Y NOT ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட், மற்றும் விஸ்பெரி பிலிம்ஸ் நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கும் “மண்டேலா” திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார் “பாலாஜி மோகன்”. “ஓப்பன் விண்டோ” என்று புதிதாகத் தான் உருவாக்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின்மூலம் முதன்முறையாக தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். 

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடிப் பேசவும், மாரி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். தற்போது இத்திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். ஒய்நாட் நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்படும் இப்படத்தை பாலாஜி மோகனின் ஓப்பன் விண்டோ நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.

2013-ஆம் ஆண்டு குறும்படங்களுக்கான தேசியவிருதினை வென்ற தர்மம் படத்தின் இயக்குநர் “மடோன் அஸ்வின்” இயக்கத்தில் ஓப்பன் விண்டோ தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கும் “மண்டேலா” திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒய்நாட் நிறுவனத்தின் 17-வது தயாரிப்பாக இத்திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.

யோகி பாபு, சங்கிலி முருகன், டூலெட் படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடிக்கவுள்ளனர். பரத் சங்கர் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். யுகபாரதி மற்றும் அறிவு ஆகியோர் பாடல்களை எழுதவுள்ளனர். இத்திரைப்படத்தில் எடிட்டராக மாநகரம் திரைப்படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜ் பணியாற்றுகிறார்.

சமூக நையாண்டிப் (Social Satire) படமாக தயாராகவுள்ள இப்படம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது.