சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஒரு மனநலத்துறை கருத்தரங்கில் பங்கேற்றேன். அதில் பேசிய ஒரு மூத்த மனநல மருத்துவர், கன்னாபிஸ் (Cannabis) என சொல்லக்கூடிய கஞ்சாவை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என பேசிக்கொண்டிருந்தார், உலகத்தின் சில நாடுகளில் அது ஏற்கனவே சட்டப்பூர்வமாக்கப்பட்டு விட்டது என்றும் சில தரவுகளை கொடுத்தார். எனக்கு உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணம் மிக முக்கியமாய் தெரிந்தது. அதாவது கஞ்சாவை ஒருவர் எடுத்துக்கொள்வதால் உருவாகும் பிரச்சினைகளை விட அதை தடை செய்திருப்பதால் உண்டாகக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளே மிக ஆபத்தானதாக இருக்கிறது என்றார்.

கஞ்சாவை விற்பது சட்டத்திற்கு புறம்பானது என்னும் நிலையில் கஞ்சா விற்பனை தொடர்பான ஒரு கள்ள சந்தை உருவாவதையோ, அதன் நிழலுலக இயக்கத்தையோ நாம் கட்டுபடுத்த முடியாமல் போகும் போது அது நிமித்தம் ஏராளமான சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளும், வன்முறைகளும், கொலைகளும் நடக்கத்தொடங்குகின்றன. இளம் வயதில் ஒருவித சாகச மனப்பான்மையுடன் கஞ்சாவை தேடி செல்லும் ஒரு கல்லூரி இளைஞன் அவனையும் அறியாமல் இந்த நிழல் உலகில் மாட்டிக்கொள்ள நேரிடும்போது அதுவரை அவனுக்குள் உருவாகி வந்த இந்த சமூகம் தொடர்பான விழுமியங்கள் எல்லாம் நீர்த்து போய் அவன் இந்த நிழலுலக சாகசங்களில் தன்னை அர்ப்பணித்து கொள்ளக்கூடிய ஆபத்து இருக்கிறது, இப்படி சமூக விரோத செயல்களில் நமது இளைஞர்கள் மாட்டிக்கொள்வது தான்  கஞ்சாவை எடுத்துக்கொள்வதை விடவும் ஆபத்தானது என்றார். இன்றைய சூழலுக்கு அவர் சொன்ன காரணம் மிகவும் பொருத்தமாய் தோன்றுகிறது.

கொரோனா அச்சத்தின் விளைவாக நாடு தழுவிய அளவில் போடப்பட்ட இருபத்து ஒருநாள் ஊரடங்கின் விளைவாக நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக திருடப்படுவதையும், பல டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபுட்டிகளை மொத்தமாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டை அரசு செய்வதையும் நாம் தொடர்ச்சியாக செய்திகளில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இது நமக்குத் தெரிந்த செய்தி. நமக்கு தெரியாமல் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய கள்ளச் சந்தை இப்போது உருவாகிக்கொண்டிருக்கும். எனது குடி நோயாளி ஒருவரிடம் அவரது நலனை பற்றி விசாரித்தபோது கள்ள சந்தையில் ஒரு பாட்டில் நானூறு ரூபாய்க்கு கிடைப்பதாகச் சொன்னார். இந்த கள்ளச் சந்தை உருவாவதையும் அதனால் ஏற்படப்போகும் சமூக விரோத செயல்களையும் நம்மால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. கள்ளச் சந்தை மட்டுமல்ல, இதுவரை இல்லாத கள்ளச் சாராயம் தயாரிக்கும் பணிகள் கூட சில நடப்பதாகக் கேள்விபட்டு அரசாங்கம் அதனை முடக்கியிருக்கிறது. மதுக்கடைகளை மூடிவிடுவதன் மிகப்பெரிய சவால் இது. இதை எப்படி அரசாங்கம் எதிர்கொள்ளப் போகிறது என்பதை இனிவரும் நாட்களில் நாம் பார்க்கலாம்.

இந்தியாவை பொருத்த வரையில் ஆல்கஹால் எடுப்பவர்களின் எண்ணிக்கை உலகிலேயே மிக அதிகம். குடி நோயாளிகளும் இங்கு அதிகம். மது என்பது இந்தச் சமூகத்தின் ஆழம் வரை ஊடுறுவி பரவிருக்கிறது. நாம் மேலே உள்ள சின்னச் சின்ன கிளைகளைத்தான் முறித்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் இதன் வேர் மிக உறுதியாக இந்த சமூகத்தில் ஊன்றியிருக்கிறது. இப்படிப்பட்ட சமூகத்தில் கதாநாயக சாகசத்துடன் திடீரென மதுக்கடைகளை மூடுவது என்பது ஆபத்தானது. இதற்கான தகுந்த முன்னேற்பாடுகள் அவசியம். நாம் ஆபத்தானது என்றவுடன் குடிநோயாளிகளுக்கு மட்டுமே ஆபத்தானது என நினைத்துக்கொள்கிறோம். ஆனால் அவர்களை விட சமூகத்திற்கே அதிகளவு பாதிப்புகள் ஏற்படும்.

