நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி நூலிழையில் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. கிரிக்கெட்டின் தாய்நாடான இங்கிலாந்தில் உலகின் மிகவும் பழம்பெருமை வாய்ந்த லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடைபெற்றது.

பல பரபரப்புகளும் உச்சகட்ட திருப்பங்களும் கொண்டிருந்த இப்போட்டி கிரிகெட் வரலாற்றில் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டியது.

Image

நிதானம் காட்டிய நியூசிலாந்து!

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. தொடக்க வீரரான மார்டின் கப்டில் 19 ரன்கள் எடுத்த நிலையில் வோக்ஸ் வீசிய பந்தில் எல்.பி.டபில்யூ கோரப்பட்டது. அதனையெதிர்த்து கப்டில் அப்பீல் செய்ய அது இங்கிலாந்துக்கு சாதகமாக மாறியது. தனது விக்கெட்டையும் அணிக்கான ரிவியூவையும் இழந்தார் கப்டில்  இதனால் நியூசி அணி சற்றே தடுமாறியது. பின்னர் களமிறங்கிய கேன் வில்லியம்சனுடன் இணைந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நிக்கோல்ஸ் 77 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் 53 பந்துகளைச் சந்தித்து 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ப்ளன்கெட் வீசிய பந்து மட்டையின் வெளிப்புறத்தில் பட்டு பட்லரிடம் கேட்ச் கொடுத்து தன் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ரோஸ் டெய்லர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ரன்கள் குவிக்கவில்லை. அடுத்த சில ஓவர்களிலேயே ப்ளன்கெட் வீசிய பந்தில் ‘க்ளீன் பௌல்ட்’ ஆனார் நிக்கோல்ஸ். ஆனால் அடுத்து களமிறங்கிய டாம் லேதம் பொறுப்புடன் ஆடினார். 34வது ஓவரில் ராஸ் டெய்லரின் விக்கெட்டை உட் வீழ்த்த அடுத்தடுத்து களமிறங்கிய வீர்ர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 49வது ஓவர்வரை ஆடிய லேதம் 47 ரன்கள் குவித்த நிலையில் வோக்ஸ் வீசிய பந்தில் வின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழந்து 241 ரன்கள் குவித்தது நியூசிலாந்த் அணி.

வீழ்வேனென்று நினைத்தாயோ! – இங்கிலாந்து!

242 ரன்கள் என்ற இலக்கை நோக்கிக் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 20 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹென்றி வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் லேதமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் மற்றும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜானி பேரிஸ்டோ இணைந்து பொறுமையாக ஆடினர். 30 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த ஜோ ரூட், டி க்ரந்தோம் வீசிய பந்தில் கீப்பர் லேதமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்த இரண்டு ஓவர்களிலேயே பெஃர்குசன் வீசிய பந்து மட்டையின் உட்புறம் எட்ஜ் ஆகி பைல்ஸில் பட்டு ஆட்டமிழந்தார் பேரிஸ்டோ. 71 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் மார்கனும் கைகொடுக்கத் தவறினார். கேப்டன் மார்கன் 21 பந்துகளில் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நீஷம் வீசிய பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையில் அடிக்க அங்கு பெஃர்குஷன் பிடித்த அசாதாரண கேட்ச்சால் ஆட்டமிழந்தார். இதனையடுத்து 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இணை 121 பந்துகளில் 100 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியை வெற்றிப் பாதைக்கு திரும்ப வழி வகுத்தனர். 59 ரன்கள் குவித்த பட்லர் 45வது ஓவரின் இறுதியில் பெஃர்குசன் வீசிய பந்தில் டிம் சௌதியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். க்ரிஸ் வோக்ஸ் மற்றும் ப்ளன்கெட் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பென் ஸ்டோக்ஸ் அணியை வெற்றி பெறும் பொறுப்பை தன் தோள்களில் ஒற்றையாளாய்ச் சுமந்து ஆடினார். ஜோப்ரா ஆர்ச்சர்  நீஷம் வீசிய பந்தில் போல்ட் ஆனார். ஆட்டம் 2 பந்துகளில் 3 ரன்கள் என்று இக்கட்டான சூழலை எட்டியபோது இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஆட்டத்தை புரட்டிப்போட்ட ஓவர்-த்ரோ!

