சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போனதை தொடர்ந்து, அவரை கண்டுபிடிக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் மார்ச் 2ஆம் தேதி போராட்டம் அறிவித்திருந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு இன்று (பிப்ரவரி 25) உத்தரவிட்டுள்ளது.

காணாமல்போன முகிலன்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமூக செயற்பாட்டாளர் முகிலன். இவர் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். கூடங்குளம் அணு உலை போராட்டம், நொய்யல் ஆறு மாசுபடுவதற்கு எதிரான நடவடிக்கை, காவிரி நதிநீர் பாதுகாப்பு, ஆற்று மணல் கொள்ளைத் தடுப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் முகிலன்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22ஆம் தேதி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினர் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இதுதொடர்பாக, வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ”கொளுத்தியது யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்?” என்ற தலைப்பில்  ஆவணப்படம் ஒன்றை கடந்த 15ஆம் தேதியன்று சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டார் முகிலன். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிய சில ஆதாரங்களையும் அப்போது அவர் வெளியிட்டார்.

எந்த தகவலும் இல்லை

பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துவிட்டு கடந்த 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு சென்ற முகிலனைக்  காணவில்லை. இதுதொடர்பாக, எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், சமூக வலைதளங்களில் அவருக்காக பலர் குரல் கொடுத்துவருகின்றனர்.

முகிலனை ஆஜர்படுத்தக்கோரி கடந்த 18ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  முகிலன் காணாமல்போய் கிட்டதட்ட 10 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், அவரை பற்றி எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை.

சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னையில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் முக்கிய கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றது. இந்த கூட்ட்த்தின் ஆலோசனை முடிவில் முகிலனை விரைவில் கண்டுபிடிக்க வலியுறுத்தி வருகின்ற மார்ச் 2ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

முதல்வா் பழனிசாமியிடம் செய்தியாளா்கள் முகிலன் குறித்து இன்று கேள்வி எழுப்பப்பட்டபோது, “முகிலனின் குடும்பத்தினா் புகார் தெரிவித்தால், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இந்நிலையில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் மாயமான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.