கடந்த மார்ச் மாதம் நடந்த குரூப் 1 தேர்வில், 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. முன்னதாக, கேட்கப்பட்ட 200 கேள்விகளுக்குச் சரியான விடைகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியான மாதிரி விடைத்தாளிலிருந்த 18 விடைகள் தவறானவை எனப் புகார் எழுந்தது.

கேள்வித்தாள் குளறுபடி, வெளிப்படைத்தன்மையின்மை ஆகிய காரணங்களால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வை ரத்து செய்யக் கோரி, சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் குரூப் 1 தேர்வு முடிவுகள், ஏப்ரல் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 9 ஆயிரத்து 50 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்வானவர்களின் பெயர், பாலினம், பிரிவு என எவ்வித தகவலும் வெளியிடப்படாத நிலையில், கட் ஆஃப் மதிப்பெண்ணும் வெளியிடப்படாததால் தேர்வு வெளிப்படைத்தன்மை இன்றி நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 18 கேள்விகள் தவறானவை என்று குறிப்பிட்டுள்ள மனுதாரர், அவற்றை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என டி.என்.பி.எஸ்.சியிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதனை ஏற்காமல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

எனவே தேர்வு முடிவுகளை ரத்து செய்வதோடு, மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வையும் ரத்து செய்யக் கோரியிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் அமர்வு முன்பு இன்று (ஜுன் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

டி.என்.எஸ்.சியின் இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப் 1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ஜூன் 17ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என டி.என்.பி.எஸ்.சிக்கு உத்தரவிட்ட நீதிபதி அன்றைய தினத்திற்கே வழக்கை ஒத்திவைத்தார்.