ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் இரவுக்கு அழகு நிலவுதான். ஆயிரம் பாடகர்கள் இருந்தாலும் எஸ்பிபாலசுப்பிரமணியம் இருந்தால்தான் அந்த கச்சேரி மேடை நிறையும். சரீரத்திலும் சாரீரத்திலும் வஞ்சகமில்லாதவர்.
‘ஹோட்டல் ரம்பா’ என்ற தமிழ்த்திரைப்படத்தில் ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு ?’ என்ற பாடல்தான் அவர் முதலில் தமிழுக்காகப் பாடியது. எம் எஸ் வி இசையமைப்பில். படம் வரவே இல்லை.பாடலும் நம்மிடம் இல்லை. 1969 இல் வெளிவந்த இயற்கை என்னும் இளைய கன்னி (சாந்தி நிலையம்) , ஆயிரம் நிலவே வா (அடிமைப்பெண்) ஆகிய அவரது முதல் இரண்டு பாடல்கள் அவரை உடனடி நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்தின.
1966 இல் ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ராமண்ணா என்ற தெலுங்குப் படத்தின் மூலம் தனது இசைப்பயணத்தைத் தொடங்கினார் எஸ்பிபி. தமிழில் அவர் வரவு எழுபதுகளின் தொடக்கமாக அமைகிறது. சிவாஜி, எம் ஜி ஆர் ஆகியோருக்கு வழக்கமாகக் கம்பீரக் குரலில் பாடிவரும் டி எம் எஸ் குரலுக்குப் பதிலாக அப்போது பிரபலமாகி வந்த ஹிந்திப்பாடல் அலைகளின் தாக்கத்தில் மென்மையாகவும் , சிருங்காரமாகவும், காதல் உணர்வுடன் ரசித்துப் பாடும் பாணியிலான ஒரு பாடகனின் தேவையை எஸ்பிபி பூர்த்தி செய்தார். பி.பி ஸ்ரீனிவாஸ் இது போன்ற மென்மையான பாடல்களைப் பாடிவந்தார். ஆனால் அவரை விட இளமைக்குறும்பு, உற்சாகம் ஆகிய குணங்கள் அதிகம் அமையப்பெற்று ஒரு புதுப் பாணியை அமைத்துக் கொண்டார் ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம். (பிறப்பு ஜூன் 4 1946.)
நெல்லூரைச் சேர்ந்த அவரது தந்தை சாம்பமூர்த்தி ஹரிகதை வித்வான். தாய் சகுந்தலா அம்மாள் சென்ற வருடம் (2019) காலமானார்.
பாலுவின் தமிழ்ப்படத் திரை வாழ்க்கையை மூன்றாகப் பிரிக்கலாம்.
1.எம் எஸ்வி , கே.வி. மகாதேவன் , விஜயபாஸ்கர், சங்கர் கணேஷ் போன்ற இசையமைப்பாளர்களோடு பணியாற்றிய எழுபதுகள்
2.இசைஞானி இளையராஜா கோலோச்சிய எண்பதுகள்
3.ஏ.ஆர்.ரஹ்மான் , வித்யாசாகர் போன்றோர் தடம்பதித்த தொண்ணூறுகள் தொடங்கி இன்று வரை.
ஆரம்பத்தில் சொன்னது போல் கம்பீரமான டி. எம்.எஸ் பாணியிலிருந்து வித்தியாசமான மென்மையாகவும் , மெல்லிய சோகமான பி பி ஸ்ரீனிவாஸ் பாணியிலிருந்து மாறுபாடாக உற்சாக இளமைத் துள்ளலாகவும் தனது பாணியினையும் இருப்பினையும் உறுதி செய்து கொண்டார்.
அதற்கு ஏற்றாற்போல் நடிகர்களின் திரைவாழ்வுகளிலும் மாற்றங்கள் வந்தன. எம் ஜி ஆர் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலை நோக்கிச் செல்ல சிவாஜி கணேசன் தனது உச்சத்திலிருந்து மெதுவாகக் கீழே இறங்கிக் கொண்டிருந்தார். விஜயகுமார்,.முத்துராமன், ஜெய்கணேஷ், சிவக்குமார் போன்ற நடிகர்கள் மென்மையான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தனர்.
