மார்ச் மத்தியிலிருந்து மே இறுதி வரை நான்கு கட்டங்களாக தொடர்ந்த ஊரடங்கு ஜூன் மாதத்தில் இருந்து ‘அன்லாக் 1’ என்ற பெயரில் மிக அதிகமான தளர்வுகளுடன்  நடைமுறைக்கு வந்தது.

“ஊரடங்கா?, அது பாட்டுக்கு  ஒரு ஓரமா நடந்துட்டு போகட்டும்” என்ற சொல்லாடல்களுக்கு ஏற்ப மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பிக்கொண்டிருந்தார்கள், முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார்கள் என்பதை உணர்த்தும் தி நகர் கடைத்தெருக்கள் நிறையத்தொடங்கிய காலகட்டத்தில் திரும்பவும் ஒரு லாக்டவுன் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இப்போது நாம் ‘அன்லாக் 2’ வை எதிர்பார்த்து டிவியில் டிரோன் பறக்கும் செய்திகளில் செட்டிலாகிவிட்டோம். இதற்கிடையே அன்லாக் 1 இல் நாம் கவனிக்க மறந்த அல்லது கவனிக்காமல் விட்ட, என்னளவில் முக்கியம் என நினைத்த சில விஷயங்களை நான் இங்கே கவனத்திற்கு எடுத்து வருகிறேன்.

ஊரடங்கு நேரத்தில், உறவுகளுக்கிடையேயான சிக்கல்களும், நோய் குறித்த அதீத அச்சமும் பதட்டமுமே முக்கியமான உளவியல் பிரச்சினையாக பேசப்பட்டது. முழுமையாக வீட்டில் முடங்கிக்கிடந்ததன் விளைவாக, இயல்பாக மனதில் எழுந்த அழுத்தமும், பதட்டமும் இதற்கு முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம், அந்த நேரத்தில் சில தொலைகாட்சிகளில் இந்த பிரச்சினை பற்றி பேசும்போது கூட நான் “இது ஒரு தற்காலிகமான பிரச்சினைதான் இயல்பு வாழ்க்கைக்கு நாம் திரும்பிவிட்டால் இந்த பிரச்சினைகள் நீர்த்து போய் விடும்” என சொல்லியிருந்தேன். அப்படி சொல்ல காரணமும் இருந்தது; இந்த கடும் நெருக்கடியான சூழலிலிருந்தும் அது தரும் அதீத அழுத்தத்திலிருந்து மீண்டு வர மனம் தேர்ந்தெடுத்த இயல்பான ஒரு வடிகாலாகவே நான் அந்த பிரச்சினைகளை பார்த்தேன். உதாரணமாக புறவுலகில் இருந்து உங்களை துண்டித்து ஒரு தனியறையில் போட்டுவிட்டால் மனதளவில் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? முதலில் அச்சமும், பதட்டமும் நம்மை சூழ்ந்துகொள்ளும்; சில நாட்களில் அந்த தனியறையின் ஒவ்வொரு அம்சத்தையும் மிக நெருக்கமாக கவனிக்க தொடங்குவோம்; அதன் பிறகு அதனுடன் உரையாட தொடங்குவோம், நமது இயலாமைகளை அந்த சிறு அறையின் ஏதேனும் ஒரு பரிணாமத்துடன் தொடர்புபடுத்திக் கொள்வோம், அந்த அறையின் பண்புகள் சில நேரங்களில் நமக்கு சாதகமாகவும், சில நேரங்களில் விரோதமானதாகவும் இருப்பது போல நாம் உணரத்தொடங்குவோம்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? வெளிச்சம் குறைந்த அந்த சிறிய தனிய அறையை நாம் நமது தோல்வியின், வீழ்ச்சியின் அடையாளமாக பார்ப்பதுவே. அதனால் தான் அந்த சூழலால் விளையும் கடும் நெருக்கடியிலிருந்து மனம் விடுபட்டுக்கொள்ள நினைக்கிறது அதற்கான வடிகாலகவே இத்தகைய உருவகங்களை மனம் தன்னுள் எழுப்பிக்கொள்கிறது. அந்த சூழலில் இருந்து நாம் மீண்டு வரும்போது மனதின் இந்த உருவகங்களும் காணாமல் போய்விடும். ஊரடங்கின் போது நமக்குள் ஏற்பட்ட உளவியல் சிக்கல்களை நான் இவ்வாறவாகவே புரிந்து கொண்டேன், அதை ஒரு சீரியசான பிரச்சினையாக நான் நினைக்கவில்லை, அதனால் தான் அது தற்காலிகமானது என்று என்னால் நம்பிக்கை கொடுக்க முடிந்தது. ஆனால் ஊரடங்கு தளர்விற்கு பிறகு என்னை பார்க்க வந்தவர்களிடம் நான் கவனித்த புதிய பிரச்சினைகளை அதன் பரிணாமங்களை எளிமையான ஒன்றாகப் பார்க்க முடியவில்லை அது தற்காலிகமானது தான் என கடந்து செல்ல முடியவில்லை.

