காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார்? என்று குஜராத் மாநிலத்திலுள்ள பள்ளியின் தேர்வுத் தாளில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஷஃபாலம் ஷாலா விகாஷ் சங்குல் என்ற அமைப்பால் நடத்தப்படும் அரசு உதவி பெற்ற தனியார் பள்ளியில் நேற்று பள்ளித் தேர்வு நடைபெற்றுள்ளது.9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித் தாளில், ‘காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?’ என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மிகப்பெரிய முரண் என்னவென்றால் காந்தியின் மரணம் குறித்த வரலாறு நாடு முழுவதும் அறியப்பட்டுள்ள நிலையில் அந்த பள்ளியோ அமைந்திருப்பது காந்தி பிறந்த குஜராத் மாநிலத்திலேயே தான்.

இந்தியாவின் தேசப்பிதா மற்றும் மகாத்மா என்றழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கோட்சேவால் சுட்டு படுகொலை கொல்லப்பட்டார். சுதந்திர இந்திய வரலாற்றின் மிகப்பெரும் சோகசம்பவமாக அந்த நிகழ்வு கருதப்படுகிறது.இது தற்செயலாக நடந்த பிழையா அல்லது சித்தாந்த உள்நோக்குடன் அந்த பள்ளி நிர்வாகம் செயல்பட்டுள்ளதா என பல்வேறு தரப்பினரும் சந்தேக கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

மேலும், அதேபள்ளியில் 12-ம் வகுப்பில், ‘உங்கள் பகுதியில் அதிகரிக்கும் மதுவிற்பனையால் தொந்தரவுகள் அதிகரிப்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் புகார் கடிதம் எழுதுக?’ என்ற கேள்வியும் இடம்பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தக் கேள்வியும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.