில் செயல்படுவதை ஆராய வேண்டுமே தவிர, ஆசிரியர் யார், எதனால் எழுதுகிறார், அவருடைய நோக்கம் என்ன என்று ஆராய்வது தேவையில்லை.
அதே சமயம் ஒரு எழுத்தாளர் தொடர்ந்து பல பிரதிகளை எழுதும்போது, அவற்றினை இணைத்துப் பார்ப்பதும் அதன் மூலம் அவரது சில பார்வைகள் என்பவற்றை தொகுத்துக்கொள்வதும் சாத்தியம்தான். அந்தந்த படைப்புகளின் கதைசொல்லிகளை கடந்து எழுத்தாளனின் பெயரே ஒரு பார்வையின், நோக்குநிலையின் சுட்டுதலாக மாறத்தான் செய்யும். ஜெயமோகன் போல புனைவற்ற கட்டுரைகளை, சமகால நிகழ்வுகள், அரசியல் குறித்து எழுதும் ஒருவரை அவரது பல்வேறு எழுத்துக்கள் மூலமும் தொகுத்து அடையாளம் காண்பதும் தவிர்க்க இயலாதது.
ஏனெனில் எழுத்தோ, பேச்சோ மொழி எப்போதுமே சொல்லும் செயல்தான் (speech act). அந்த செயல்பாட்டை சமூகத்தில் நிகழ்த்துவது எழுத்தாளர்தான். இது ஏற்படுத்தும் சமூக பொறுப்பிலிருந்து எழுத்தாளரை சமூகங்கள் முற்றிலும் விடுவிப்பதில்லை. அது சாத்தியமா என்பதும் கேள்வியே. தணிக்கை செய்யாமல் இருப்பது நல்லது; தடை செய்யாமல் இருக்கவேண்டும். ஆனால் பொறுப்பேற்கவேண்டும் என்று எதிர்பார்க்கத்தான் செய்வார்கள்.
ஒளசேப்பச்சன் என்ற நபர் சாராயம் குடித்துவிட்டு கூறும் கதையில் நிகழும் முரண்கள், சிக்கல்களை இந்த கதையின் சிக்கல்களாகத்தான் பார்க்க முடியுமே தவிர, அந்த கதாபாத்திரத்தின் பொறுப்பு என்று சொல்லமுடியாது. ஏனெனில் இந்த ஒரு பாத்திரத்தின் தொடர்ந்த பேச்சைத்தவிர, அதன் வர்ணனைகள், தகவல்கள், கூற்றுக்களைத் தவிர கதையில் வரும் பிறர் கூறுவதெல்லாம் பொருட்படுத்தத் தக்கதாக இல்லை. இதையும் கூட பலவீனம் என்று கிரியேட்டிவ் ரைட்டிங் வகுப்பெடுக்கும் ஆசிரியர் ஒருவர் கூறலாம். ஏனெனில் கதையில் கதாபாத்திரங்கள் இருந்தால் அவர்கள் சிறிய பங்களிப்பாவது செய்ய வேண்டும். அரங்க மேடையில் ஒரு பொருள் இருந்தால் அது நாடகத்திற்கு பயன்பட வேண்டும் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள்.
ஜெயமோகனுக்கு ஒரு நல்ல எடிட்டர் தேவை. ஏனெனில் அவர் மன எழுச்சி, உணர்வெழுச்சி ஆகியவற்றை நம்பி எழுதுகிறார். அவற்றையே சொற்களில் கடத்துகிறார். அதனால் கதையில் கணிசமான சிறு பிழைகள் மலிகின்றன. துரதிர்ஷ்டவசமாக அதை அவருக்கு யாரும் சுட்டிக்காட்டுவதும் இல்லை என்று தோன்றுகிறது. விமலாதித்த மாமல்லன் சில கதைகளை ஒரு இரக்கமற்ற எடிட்டரை போல கூர்ந்து பார்த்து பல பிழைகளை சுட்டிக் காட்டியிருந்தார். ஆனால் அவர் ஆவேசமான எள்ளலுடன் செய்ததால் உரிய கவனம் பெறாமல் போயிருக்கலாம். உதாரணமாக ஒரே ஒரு தருணத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கதைசொல்லி பத்தேமாரியை ஒளசேப்பச்சனுக்கு சுட்டிக்காட்டும் தருணம்.
கடலில் சென்றுகொண்டிருந்த பெரிய படகொன்றைச் சுட்டிக்காட்டி “இத்தனை பெரிய படகு… அதுவும் மரத்தாலானது… இதையெல்லாம் இப்போது கட்டுகிறார்களா?”என்றேன்.
நினைத்தது போல ஔசேப்பச்சன் அந்தப்பக்கமாக திரும்பினான். “அதன்பெயர் பத்தேமாரி… அரேபியப்பெயர்… தெரியாதவர்கள் அதை உரு என்கிறார்கள். உரு என்றால் பெரிதாகக் கட்டி எழுப்பிய ஒன்று என்று பொருள்… அது கடலில் தொலைவில் அப்படி தெரிகிறது. கடல்மேல் எல்லாமே சிறியவைதான். அதை நீ கரையில் வைத்துப் பார்க்கவேண்டும். ஒரு ஐந்துமாடி கட்டிடம் அளவுக்கு இருக்கும்.”
கதைசொல்லியே “இத்தனை பெரிய படகு” என்று சுட்டும்போது, ஒளச்சேப்பச்சன் “அது கடலில் தொலைவில் அப்படி தெரிகிறது. கடல்மேல் எல்லாம் சிறியவைதான்” என்று மறுமொழி கூறுவது இடறலாக இருக்கிறது. “அது கடலில் தொலைவில் இருக்கும்போதே அப்படி தெரிகிறது. அதை நீ கரையில் வைத்து பார்த்தால்…” என்று சொன்னால் சரியாக இருக்கும். அல்லது கதைசொல்லி “அந்த படகு” என்று மட்டும் சொல்லியிருக்கலாம். இந்த உரையாடல் முரண் பெரிய பிழை இல்லை. கதையின் ஓட்டத்தில் யார் கண்ணிலும் படாது போகலாம். ஆனால் கூர்ந்த வாசிப்பை பழக்கமாகக் கொண்டவர்களுக்கு நெருடும்.
ஒளசேப்பச்சனை கற்பனை செய்து கொள்வதே கடினமாக இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் காவல்துறையில் டிஎஸ்பி ஆக இருந்தவர் இப்போது உயர் பதவியில் இருப்பார், ஓய்வு பெரும் வயதில் இருப்பார் அல்லது ஒய்வு பெற்றிருப்பார். அவரை கதைசொல்லி உட்பட அனைவரும் ஏக வசனத்தில் கூப்பிடுகிறார்கள். ஒருவேளை அனைவரும் அவர் வயதையொத்த சகாக்களாக இருக்கலாம். ஆனால் அப்படி ஒரு சித்திரம் மனதில் உருவாக மறுக்கிறது. அதற்கான குறிப்புகள் எதுவும் கிடைப்பதில்லை. வயதுக்கேற்ற மரியாதையை தரும்படி “ர்” விகுதியை பயன்படுத்தியிருந்தால் அந்த கதாபாத்திரம் பேசும் கனமான அனுபவங்களுக்கு பொருத்தமாக இருந்திருக்கலாம். குமாரன் மாஸ்டர் மட்டும் “ர்” விகுதியுடன் குறிப்பிடப்படுகிறார். வயது சார் தடுமாற்றம் 29 வயது கிருஷ்ணன் எம்பிராந்திரியை இளைஞன் என்பதா, பையன் என்பதா என்பதிலும் இருக்கிறது. சடலம் இளைஞனுடையதாக இருக்கிறது. ஆளைக் கண்டுபிடிக்கும்போது பையனாகி விடுகிறான்.
தகவல் பிழைகளையும் தவிர்க்க வேண்டும். போர்த்துகீசியர் கடலாதிக்கம் பதினாறாம் நூற்றாண்டா, பதினேழாம் நூற்றாண்டா; 1872 ஆம் ஆண்டில் அவத்தில் நவாபே கிடையாது என்பன போன்ற விவரங்களையும் யாராவது சரிபார்த்து எடிட் செய்யவேண்டும். அவத் நவாப்கள் குரூரமானவர்கள் என்று எழுதும்போது கடைசி நவாப் வாஜித் அலி ஷா குறித்து வரலாறு என்ன சொல்கிறது, கிழக்கிந்திய கம்பெனி ஏன் அவரை ஆளத்தகுதியற்றவர் என்று சொன்னது, சத்யஜித் ரேயின் சத்ரன்ஜ் கே கிலாடியில் அவர் எப்படி வெளிப்படுகிறார் என்பதையும் நினைவுகூர வேண்டும். இது எதுவுமே பெரிய பிரச்சினை இல்லைதான். ஆனால் எதற்காக பிழையாக எழுத வேண்டும் என்பதும் ஒரு கேள்விதான். வாசகர் மனதில் இந்த பிழைகள் விதைகளாக விழும் வாய்ப்புகள் அதிகம்.
இது போன்ற பிழைகளை சுட்டுவதை விமர்சனம் என்று நான் கருதுவதில்லை என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இதையெல்லாம் சுட்டியதற்கே காரணம் எப்படி உணர்வெழுச்சி என்பதை மட்டுமே நம்பி கதையாடல் இயங்குகிறது என்பதை கவனிக்கத்தான். ஜனரஞ்சக இலக்கியம் இப்படித்தான் உணர்வெழுச்சியை மையமாகக் கொண்டு இயங்கும். வாசகரின் உழைப்பைக் கோரும் எழுத்து சற்றே அடர்த்தியினையும், கவனமான நுண் அடுக்களையும் கொண்டிருப்பது அவசியம். சிறிய வாக்கியங்களால் கட்டப்படும் நேர்ச்சுட்டு நடை உணர்ச்சிகளை நேரடியாகக் கடத்துவது வாசகர்களை சுலபமாகக் கவர்வதை புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணம்: “அந்த சட்டங்கள் மெல்ல அதிரும். மிகமெல்ல. அவற்றில் நின்றால் நம் காலில் ஒரு சின்ன மின்சாரம் பாய்ந்த அதிர்வு ஏற்படும், அவ்வளவுதான்.”
துப்புத்துலக்குதலின் தர்க்கம்
கிருஷ்ணன் எம்பிராந்திரியின் கொலை வழக்கில் முக்கிய அங்கம் வகிப்பது விலையுயர்ந்த துருக்கித் தொப்பி. அந்த தொப்பியின் சரிகை இழை ஒன்று அவனது அழுகிய பிணத்தின் விரலில் ஒட்டியிருப்பதால்தான் மாப்பிள்ளைமாரின் கலாசாரத்தின், அவர்களது அளப்பெரிய செயலாற்றலின், கட்டுமானத்திறனின் ரகசியத்தை அல்லது அந்தராத்மாவை ஒளசேப்பச்சனால் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது துப்புத்துலக்குதலின் இலக்காக இறுதியில் வெளிப்படுவது கிருஷ்ணன் நம்பூதிரியை யார் கொன்றார்கள் என்ற விடையைக் காண்பது அல்ல. அது எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒரு பிற்சேர்க்கைதான். அந்த ஜரிகை நூலும், அது இருந்த விலையுயர்ந்த துருக்கித் தொப்பியும் தான் கிருஷ்ணன் எம்பிராந்திரி மங்களூர் வருவதற்கும், கொல்லப்படுவதற்கும் பின்புலமான காரணங்கள். அந்த காரணங்களின் மூலம் கிடைக்கும் மானுடவியல் தரிசனம்தான் துப்புத்துலக்கலின், கதையின் உண்மையான விளைபொருள். கிருஷ்ணன் எம்பிராந்திரியை பணத்திற்காக கொன்ற ஒரு சில்லறைத் திருடனை, கிரிமினலை கண்டுபிடிப்பதிலும், கைது செய்வதிலும் எந்த முக்கியத்துவமும் இல்லை.