ஊரடங்கு நேரத்தில் மூடப்பட்டிருந்த எனது கிளினிக், தளர்விற்கு பிறகு திறக்கப்பட்டது. அப்போது கவனித்த சில முக்கியமான விஷயங்கள்:

  • ஊரடங்கிற்கு முன்பு இருந்ததை விட இப்போது நிறைய பேர் உளவியல் ஆலோசனைகளை நாடி வருகிறார்கள்
  • நேரில் வருவதை விட இணைய வாயிலான ஆலோசனையையே நிறைய பேர் விரும்புகிறார்கள்
  • ஊரடங்கு நேரத்தில் இருந்தது போல கொரோனா நோய் குறித்த அதீத அச்சமோ, பீதியோ இப்போது இல்லை பெருமளவில் அது குறைந்திருக்கிறது, அப்படியென்றால் மக்கள் நோயை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 
  • ஊரடங்கு தளர்விற்கு பிறகு தங்களது இயல்பு வாழ்க்கைக்கு எந்த அளவிற்கு முழுமையாக திரும்ப சூழல் அனுமதிக்கிறதோ அந்த அளவிற்கு உறவுகளுக்கிடையேயான சிக்கல்கள் குறைந்திருக்கின்றன.
  • இப்போது மிக முக்கியமான பிரச்சினையாக மக்களுக்கு இருப்பது “நிச்சயமின்மை”. 

நிச்சயமின்மையை எதிர்கொள்வதற்கான திராணி பெருமளவு மக்களிடம் குறைந்திருக்கிறது, அது தான் எதிர்காலத்தை பற்றிய ஒரு பெரிய பதட்டத்தை ஏற்படுத்துகிறது, அதில் இருந்து மீளும் வழிகள் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை அவர்களுக்கு தெரியவில்லை, எதிர்காலத்தின் மீதான அவநம்பிக்கை பெரும் துக்கமாக அவர்களின் மீது கவிய தொடங்கியிருக்கிறது. இந்த காலத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக நான் இதையே பார்க்கிறேன். ஏனென்றால் இதற்கான தீர்வை நாம் வெறும் வார்த்தைகளால் மட்டுமே வழங்கிவிட முடியாது. ஒரு ஆக்கப்பூர்வமான, மக்களின் மீது கரிசனம் கொண்ட அரசாங்கத்தால் மட்டுமே இதில் இருந்து மக்களை மீட்க முடியும், ஒரு பாதுகாப்புணர்வை அவர்களுக்கு வழங்க முடியும்.