ஆரம்பத்தில் ”ஆயிரம் நிலவே வா” (அடிமைப்பெண் 1969), ”அவள் ஒரு நவரச நாடகம்” (உலகம் சுற்றும் வாலிபன் 1973) ’’ பாடும்போது நான் தென்றல் காற்று’’ ( நேற்று இன்று நாளை 1974) என எம்ஜிஆருக்கும் ,பொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி 1971) இரண்டில் ஒன்று ( ராஜா 1972) என சிவாஜிக்கும் அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார். அதன்பின் விஜயகுமார், ஜெய்கணேஷ் போன்ற நடிகர்களுக்காக மகத்தான சில பாடல்களைப் பாடியுள்ளார்.
விஜயபாஸ்கர் இசையில் சம்சாரம் என்பது வீணை (மயங்குகிறாள் ஒரு மாது- 1975) சங்கர் கணேஷ் இசையில் அவள் ஒரு மேனகை (நட்சத்திரம்- 1980) எனப் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பாடியிருக்கிறார் .
திரை இசைத் திலகம் கேவி மகாதேவன் இசையில் வந்த சங்கராபரணம் (1979) அவருக்கு முதல் தேசிய விருதைத் தந்தது. அப்பாடல்கள் செவ்வியல் பாணியிலும் தன்னால் பாட முடியும் என அவர் நிரூபித்ததற்கு சாட்சி.
என்றாலும்…..
எழுபதுகளில் பாலசுப்ரமணியத்தின் முழு திறமையையும் வெளிக்கொண்டு வந்தது எம்எஸ் விஸ்வநாதனின் இசை என்றால் அது மிகையாகாது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற பாணியில் இருந்து வெளியே வந்து புதுப் பாணியிலே மெட்டுக்களை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு பாடகர்களின் குரல் வளத்தை மிகவும் உறுதியாக நம்பி ஏற்ற இறக்கங்கள் எனப்படும் சங்கதிகள் கமகங்கள் ஆகியற்றை மிகவும் இனிமையாக அமைத்தது எம் எஸ் வி பாணி. கண்ணதாசன் போன்ற கவிஞர்களின் தத்துவ வரிகளை சிவாஜி கணேசன் போன்ற நடிகர்களின் பாடுவது அல்லது வாலியின் வரிகளில் எம்ஜிஆரின் ஆளுமையை புகழ்ந்து பாடுவது ஆகிய இரண்டை முக்கியமான பணியாக வைத்திருந்த டிஎம்எஸ் பாணியை விட்டு வெளியே வந்த எம்எஸ் விஸ்வநாதனின் ஒரு புது பாணிக்கு ஆணிவேராக இருந்தவர் எஸ் பி பாலசுப்பிரமணியம்.
எழுபதுகளில் எம்எஸ் விஸ்வநாதனின் இசை அமைப்பில் உச்சத்தைத் தொட்டார் எஸ் பி பாலசுப்பிரமணியம்.
அதற்கு ஏற்றவாறு கமலஹாசன் என்னும் ஒரு மகா கலைஞனும் பாலச்சந்தர் என்னும் ஒரு திறமையான இயக்குனரும் சேர்ந்துகொள்ள அற்புதமான பல படைப்புகள் வெளிவந்தன அவற்றின் இசை அச்சாணியாக இருந்தவர் பாலு.
அவள் ஒரு தொடர்கதை(1974) திரைப்படத்தில் வரும் கடவுள் அமைத்து வைத்த மேடை என்ற பாடல் ஒரு கிளாசிக். காதல் தோல்வியின் பின்னணியில் ஒரு கலைஞன் பாடும் பாடலாக அமைந்த இந்தப் பாடலில் பின்புலமாக சதன் என்ற கலைஞன் தனது மிமிக்கிரி திறமையால் விலங்குகள் பறவைகள் ஏரோபிளேன் போன்ற ஒலிகளை அற்புதமாக எழுப்பி இருப்பார்.
அவற்றையெல்லாம் தாண்டி எஸ் பி பாலசுப்ரமணியம் தன்னுடைய பாவம் என்னும் உணர்ச்சிப் பெருக்கால் அந்தப் பாடலை ஒரு வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றிருப்பார்.
இப்படத்தின் தெலுங்கு வடிவில் இப்பாடலை எஸ் பி பியே மிமிக்ரி குரல்கள் எழுப்பிப் பாடியிருப்பதை யூட்ட்யூப்பில் கேட்கக் கிடைக்கிறது. பார்த்தால் அசந்து விடுவோம்.
