பிரபஞ்சத்தில் இருக்கக் கூடிய ஒரே ஒரு பிரச்சினை காதல் மட்டும் தான்.காதலிக்கும் பெண்ணிடம் காதலைச் சொல்வது ஆகச்சிரமம்.அதில் தோவியுற்றால் தனக்குக் கிடைக்காமல் போன காதலை எண்ணி எண்ணி ஏங்கிச் சாவது காதலின் புனிதம்.இரண்டு பேரும் காதலிக்கத் தொடங்கினால் அதை இருவீட்டாரிடமும் தெரியப்படுத்தி சம்மதம் பெற்றுத் திருமண வாழ்வில் இணைவது இருக்கிறதே அது பலசுற்றுப் போர்க்காலம்.அப்படிச் சம்மதம் கிட்டாமல் சேரமுடியாமற் பிரிந்த காதலை இரண்டு பேரும் எண்ணி எண்ணி ஏங்கிச் சாவது காதலின் புனிதம் 2.0.சரி வா அன்பே அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து கொள்வோம் என்று இணைந்து மரணத்தை நோக்கிச் செல்வது காதலின் உன்னதம்.வாழ விட்டார்களா நம்மை என்று கலங்கிய பிம்பங்களாகக் காற்றில் கலைந்த காதலின் கதைகள் தான் எத்தனை எத்தனை..?உண்மையை சாட்சியம் சொல்வதான கணக்கில் சினிமாவில் சொல்லப்பட்ட காதலின் பல கதைகள் அபத்தமான இயல்வாழ்வுக்கு ஒவ்வாத சாக்ரீன் தாமரைகள் தான்.அதிலொன்று கிளிஞ்சல்கள்.

சினிமாவுக்குக் காதல்களும் பாடல்களும் அஸ்திவாரம் போன்றவை.கதை சொல்லிகள் என்றைக்குக் காதலைத் தாண்டுகிறார்கள் என்பதை ரசிகர்கள் ஆவலோடு கண்பூத்தபடி காத்திருக்கிறார்கள்.அதீதத்தின் நம்பகத் தன்மை அற்ற இந்திய சினிமாவின் உருவேற்றப் பட்ட காதல் படங்களில் இன்னுமொரு காதல் கனவு தான் கிளிஞ்சல்கள்.ஸ்வீட் நதிங் என்று ஆங்கில சொலவடை உண்டல்லவா அப்படி இந்தப் படம் ஒரு ஸ்வீட் நத்திங்.இன்றைய காலத்தின் நிஜத்தை அணிந்து கொண்டு பார்க்கும் போது சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றக் கூடிய கதைக்களன்.நூலாம்படைகளைத் திரட்டிக் கட்டிய கயிற்றை அட்டைக்கத்தி கொண்டு அறுத்தெறிய முடியாத பலவீனத்தின் செலுலாய்ட் சாட்சியம்.டி.ராஜேந்தரின் இசையும் பாடல்களும் இந்தப் படத்தின் ஞாபகம் முற்றுப்பெற்று விடாமல் இசையினூடாகத் தப்ப வைத்திருக்கிறது என்பதே மெய்.அவர்களுக்குப் பிடித்தது.அவர்களது வீட்டாருக்குப் பிடிக்கவில்லை.முடிவில் அவர்கள் இறந்தார்கள் என்பதைத் தாண்டி இந்தப் படத்தின் கதையை இன்றைக்கு வேறு எப்படிச் சொன்னாலும் செயற்கை.

ஐ லவ் யூ என்பது கிட்டத் தட்ட மகா பெரிய சொற்கூட்டாகக் கருதப்பட்ட முந்தைய காலத்தின் இந்தப் படத்தில் காதல் தோற்பதில்லை தோற்பதெல்லாம் காதலர்கள் தான் என்ற வாக்கியத்தை வாய்ஸ் ஓவரில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே love never fails என்று எண்ட் கார்டுடன் உறைந்து போய் முடிவடையும் இதன் கதை எண்பதுகளின் ஆரம்பத்தில் எடுக்கப் பட்ட ஆயிரக்கணக்கான இந்திய காதல் திரைப்படங்களில் இன்னுமொரு படம்.ஜூலி ஐ லவ் யூ என்ற பாடலைத் தவிர்த்து இந்தப் படத்தைக் குறித்துச் சொல்வதற்கான சொற்கள் இல்லை.கலங்கிய நீர்ப்பரப்பில் காலப்போக்கில் உதிர்ந்த கிளிஞ்சல்கள்.