இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பிசிசிஐ-யின் புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜனவரி 2017ல் லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தத் தவறியதால், பிசிசிஐ ., தலைவர் பொறுப்பிலிருந்து அனுராக் தாகூர் நீக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் போர்டு தற்போது உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவால் செயல்பட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் வரும் அக்டோபர் 23ம் தேதி, பிசிசிஐ.,யின் வருடாந்திர கூட்டம் நடக்கவுள்ளது. இதில் பிசிசிஐயின் தலைவர் தேர்வுசெய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஏற்கனவே தலைவராக இருந்தவர்களான அனுராக் தாகூருக்கு பாதிப்பேரும், ஸ்ரீனிவாசன் ஆதவுபெற்ற பிரிஜேஷ் படேலுக்குப் பாதிப்பேரும் ஆதரவு அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் அவர் அடுத்த பிசிசிஐ தலைவராகத் தேர்வாக வாய்ப்புள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவரான சீனிவாசன், தலைவர் பதவிக்கு பிரிஜேஷ் படேல் பெயரை முன்மொழிந்த போதிலும், அவருக்குப் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. தலைவராக கங்குலியை, தேர்வு செய்யப் பெரும்பான்மையான நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், போட்டியிலிருந்து, பிரிஜேஷ் பட்டேல், பின் வாங்கியதாகக் கூறப்படுகிறது. எனினும், பிரிஜேஷ் பட்டேல் ஐ.பி.எல். நிர்வாகக் குழுவின் தலைவராகச் செயல்படுவார் எனத் தெரிகிறது. இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐயின் புதிய செயலாளராகவும், அருண் துமால் புதிய பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. துமால், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் இளைய சகோதரர் ஆவார்.
இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகள் தேர்வு வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து நாடு முழுவதுமிலுமிருந்து சௌவ்ரவ் கங்குலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.