நேற்று மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் உயரதிகாரக்குழுக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் இனி ஐபிஎல் தொடக்கவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் கிடையாது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களைக் கவரும் பல அம்சங்களில் துவக்கவிழா சிறப்பு நிகழ்ச்சியும் ஒன்று. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமான அலங்காரங்களுடன் பல பிரபலங்களைக் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்படும். அதில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் சம்பளமும் மலைக்கவைப்பதாக இருக்கும். ஆனால் ரசிகர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சிக்குப் போதுமான வரவேற்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஐபிஎல் உயரதிகாரக்குழு கருதுகிறது. இதனால் அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் துவக்கவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடப்படாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது, பிசிசிஐ நிர்வாகி ஒருவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர்த்து நோ-பால்களைக் கண்காணிக்க சிறப்பு நடுவரை நியமிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் போட்டிகளில் நோ-பால்களைக் கண்காணிப்பதில் நடுவர்களில் செயல்பாடுகள் மிகவும் விமர்சிக்கப்பட்டன. அதனைத் தவிர்த்து நோ-பால் கண்காணிப்பதை நெறிப்படுத்தும்பொருட்டு இம்முடிவினை ஐபிஎல் உயரதிகாரக்குழு எடுத்துள்ளது.