எஸ்பிபி- காதலிக்க வந்த கலைஞன் -5

கடந்த கட்டுரையில் எண்பதுகள் எழுபதுகளில் பிற இசையமைப்பாளர்கள் இசையில் எஸ்பிபி பாடிய பாடல்களைப் பற்றிப் பார்த்தோம். இடமின்மை காரணமாக ஒரு முக்கியமான பாடலைப் பற்றிப் பார்க்கவில்லை. முதன்முதலில் அந்தப் பாடலை நான் கேட்டது இருபது வருடங்களுக்கு முன்பு இருக்கும். மதுவந்தி என்ற ஒரு ராகம் பற்றி படித்த ஒரு தகவலில் இந்தப் பாடல் மதுவந்தி ராகத்தில் அமைந்த அருமையான பாடல் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஹிந்துஸ்தானி ராகமான இது சிறு மாறுதல்களுடன் கர்னாடக இசையில் தர்மவதி என இந்த அழைக்கப்படுகிறது. அப்போது இணையம், யூட்யூபெல்லாம் ரொம்ப பிரபலம் கிடையாது. பல ஆடியோ சி.டி கடைகளில் ஏறி இறங்கி ஒரு சி.டி கடையில் எஸ்பிபி ஹிட்ஸ் என்ற ஒரு சி.டியில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது. அதைக் கேட்ட போது ஒரு போதை போல மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது. அந்தப் படத்தின் பெயரும் அப்பாடலின் முதல் வரிதான். அது நந்தா என் நிலா (1977) படத்தில் அமைந்த ‘நந்தா நீ என் நிலா’ என்ற பாடல் . பாடலின் இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி. மலையாளத்தின் முக்கிய இசையமைப்பாளர்களுள் ஒருவர். சுவாமி என மரியாதையாக அழைக்கப்படுபவர்.

நந்தா நீ என் நிலா பாடல் கஜல் பாணியில் அமைந்திருக்கும். நீளமான பல்லவி. பாம்பு போல் வளைந்து நெளியும். எனக்குத் தெரிந்து சரணத்தை விடப் பெரிய பல்லவி இருப்பது இப்பாடலில்தான். அக்காலத்தில் அவ்வளவு பிரபலமாக இல்லாமல் வெகுசிலரால் மட்டுமே சிலாகிக்கப் பட்டுவந்த இப்பாடல் இப்போது சமூக ஊடகங்கள், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் மிகப் புகழ்பெற்றிருக்கிறது. பிற்காலத்தில் இதே ராகத்தில் இளம்சோலை பூத்ததா , மீண்டும் மீண்டும் வா எனப் புகழ்பெற்ற பாடல்களை எஸ்பிபி பாடுவதற்கு அச்சாரமாக இப்பாடல் அமைந்திருந்தது. வேறு பாடகர்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குச் சங்கதிகளும் உணர்ச்சி பாவமும் பின்னிப் பிணைந்திருக்கும். /விழி …மீனாடும் விழி/ மொழி தேனாடும் மொழி/ குழல் பூவாடும் குழல்/எழில் நீயாடும் எழில்/ எனத் தமிழ் வார்த்தைகளும் துள்ளி விளையாடும். பாடலை எழுதியவர் பழனிச்சாமி. எஸ்பிபி மிகத்தெளிவாக அவற்றை உச்சரித்திருப்பார். தமிழ்ப்பாடல்களில் எஸ்பிபியின் மிகச்சிறந்த பாடல்கள் பட்டியலில் கட்டாயம் இடம்பெறும் இப்பாடல்.

1980 இல் புயலாக நுழைந்தார் அந்த இசையமைப்பாளர். இசையமைப்பாளர் மட்டுமல்ல பாடலாசிரியர், இயக்குநர், நடிகரும் கூட. அஷ்டாவதானி எனச் சொன்னால் அக்காலத்தில் பானுமதி நினைவுக்கு வருவார். இவர்காலத்தில் இவர்தான். அவர்தான் டி.ராஜேந்தர். இக்காலத்து மக்களுக்கு டீ.ஆர் என்றால் டண்டண்டணக்கா போன்ற பாடல்கள்தான் நினைவுக்கு வரும்.ஆனால் ஒருகாலத்தில் அபாரமான சில பாடல்களைத் தந்தவர் அவர். அதில் எஸ்பிபியின் பங்கு மிக மிக அதிகம்.

1980இல் வெளிவந்த ஒரு தலை ராகம் திரைப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்தது. அப்படத்தில் இரண்டு அருமையான பாடல்களை எஸ்பிபி பாடியிருப்பார். காபி ராகத்தில் அமைந்த’ இது குழந்தை பாடும் தாலாட்டு’ என்னும் பாடல் அமர்க்களமாக இருக்கும். தாலாட்டு என்று எஸ்பிபி உச்சரிப்பதைக் கேளுங்கள். என்ன ஒரு இனிமை!! மெல்லிய சோகத்தை , பிரிவின் துயரைத் தன் குரல்களில் தோய்த்து இப்பாடலுக்கு உயிரூட்டி இருப்பார் எஸ்பிபி. சித்தார் ,தபேலா என இரண்டே கருவிகளை வைத்து பின்னணி அமைக்கப் பட்டிருக்கும்.

இதற்கு நேர்மாறாக துள்ளலான ஒரு பாடல் ‘ வாசமில்லா மலரிது’ என்ற பாடல். மேடைக் கச்சேரிகளில் அந்நாட்களில் மைக்குக்கு அடுத்துத் தவறாமல் இடம்பெறக் கூடியது இப்பாடல். படத்திலும் மேடைக் கச்சேரி பாடலாக அந்தக் கால ஸ்டெப் கட்டிங்க் முடியுடன் பெல்பாட்டம் உடையுடன் சங்கர் பாடுவார். வாசமில்லா மலரிது என ஒரு சிரிப்பு சிரிப்பார் எஸ்பிபி. இளமையும் கிண்டலும் கேலியும் கலந்து பாடலை உற்சாகமாகப் பாடியிருப்பார். இது குழந்தை பாடும் தாலாட்டு சிதார், தபேலா என்றால் இதில் கித்தாரும் ட்ரம்ஸும் அதிரும்.