என்ன மாதிரியான விளைவுகள் வரும்?

மது அருந்துபவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகமாக இருந்த போதிலும் அவர்கள் அனைவரும் குடி நோயாளிகள் கிடையாது. மொத்தமாக மது அருந்துபவர்களில் ஒன்றில் இருந்து இரண்டு சதவீதம் மட்டுமே குடி நோயாளிகள். மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பவர்கள் குடிநோயாளிகள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதை முன்னிறுத்தியே இந்த கோரிக்கையை வைக்கிறார்கள், கேரளா அரசாங்கம் கூட மருத்துவர்களின் பரிந்துரை இருந்தால் ஒரு வாரத்திற்கு மூன்று லிட்டர் மது குடி நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என்று சமீபத்தில் அறிவித்தது. அந்த அறிவிப்பை கேரளா உயர்நீதி மன்றம் உடனே தடை செய்தது. இந்தத் தடைக்கு காரணம் குடிநோயாளிகளுக்கு மதுவை நிறுத்துவதனால் ஏற்படக்கூடிய உடல், மற்றும் உளவியல் பாதிப்புகளுக்கு மதுவையே மருந்தாக கொடுக்கலாம் என்று எந்த மருத்துவ புத்தகமும் சொல்லவில்லை. உண்மையில் குடி நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை முறைகள் இருக்கின்றன, அவர் ஆல்கஹால் வித்டிராவல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டி வந்து சிகிச்சை தான் கொடுக்க வேண்டுமே தவிர திரும்பவும் மதுவை கொடுப்பது அதற்கு தீர்வாகாது.

அதனால் குடிநோயாளிகளுக்கு மதுவை நிறுத்திய நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் உடல் ரீதியாகவோ அல்லது நடவடிக்கைகளிலோ ஏதேனும் மாறுதல் ஏற்பட்டால் அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்குச் கொண்டு செல்வது தான் சரியானது. அவர்களுக்காக அத்தனை மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் உள்ள மனநல பிரிவுகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பெரிய பாதிப்புகள் இல்லாமல் வெறும் தூக்கமின்மை, கோபம் போன்ற சிறிய பிரச்சினைகளுக்கெல்லாம் ஆரம்ப சுகாதார மையங்களில் கூட வைத்தியம் செய்யப்படுகிறது. இது தொடர்பான பரிந்துரையை அண்மையில் மனநல காப்பகத்தின் இயக்குனர் அரசாங்கத்திற்கு கொடுத்திருக்கிறார். அதனால் குடி நோயாளிகளுக்கு வரக்கூடிய இந்த உடல், உளவியல் பிரச்சினைகளுக்காக மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை கிடையாது. அப்படி என்றால் அவர்களை இதில் இருந்து மீட்கும் எண்ணமே யாருக்கும் இல்லை என பொருள்.

மாறாக மதுக்கடைகளை மூடிவதால் உண்டாகக்கூடிய பிரச்சினைகள் குடிநோயர்கள் வருவதல்ல. மது அருந்தவர்களில் குடி நோயர்களை தவிர்த்து மது அருந்தும் மீதமுள்ளவர்களால் வரக்கூடியது. அவர்கள் தான் பெரும்பாலும் கள்ள சந்தையை உருவாக்குகிறார்கள், மது விற்பனையின் நிழலுலகத்தை உருவாக்குகிறார்கள். இதன் தொடர்பாக நடக்கும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் தான் இன்றைய சூழலில் மிக மோசமானதாக வெளிப்படும். அதுவும் இன்றைய பொருளாதார மந்த நிலையில் இந்த கள்ள சந்தை மிக வேகமாக வளர்ந்து விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. இன்றைய சூழலில் அரசாங்கத்தின் முன் உள்ள மிக முக்கிய சவால் இது தான். இதை அலட்சியப்படுத்தும்போது அது இன்னும் சில காலங்களில் மாபெரும் அச்சுறுத்தலாய் நம் கண் முன் வந்து நிற்கும். அது இந்த சமூக அமைப்பில் ஏற்படத்தப்போகும் தாக்கும் கொரோனாவை விட மோசமானதாக இருக்கும். இதன் ஆபத்தை உணர்ந்து இப்போதே துரிதமாக செயல்பட்டால் தான் நம்மால் இதனை கட்டுப்படுத்த முடியும். கொரோனாவை அலட்சியப்படுத்தியது இதையும் நாம் அலட்சியப்படுத்தினால் இனி வரும் காலத்தின் மிகப்பெரிய துயரமாக இது மட்டுமே இருக்கும்.