உலகம் முழுவதும் தமிழர்களின் ராஜ்ஜியம் கொடிகட்டி பறந்ததற்கான பல புராணக் கதைகள் தென்பட்டாலும் அதை உண்மை படுத்துவதற்காக ஆங்காங்கே பல தொல்லியியல் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன. பண்டைய தமிழர்களின் கலாச்சாரம் பெரும்பாலும் இயற்கையை சார்ந்திருந்து. காடு, மலை, நதிகளின் மூலமாக சங்ககால தமிழ் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளை ஈடுசெய்ததையொட்டி இந்த ஆராய்ச்சிகள் பெரும்பாலும் நதிக்கரைகளுக்கு அருகில் மேற்கொள்ளப்படுகின்றனர். சிந்துநிதிக்கரை, கங்கை நதிக்கரை நாகரீகத்திற்குப் பின், ஒரு செழுமையான நாகரீக வரலாறு தமிழகத்தில் வேறெங்கும் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய், சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகைகரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.

இந்தியப் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் அகழாய்வுப் பிரிவு, சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் 2018ஆம் ஆண்டுவரை 4 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி முன்னெடுத்துவருகிறது. கி.அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொண்மையான மனிதர்களின் நாகரீகம், கலாச்சாரம், பழக்கவழக்கங்களை கொண்ட அரியவகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன், அவர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், சுடுமண் சிற்பம், சுடுமண் மனித முகம், தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு, சுடுமண் காதணி உள்ளிட்ட 14,000 அதிகமான தொண்மை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்துக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பொருட்களிலிருந்து (முதலாவது மாதிரியின்) காலம் 2,160 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ பழமையானதாக இருக்கும் என்றும், இரண்டாவது மாதிரியின் காலம், 2,200 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ பழமையானதாக இருக்கும் என்றும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாக கி.அமர்நாத் ராமகிருஷ்ணன் குழு தெரிவித்தது.

இந்நிலையில் 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த ஜுன் 13ம் தேதி 5 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்றுவருகிறது. மத்திய அரசின் நிலையான பொருளாதார வசதிகளிலின்றி ஆரமிக்கப்பட்ட இந்த ஆய்வில் 5ஆம் கட்ட ஆராய்ச்சிக்கு நகர்ந்திருப்பது பெரும் வியப்பே! தமிழகளின் நாகரீகத்தை உலகறிய செய்யும் நோக்கில் முழுக்க முழுக்க கடும் உழைப்பில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வில் கடந்த 25ஆம் தேதி தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புகளில் உள்ள இரட்டைச் சுவர்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் மேலும் ஒரு தொன்மையான சுவர் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மிகவும் தொன்மையான சுடுமண்ணாலான பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள், சுடுமண் பானைகள், பாசிமணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பழங்கால பொருட்களும் கிடைத்துள்ளன. முதன் முறையாக ஆய்வில் ஜிபிஎஸ் (GPS) கருவி பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அகழ்வாரய்ச்சி பணிகளை பார்வையிட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுவந்தது. மேலும் பொதுமக்களும், ஆராய்ச்சியில் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களைப் பார்த்து வருகின்றனர்..

தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும். சங்ககாலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியமைத்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்கள் மூலம் தமிழர்கள் கட்டிட கலை மக்களின் செழுமையான வாழ்க்கை முறை கிட்டத்தட்ட 2200 அண்டுகளுக்கு முன்பே ஒரு முன்னேறிய நகர நாகரீகம் இருந்ததற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் இந்த ஆய்வில் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் சுடுமண் முத்திரை கிடைத்தது இதுவே முதல்முறை.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் ‘கீழடி நம் தாய் மடி’ என்ற மைக்கரு கொண்டு பழந்தமிழர்களின் வாழ்க்கைமுறையை உலகறியச் செய்தது குறிப்பிடத்தக்கது.