தொடர்ந்து டி.ராஜேந்தருக்கு ஏராளமான நல்ல பாடல்கள் பாடியிருக்கிறார். வசந்தம் பாடி வர (ரயில் பயணங்களில் 1981), தஞ்சாவூரு மேளம் ( தங்கைக்கோர் கீதம் 1983) , இந்திர லோகத்து சுந்தரி ( உயிருள்ளவரை உஷா 1983) போன்ற நல்ல பாடல்கள் இருந்தாலும் அவற்றை விடவும் மிகச் சிறப்பான சில பாடல்களையும் பாடியிருக்கிறார். அவற்றுள் ஒன்று ராகம் தேடும் பல்லவி (1982) திரைப்படத்தில் வரும் ‘மூங்கிலிலே பாட்டிசைக்கும்’ என்னும் பாடல் . நிதானமான மெட்டு..எஸ்பிபியின் குரல் வளத்தையும் ஜாலத்தையும் முதலீடாக வைத்து அமைத்த பாடல் . பாடல் முழுதும் சுகமாக வருடும் ஹா ஹா ஹோ ஹோ என எஸ்பிபியின் தென்றல் குரல்.  ‘நீரலைப் போலவே நீல விழிக் கோலங்கள் நெஞ்சை நீராட்டவே நெருடித் தாலாட்டவே என் கற்பனைக்கு விதை தூவினாள்’ போன்ற வரிகளை குழைந்து நெளிந்து இழைந்து இழைந்து நெய்திருப்பார்.

பூக்களைப் பறிக்காதீர்கள் (1986) என்ற திரைப்படம். டி.ஆர் இசை மட்டும் அமைத்தது. அதில் ஒரு பாடல் ‘ மாலை நம்மை வாட்டுது’ . மெல்லிய விரகதாபம் ததும்பும் குரலில் இப்பாடலைப் பாடியிருப்பார் எஸ்பிபி.

டி.ராஜேந்தர் இசையமைத்த திரைப்படங்களிலேயே எஸ்பிபி பாடிய பாடல்களிலேயே ஆகச்சிறந்த பாடல்களில் இரண்டு மைதிலி  என்னை காதலி (1986)  திரைப்படத்தில் அமைந்தவை.

 முதலாவது பாடல் அதிகாலை நேரத்தில் பாடும் பூபாள ராகத்திற்கு மிகவும் நெருங்கிய சொந்தமான பௌளி என்ற ராகத்தில் அமைந்த பாடல். மிக அரிதாகவே திரை இசையில் பாடப்படும் ராகம். ஏற்கனவே சங்கராபரணம் (1979) திரைப்படத்தில் அதிகாலை சாதகம் செய்யும் பாடலாக ஜானகியுடன் சேர்ந்து இந்த ராகத்தில் ஸ்வரங்களைப் பாடிப் பிரமாதப் படுத்தி இருப்பார் எஸ்பிபி. அந்த  அனுபவத்தில் மிகப் பிரமாதமாக பாடி சிறப்பித்த ஒரு பாடல் ‘ஒரு பொன் மானை நான் காண’  என்ற பாடல். பாடலில் தொடக்கத்தில் வரும் ஆலாபனையில் இந்த ராகத்தை அதிகாலை நேரத்து அழகாக அற்புதமாக பாடி இருப்பார் .’சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம் அரங்கேற அதுதானே உன் கன்னம்// மேகத்தை அழைத்திட வானத்தில் சுயம்வரம் நடத்திடும் வானவில் உன் வண்ணம்// என்பது போன்ற வரிகளை அனுபவித்துப் பாடியிருப்பார்.

அதே திரைப்படத்தின் இன்னொரு புகழ்பெற்ற பாடல் நானும் உந்தன் உறவை என்ற பாடல்.  சோகத்தை பிழிந்து தரக்கூடிய சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த பாடல் இது பொன்மானை நான் காண பாட்டை போலவே ஆலாபனை சுரங்கள் என இந்தப் பாடலிலும் ஒரு மினி இசை கச்சேரியை அடித்திருப்பார் எஸ்பிபி.

 இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும் பிற இசையமைப்பாளர்களை விட டி ராஜேந்தர் பாடல்களுக்கு  எஸ்பிபி பாடியதைப் பற்றி அதிகமாக கூறியதுபோல் சிலருக்கு தோன்றலாம். அதற்கு ஒரு  காரணம் இருக்கிறது. டி ராஜேந்தர் அமைத்த பாடல்களைப் பற்றி மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் சொல்ல வேண்டுமென்றால் பாடல்களில் நன்கு இசை அமைத்திருந்தாலும்  சில இடங்களில் வரிகளில் மெட்டுக்கள்  இல்லாமல் வெறும் வசனம் வாசிப்பது போல் தோன்றும். பிரமாதமான பாடல் வரிகளாக இருந்தாலும் எஸ்பிபி அவற்றுக்கு உயிர் கொடுக்காமல் இருந்திருந்தால் அவை  முழுமை அடைந்து இருக்காது. இப்பாடல்களைப் பிறர் பாடும்போது வசனத்தை அல்லது ஒரு கவிதையை வாசிப்பது போல்தான் இருக்கும். அவற்றைத் தன் குரல் வளத்தால் பிரமாதமான பாடல்களாக்கியவர் எஸ்பிபி.