விசாரணையின் துவக்கமே அசாத்தியமாகத்தான் இருக்கிறது. “அழுகி, வயிறு உப்பி, கண்கள் பிதுங்கிய சடலம்” ஒன்றின் புகைப்படத்தைக் காட்டி இந்த நபரை பார்த்திருக்கிறீர்களா என்று போலீஸ் மங்களூரில் விசாரிக்கிறது. எப்படியோ ஏழு மாதம் கழித்து பணம்பூரில் ஒரு ஓட்டல் சர்வர் அந்த போட்டோவில் உள்ள அழுகி, கண்கள் பிதுங்கிய முகத்தை துல்லியமாக அடையாளம் காண்கிறான். பர்சை மறந்துவைத்துச் சென்றுவிட்டு பிறகு வந்து வாங்கிச்சென்ற, தனக்கு இருபது ரூபாய் டிப்ஸ் கொடுத்த நபரென்று சரியாகச் சொல்லி விடுகிறான். அதைத்தொடர்ந்து பணம்பூர் பகுதியில் விசாரித்ததில் மற்றொமொரு ஓட்டலில் வேலை செய்யும் பையனும் அந்த முகத்தை இனம் கண்டு அவன் அந்த ஓட்டலில் தங்கியிருந்ததை உறுதிசெய்வதுடன், தங்கியிருந்த அறை எண் 2A என்றும் கச்சிதமாகக் கூறிவிடுகிறான். ஹோட்டல் ரிஜிஸ்டரில் அந்த அறையில் தங்கிய நபர் கொடுத்த போலி விலாசம் வேலையை சுலபமாக்கி விடுகிறது. மூன்றே வாரங்களில் அந்த அழுகிய பிணம் வடகரையில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் பூசாரியாக இருந்த கிருஷ்ணன் எம்பிராந்திரி என்று கண்டுபிடித்து விடுகிறார்கள். அடுத்து தெரியவேண்டியது கிருஷ்ணன் எம்பிராந்திரியை எப்படி இறந்தான் அல்லது யார் கொன்றார்கள் என்பதுதான்.
உள்ளபடி சொன்னால், விசாரணை இந்த தருணத்தில் சரியான திசையில்தான் சென்றது. கிருஷ்ணனை கொன்றது மங்களூரின் கிரிமினல்களில் ஒருவன் என்று இறுதியில் அறிகிறோம். ஒளசேப்பச்சன் சொன்னது “ஏற்கனவே மங்களூர் ரயில்நிலையம், பஸ்ஸ்டாண்ட் பகுதிகளின் எல்லா பொறுக்கிகளையும் குட்டித்திருடர்களையும் துப்புரவாக விசாரித்திருந்தோம். அவர்கள் எவரும் அவனைப் பார்த்ததே இல்லை என்றார்கள். அத்தனைபேரையும் மீண்டும் வரவழைத்து மேலும் கடுமையாக விசாரித்தோம். ஒரு வாரத்தில் ஒன்று தெரிந்தது, அவர்கள் எவரும் அவனைப் பார்க்கவில்லை. லாக்கப்பில் ஏராளமான மலமூத்திரம் விழுந்ததுதான் மிச்சம்.” இவ்வளவு கடுமையான விசாரணையில் மங்களூரின் கிரிமினல்களில் ஒருவன் நாலு இலட்சம் ரூபாய் சம்பாதித்திருந்தால், அதன் பின் காணாமல் போயிருந்தால் அது குறித்து தெரிய வந்திருக்கவே வாய்ப்பு அதிகம். அனால் அப்படி நடந்திருந்தால் குற்றவாளியை கண்டுபிடித்த பிறகு, கிருஷ்ணனை ஏன் கொன்றார்கள், ஜரிகை இழை விரலில் எப்படி வந்தது என்ற கேள்விக்கு முக்கியத்துவம் இல்லாது போயிருக்கலாம். கொலையாளியையே பிடித்துவிட்டால், அவனும் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டால் பிற பின்னணித் தகவல்களுக்காக மெனக்கெட முடியுமா என்பது கேள்விதான். கிருஷ்ணனிடம் எவ்வளவு பணம் இருந்தது என்று அந்த கிரிமினல் கூறியிராவிட்டால், குறைத்துக் கூறியிருந்தால் மேலும் வழக்கில் சுவாரசியமற்றுத்தான் போகும். ஜரிகை இழையும், தொப்பியும் முக்கியத்துவம் இழந்து போகும்.
இங்கேதான் பிரதியின் நோக்கம் ஒன்று உருவாகிறது. கிருஷ்ணன் கொலை, மங்களூர் கிரிமினலை பிடிப்பதுடன் முடிந்துவிட்டால் ஒளசேப்பச்சனின் அப்துல்லா விசாரணை, மாப்பிள்ளை சமூகம் பற்றிய தரிசனம் எல்லாம் சாத்தியமில்லாமல் போயிருக்கும். அதனால்தான் ஒளசேப்பச்சன் சம்பிரதாயமாக குட்டித் திருடர்களை, பொறுக்கிகளை சித்தரவதை செய்தாலும் அவர்களுக்கும் கிருஷ்ணன் கொலைக்கும் தொடர்பில்லை என்றே எண்ணுகிறார். ஜரிகை இழை இருந்த தொப்பி போட்டவர்தான் கொன்றிருக்க வேண்டும் என அனுமானிக்கிறார். அதன் அடிப்படையில்தான் கிருஷ்ணனை கொன்றது அப்துல்லாவா என்ற ஐயம் பிரதியுனுள் உருவாக முடிகிறது. ஒளசேப்பச்சன் வார்த்தைகளில் இந்த ஐயம் இப்படியாக வெளிப்படுகிறது: “அந்தப்பையனுக்கும் எம்.ஏ.அப்துல்லா சாகிபுக்குமான உறவு என்ன? அதைமட்டும் இணைத்தாகவேண்டும். முதலில் ஒரு விஷயத்தை விசாரித்தேன். கிருஷ்ணன் இறந்த அன்று எம்.ஏ..அப்துல்லா எங்கிருந்தார்? அன்று அவர் கோழிக்கோட்டில் அவருடைய ஆஸ்பத்திரியின் வார்டு ஒன்றை திறக்க வந்திருந்த உள்ளூர் எம்.எல்.ஏ மற்றும் டி.எம்.ஓவுடன் இருந்தார். அதற்கு எல்லா சான்றுகளும் இருந்தன. சட்டென்று ஒருவாசல் மூடியது.”
இதில் என்ன பெரிய வேடிக்கை என்றால் எம்.ஏ.அப்துல்லாவே கிருஷ்ணனை மங்களூர் நேத்ராவதி ஆற்றின் கரையில் சென்று கொன்றிருப்பார், அதுவும் மறக்காமல் அந்த விலையுயர்ந்த துருக்கி தொப்பியையும் அணிந்து கொண்டு கொலை செய்யச் சென்றிருப்பார் என்னும் சாத்தியம்தான். அவ்வளவு பெரிய பணக்காரர், மாப்பிள்ளைமார் சமூகத்தையே கட்டில் வைத்திருப்பவர், கிருஷ்ணன் என்ற ஏழை இளைஞனைக் கொல்ல தொப்பி போட்டுக்கொண்டு அவரே நேரிலா செல்வாரா? அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை நடத்தும் அவருக்கு ஒரு அடியாள் கூட இல்லாமல் போய்விடுவானா என்ன? எந்த வாசல் ஒளசேப்பனுக்கு திறந்திருந்தது? எது மூடியது? அப்துல்லா கிருஷ்ணனை கொல்லும்போது கிருஷ்ணன் போராடி, அப்போது அவர் தொப்பியை கையால் பற்றி, அதன் ஒரு ஜரிகை அவன் விரலில் சுற்றிக்கொண்டது என்பதுதானே அந்த வாசல்? அதனால்தானே அந்த நேரத்தில் அவர் எங்கே இருந்தார் என்று விசாரிக்கிறார் ஒளசேப்பச்சன்?
அந்த மூடிய வாசலை மனதில் நினைத்துக்கொண்டேதான் இருக்கிறார் ஒளசேப்பச்சன். அதனால்தான் அப்துல்லாவின் மகன் ஹாஷிம் அந்த தொப்பியை அணிந்திருந்தான் என்று ராதாமணி சொன்னதும் பெரும் அதிர்ச்சியடைகிறார். “நான் ஒருகணம் என்னையே எண்ணி சலித்துவிட்டேன். என்ன முட்டாள்தனம். எம்.ஏ.அப்துல்லா சாகிபின் மகன்களும் அதே தொப்பிதான் போடுகிறார்கள் போலும். அதை நான் எண்ணிப் பார்க்கவே இல்லை.” இதில் என்ன முட்டாள்தனம் என்பதுதான் கேள்வி. அப்துல்லாவிற்கு ஒரு அலிபி, அந்த நேரத்தில் அவர் எங்கிருந்தார் என்பதற்கு இருக்கிறது. அதனால் வாசல் மூடியது. அவர் மகனும் அதேபோல தொப்பி அணிந்தவன் என்பதால் புதிய வாசல் திறக்கிறது. ஹாஷிம் மங்களூருக்கு தொப்பி அணிந்து சென்று கிருஷ்ணனை கொன்றிருக்கலாம் என்பதுதான் அது. அவ்வளவு பெரிய பணக்காரரின் மகன் நேரடியாகப் போய் அதைச்செய்வானா, அல்லது ஆட்களை விட்டுச்செய்வானா? எதனால் ஒளசேப்பச்சன் தன்னை நொந்துகொள்ள வேண்டும்?
தொப்பியும், அதன் சரிகை இழையும் எந்த தர்க்க பலமும் இல்லாமல்தான் கதையில் வருகின்றன. முதலில் ஹாஷிம் தான் பிரேமை கொண்டுள்ள ஒரு மணமான பெண்ணின் இல்லத்திற்கே சென்று அவளை தன்னை மணக்கும்படி மன்றாடும்போது, துருக்கி தொப்பியை அணிந்து செல்வானா என்பதே கேள்வியாகத்தான் இருக்கிறது. அதை கழற்றி காரில் வைத்துவிட்டு செல்ல மட்டானா என்ன? அது பிறர் கவனத்தை ஈர்க்காதா? அந்த சந்திப்பின் அந்தரங்கத்தன்மைக்கு குறுக்கீடாக இருக்கதா? இதுவே சரியாகப் பொருந்தவில்லை என்றாலும், ஒருவேளை எல்லா நேரங்களிலும் தொப்பி அணிவது பழக்கம் என எடுத்துக்கொள்ளலாம். மணமான பெண்ணிடம் உறவுக்காக மன்றாட சென்றாலும், கொலை செய்யச் சென்றாலும் கூட மாப்பிள்ளைமார்களின் தலைவர்கள் அதை அணியாமல் செல்ல மாட்டார்களோ என்னவோ. ஏதோ அதீத உணர்ச்சியில் அதை எடுக்க மறந்து ஹாஷீம் சென்று விட்டான் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு அடுத்த நிகழ்வு மேலும் குழப்பமானது.