அதே எம்எஸ்வி ,கமல் ,பாலசந்தர், எஸ்பிபி கூட்டணி. படம் அவர்கள் (1977). அதிலே அதே காதல் தோல்வி, அதே சுஜாதா, கமல். ஆனால் அதைவிட ஒரு மிகச் சிறப்பான ஒரு பாடல் ‘ இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீயேன் மயங்குகிறாய்’ என்ற ஒரு அற்புதமான பாடலை அனுபவித்து ரசனையுடன் பாடியிருப்பார் பாலு.
எம் எஸ் வி இசையில் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களில் சிறப்புகள் இரண்டு.
ஒன்று அவர் தன்னுடைய பாவத்தினை அதாவது உணர்ச்சி பெருக்கால் பாடியது இரண்டாவது அந்த மெட்டுக்களில் சங்கதிகள் எனப்படும் ஏற்ற இறக்கங்களை வளைந்து நெளிந்து குழைந்து பாடிய மழலைப் பட்டாளம் (1980) என்ற திரைப்படத்தில் வரும் கௌரி மனோஹரியை கண்டேன் என்ற பாடலை ஒருமுறை கேட்டுப்பாருங்கள் ஒவ்வொரு கௌரிமனோகரியையும் ஒவ்வொரு மாதிரி பாடியிருப்பார் .’ மலைமீது அடித்தாலும் காற்று .அது கடல் மீது தவறினாலும் காற்று .வயதோடு வந்தாலும் காதல்! அது வயதாகி வந்தாலும் காதல்!’ என்று ஒவ்வொரு இடத்திலும் காற்றும் காதலும் ஒவ்வொரு விதமாக ஏறி இறங்கும் அந்த பாணிதான் எஸ் பி பாலசுப்ரமணியம் மேஜிக்.
நினைத்தாலே இனிக்கும் (1979) திரைப்படத்தில் வரும் பாரதி கண்ணம்மா என்ற பாடல் நிழல் நிஜமாகிறது (1978) படத்தின் கம்பன் ஏமாந்தான் என்ற பாடல் மற்றும் இலக்கணம் மாறுமோ என்ற பாடல் ஆகியவை ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காது.
பட்டினப்பிரவேசம் திரைப்படத்தில் வான் நிலா நிலா அல்ல என்ற பாடல் தில்லு முல்லு ( 1981) திரைப்படத்தில் ராகங்கள் பதினாறு என்ற பாடல் ‘வறுமையின் நிறம் சிகப்பு (1980) படத்தில் வரும் ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ ‘தீர்த்தக்கரையினிலே’ ‘ நல்லதோர் வீணை செய்தே’ என்ற ஏராளமான பாடல்களை மறக்கமுடியாத பாடல்களாக அமைத்திருக்கின்றன. 47 நாட்கள் (1981) என்ற திரைப்படத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் மான் கண்ட சொர்க்கங்கள் என்ற பாடலை பாடியிருப்பார் அந்தப் பாடலை கேட்பவர்களுக்கு தெரியும் கிளாசிக் என்றால் என்னவென்று. மீக நீண்ட பாடல். அதைத் தன் குரல் ஒன்றாலேயே தூண்போல் நிலை நிறுத்துகிறார் பாலு.
இதே எம்எஸ்வி -கமல்- எஸ்பிபி கூட்டணியில் இன்னொரு மகத்தான பாடல் சிம்லா ஸ்பெஷல் (1982) திரைப்படத்தில் வரும்’ உனக்கென்ன மேலே நின்றாய் ‘என்ற பாடல்.
ஒரு பாடல் எந்த கட்டத்தில் இருக்கிறது அந்தப் பாடலைப் பாடும் நாயகன் எந்த உணர்வுடன் அந்தப் பாடலைப் பாடுகிறான் என்பதை முழுமையாக உள்வாங்கி அந்த உணர்வை நூற்றுக்கு நூறு சதவிதம் வெளிப்படுத்தும் ஆற்றல் எஸ் பி பாலசுப்ரமணியம் அளவுக்கு யாருக்குமே இருந்ததில்லை அவர் முறையாக இசை படித்ததில்லை என்றாலும் இந்த உணர்வு பூர்வமாக பாடும் பணியினால் அவர் மிகப் பெரும் வெற்றி பெற்றவராக அமைந்தார்.
எஸ்பிபியின் இசைவாழ்வின் அடுத்த கட்டத்தில் அவரது நண்பர் மற்றும் அவரது இசைக்குழுவில் இருந்த இளையராஜா தமிழ்த்திரை உலகிற்கு 1976 இல் அறிமுகமாகிறார்.
– அடுத்த பாகத்தில்…