சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்- 43 & 44

43 ) படி ஏறி வரும் சத்தம்

உலகம் ஆண்களாலும் பெண்களாலும் ஆனது. குழந்தைகள் இவர்களை அண்டியிருப்பவர்கள். ஆணும் பெண்ணும் காதல் செய்கிறார்கள், சண்டை போட்டுக்கொள்கிறார்கள். உலகம் சுழன்று கொண்டே இருக்கிறது. சூரியன் நிலையாக இருக்கிறது- இவ்வாறு கவிதை எழுத   ஆரம்பித்த சுதா மேற்கொண்டு எதுவும் எழுதத்  தோன்றாமல் பேனாவை நோட்டுப் புத்தகத்தில் வைத்து மேஜையில் வைத்தாள். இன்று ஞாயிற்றுக் கிழமை. சரண் வருவதாகப்  போன்  பண்ணியிருந்தான். அவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள்.

அவன் எப்போதும்   இப்படித்தான். சொன்ன நேரத்திற்கு வரமாட்டான். அவள் முதல் மாடியில் வசிக்கிறாள். அவன் படி ஏறி வரும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்தாள் . அவன் வரவில்லை. மீண்டும் கவிதை எழுத முனைந்தாள். ஒன்றுமே தோன்றவில்லை. சம்பந்தமில்லாமல் கடல் ,  நீர் வீழ்ச்சி, ஒட்டகம், உலகமயமாதல், ஆகிய வார்த்தைகள் தோன்றின. ‘ இந்தக் கவிதையைத் தூக்கி எறிவேன் ‘ என்பது இறுதி வாக்கியமாகத் தோன்றியது. அப்படியானால் முதலில் எழுதியிருந்த வாக்கியங்கள் அனைத்தையும் மாற்றவேண்டும் என்று தோன்றியது. திரும்பவும் படி ஏறி வரும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்தாள். அவன் வரவில்லை. அவனுக்குப்  போன்  பண்ணினாள். அவன் எடுக்கவில்லை. அவளுக்கு ஆத்திரமாக வந்தது. கவிதையும் வர மாட்டேனென்கிறது. அவனையும் காணோம்.

படி ஏறி வரும் சத்தம் கேட்டது. அவள் கதவைத்திறந்து பார்க்கவில்லை. அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தாள். சரண் ஒரு பெண்ணுடன் நின்றுகொண்டிருந்தான். சுதாவிற்கு அவள் யாரென்று தெரியவில்லை. சரண் அவளை ‘ வனஜா’ என்று அறிமுகப்படுத்தினான். படி ஏறி வரும் சத்தம் கேட்டது. அவள் கதவைத் திறந்தாள். அவன் வரவில்லை. ‘ எல்லாம் இந்தக் கவிதையினால் வந்தது’ என்று சபித்துக்கொண்டே கவிதை எழுத ஆரம்பித்த நிலையில் இருந்த அந்தப் பேப்பரை கிழித்துப்போட்டாள். சரண் போனை எடுக்கவே இல்லை. படி ஏறி வரும் சத்தம் அவளுக்குப் பல முறை கேட்டுக்கொண்டே இருந்தது. அவன் வரவே இல்லை

44 ) ஜன்னல்

ரங்கராஜன் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நடுத்தர வயதுப் பெண் அவர் வீட்டைக் கடந்து சென்றதை பார்த்தார். இந்தக் கோணத்தில் அவளுடைய இடுப்பும் பக்கவாட்டுத் தோற்றமும் தெரியும். தெரு ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை. மொத்தமாக அவள்  ஆறு முறை சென்று வருவாள். தெரு ஆரம்பத்தில் அவள் வீடு இருப்பது அவருக்குத் தெரியும். நடைப்பயிற்சி என்றாலும் வேகமாக நடக்க மாட்டாள். சாதாரணமாகத்தான் நடப்பாள். ஆக ரங்கராஜன் அவளை  ஆறு முறை பார்ப்பார். அவர் ஜன்னல் வழியாக நீண்ட நாட்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ரங்கராஜன் அவள் மீது காமத்தை வளர்த்துக்கொண்டிருந்தார்..

ரங்கராஜனின் மனைவி தற்போது அமெரிக்காவில் மகளுடன்  இருக்கிறாள். இரண்டாவது முறை. மூன்றாவது முறை நான்காவது முறை. ஐந்தாவது முறை. கடைசி முறை அதாவது ஆறாவது முறை என்பது தெரு ஆரம்பத்தில் உள்ள அவள் வீட்டிற்குத் திரும்பும் முறை. அவருடைய  வீட்டைக் கடக்கும்போது அவள் சற்று நின்று அவருடைய வீட்டுப்படியில் ஏறினாள்

அதைக்  கண்டு அவருக்குப்  படபடப்பு ஏற்பட்டது.. அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டது. பயத்துடன் கதவைத் திறந்தார். அவள் நின்றுகொண்டிருந்தாள். குடிக்கத்  தண்ணீர் கேட்டாள். அவர் உள்ளை ஓடிப் போய் தண்ணீர் எடுத்து வந்தார். அப்போது அவள் சோபாவில் உட்கார்ந்திருந்தாள். ‘ ஆத்துக்காரி எப்போ அமெரிக்காவிலிருந்து வருவா ‘ என்று கேட்டாள். ‘ஒரு மாதம்  ஆகும்’ என்று அவர் பதில் சொன்னார். பிறகு அவள் கிளம்பிவிட்டாள்.

அடுத்த நாள் அவள் வரும் நேரம். ஜன்னலோரம் உட்காருவதா வேண்டாமா என்று. யோசித்தார். வழக்கம்போல் உட்கார்ந்தார். வழக்கம்போல் அவள் நடைப்பயிற்சி சென்றாள். வழக்கம்போல் அவள் ஜன்னல் பக்கம் திரும்பவில்லை.