கிருஷ்ணன் அந்த தொப்பியை ஹாஷிமையோ, அப்துல்லாவையோ மிரட்டுவதற்கான ஒரு ஆதாரமாக கருதுவது அதீதமானது. ஒருவர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்தார் என்பதற்கு ஆதாரமாக மூன்றாம் நபர் அவரது தொப்பி தன்னிடம் இருப்பதை காட்ட முடியுமா என்ன? அந்த தொப்பியை நான் வெளியே சென்ற போது பொது இடத்தில் மறந்துவிட்டு வந்துவிட்டேன் என்றோ அந்த தொப்பி காணாமல் போய்விட்ட ஒன்று என்றோ அப்துல்லா/ஹாஷிம் கூறினால் அந்த தொப்பி எதற்கு சாட்சியமாகும்? குற்றம் நடந்த இட த்தில் அது கிடைத்தால் கூட ஐயத்திற்கு முகாந்திரம் இருக்கும். கிருஷ்ணன் போன்ற ஏழை பூசாரி தொப்பியை கையில் வைத்துக்கொண்டு தன் குற்றச்சாட்டிற்கு அதை ஆதாரமாகக் காட்டினால் சிரிக்க மாட்டார்களா? தொல்லைக்கு உள்ளான பெண்ணே கொண்டுவந்து காட்டினால் கூட, வேறு சாட்சியங்களின்றி, முகாந்திரமின்றி தொப்பி மட்டுமே சான்றாக எடுபடாது. ஆனால் கிருஷ்ணன் அந்த தொப்பியை வைத்துக்கொண்டு மிரட்ட செல்வதுடன், கொலை செய்யப்பட்டு இறக்கும் தருவாய் வரை பத்திரமாக வைத்துக்கொண்டுள்ளான்.
அந்த பெண்ணோ மாலிக் தினார் வம்சத்து எம்.ஏ.அப்துல்லாவின் குடும்ப செல்வாக்கை நினைத்து அதைக் குறித்து பேசவே அஞ்சுபவள். அவள் ஏன் தொப்பியை கடன் தொல்லையால் ஊரை விட்டு போகும் கிருஷ்ணனிடம் கொடுக்கிறாள் என்பது அதைவிட புதிரான கேள்வி. அவனிடம் மொத்த கதையையும் வேறு சொல்லி இருக்கிறாள். அவனிடம் தொப்பியையும் கொடுத்தால் அதை வைத்துக்கொண்டு ஏதாவது பிரச்சினை செய்வான் என அவள் யூகிக்க மாட்டாளா என்ன? உனக்கெதற்கு அந்தத் தொப்பி என்று கேட்க மாட்டாளா? ஆனாலும் கொடுக்கிறாள்.
ஒளசேப்பச்சனுக்கு சந்தேகம் வருகிறது. கிருஷ்ணன் ஹாஷிமை சந்தித்தானா இல்லையா? சந்தித்திருந்தால், அந்த தொப்பியை கொடுத்து பணம் வாங்கியிருந்தால் அந்த தொப்பி ஏன் அவனிடம் தொடர்ந்து இருந்தது? இந்தக் கேள்வியை இறுதியாக அப்துல்லாவிடமே கேட்கிறார் ஒளசேப்பச்சன். அப்துல்லா நேரடியாகவே தன் மகனின் வேலையாளிடம் விசாரித்து விடுவதால் கிருஷ்ணன் தொப்பியை ஆதாரமாகக் காட்டுவதற்கு தேவையேற்படவில்லை. உன்னிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்றெல்லாம் கேட்காமலேயே இரண்டு இலட்சம் கேட்டவனிடம், நாலு இலட்ச ரூபாய் கொடுத்து விடுகிறார். அதை கிருஷ்ணன் எம்பிராந்திரி விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக கொடுக்கவில்லை. ஒரு ஷத்திரியன் பிராமணனுக்குத் தரும் தட்சிணையாகக் கொடுக்கிறார். எனவே ஆதாரங்களைப் பற்றியெல்லாம் அவருக்குக் கவலையில்லை.
அப்போதும் ஒரு கேள்வி இருக்கிறது. நாலு இலட்ச ரூபாய் கிடைத்த பிறகு அந்த கிரகம் பிடித்த தொப்பியை தூக்கி எறிந்துவிடலாமே? அதை எதற்கு சாகும் வரை கையில் வைத்திருந்தான் கிருஷ்ணன்? அந்தத் தொப்பியை கைப்பற்றி ஹாஷிமை சந்தித்து மிரட்ட விரும்பிய கிரிமினல்கள்தான் கிருஷ்ணனை கொன்றிருக்க வேண்டும் என அப்துல்லா யூகிக்கிறார். அதனால் தொப்பிதான் ஒரு வகையில் கிருஷ்ணனின் மரணத்திற்கு காரணம், கிருஷ்ணன் அந்த தொப்பியை தூக்கி எறிந்திருந்தால் ஒருவேளை சாகாமலும் இருந்திருக்கலாம் என்பது அவர் உருவாக்கும் யூகம். கிருஷ்ணன்தான் அப்பாவி பிராமணன் என்றால், ஒரு தொப்பியை வைத்துக்கொண்டு அப்துல்லா சாகிப் குடும்பத்தை மிரட்டலாம் என்று நினைக்கும் அளவிற்கா கிரிமினல்களும் முட்டாள்களாக இருப்பார்கள்? எந்த குற்றத்தின் தடையம் அல்லது சான்று அந்த தொப்பி?
ஆனால் இந்த தொப்பிக்கு ஒளசேப்பச்சன் கொடுக்கும் முக்கியத்துவமும் அபாரமானதுதான். அவருக்கு அந்த ஒற்றை சரிகையிழையை வைத்துக்கொண்டு கோர்ட்டில் எதையும் நிறுவ முடியாது என்று தெரியும். அவரே அதைச் சொல்கிறார். ஆனாலும் அப்துல்லா பம்பாயில் துணி வாங்கும் கடைக்கு தானே நேரில் சென்று, அந்த தொப்பி ஒன்றை அங்குள்ள சிப்பந்தியை சரிகட்டி வாங்கி, அதை ஃபாரன்சிக் லாபில் வேறு கொடுத்து கிருஷ்ணன் கையில் இருந்த சரிகை இழை அந்த தொப்பியில் இருப்பது போன்றதுதான் என்று சரிபார்த்துக்கொள்கிறார். ஒளசேப்பச்சனுக்கு தனிப்பட்ட முறையில் அப்துல்லாவிற்கும் கிருஷ்ணனுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று தெரிய வேண்டும் என்பதற்காக அந்த அளவு முயற்சி எடுக்கிறார்.
இப்படி தொப்பி தர்க்கபலமில்லாத ஒரு பயன்பாட்டிற்கு ஆளாவதில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது. அது ஒரு குறிப்பான் (signifier) அல்லது தெளிவற்ற தொடர்மக் குறி (Rehmatic Indexical synsign) என்பதுதான் அது. குறியியக்கம் குறித்து அதிகம் இப்போதைக்கு எழுதப் போவதில்லை. வேறோரு சந்தர்ப்பத்தில் விரிவாகவே எழுதுவேன். இப்போதைக்கு அந்தக் குறி என்ன செய்கிறது என்பதை அறிந்தால் போதும். அது இந்தக் கதைக்குள் வந்ததே அப்துல்லா செய்த மற்றொரு கொலையை நாம் அறிந்துகொள்ளத்தான். அதிலும் முழுவதும் நாடகீயமாக, ஒளசேப்பச்சன் கடலில் நிற்கும் படகு ஒன்றில் அந்தி நேரத்தில் பேரழகனும், ஒரு சுல்தானைப் போல கம்பீரமானவருமான அப்துல்லாவின் வாயாலேயே அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, மாப்பிள்ளைகளின் சமூகக் கட்டமைப்பின் ஆழத்தை புரிந்துகொள்வதற்காகத்தான் அந்த தொப்பி கதைக்குள் வந்தது.
அந்த குறியின் செயல்பாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் மற்றொரு சங்கதியை கவனம் கொள்ள வேண்டும். அப்துல்லா, ஒரு மணமான பெண்ணின் மீது காதல் கொண்டு அவளை தொந்திரவு செய்த தன் இளைய மகனை தண்டிக்க முடிவு செய்கிறார். அதிக பட்ச தண்டனையான மரண தண்டனை. ஏனெனில் இது போன்ற அத்துமீறல்களை அனுமதித்தால் அது எங்கே சென்று நிற்கும் என்று தெரியாது என்பதால் அந்த கடுமையான தண்டனை. மூத்த பிள்ளைகளின் சம்மதத்துடன் அதை செய்கிறார். அநேகமாக கிருஷ்ணன் வந்து சென்றவுடனேயே அதனை செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் வெறும் கொள்ளைக்கூட்டத் தலைவர் இல்லை; சமூகத்திற்கு தன் மகன் என்ன ஆனான் என்று ஒரு தகவல் சொல்லாமல் அவனை போட்டுத்தள்ள முடியாது. அதுவும் அப்துல்லா சமூகத்தில் பரவலான தொடர்புகள் உள்ளவர், எம்.டி வாசுதேவன் நாயரை வாடா, போடா என்று கூப்பிடக் கூடியவர். பொது சமூகத்தில் நடமாடிக் கொண்டிருந்த அவர் மகன் திடீரென காணாமல் போனால் அதற்கு ஒரு விளக்கம் சொல்லத்தான் வேண்டும். மேலும் மத வழக்கப்படி சடங்குகளும் செய்ய வேண்டும். அதனால் அந்த கொலையை விபத்து என்று நம்பகமாக ஜோடித்திருப்பார். அதை பொதுவில் அறிவித்தும் இருப்பார்.
அவ்வாறு நடந்திருந்தால் ராதாமணி ஹாஷிம் என்றவுடன் முகமது ஹாஷிம் என்று முழுப்பெயரையும் சொல்லும் அளவு விசாரித்து வைத்திருக்கும் ஒளசேப்பச்சன் ஹாஷிம் மரணமடைந்த தகவலை நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். ராதாமணியும் ஊடகம் வழியாக அறிந்திருக்க வாய்ப்பு அதிகம். ஆனால் துப்புத்தலக்கல் நாடகீயமாக முடிவதற்கு இந்த யதார்த்த உலக தர்க்கமெல்லாம் உதவாது. கிளைமாக்ஸ் களைகட்ட வேண்டும் அல்லவா? அப்போதுதானே வாசகர்கள் புல்லரிப்பார்கள்?
