2016-ஆம் ஆண்டு உலகக் கோப்பை டி-20 கிரிகெட் தொடரிந்தியாவில் நடைபெற்றது. அப்போட்டியில் இந்தியா வெற்றிபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் வெற்றியைப் பறிகொடுத்து தொடரிலிருந்து வெளியேறியது. இங்கிலாந்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் ஆடிய இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்று சாம்பியம்ன் ஆனது.

இந்த தொடரின்போது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு போட்டியின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியைப் பற்றிய சிலிர்ப்பூட்டும் அனுவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அந்தத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான முக்கியமான லீக் போட்டியில் குரூப் 2-இல் இடம்பெற்றிருந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 161 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரகளான ரோஹித் சர்மாவும் தவனும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து பெரும் அதிர்ச்சியளித்தனர். அதன் பின்னர் களமிறங்கிய டி-20 களத்தின் நட்சத்திர வீரர்களான ரெய்னாவும் யுவராஜும் குறைவான ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். களத்தில் தனியாளாய் நின்று போராடினார் கோலி. அவருடன் கடைசி நிமிடங்களில் இணைந்தார் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. முடிவில் தோனி வழக்கமான தனது ஃபினிசிங் ஷாட்டால் தோனி வெற்றியை எட்ட வைத்தார். இந்தப் போட்டியில் கோலி 51 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த ஆட்டத்தில் வெற்றியை எட்ட மொத்த பாரத்தையும் தன் தோள்களில் சுமந்து ஆடிய ரன் மிஷின் கோலி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

அந்தப் போட்டியின் இறுதியில் தோனி பவுண்டரி விளாசி ஆட்டத்தை முடித்தபோது எடுக்கப்பட்ட படத்தினைத் தான் தற்போது விராட்கோலி பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
’என்னால் மறக்கமுடியாத போட்டி; என்னை உடற்பயிற்சி சோதனையில் ஓடுவதுபோல ஓடவைத்தார் (தோனி)’.

தற்போது நடைபெறும் போட்டிகளில் தோனி விளையாடாவிட்டாலும் அவ்வப்போது கோலி தோனியுடனான இனிய நினைவுகளை பகிர்ந்துவருவது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக உள்ளது. ரசிகர்கள் ஒருபக்கம் மகிழ்ந்திருக்க தோனி இன்று மாலை 7 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். அப்போது அவர் ஓய்வை அறிவிக்கப்போவதாக பலரும் சமூகவலைத்தளங்களில் புலம்பிவருகின்றனர். ஆனால் இதற்கான விடை இன்று மாலை தோனியின் செய்தியாளர் சந்திப்பில் தான் கிடைக்கும்.