கடைசி ஓவரில் போல்ட் வீசிய புல்டாஸ் பந்தை பென் ஸ்டோக்ஸ் எதிர்கொண்டு இரண்டு ரன்கள் எடுக்க முயற்சித்தபோது நியூசி அணியின் கப்டில் அதனை கீப்பரை நோக்கி வீச ஓடிவந்த ஸ்டோக்சின் மட்டையில்பட்ட பந்து பவுண்டரியை எட்டியது. பொதுவாக இவ்வாறான செயல்கள் பீல்டிங்கை தடுக்கும் நோக்கில் செய்யப்பட்டால் obstruction to field என்ற விதிப்படி பேட்ஸ்மேன் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்படுவார்! ஆனால் இங்கு இது தற்செயலாக நடைபெற்றதால் அவ்வாறு அவுட் வழங்கப்படவில்லை. பென் ஸ்டோக்ஸ் ஓடிய 2 ரன்கள் போக மேலும் 4 பை ரன்கள் கிடைக்க 3 பந்துகளில் 9 ரன் தேவை என்றிருந்த நிலை தலைகீழாக மாறியது!

இந்நிலையில் அடுத்தடுத்த பந்துகளில் பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் எடுக்கு முயற்சியில் இறங்கினார். கடைசிக்கு முந்தைய பந்தில் இரண்டாவது ரன் ஓட முயற்சித்த போது ஆடில் ரசீதும், கடைசி பந்தில் இரண்டாவது ரன் முயற்சியில் உட்டும் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்சின் சிறப்பான ஆட்டத்தால் போட்டி சமனில் முடிந்தது. இறுதி வரை களத்தில் நின்ற பென் ஸ்டோக்ஸ் 97 பந்துகளுக்கு 83 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனையடுத்து ஆட்டம் சூப்பர் ஓவருக்கு நகர்ந்தது.

Image

சூப்பர் ஓவரின் விதிகள்:

1) ஆட்டத்தில் இரண்டாவது பேட் செய்த அணியே சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கும்.

2) களமிறங்கும் பேட்ஸ்மென்கள் (அணிக்கு மூவர்) பெயரை முன்னரே அறிவித்துவிட வேண்டும். அணிக்கு ஒரு பந்து வீச்சாளர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவரையும் முன்னரே அறிவித்துவிட வேண்டும்.

3) ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசப்படும்; இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே;

4) சூப்பர்  ஓவரும் சமனில் முடியும் பட்சத்தில் அதிக பவுண்டரிகள் விளாசும் அணியே வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.

உலகக்கோப்பை வரலாற்றின் முதல் சூப்பர் ஓவர்

இதனையடுத்து முதலில் களமிறங்கியது இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் களமிறங்கினர். நியூசி அணியின் போல்ட் பந்து வீசினார். ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இணைந்து 2 பவுண்டரிகள் உட்பட 15 ரன்கள் எடுத்தனர்.

அடுத்ததாக நியூசி அணியின் கப்டில் மற்றும் நீஷம் களமிறங்கினர். இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீசினார். நீஷம் ஒரு சிக்ஸர் விளாச நியூசி அணி 14 ரன்கள் எடுத்த நிலையில் மீதமிருந்த ஒரு பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. கடைசி பந்தில் 2 ரன்கள் ஓட முற்பட்ட போது கப்டில் ரன் அவுட் ஆனார். ஆட்டம் சமனில் முடிய சூப்பர் ஓவர் விதிகள் படி அதிக பவுண்டரிகள் விளாசிய இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நியூசிலாந்து அணி மிக சிறப்பாக விளையாடினாலும் போட்டி விதிகளின்படி இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றது.

Image

சில சுவாரஸ்யமான குறிப்புகள்!

– முதன்முதலாக சமனில் முடிந்த உலக்க்கோப்பை இறுதி ஆட்டம் இதுவே ஆகும்!

– உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக சூப்பர் ஓவர் நடைபெற்றது. அதுவும் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது!

– உலகக்கோப்பையை முதன்முறையாக இங்கிலாந்து கைப்பற்றுகிறது! அதுமட்டுமல்லாது, ஐ.சி.சி கோப்பை ஒன்றை இங்கிலாந்து வெல்வது இதுவே முதன் முறையாகும்!

– இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் பிறப்பால் ஒரு ஐயர்லாந்துக்கார்ர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஐயர்லாந்திற்காக சில ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

– சூப்பர் ஓவர் வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் கரீபியன் தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டை சேர்ந்தவர். இவர் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை ஒரு ஆங்கிலேயர்.

– ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் தொடர்நாயகனாக கேன் வில்லியம்சன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

– இதுவரை உலகக்கோப்பை இறுதியில் 241 ரன்களுக்குக் குறைவான ரன்களை அடித்து அதனைக்கொண்டு வெற்றிகரமாக தடுத்தாடிய ஒரே அணி இந்தியா மட்டுமே! (கபில் தேவ் தலைமயிலான இந்திய அணி: 1983 உலகக்கோப்பை)