ஒளசேப்பசனிடம் நடந்தவற்றையெல்லாம் அப்துல்லா கூறி முடித்தவுடன் ஒளசேப்பச்சன் எதற்கும் ஹாஷிமை சந்தித்து தகவல்களை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று கூறுகிறார். ஏனெனில் கிருஷ்ணனை கொன்றவர்களிடம் தொப்பி இருக்கலாம். அவர்கள் ஹாஷிமை தொடர்பு கொண்டிருக்கலாம் என்று ஒளசேப்பச்சன் நினைக்கிறார். தொப்பியின் பயணம் தொடர்கிறது. அப்போதுதான் அப்துல்லா அது இயலாது என்கிறார். ஏன் என்றால் படகின் தரையை காட்டி ஹாஷிம் கடலாழத்தில் இருக்கிறான் என்கிறார். ஒளசேப்பச்சன் பதறிப்போகிறார். நீங்கள் கொன்றீர்களா என்று கேட்டதற்கு அப்துல்லா சலனமின்றி ஆம் என்கிறார். ஒளசேப்பச்சன் அவன் குழந்தை மனதுனடன் இருந்ததாக ராதாமணி கூறியதைச் சொல்கிறார். அதற்கு அப்துல்லா அது தனக்கு தெரியுமென்றும் ஆனாலும் பிரச்சினை நெறி தொடர்பான விஷயம் என்று சொல்கிறார்.
இங்கும் ஒன்றை கவனிக்கவேண்டும். அப்துல்லா அவன் கடலில் தவறி விழுந்து இறந்துவிட்டான் என்று ஒளசேப்பசனிடமும் கூறியிருக்கலாம். ஆனாலும் அவராகவே தான் கொன்றதை தெரிவிக்கிறார். இது எங்களுக்குள் நடக்கும் விஷயம். போலீஸ் தலையிடும் வழக்கம் இல்லை என்றும் சொல்கிறார். இது கதையின் தர்க்கத்திற்கு மிக முக்கியமானது. ஏனெனில் அந்த தொப்பி இறையாண்மைக் குறி. ஹாஷிம் அதன் அதிகாரத்தை, சமூகக் கட்டுக்கோப்பை சமரசம் செய்யும்போது விலகி நகரும் தொப்பி என்ற இறையாண்மைக் குறியின் பயணம் இறுதியில் அவன் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது வெளிப்படும்போது மீண்டும் உறுதிப்பட்ட இறையாண்மையில் நிறைவடைகிறது. அதாவது புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்து விடுகிறது. “சுல்தானின் வாள் வழிப்பறிக்கு பயன்படக் கூடாது” என்று அப்துல்லா கூறும்போதும், எங்களுக்குள் நடப்பதான அந்தக் கொலை விஷயத்தில் போலீஸ் தலையிடுவதில்லை என்று கூறும்போதும், இறையாண்மை தெளிவாக சுட்டப்படுகிறது. அதாவது அவர் சமூகத்தில் அவர் வைத்ததுதான் சட்டம். இந்திய அரசின் பொது சட்ட த்திற்கு கட்டுப்பட மாட்டார்கள். எனவே அவர் ஒரு இறையாண்மையுள்ள சுல்தான்தான்.
அதன் பிறகு அப்துல்லா அவர் கேட்பதற்காக படே குலாம் அலிகான் இசைத்தட்டுகளை எடுத்து வைத்திருப்பதைக் கூறுகிறார். இன்று ஏழாம் நிலவு என்றும், அதற்கு சந்திரகெளன்ஸ் ராகம் பொருத்தமானது என்றும் கூறுகிறார். விருப்பமிருந்தால் கேட்கலாம் என்று ஒளசேப்பச்சனிடம் கூறிவிட்டு இசைக்கச் செய்கிறார். நிச்சலனமாக அமர்ந்து கேட்கிறார். இதுதான் துப்புத் துலக்கின் உச்சம். இங்குதான் அந்த விலையுயர்ந்த துருக்கித் தொப்பியின், இறையாண்மைக் குறியீட்டின் பயணம் முழு நிறைவடைகிறது. ஒரு மிகப்பெரிய உள் ஒழுங்கு, சமூகக் கட்டுமானம் நிச்சலமனமாக செய்யப்படும் கொலையில்தான் நிலைபெற்றிருக்கிறது. உணர்ச்சியால் செய்யப்படும் அற்பக் கொலையல்ல. தண்டனையிலிருந்து தப்புவதற்காக செய்யப்படும் கொலையல்ல. நெறிமுறை காப்பதற்கு செய்யப்படும் பற்றற்ற கொலை. அதை அனுபவபூர்வமாக படகில் ஒயின் அருந்தியபடி, அந்தி நேரத்தில் படே குலாம் அலி கான் கேட்டுக்கொண்டே ஒளசேப்பச்சன் கேட்டால்தான் அதன் வலிமை, அநாதியான மானுட நாடகத்தின் அடர்த்தி புரியும். கொல்லாமல் தர்மத்தை காக்க முடியாது.
ஒரு யதார்த்தமான துப்புறியும் கதையாக இதில் வெளிப்படும் தர்க்கரீதியான பலவீனங்கள் எல்லாம் இந்த ஒரு மாபெரும் மானுடவியல் தர்க்கத்தை வலிந்து புனைந்து வெளிப்படுத்தத்தான். அதுதான் பத்துலட்சம் காலடிகளின் மகத்தான இசைவு, விசை, இசை எல்லாம். பிரம்மாண்டமான ஒத்திசைவை சாத்தியமாக்க, அதற்கான ஒழுங்கை கட்டுமானத்தை உறுதிசெய்ய, இரக்கமின்றி கொலை செய்யலாம் என்பதுதான் அந்த தர்க்கம்.
மானுடவியல் தர்க்கம்
மானுடவியலாளர் ராபர்ட் லோயி இரண்டு அமெரிக்க பழங்குடியினருக்கு இடையேயிலுள்ள ஒரு அணுகுமுறை வேறுபாட்டை சித்தரிப்பதை தெல்யூஸ் குறியியக்க செயல்பாட்டை விளக்க எடுத்தாள்கிறார். குரோ என்ற இனத்தைச் சேர்ந்த மனிதன் தன் மனைவி மாற்றானுடன் உறவு கொண்டால் அவள் முகத்தைக் கிழிப்பான். ஹோபி என்ற இனத்தைச் சேர்ந்த மனிதன் அதே நிகழ்வை எதிர்கொண்டால் அமைதியாக விலகிச் சென்று தன் கிராமம் பஞ்சத்தாலும் பசியாலும் பீடிக்கப்பட வேண்டுமென பிரார்த்தனை செய்வான் என்று கூறுகிறார் லோயி. கிரோ இனத்தவர் நாடோடி வேட்டைக்காரர்கள். ஹோபி மக்கள் நிலையான விவசாயம் செய்யும், அரசுருவாக்கம் செய்கின்ற மக்கள். குரோ இனத்தவனுக்கு மனைவி செய்யும் காரியம் அவனுடைய உடனடி பிரச்சினை; அவனுக்கு அது கோபத்தையும், பொறாமையையும் ஏற்படுத்துகிறது. அவளை தாக்குகிறான். ஹோபி இனத்தவனுக்கு அது பொது ஒழுங்கையே சீர்குலைக்கும் பிரச்சினை. தெய்வக்குற்றம். ஊரே அதனால் அழிந்துபடவேண்டும் என்பது அவன் எதிர்பார்ப்பு. ஒருவர் பிறழ்வுச் செயல், மொத்த சமூகத்தின் பிரச்சினையாகிறது. இது ஒரு பாரனாய்ட் மனநிலை. ஒரு சிறு தவறு பெருகி, மொத்த ஒழுங்குமே சீர்குலைந்துவிடும் என்பது ஒரு அதீதமான சிந்தனை; மனோவியாதி. அப்துல்லா சாகிபின் நியாயம் அத்தகையதுதான். கல்யாணமாகாத இளைஞன், குழந்தைபோல மனநிலை கொண்டவன், திருமணமான பெண்ணிடம் மையல் கொள்கிறான். அந்த பெண்ணிடம் போய் தன்னை மணக்குமாறு கேட்கிறான். அவளுக்கு கணவனுடன் வாழத்தான் விருப்பம். இதை வேறு ஒருவன் வந்து அந்த இளைஞனின் தகப்பனிடம் கூறுகிறான். கூப்பிட்டு கண்டித்து, தேவையானால் இரண்டு அடி போட்டு, நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்துவைத்தால் பிரச்சினை முடிந்தது. அந்த பெண்ணை அவன் பலாத்காரம் செய்துவிடவில்லை. ஆசைப்பட்டதற்காக, அவளை பின்தொடர்ந்து, உறவுக்கு அழைத்து தொந்திரவு செய்ததற்காக அவனை கொன்றே விட வேண்டுமா என்ன? அப்படியென்ன சாம்ராஜ்யம் சரிந்து விடப் போகிறது? சுல்தானின் வாளை வழிப்பறிக்கு பயன்படுத்தக் கூடாது என்கிறார் ஹாஜி அப்துல்லா. தப்புதான் என் கிறான் ஒளசேப்பன். அதற்கு அப்துல்லா “தொடங்கிவிட்டால் பிறகு நிறுத்தவே முடியாத தப்பு. என் காலத்தில் அது தொடங்காது” என்கிறார். இப்படிப்பட்ட ஒரு கொலையை பத்து இலட்சம் காலடிகள் கதையாடல் எப்படி நியாயப்படுத்துகிறது, கொண்டாடுகிறது என்பதுதான் கதையின் முக்கியமான பிரச்சினை.
கதை கொண்டாடவில்லையே, ஒளசேப்பச்சன் நீ என்ன நினைக்கிறாய் என்று கதைசொல்லியிடம் கேட்கிறானே என்றெல்லாம் அப்பாவித்தனமாக கேட்பவர்கள் இருப்பார்கள். கதைசொல்லிக்கு என்ன சொல்வது என்றே தோன்றுவதில்லை. “அவர்கள் மனநிலை எனக்குப் புரியவில்லை; அவர்கள் வேறு யுகத்தைச் சேர்ந்தவர்கள்” என்று கூறிவிடுகிறான். அதாவது அப்துல்லாவுடையது போன்ற அப்பழுக்கற்ற தர்மம் கலியுகத்தில் சாத்தியமில்லை என்ற பொருளில் கூறுகிறானோ என்னவோ. இங்கேதான் ஒளசேப்பச்சனின் இறுதிக் கூற்று, கதையின் தலைப்பு விளக்கம் வருகிறது.
