ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் கோலி தலைமையிலான பெங்களூரு அணியை குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கோலியை உலக கோப்பை வருவதற்கு முன்னர் ஓய்வெடுக்குமாறு டிவிட்டரில் யோசனை தெரிவித்த இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வானுக்கும் நடிகர் சதிஷ் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
2019 ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இந்தத் தோல்விகள் விராட் கோலியின் தலைமைப் பண்புகளை, தன்னம்பிக்கையை பாதிக்கும். மேலும், இது இந்திய அணியின் உலகக் கோப்பை கனவுக்கு நல்லதல்ல என சில கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வான் டிவிட்டரில் இதேபோன்ற கருத்தை பதிவிட்டுள்ளார். அப்பதிவில் “உலகக் கோப்பை என்பது பெரிய போட்டி, என்பதால் 2019 உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியா கோலிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்” என்று அவர் பதிவிட்டிருந்தார். ஆனால் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கும் நடிகர் சதீஷ் இதற்கு பதிலடிக்கொடுக்கும் வகையில், “அன்புள்ள வான் அவர்களே, இந்தத் தோல்வி எங்கள் ஸ்கிப்பர் கோலியை சோர்வடையச் செய்துவிடாது. எங்களுக்கு அவர் மீது நம்பிக்கை உள்ளது. அவருக்கும் சிறப்பாக இயங்க வேண்டியதன் அவசியம் தெரியும். அதுமட்டுமல்லாது எங்கள் தல தோனி அவருக்கு வழிகாட்ட இருக்கிறார். அதனால், நீங்கள் எங்களுக்கு அறிவுரை சொல்லி நேரத்தை விரயமாக்காமல் உங்கள் வீரர்களுக்கு அறிவுரை சொல்வது நலம். ” என்று பதில் சொல்லியிருந்தார்.
இதற்கு வான், “சதீஷ்.. நான் ஒரு சிறு அறிவுரை கொடுக்கவே முயன்றேன். நிறைய விளையாடும் நபர் ஒருவர் ஆண்டில் ஒருமுறையேனும் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். விராட் கோலியும் மனிதர்தான். அவருக்கும் சில கவனிப்புகள் தேவைப்படுகிறது. குறைந்தது இரண்டு வாரமாவது ஓய்வு எடுக்கலாம். அதுவும் ஆர்சிபி-யால் சரியாக விளையாட முடியாத இச்சூழலில் அவர் எடுத்துக் கொள்ளலாம்.” என்று விளக்கமளித்தார்.
சதீஷும்,”வான், உங்கள் அக்கறையை ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் எங்கள் ஸ்கிப்பர் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் போலவே இந்த தோல்வி அவர் உற்சாகத்தைக் குறைக்காது என்றும் நம்புகிறோம். கோலி, வியத்தகு வலிமை கொண்டவர்” என்று அதற்கு மீண்டும் ஒரு பதிலை பதிவிட்டிருந்தார். இவர்களின் இந்தக் கருத்து மோதலை பலரும் ஆமோதித்தும், எதிர்த்தும் பகிர்ந்து வருகின்றனர்.