இன்னும் முடிவற்று நீடிக்க போகும் நமது காலத்தின் மிக கொடுமையான சமூக, பொருளாதார, மருத்துவ நெருக்கடியில் இருந்து கோடிக்கணக்கான மக்களை மீட்பது அத்தனை எளிதான காரியமல்ல ஆனால் அது முடியாத காரியமும் அல்ல. அதற்காக ஒரு தெளிவான திட்டமிடல்கள் அவசியம் வெறும் அறிக்கைகளால் மட்டுமே அதை செய்து விட முடியாது. முதலில் Vulnerability section மக்களை கண்டறிய வேண்டும், யார் யாருக்கெல்லாம் அடுத்த ஆறு மாதங்கள் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறதோ அவர்களை கண்டறிய வேண்டும், முதலில் அவர்களின் மீது இருக்கும் பொருளாதார சுமைகளை அரசாங்கம் களைய வேண்டும், குறைந்தபட்ச வாழ்வாதாரங்களை உறுதி செய்ய வேண்டும், பெரும்பாலும் மாத ஊழியத்தை நம்பியிருக்கும் ஏராளமான நடுத்தர வர்க்க மக்களுக்கு வேலையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அது வரை அவர்களுக்கான அடிப்படை தேவைகளை உறுதி செய்ய வேண்டும் அதன் வழியாக இந்த அரசு உங்களுடன் தான் இருக்கிறது, உங்களை கைவிட்டுவிடாது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

இந்த பதினைந்து நாட்கள் தளர்வை எதிர் வரும் காலத்திற்கான ஒரு முன்னோட்டமாகவே நான் பார்க்கிறேன். ஊரடங்கின் போது மக்களுக்கு பெரிதாக நிர்ப்பங்கள் எதுவுமில்லை அதனால் பெரிய பாதிப்புமில்லை. ஆனால் ஊரடங்கில் இருந்து வெளியே வரும்போது மக்களின் மீதான நிர்ப்பந்தங்களும், தேவைகளும், பொறுப்புகளும் அதிகரிக்க தொடங்கும், அப்படி அதிகரிக்கும்போது அதை எதிர்கொள்வதற்கான external, internal resources இல்லாதபோது மக்கள் மனரீதியாக சோர்வடைந்து போவதற்கும், நம்பிக்கையிழந்து போவதற்குமான வாய்ப்பு இருக்கிறது, இவை தற்காலிகமான பிரச்சினையல்ல, இதனால் நிரந்தரமான சேதாரம் நம்முடைய வாழ்வில் ஏற்பட்டு விடக்கூடிய ஆபத்து இருக்கிறது.

ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும் காலத்தில் இன்னும் தீவிரமாக நாம் இந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள போகிறோம். ஒரு சிவில் சமூகத்தின் அத்தனை அமைப்புகளும் ஒருமித்து இந்த பிரச்சினைகளை எதிர்கொண்டால் மட்டுமே நாம் இதிலிருந்து பெரிய பாதிப்புகள் எதுவுமின்றி நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும் இல்லையென்றால் இப்படி ஒரு பிரச்சினையே இங்கு இல்லையென்று நமது கண்களை மூடிக்கொள்ளலாம். ஆனால் எத்தனை நாட்கள் அப்படி நம்மை நாம் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியும்? ஒரு பிரச்சினைக்கான தீர்வை நோக்கி செல்ல வேண்டுமானால் முதலில் அப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக நமது பிரச்சினைகளின் தீவிரத்தை உணர்கிறோமோ அவ்வளவு விரைவாக நாம் அதிலிருந்து வெளியேறும் வழியையும் கண்டடையலாம்.

இந்த  அசாதாராண காலம் நமக்கு இன்னும் புதிய புதிய நெருக்கடிகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறது, வேறு எப்போதையும் விட ஒற்றை மானுட குலமாய் நின்று அதை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது. ‘நான் ஒரு தனிநபரல்ல, இந்த சமூகத்தின் ஓர் அங்கம்’ என்பதை மிக அதிகமாய் உணரவேண்டிய காலகட்டமும் இதுதான்.