கிருஷ்ணன் மரணத்தை விசாரிப்பது அவன் யார் என்பதை அடையாளம் கண்டதுடன் முட்டுச்சந்தில் நின்ற பிறகு, அவனை மங்களூரில் மாப்பிள்ளைகளோ, வேறு கட த்தல் குழுக்களோ கொல்லவில்லை என்று தெரிந்து பிறகுதான் ஒரு புதிய திறப்பு கிடைக்கிறது ஒளசேப்பச்சனுக்கு. அதற்குக் காரணம் கிருஷ்ணன் இறப்பதற்கு பதினோரு நாட்களுக்கு முன்னால் நிகழ்ந்த பெருமண் ரயில் விபத்து. அந்த விபத்தில் கொல்லம் அருகிலுள்ள அஷ்டமுடிக்காயலின் பாலத்திலிருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகள் காயலில் விழுந்துவிட்டன. அவற்றை கிரேன் வைத்து எடுக்க முடியவில்லை. ஆனால் இருபது பேரின் உடல்கள் அந்த பெட்டிகளின் அடியில் சிக்கியுள்ளன. அதனால் அவற்றை எடுக்க முடியுமா என்று பார்க்க ரயில்வே ஜெனரல் மேனேஜர் அர்விந்த் திரிபாதி, ஒளசேப்பச்சனின் நண்பர் வருகிறார். கிரேன்களை காயலின் கரைக்கு கொண்டு சென்று நிறுத்தி அந்த பெட்டிகளை எடுப்பது மிகவும் கடினம்; பெருஞ்செலவு. அதனால் கோழிக்கோட்டில் உள்ள மாப்பிள்ளை கலாசிகளுக்கு அந்த பெட்டிகளை பாரம்பர்ய முறையில் எடுத்துத் தரும் திறன் இருக்கிறது என்று கேள்விப்பட்டு அவர்களை பார்க்கப் போகிறார் திரிபாதி. ஒளசேப்பச்சனும் அவருடன் செல்கிறார். அவர்களிடம் நேரடியாக ஒப்புதல் பெற முடியாததால் அவர்கள் தலைவர் யாரென்று விசாரிக்கும்போதுதான் எம்.ஏ.அப்துல்லா சாகிபை சந்திக்க நேர்கிறது. அவர் உதவி செய்ய இணங்கி கலாசிகளிடம் அந்த பணியை மேற்கொள்ளச் சொல்கிறார். அவர்களும் மர உருளைகள், புளிமர தடிகள், கற்றாழை நார் கயிறு ஆகியவற்றை வைத்துக்கொண்டு, மரங்களாலேயே கிரேன் போன்ற அமைப்பை உருவாக்கி அந்த ரயில் பெட்டிகளை மந்திரம் போல மேலே எடுத்துத் தந்துவிட்டார்கள். பத்திரிகைகளிலெல்லாம் அந்த பாரம்பர்ய தொழில்நுட்பத்திறன் குறித்த அதிசயமான தகவல் வெளியானது.
இரயில் பெட்டிகளை எடுக்கும் நிமித்தமாக அப்துல்லாவை சந்தித்த போதுதான் அவர் துருக்கித் தொப்பி அணிந்திருப்பதை பார்க்கிறார் ஒளசேப்பச்சன். அதிலிருந்துதான் நாம் ஏற்கனவே தொகுத்துக்கொண்ட இரண்டாம் கட்ட விசாரணை தொடங்குகிறது. இரயில் பெட்டிகள் வெளியே வந்தது போல கிருஷ்ணன் கொலையின் இணைநிகழ்வான ஹாஷிம் கொலையின் உண்மையும் ஒளசேப்பச்சனுக்குத் துலங்குகிறது.
ஹாஷிமை அப்துல்லா கொன்றது சரியா என்ற கேள்வியுடன், அவர் கலாசி மாப்பிள்ளைகளின் தலைவர் என்பதும் இணைந்திருக்கிறது. பத்தேமாரி என்ற அற்புதமான மரக்கலத்தை கட்டும் மரபு வழி தொழில்நுட்பமும், கடலில் மூழ்கிய கப்பலையோ அல்லது காயலில் மூழ்கிய இரயில் பெட்டிகளையோ வெளியே எடுக்கும் மரபான தொழில்நுட்பமும் அறிந்தவர்கள் மாப்பிள்ளை கலாசிகள். அந்த மரபான அறிவிற்கும், திறனிற்கும் அவர்களின் சமூக கட்டுக்கோப்பிற்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் ஹாஷிமிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நினைக்கும்போதெல்லாம் ஒளசேப்பச்சனுக்கு மாப்பிள்ளை கலாசிகள் இரயில் பெட்டிகளை மேலே இழுத்ததுதான் நினைவுக்கு வருகிறது. அவருடைய முத்தாய்ப்பான வார்த்தைகள் இவை:
“நான் அதைப்பற்றி ஆயிரம் தடவையாவது நினைத்துப்பார்த்திருக்கிறேன்” என்றான் ஔசேப்பச்சன் அப்போதெல்லாம் மாப்பிளாக் கலாசிகள் ரயில்வே வேகன்களை தூக்கிய காட்சிதான் நினைவுக்கு வரும். மூத்த உஸ்தாத் என்னிடம் சொன்னார், ஆயிரத்துக்கு ஆயிரம் கால்வைப்புகள், அவ்வளவுதான் என்று. ஆயிரம் பெருக்கல் ஆயிரம். பத்துலட்சம் காலடிகள். ஆனால் அதில் ஒன்று, ஒன்றே ஒன்று, தவறாகப் போய்விட்டால் அவ்வளவுதான். தவறு பெருகிப்பெருகி கப்பல் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும்.”
ஒரு நபரின் ஒழுக்கப் பிறழ்வு ஒரு மாபெரும் சமூக ஒத்திசைவையே குலைத்துவிடும். அதனால் மரண தண்டனை என்பதே அந்த அமைப்பை காப்பாற்ற முடியும். இங்கே தொழில்நுட்ப அறிவு, செயல்திறன் பூடகப் படுத்தப் பட்டு, அதீத கற்பனாவாதத்திற்குள் மூழ்குகிறது. யதார்த்தத்தில் பத்து இலட்சம் காலடியில் ஒரு காலடி தவறானால் ஒன்றுமே நிகழாது என்றுதான் கூறவேண்டும். அதிகபட்சம் போனால் மேலே இழுக்கப்படும் கப்பல் ஓரடி சறுக்கி கீழே போகலாம். அதை சுலபத்தில் சரி செய்துகொள்ள முடியும். ஆனால் ஒரே ஒரு காலடி தவறானால் பத்து இலட்சம் காலடிகளும் பயனற்றுப் போய்விடும் என்ற விபரீதமான கற்பனையே கதையின் தலைப்பாக மாறுகிறது.
சமூக ஒழுங்கு குறித்த இத்தகைய மிகையான சித்திரங்களே பல்வேறு கலாசார ஒடுக்குமுறைக்கும் அடிப்படையாக விளங்குகின்றன. ஜாதீய கலாசாரம் உட்பட. இரக்க சுபாவமும், மென்மையான குணமும் கொண்ட ஒரு பார்ப்பன மூதாட்டி தன் பிள்ளை பார்ப்பனரல்லாத நண்பனை அழைத்து வரும்போது தனியான கோப்பையில் காப்பி கொடுப்பது கூட மிகப்பெரிய சமூக ஒழுங்கை காக்கிறோம் என்ற எண்ணத்தில்தானே தவிர, தனிப்பட்ட எந்த விரோதமும் வெறுப்பும் அந்த விருந்தாளி மீது அந்த அம்மையாருக்குக் கிடையாது. ஜாதி ஆணவக் கொலைகளும் சமூக ஒழுங்கை காக்கத்தானே நடைபெறுகின்றன. பெற்ற மகளையே கொல்கிறார்கள்.
இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலைத்த விவசாய சமூகமாக மாறுவது, வேலைப்பிரிவினையின் மூலம் பல்வேறு தொழில்கள் செய்பவர்கள் உருவாகி, அவர்களின் ஒருங்கிணைப்பினை சாத்தியமாக்குவது, கிராமங்களையும், சந்தைகள் நிகழும் நகரங்களையும் ஒருங்கிணைத்து நாடுகளாக மாறுவது, அனைத்தையும் ஒழுங்கமைக்க அரசு உருவாவது, கடவுள் கருத்தாக்கம் வலுப்பெற்று அனைவரும் வழிபடும் தெய்வங்களும், கோயில்களும் உருவாவது என மானுடவியல் வரலாற்றுப் பரிமாணங்கள் குறித்து நிறைய விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. இவை அனைத்திலும் மையமாக இருப்பது இப்படி சமூக ஒழுங்கை உருவாக்குவதற்கும், தனி மனித ஒழுக்கத்திற்கும் உள்ள தொடர்பை வரையறுப்பது. அதாவது தன்னிலைகளை தகவமைப்பது. அதே கோணத்தில் பரிசீலிக்கக் கூடியதுதான் ஆற்றல்கள் தொகுக்கப்படுவதும், ஆற்றல் தொகுப்பு அதிகாரமாக வெளிப்படுவதும். ஆங்கிலத்தில் ஆற்றல், அதிகாரம் இரண்டுமே பவர் என்ற வார்த்தையால்தான் குறிக்கப்படுகின்றன.
ஒரு மனிதனின் நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு தனி மனித ஒழுக்கமாக பரிணமிக்கிறது. அவனது ஆற்றல்கள் செதுக்கப்பட்டு திறனாக மாறுகிறது. ஒழுங்கெல்லாம் ஒருங்கிணைந்து சமூக ஒழுங்காக மாறுகிறது. திறனெல்லாம் தொகுக்கப்பட்டு சமூக ஆற்றலாக மாறுகிறது. சமூக ஒழுங்கும், ஆற்றலும் இணைந்து அதிகாரமாக மாறி, அதிகார வலைப்பின்னல் உருவாகி, அதனை ஒருங்கிணைக்கும் புள்ளியாக ஆதிக்க மையங்கள் உருவாகின்றன.
இதெல்லாம் பெளதிக விதிகள் போலவோ, வேதியியல் செயல்பாடுகள் போலவோ நிகழ்ந்துவிட்டால் அதில் எதுவும் பிரச்சினை இருக்காது. ஆனால் மானுட செயல்பாடுகள் அப்படியிருப்பதில்லை. ஒவ்வொரு மானுட உடலும் தனக்கென ஒரு நினைவுசேகரமும், அதனால் உருவாகும் புலன் அனுபவமும், புரிந்துணர்வும் கொண்டிருப்பதால் தனித்துவம் என்ற ஒரு சாத்தியம் ஏற்படுகிறது. மானுட செயல்பாடுகள் அதனால் தேர்வின் அடிப்படையில் நிகழ்வதை தவிர்க்க முடிவதில்லை.
தேர்வு என்று சொல்லும்போது அது எப்போதுமே அறிந்தே செய்யும் தேர்வாக உணரப்படுவதில்லை. ஒரு உணர்ச்சியாக, உந்துதலாக நிகழ்க்கிறது. அதன் காரணம் நினைவுசேகரத்தின் செயல்பாடு முழுவதும் தன்னுணர்வுடன் நிகழ்வதில்லை. விருப்பு, வெறுப்புகள் அகாரணமாக உருவாகின்றன. இச்சைகள், விழைவுகள் தீர்மானகரமாகத் தோன்றுகின்றன. இதுவே மனிதர்களின் இச்சா சக்தியாக இருக்கிறது. அது அவர்களுக்கு ஆற்றலையும் வழங்குகிறது. அதனால் குரோ இனத்தவனும், ஹோபி இனத்தவனும் முற்றிலும் வேறுபட்ட எதிர்வினைகளை செய்ய நேர்கிறது; இயல்கிறது.
