நடிகை ஜோதிகா மற்றும் ரேவதி ஆகியோர் இணைந்து நடித்துள்ள “ஜாக்பாட்” திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று (ஜூலை 23) யூடியூபில் வெளியானது. மேலும், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களும் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஆக்சன் – காமெடி ரகத்தில் கலகலப்பாக உள்ள ஜாக்பாட் படத்தின் ட்ரெய்லர் தான் தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம்!

நடிகர் சூர்யாவின் 2-D Entertainment நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. பிரபுதேவா நடித்த படத்தை இயக்கிய கல்யாண் இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். குற்றம் 23, ரங்கூன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த விஷால் சந்திர சேகர் ஜாக்பாட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகின்ற ஆகஸ்டு 2-அன்று திரைப்படம் வெளியாகிறது.

80-90களில் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகையாக விளங்கியவர் ரேவதி. பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள ரேவதி சமீபகாலங்களில் அவ்வப்போது சில திரைப்படங்களில் நடித்துவருகிறார். 2017-ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும் 2018-ஆம் ஆண்டு வெளியான குலேபகாவலி திரைப்படத்திற்காக அவருக்கு விகடனின் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான விருது கிடைத்தது. தற்போது ஜாக்பாட் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படத்திலும் அவரது நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

2007-ஆம் ஆண்டுமொழி திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் எந்தத் திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த ஜோதிகா, 2015-இல் வெளியான 36 வயதினிலே திரைப்படத்தின்மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய திரைப்படங்களில் நடித்த ஜோதிகாவிற்கு சமீபத்தில் வெளியான ‘ராட்சசி’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்துள்ளது. பெண்கள் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தொடர்ந்து நடித்துவரும் ஜோதிகா, நடிகை ரேவதியுடன் இணைந்து நடித்துள்ள “ஜாக்பாட்” ஆகஸ்டு 2-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. காமெடி – ஆக்சன் – குடும்ப எண்டர்டெய்னராக திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படம் ஜோதிகா மற்றும் ரேவதி ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் குடும்பமாக திரைப்படங்களைச் சென்று ரசிப்போர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாக்பாட் திரைப்படத்தின் ட்ரெய்லர் இணைப்பு: https://youtu.be/0VRwavsK2_c