12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தியதில் பிழைகள் கண்டறியப்பட்டதால், பிழைகளுக்கு காரணமான 500 ஆசிரியர்களுக்கு அரசுத்தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 19ஆம் தேதி முடிவடைந்தன. இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதிவரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தப்பட்டு ஏப்ரல் 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்த ஆண்டு 72 மையங்களில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் சுமார் 25 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். சுமார் 60 லட்சம் விடைத்தாள்களைத் திருத்திய ஆசிரியர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மதிப்பெண்களை கூட்டும்போது, பிழை செய்திருப்பதை தேர்வுகள் இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது.

உதாரணமாக 100-க்கு 72 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனுக்கு 27 மதிப்பெண் பெற்றதாக கூட்டலில் தவறு இழைத்து தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரு பாடத்தில் 81 மார்க் எடுத்த மாணவனுக்கு 57 பெற்றதாக கொடுத்துள்ளனர். மேலும் உயிரியல் பாடத்தில் ஏராளமான பிழைகள் கண்டறியப்பட்டதால், விடைத்தாள் திருத்தியவர்கள், கண்காணித்த 500 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்ககோரி அரசுத்தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அவர்கள் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் நகல் கேட்டு 50 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாகவும் அதில், மறுகூட்டலுக்கு 4 ஆயிரத்து 500 மாணவர்கள் விண்ணப்பித்ததாகவும் தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.