இந்தப் பின்னணியில்தான் மானுடவியல் சிந்தனையின் அடிப்படை முரணாக மொத்தத்துவ நோக்கும், தனித்துவ நோக்கும் உருவாகின்றன. ஒவ்வொரு தத்துவ மரபும், சிந்தனை மரபும் மொத்தத்துவ நோக்கையும், தனித்துவ நோக்கையும் எப்படி இணைக்கின்றன என்பதைப் பொறுத்தே பொதுமையா, பன்மையா என்ற புரிதல் சார்ந்த தேர்வுகளும் உருவாகின்றன.
மானுடவியல் எழுத்து, இனவரைவியல் எப்போதுமே இனங்களின் குணங்களை பொதுமைப்படுத்தியே வந்துள்ளது. மேலே சொன்ன உதாரணத்தில் கூட குரோ இனத்தவன் இப்படி செயல்படுவான், ஹோபி இனத்தவன் இப்படி செயல்படுவான் என்று சொல்லும்போது அந்த இனங்களின் குணாதிசயங்கள் சாராம்சப் படுத்தப் படுகின்றன. இருவேறு எதிர்வினைகளின் சாத்தியங்களை சுட்டுவதற்கே இந்த உதாரணம் கையாளப்படுகிறதே தவிர, அதில் தொக்கியுள்ள சாராம்சவாத நோக்கை ஆதரிப்பதற்காக இல்லை. எல்லா குரோ இனத்தவர்களும் இப்படித்தான் என்றோ, எல்லா ஹோபி இனத்தவர்களும் இப்படித்தான் என்றோ கருத முடியாது. கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக மானுடவியல் சிந்தனை தான் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளாக பின்பற்றிய பொதுமைப்படுத்தும் சாராம்சவாத சிந்தனையை விமர்சித்து, சுயபரிசீலனை செய்துவருகிறது. இவ்வகையான பொதுமை குணாதிசயங்களை சாராம்சப்படுத்துவதை தங்களுடைய இனவரைவியல் எழுத்து செய்து வருகிறது என்பதை கடும் சுய விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
ஆனால் சாராம்சவாதம் பொதுப்புத்தியின் அங்கமாகவும் இருந்து வருகிறது. எல்லா மனிதர்களுமே அத்தகையை பார்வைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். மானுடவியல் தன் இனவரைவியல் பழக்கத்தை விமர்சித்துக் கொண்டாலும், பொதுப்புத்தி சார்ந்த பேச்சுக்கள் சுலபத்தில் மாறுவதில்லை. அதற்கு முக்கியக் காரணம், ஒரு குறிப்பிட மானுட தொகுதி, வாழும் பிரதேசத்தாலோ, மொழியாலோ, ஜாதியாலோ, மதத்தாலோ அடையாளமாகும் ஒரு தொகுதி ஒரு சில பழக்க, வழக்கங்களை பின்பற்றுவதும், சின்னங்கள், கலாசார அடையாளங்கள், கலாசார வெளிப்பாடுகள் ஆகியவற்றை பின்பற்றுவதும் ஆகும். உணவுப் பழக்க வழக்கங்கள், ஆடை அணியும் பழக்கங்கள் போன்றவை உருவாக்கும் பொது அடையாளம் மற்ற எல்லா சாராம்சப்படுத்தலுக்கும் வழி வகுக்கின்றன. அதனால் ஃபிரெஞ்சுக்காரர்கள் இப்படிப்பட்டவர்கள், ஜெர்மானியர்கள் இப்படிப்பட்டவர்கள் என்றெல்லாம் ஏராளமான பேச்சு வழக்குகள் உண்டு. தேசிய சாராம்சவாதம், தேசிய குணாதிசயங்கள் என்ற பெயரில் பெருகியது. இவையெல்லாமே இனவெறுப்பையும், வன்முறையையும் சுலபத்தில் தோற்றுவிக்கக் கூடியவை. ஜெர்மனியில் கேஸ் சேம்பர்களை தோற்றுவித்தன.
ஒளசேப்பச்சன் தன் பேச்சில் பல்வேறு ஜாதிகளை, மத அடையாளங்களை சாராம்சப்படுத்திப் பேசி கேலி செய்கிறார். இது ஒரு சமூக யதார்த்தம் என்பதில் ஐயமில்லை. அப்படித்தான் பலரும் பேசுவார்கள். எல்லா ஜாதியினரையும், சமூக அடையாளங்களையும் கிண்டல் செய்வது என்பது சகஜம்தான். ஆனால் அந்த கிண்டலுடன் இணைந்து மாப்பிள்ளை கலாசிகளின் கைவினை அறிவை, தொழில்நுட்ப ஆற்றலை மிகவும் பூடகமான ஒரு கலாசார சாராம்சமாக ஒளசேப்பச்சன் மாற்றுவதும், அதை ஆயிரம் ஆண்டு மரபின் தொடர்ச்சி என்பதும், அதை அவர்கள் சமூக கட்டுமானத்துடன் இணைப்பதும், அந்த கட்டுமானத்தை காப்பதற்கு ஒழுங்கு மீறும் ஒரு இளைஞனை கொன்றே விடலாம், மரண தண்டனை வழங்கலாம் என்பதும் சாராம்சவாத வன்முறையின் உச்சத்திற்கே மானுடவியல் தர்க்கத்தை கொண்டு செல்கிறது. சமகால மானுடவியல் கடுமையாக விமர்சிக்க விரும்பும் போக்கு இது. ஏன் ஒரு பாரம்பர்ய செய்முறை அறிவு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ரகசிய சொத்தாக இருக்க வேண்டும்? அதை ஏன் அவர்கள் பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியாது? கலாசிகளுடன் ஆசாரிகள் வேலை செய்தாலும் அவர்களுக்குள் ஏன் ஒருவர் திறன் மற்றவர் அறிய முடியாததாக இருக்க வேண்டும்? அல்லது பிறர் ஏன் அதை கற்க முடியாது? அதற்கும் சமூகம் அரசியல் ரீதியாக கட்டுப்படுத்தப்படுவதற்கும் என்ன தொடர்பு? ஏன் சமூகத்தின் ஒத்திசைவு, கூட்டு செயல்திறன், பாரம்பரிய அறிவுபேணல் ஒரு கொலையை நியாயப்படுத்த பயன்பட வேண்டும்?
இந்த கேள்வியை நாம் தொடர்ந்து செல்லும்போது அதிச்சியளிக்கும் இன்னொரு முரணை நாம் இந்தக் கதையில் காண முடியும். அது என்னவென்றால் மாப்பிள்ளைகளின் தொழில்திறன், சமூகக்கட்டுக்கோப்பு எல்லாம் கடந்த காலத்து நினைவா, அல்லது நிகழ்கால உண்மையா என்பதில் உருவாகும் முரண்தான் அது. ஒளசேப்பச்சன் அவர்கள் திறனை அறிந்துகொள்வது, அவர்கள் காயலில் மூழ்கிய ரயிலை எடுத்துத் தருவது 1989 ஆம் ஆண்டு. அப்போது அவர்கள் ஒரு பத்தேமாரியை கட்டி முடிக்கும் நிலையில் இருக்கிறார்கள். மேலும் 2014 ஆம் ஆண்டுகூட மற்றொரு பத்தேமாரியை கடலில் இறக்கியுள்ளார்கள். ஒளசேப்பச்சன் அவர்கள் கட்டுமானத் திறனின், பாரம்பரிய அறிவின் ரகசியமான சமூக கட்டுமானத்தையும், அதன் ஆதாரமாக விளங்கும் மாப்பிள்ளைகள் தலைவரின் சுல்தான் போன்ற இறையாண்மைப்பண்பையும், அவர் அளிக்கும் இறக்கமற்ற மரண தண்டனையையும் தெரிந்துகொள்வதும் 1989 ஆம் ஆண்டுதான். அதாவது கலாசி மாப்பிள்ளைகளின் சாராம்ச குணாதிசயம் நிகழ்காலத்தில் வெளிப்படும் ஒன்றுதான்.
ஏதோ ஒரு காரணத்தால் கதையாடல் அதை கடந்த காலத்து விஷயமாகக் கூறுகிறது. கதையின் துவக்கத்தில் பத்தேமாரி குறித்து கதைசொல்லி ஒளசேப்பச்சனிடம் கேட்கும்போது இப்போதும் அவற்றை கட்டுகிறார்களா என்று கேட்கிறான். இப்போதெல்லாம் அதிகம் கட்டுவதில்லை என்று சொல்லும் ஒளசேப்பச்சன் அதற்கான சில புறவயமான காரணங்களை சொல்கிறான். இப்போது அவற்றிற்கு மார்க்கெட் இல்லை என்பதால் வணிகரீதியாக கட்டுவதில்லை என்கிறான். ஒரு அரபு ஷேக் ஆசைப்பட்டு கேட்டதால் 2014இல் ஒரு சிறிய படகை கட்டினார்கள் என்கிறான். ஒரு கலைப்பொருளுக்கான மதிப்புதான் அதற்கு என்கிறான். ஏனெனில் முழுவதும் கைகளாலேயே கட்டப்படுவதால் அதிக காலம் பிடிக்கும் என்பதாகக் கூறுகிறான். இது முற்றிலும் புரிந்துகொள்ளக் கூடிய யாதார்த்தம். கப்பல்கட்ட பிரத்யேகமான ஸ்டீலும், படகுகள் கட்ட ஃபைபர் கிளாஸ் வரையும் பயன்பாட்டிற்கு வந்த பிறகு எதற்காக மரத்தாலான பத்தேமாரிகளை கையாலேயே செய்யப் போகிறார்கள்.
இந்த புறவயமான காரணங்களுடன் நிறுத்தாமல் ஒளசேப்பச்சன் ஒரு அகவயமான கலாசார காரணத்தைக் கூறுகிறார். அங்கேதான் கதை சூடுபிடிக்கிறது. கலாசி மாப்பிள்ளைகள் கப்பல் கட்டுவதற்குத் தேவையான முக்கியமான ஒன்று இன்றில்லை என்கிறான். பீடிகை போட்டு நிறுத்தி பின்னர் கூறுகிறார்.
பிறகு “மாப்பிளைகளின் சமூக அமைப்பு” என்றான். “அது மிகமிக உறுதியான நெறிகளால் ஆனது. தலைமையும் துணைத் தலைமையும் குட்டித்தலைமைகளும் வட்டாரத் தலைமையும் எல்லாம் உள்ள பெரிய அமைப்பு அது. குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாக அது உறுதியாகச் செயல்பட்டிருக்கிறது. அதை ஒரு தொழில் கூட்டமைப்பு என்று சொல்லலாம். ஒரு கல்விநிறுவனம் என்றும் சொல்லலாம். இஸ்லாமுக்குள் ஒரு துணைச்சாதி அல்லது துணைச்சமூகம் என்றும் சொல்லலாம். ஆனால் அது மெல்லமெல்ல இல்லாமலாகியது.
