சபாஷ் மீனா

தனவந்தர் சதாசிவத்தின் மகன் மோகன்.ஊதாரி.பொறுப்பற்றவன்.தந்தையின் கோபத்திற்கு அப்பால் அவர் நண்பர் அப்பாதுரை வீட்டுக்குப் பட்டணத்துக்கு அனுப்பப் படுகிறான். பணக்கார மோகன் இடத்திற்கு ஏழைசேகர் மாறுகிறான். ஏழையாகத் தன்னை மாற்றிக்கொண்டு காதல் பித்தேறி அலைகிறான் மோகனஅவன் விரும்புகிற யுவதியோ பணம் என்றாலே வெறுப்பவள்.தன் அப்பாவின் சினேகிதர் மகன் என்றதால் எளிதாகக் கல்யாணம் கூடும் என்ற முதல் வரியைப்பற்றிக் கொண்டு புதிய மோகனை நிஜமோகன் என்று நம்பி காதலிக்கிறாள். அப்பாதுரையின் மகள் மாலதி. இரண்டு மோகன்கள் இரண்டு காதல்கள் ஒரு நிஜப் பொய்.  ஒரு பொய்நிஜம். ஆள்மாறாட்டம். பிடிபடும் வரை கதைரதம் நகர்வதில் பிசகில்லை. பிடிபடுங்கணம் உண்மை அவிழ்ந்து காதல்கள் கூடி சுபம்.

பி.ஆர் பந்துலு திரைக்கதையைப் படமாக்குவதில் மேதை. ப.நீலகண்டனின் எழுத்தில் சபாஷ் மீனா காலங்கடக்கும் அற்புதம். ரங்காராவ் பி.எஸ்.ஞானம் பி.ஆர் பந்துலு போன்றவர்களின் பங்கேற்புகளுக்கு மத்தியில் இந்தப் படத்தின் குன்றாவொளி சந்திரபாபு. சேகராகவும் ரிக்சாவண்டி இழுக்கும் சென்னைவாசியாகவும் இரட்டை வேடங்களை ஏற்ற சந்திரபாபு பேசிய சென்னைத் தமிழ் படம் வந்த காலத்தில் மட்டுமல்லாது இன்றைக்கு வரை உலராப்பெருநதியாக தொடர்ந்து புகழப்படுகிறது.

நகைச்சுவையின் கடினம் முயன்று பார்த்தால் தெரியும். தொண்ணூறுகளின் மத்தியில் வெளியாகிப் பெரும்வசூலையும் புகழையும் எய்திய உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மைய இழை அப்படியே சபாஷ் மீனா தான். நகல்நதியே பெருவெள்ளமாய் ஓங்குகிறதென்றால் நிசத்தின் நீர்மை குறித்துப் பேசத் தேவையில்லை. ஆரம்பக் காட்சி தொடங்கி , படம் நிறைவு வரைக்கும் சபாஷ் மீனா சிரிப்புப் படங்களில் முதல் சிலவற்றில் இடம்பிடிக்கும். இதன் இந்தி மீவுரு தில் தேரா தீவானாவுக்காக தமிழில் சந்திரபாபுவின் பாத்திரத்தை ஏற்ற மெஹ்மூத் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை 1962 பெற்றார்.
மிகத்தைரியமான திரைக்கதை அமைப்புக்காகவும் இந்தப் படம் முக்கியமானது. டைப் அடித்துக் கொண்டே புகை பிடித்துக் கொண்டே பேசுகிற காட்சியில் சந்திரபாபுவின் முகபாவங்கள் மகாரசம். ஓட்டல் அறையைக் காலி செய்வதற்காக ஆட்கள் வரும்போது மெய் மறந்து தான் வாசிக்கும் இசையில் தன்னையே மறந்து கொண்டிருக்கும் காட்சியில் சிவாஜி அள்ளுவார். சிவாஜியும் சந்திரபாபுவும் மறுபடி சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் வெடியைக் கொளுத்திக் கையில் பற்றினாற் போல் அதகளம். டி.ஜி.லிங்கப்பாவின் இசையும் கு.மா.பாலசுப்ரமணியத்தின் சொல்லாடலும் படத்தின் பலங்கள். சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி இன்றளவும் நின்றொலிக்கும் நல்லிசை.

தமிழின் மறக்க முடியாத நகைச்சுவைப் படங்களில் ஒன்று சபாஷ் மீனா.