ஏன் அப்படி மாப்பிளைகளின் சமூக அமைப்பு இல்லாமல்போய்விட்டது என்று கதைசொல்லி கேட்டவுடன் பதினேழாம் நூற்றாண்டிலிருந்து துவங்கி பல்வேறு காரணங்களை சொல்கிறார். 1. போப்பூர் துறைமுகத்தின் அழிவு. போப்பூர் துறைமுகம் அழிந்து கோழிக்கோடு துறைமுகம் மேலெழுந்து வந்துவிட்டதாலும், சாலியார் ஆற்றில் அணைகள் கட்டப்பட்டுவிட்டதால் ஆழம் குறைந்துவிட்டதாலும் மாப்பிள்ளைகள் தொழில் நலிந்துவிட்டது. 2. போர்ச்சுகல்காரர்களும், பின்னர் பிரட்டிஷ்காரர்களும் மாப்பிள்ளைகளின் கடல் ஆதிக்கத்தை பதினேழாம் நூற்றாண்டுமுதல் ஒடுக்கிவிட்டார்கள். 3. பிரிட்டிஷாரின் ஆங்கிலக் கல்வி மாப்பிள்ளைகளின் மரபான கல்வியை ஒழித்துவிட்டது. 4. கிலாஃபத் இயக்கத்துடன் வந்த சீர்திருத்த இஸ்லாம், மாப்பிள்ளைகளின் தனித்தன்மையை அழித்து இஸ்லாம் மதத்தில் இணைத்துவிட்டது .
ஆனாலும் இத்தனை தாக்கங்களுக்குப் பிறகும் மழைவிட்டாலும் தூவானம் விடாததுபோல, ஆயிரம் ஆண்டுகால மரபு சற்றே எஞ்சியிருக்கிறது. அந்த எச்சத்தைதான் மாப்பிள்ளை கலாசிகள் ரயில்வே பெட்டியை காயலிலிருந்து வெளியே எடுத்ததிலும், சுல்தான் போன்ற அப்துல்லாவின் உணர்ச்சியற்றை இறையாண்மைக் கொலையிலும் ஒளசேப்பச்சன் கண்டு புல்லரித்தது. தூவானமே இப்படியென்றால் மழை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து வாசகர்களும் புல்லரிக்கலாம். கதைசொல்லி அதை ஒரு அனக்கிரானிசமாக, கால வழுவாகத்தான் பார்க்கிறான். வேறு யுகத்து சமாச்சாரம் என்கிறான். எப்படிப்பட்ட மரபுகளின் பொற்காலம் காணாமல் போய்விட்டது என்ற ஏக்கப் பெருமூச்சும் விடாமல் இருக்க முடியாதோ என்று தோன்றுகிறது.
ஜெயமோகனின் சமூக ஒழுங்கு குறித்த அரசு மையவாத சிந்தனைக்கு அவர் எழுத்துக்களில் ஒரு தொடர்ச்சி உண்டு. மறைந்து மறையாத கலாசி மாப்பிள்ளைகளின் தொழில்நுட்பத் திறன் இந்த கதையின் ஒரு உருவகம்தான். அவர் எழுத்தில் வேறு உருவகங்களையும் பார்க்கலாம். விஷ்ணுபுரத்தின் அதிகார அமைப்பின் குரூரத்தை, போலித்தனத்தை அழிக்க நினைக்கும் மகா காசியபனின் ஆட்கள் அவர்களை ஒத்த மனநிலையுள்ள சிற்பியை விஷ்ணுபுரத்தின் மையக் குறிப்பானான விண்ணை முட்டும் கோபுரத்தின் உச்சிக்கு செல்ல வழிவகுப்பார்கள். அவனுக்கு எந்த மூலக்கல்லை உருவினால் கோபுரம் தகர்ந்துபோகும் என்று தெரியும். ஆனால் அங்கே சென்ற சிற்பி கோபுரத்தின் மேல் மாடத்தின் தரையில் எறும்புகள் தாமரை வடிவில் கோலம் போடுவதை காண்பான். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வான். ஏன் என்ற கேள்வி மட்டும் ஒலிக்கும்.
மானுட இயக்கத்தின் சூட்சமமே பிரம்மாண்ட ஒத்திசைவுதான். சர்வாதிகாரமோ, ஏமாற்றோ ஆதிக்க மையங்கள் தொடர்ந்து வாழ்வை ஒருங்கிணைப்பதை தவிர்க்க முடியாது. அதற்காக சில கொலைகள், வன்முறைகளும் தேவைப்படத்தான் செய்யும். அந்த கொலைகளை தவிர்க்க நினைத்தால் ஒழுங்கின்மைதான் பெருகும். வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் என்கெளண்டரில் கொல்லப்பட்ட போதும் இதே கருத்தைத்தான் ஜெயமோகன் எழுதியிருந்தார். “பொது ஒழுங்கா? மனித உரிமை மீறலா?” என்று ஒரு இன்றியமையாத தேர்வு இருப்பதாகக் கூறியிருந்தார். பொது ஒழுங்கு தேவையென்றால், மனித உரிமைகளை மீறித்தான் ஆகவேண்டும். அதனால்தான் தேவை இருக்கிறதோ இல்லையோ, சிறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களையும் போக்கிரிகளையும் லாக்கப்பில் போட்டு மலமூத்திரம் வரும் வரை அடிப்பது போலீஸின் உளவியல் தேவையாக இருப்பதை ஒளசேப்பச்சன் சொல்கிறார். என்ன செய்வது யதார்த்தம், சார், யதார்த்தம். மனித மனதின் ரகசிய நாடகங்கள்தான் என்னே. ஓயினோ சாராயமோ குடித்து விட்டு படே குலாம் அலிகான் கேட்டால் சரியாகிவிடும். அழகாக ஒரு சூரிய அஸ்தமனம் இன்னம் ஆன்மாவின் ஆழத்தையே தொடும். ஒளசேப்பச்சனிடம் அப்துல்லா ஹாஷிம் மரணத்தின் ரகசியத்தை கூறும்போதும், அதை ஒளசேப்பச்சன் கதைசொல்லியிடம் கூறும்போதும் பின்னணியில் சூரியன் அஸ்தமிக்கிறது. அழகு முக்கியம்.
அழகும், இனக்கலப்பும்
பத்துலட்சம் காலடித் தடங்கள் கதையில் அழகு முழுமையாக விகசித்து நிற்பது ஹாஜி எம்.ஏ.அப்துல்லா சாகிப்பின் உருவத்தில்தான். முதல்முறை அவரை பார்த்தபோதே ஒளசேப்பச்சன் விரிவாக வர்ணித்துவிடுகிறார். “எம்.ஏ. அப்துல்லா சாகிப், என்ன ஒரு தோற்றம்! செக்கச்சிவந்த நிறம். அடர்த்தியான தாடி, அதில் ஓரிரு வெள்ளிநரை. சதுரமுகம், கூர்மையான அராபிய மூக்கு. வரைந்ததுபோன்ற புருவங்கள். மலர்ந்த அழகான கண்கள். தொப்பை கிடையாது. நிமிர்ந்த உயரமான உடல். அவருக்கு சமானமான அழகன் என இன்னொரு ஆணை நான் பார்த்ததே இல்லை. மம்மூட்டிக்கு ஒரு பத்து மார்க் குறைத்தால் சேர்த்துக்கொள்ளலாம்” இந்த வர்ணனை இரண்டாம் சந்திப்பின்போது மேலும் உறுதிப் படுகிறது. “அதே அழகான சிரிப்பு. துல்லியமான வெண்பற்கள். மெல்லிய பனிப்படலம் போன்ற கண்ணாடி.” பின்னர் கிருஷ்ணன் வந்துபோனதையெல்லாம் சொல்லி விளக்கும்போது ஒளசேப்பச்சன் முழுவதுமாக வசீகரிக்கப்பட்டு விடுகிறார். “அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு அராபிய தங்ஙள் போல, ஒரு சூஃபி போல, ஒரு சுல்தான்போல. மீண்டும் அதே எண்ணம், என்ன ஓர் அழகு.”
இப்படி அழகின் பரிபூரண வடிவமாக அப்துல்லா இருக்கிறார் என்றால் அதற்கு அவரது வம்சமும், அவருடைய சமூக அந்தஸ்த்தும் பொருத்தமாக இருக்கிறது. “நான் எம்.ஏ.அப்துல்லா சாகிப் பற்றி தோண்டத் தொடங்கினேன். அவருடைய அன்றாட வாழ்க்கை, அவருடைய பழக்க வழக்கங்கள், அவருடைய ரசனை. அபாரமான மனிதர் அவர். மிக ஆசாரமான முஸ்லீம். கூடவே மிகப்பெரிய கலை ரசிகர். ஷாஜகான் சக்கரவர்த்தி அப்படித்தான் இருந்திருப்பார். கஸல் இசையில் பித்து கொண்டவர். மாதம் ஒரு உஸ்தாதாவது வட இந்தியாவிலிருந்து வந்து அவருடைய மாளிகையில் பாடுவார். கவிதை, இலக்கியம் எல்லாவற்றிலும் ஈடுபாடு. தகழி சிவசங்கரப்பிள்ளையின் நண்பர். வைக்கம் முகமது பஷீர் இவரை ‘மிஸ்டர் மே’ என்றுதான் அழைத்திருந்தார்.எம்.டி.வாசுதேவன் நாயரை இவர் வாடா போடா என அழைப்பார்.”
இவர் அழகு இனக்கலப்பின் விளைவா? இருக்கலாம்; ஆனால் அது வெகுகாலம் முன்னால் அரேபியாவே “வெள்ளை ஆரிய இனமும்” “கறுப்பு காப்டிக்” இனமும் கலந்தபோது உருவான அழகாகத்தான் இருக்க வேண்டும். இந்தியாவின் மேற்குக் கடற்கரையை பொறுத்தவரை அவர் மாலிக் தினார் வம்சம். “ஹாஜி எம்.ஏ.அப்துல்லாவின் கட்டுப்பாட்டில்தான் அன்று கோழிக்கோடு இருந்தது. அவர் அரேபியாவில் இருந்து கோழிக்கோட்டுக்கு வந்த மாலிக் தினார் இப்னு அவர்களின் வம்சம் என்கிறார்கள். கோழிக்கோட்டின் மாபெரும் கடல்வீரர் குஞ்ஞாலி மரைக்காயரின் கொடிவழியை சேர்ந்தவர். மாலிக் தினார் இலவச ஆஸ்பத்திரி, மாலிக் தினார் பள்ளிக்கூடம் என்று ஏகப்பட்ட தர்மநிறுவனங்கள்.” அவருடைய மூக்கு மட்டும் அரேபியக் கூர்மையுடன் அமைந்தது அல்ல. அவர் முகத்தின் நரம்புகள் கூட. “நான் அவர் முகத்தை பார்த்திருந்தேன். அதே புன்னகை, அதே தெளிந்த விழிகள். எத்தனை உறுதியான நரம்புகள் என்ற வியப்பே எனக்கு ஏற்பட்டது. தலைமுறை தலைமுறையாக தீயும் ரத்தமும் கண்ணீரும் கண்டவர்களுக்கு உரியவை” ஒருவரது நரம்பில் பல தலைமுறை அனுபவங்கள் பதிவாகியிருக்கும் என்னுமளவு அவர் கலப்பற்ற அரேபிய ரத்தக்காரர் என்று நாம் புரிந்துகொள்ளலாம். மேற்குக்கடற்கரையில் நிகழ்ந்த இனக்கலவை பரிசோதனைக்கும் இவர் அழகுக்கும் தொடர்பு கிடையாது. ஏனெனில் அது ஒரு தகுதியான மனிதருக்கு வாய்த்திருக்கும் அழகு.
எங்கே அழகு பிரச்சினையாகிறது என்றால் அது பேரழகாக மத்தியதர, ஏழைக் குடும்பங்களில் அது திடீரென்று பளிச்சிடும் போதுதான். அழகின் விளைநிலமாகிய அரச அல்லது பணக்கார வர்க்கத்தில் தோன்றாமல் சாதாரண மத்தியதர குடும்பத்தில் தோன்றும்போதுதான் அதற்கான காரணம் இனக்கலவை என்று நினைக்க வேண்டியிருக்கிறது. தகுதியற்ற இடத்தில் தோன்றும் இந்த அழகு ஆபத்தானது. ராதாமணியின் புகைப்படத்தை போலீஸ் அனுப்பிய ஃபைலில் பார்த்துவுடன்தான் ஒளசேப்பச்சனுக்கு இது தோன்றுகிறது. “நடுத்தரச் சூழலில், ஏழைக்குடும்பத்தில் சிலசமயம் பேரழகிகள் பிறந்துவிடுவார்கள். நம்பவேமுடியாத அளவுக்கு பேரழகிகள். அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையே அமையமுடியாது. அவர்கள் மிகமிக ஆற்றல் கொண்ட எவருக்காவது ஆசைமனைவியாகவேண்டும், அவனுடைய சந்தேகத்தையும் சித்திரவதையையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்து மடியவேண்டும். இல்லாவிட்டால் செல்வாக்கானவர்களால் வேட்டையாடப்பட்டு சீரழியவேண்டும். முச்சந்தியில் கிடக்கும் செத்த எலிபோல. எல்லா காக்காயும் கொத்திக்கிழிக்கும்.” பாதுகாக்க சுல்தானின் வாள் இல்லாவிட்டால் அழகு மிக ஆபத்தானது.
மேற்குக்கடற்கரையில் இப்படி மெண்டல் விதிப்படி திடீரென பேரழகு பொறுத்தமில்லாத வர்க்கத்தில் ஏன் தோன்றுகிறது என்பதை விளக்கத்தான் ஒளசேப்பச்சன் ஒரு இனக்கலப்பு வரலாற்றை கூறுகிறார். “மேற்குக் கடற்கரையில் அரேபியர், போர்ச்சுக்கீசியர் வந்திருக்கிறார்கள். ஆகவே அற்புதமான கலவைகள் இங்கே நிகழ்ந்துள்ளன. இங்குள்ள எல்லா சாதிகளிலும் எல்லா மதங்களிலும் இனக்கலவை அடையாளங்கள் உண்டு. நீலக்கண்கள் சாதாரணம். கொங்கணிபிராமணர்கள், மாத்வ பிராமணர்கள், இஸ்லாமியர்கள், நாயர்கள், நம்பியார்கள் எல்லாருமே கலவைக்குருதி கொண்டவர்கள்தான். உண்மையில் சாதிப்படிநிலை கீழே செல்லச்செல்ல கலவை குறைந்து அழகும் குறையும்.” சாதிப்படிநிலையில் கீழே செல்லச்செல்ல கலவை குறையுமென்றால் கலப்பு குறையும் என்பதுதான். ஏன் இப்படி கலவை குறைய வேண்டும்? அதற்கும் ஒரு திறப்பு இருக்கிறது.
கிருஷ்ணன் வந்து ஹாஷிம் விஷயத்தை சொன்னவுடன், அப்துல்லா ஹாஷிம் வேலைக்காரன் அஸிஸை கூப்பிட்டு விசாரிக்கிறார். அவன் நடந்ததை சொல்கிறான். ஹாஷிம் அந்த பெண்ணை மணக்க விரும்புவதை சொல்கிறான். அப்போது அப்துல்லா அந்தப் பெண் என்ன சொல்கிறாள் என்று கேட்கிறார். ஆஸிம் அந்தப் பெண் கணவனுடன் வாழவே விரும்புகிறாள். ஹாஷிமை ஏற்கவில்லை என்று கூறுகிறான். பிறகுதான் ஹாஷிம் கொல்லப்படுகிறான்.
ஏன் அப்துல்லா அப்படிக் கேட்டார்? ஒருவேளை அந்தப் பெண்ணும் ஹாஷிமை விரும்புகிறாள் என்றால், அந்தப் பெண்ணுக்கு மணவிலக்கு செய்வித்து, மதமாற்றம் செய்து மகனுக்கு மணமுடித்திருப்பாரோ? சாத்தியம்போலத்தான் தெரிகிறது. ஏன், ராதாமணியே கூட தன்னை மணம் செய்துகொள்ளச் சொல்லி ஹாஷிம் அழுதபோது பதட்டத்தில் அவனை விரட்டி விட்டாளே தவிர, பின்னால் நினைத்துப் பார்க்கும்போது அவன் உண்மையான காதலை உணராமல் இருக்க முடியவில்லை. அவன் வெறும் உடல் இச்சைக்காக அவளை அணுகவில்லை. அப்துல்லாவின் மகனான ஹாஷிமும் அவர் அழகில் கொஞ்சமாவது இருப்பானில்லையா. அவரது பண்பும் அவனிடம் இருக்கிறது. இனக்கலவை நிகழ்வதால் பேரழகு உருவாகிறது என்றால், இனக்கலவையே அழகால்தான் நிகழும் என்றும் இந்த கதையின் தர்க்கத்தில் சுட்டப்படுகிறது. ஜாதிப்படிநிலையில் கீழே செல்லசெல்ல எல்லோரும் உழைப்பாளிகளாகவும், வறியவர்களாகவும்தானே இருப்பார்கள். அதனால் இனக்கலப்பில் விடுபட்டுப் போகிறார்கள் என்றுதான் கதையின் தர்க்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது. இனக்கலப்பு என்பது அழகும், அழகும் இணைந்து பேரழகு உருவாகும் சூத்திரம் என்றும் கூறலாம். உதாரணமாக அரேபிய ஷத்திரிய அழகும், பார்ப்பன அழகும்.
பார்ப்பனர்கள், நாயர்கள் போன்ற ஜாதிகளிலெல்லாம் கலப்பு நடந்துள்ளது என்று சொன்னால் அவர்கள்தானே கோபிக்க வேண்டும் என்று வேறு சிலர் நினைக்கிறார்கள். இனக்கலப்பில் என்ன இழிவு இருக்கிறது என்று தெரியவில்லை. அக்பர் ஜோதா பாயை மணந்தார் என்று படமெடுத்தால் யாராவது கோபிக்கிறார்களா என்ன? சமூக அந்துஸ்துள்ள கலப்பு கெளரவமானதுதான்.
ஒளசேப்பச்சன் கூறும் இந்த விளக்கம் இந்திய பொதுப்புத்தி சாதித்துள்ள, உலகளவில் நிறவெறி சாதித்துள்ள மிகப்பரவலான பொதுப்புத்தியின், அழகின் வரையறையின் வெளிப்பாடு என்பதை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது. எம்.ஜி.ஆரின், ஜெயலலிதாவின் தோலின் நிறத்தை வியந்து பேசும் எளிய மக்களை நானே அறிவேன். ரோஜாப்பூ மாதிரி இருக்கிறார், தங்கம் போல் ஜொலிக்கிறார் என்று மாய்ந்துபோவார்கள். கருப்பாக பிறந்த பெண்கள் கருமை நிறக் கண்ணனை நோக்கி பாடி, உன்னை ஏற்றுக்கொள்பவர்கள் என்னை ஏன் விலக்குகிறார்கள் என்று சினிமாவில் கதறுவார்கள். சிவந்த நிறமும், தோலின் மினுமினுப்பும், தகதகப்பும் பல தலைமுறைகள் சுகவாசத்தில் சாத்தியாமவது என்பதும் பொதுப்புத்திதான். இந்த வரையறையின்படி அழகானவர்களே அந்துஸ்துள்ளவர்கள்; அதிகாரத்தில் உள்ளவர்களாக இருப்பதும் இதனால் இயல்பாகிவிடும். அவர்களே பண்பாளர்களாகவும் இருப்பார்கள். சமூக ஏற்றத்தாழ்வை மறு உற்பத்தி செய்வதில், காட்சிரூபமாக பொதுமைப்படுத்துவதில், அழகு குறித்த கருத்தாக்கம் முக்கிய பங்கு வகிப்பது நாம் அறிந்துதான். பெருவாரியான மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதில், நினைவிலி மனதின் பகுதியாக்குவதில் அழகு குறித்த கருத்தாக்கம் பெற்றுள்ள வெற்றிக்கு இணையானது எதுவுமில்லை. எத்தனை மால்கம் எக்ஸ் தோன்றினாலும் சுலபத்தில் மாறக்கூடியதாகவும் இல்லை.
இலக்கியத்திலும் இந்த அழகு காலம் காலமாக நிலைநிறுத்தப்பட்டுதான் வந்துள்ளது. நா. பார்த்தசாரதியின் நாயகர்களின் பாதங்கள் ரோஜா நிறமாக இருப்பதைக் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அவரே பாதங்களை அப்படி பராமரிப்பார் என்றுகூட சொல்லக் கேள்வி. இலக்கியத்தின் பணி என்பது பொதுப்புத்தி மனநிலையை அனுசரித்து, வலுப்படுத்தி மகிழ்வதா, அல்லது அதன் வன்முறையிருலிருந்து சிந்தனையை விடுவிப்பதா என்ற கேள்வி முக்கியமானது. பொதுப்புத்தியின் விமர்சனமற்ற சாராம்சவாத எண்ணங்களை அனுசரித்து, நுட்பமாக உள்ளடக்கி சுவாரசியமான தத்துவார்த்த மூலாம் பூசி விற்பது ஒரு திறமைதான். அதுதான் இலக்கியமா என்பதை வாசகர்களின் விமர்சனப் பார்வைதான் முடிவு செய்யவேண்டும். பிரதியின் வாசிப்பின்பம் என்பது அதன் மலிவான கவர்ச்சியாக, ஆங்கிலத்தில் சொன்னால், seduction ஆக இருக்கக் கூடாது. அந்த இன்பம் விமர்சன சிந்தனையின் தகிப்பின் மூலம் உருவாக வேண்டும். படைப்பு எந்த விமர்சனத்தையும் கடந்து சிந்தனையை முன்னெடுக்க வேண்டும். அதற்கு நேரெதிராக பொதுப்புத்தியின் விபரீத எண்ணங்களை வலுப்படுத்தும் பத்துலட்சம் காலடிகளை பாசிசப் பிரதி என்று சொல்வதில் தவறில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.