மதராஸ் – மண்ணும் , கதைகளும் -11 

மதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது.

– கிளின் பார்லோ

கால எந்திரமொன்றில் பயணித்து மதராஸ் என்ற தொன்மையான வரலாற்றுப்புத்தகத்தின்  கடந்தகால பக்கங்களின் சில சுவையான நிகழ்வுகளை பார்க்கும் ஒரு காலவெளி பயணம் இந்த தொடர்

ஆங்கிலேயர்கள் இங்குவந்தபிறகு  இந்தோ சாரசெனிக் கட்டடக்கலை அறிமுகமானது. அரசுக் கட்டிடங்களையும் , உயர்பதவியில் இருந்த அரசு அதிகாரிகளது அரண்மனைகளையும்  இந்த கட்டடக்கலை  பாணியில் கட்டினார்கள்.  முகலாயக் கட்டிடக்கலையுடன் , இந்தியர்களின் ஆலயங்களின் கட்டிடகலையைக் கலந்து இந்த தனித்துவ பாணியை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். அப்போதெல்லாம்  ஐரோப்பியர்கள் இந்தியாவிலிருந்து வரும் ஓவியங்களை வியந்து பார்ப்பார்கள். குறிப்பாக இங்குள்ள பிரமாண்ட கோட்டைகள், அரண்மனைகள், ஆலயங்களை  அதன் கட்டுமானங்களை வியந்து பார்த்து அந்த ஓவியங்களின் அடிப்படையிலேயே இந்தோ சாரசெனிக் கட்டிடக்கலையை உருவாக்கினார்கள்.  முகலாய கட்டிடங்களில்  உருளை வடிவிலான டூம்கள் என்னும் மேற்கூரைகள் இருக்கும்.  தவிர உயர்ந்த ஸ்தூபிகள் நான்குபுறங்களும் தூண்கள் போல இருக்கும். இந்திய ஆலயங்களில் செங்கல் அல்லது கருங்கற்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு உயர்ந்த குவிகோபுரங்கள் இருக்கும். இரண்டையும் கலந்து உருவாக்கப்பட்டவையே இந்தோ சாரசெனிக் கட்டடக்கலை.

இந்த பாணியில் கட்டப்பட்ட கட்டடங்கள் நூற்றுக்கு தொண்ணுற்றைந்து சதவீதம் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதனாலேயே சிவப்பு கட்டிடங்கள் என்று பெயர்வர காரணமாக இருந்தது. சில கட்டிடங்கள் வெள்ளையாக இருக்கும். முகலாய காலத்திலேயே நீங்கள் இதை பார்க்கமுடியும். பல கோட்டைகள் சிவப்பாக இருக்கும். தாஜ்மஹால் போன்ற கட்டிடங்கள் வெள்ளையாக இருக்கும். அங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட அரசுக் கட்டிடங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலும், தேவாலயங்கள் வெள்ளை நிறத்திலும் இருக்கும்.  கடவுள் உறையும் இடத்தை வெண்மை (தூய்மை) என்றும் , அரசகதிகாரத்தை சிவப்பு (இரத்தம்) என்றும் குறியீடாக கொண்டுவந்த அந்த ஓவியரின் திறமை வியப்பாக இருக்கிறது.

இந்த கட்டடங்கள் எல்லாம் நூறாண்டுகள் கழித்து இன்றும் சென்னையில் நிலைத்து நிற்க அதன் பின்னால் இருந்த திட்டமிடலும், நிர்வாகத்திறமையும்தான்.  கட்டடங்களை வடிவமைத்தவர்கள் பிரிட்டிஷ்காரர்களாக இருந்தாலும் கட்டுடம் பொறுப்பை இந்திய ஒப்பந்தக்காரர்களிடம் தந்தார்கள். பெரும்பாலும் இந்த கட்டடங்களில் அதிகளவு தூண்கள், உத்தரங்களை பார்க்கலாம்.    அவற்றுக்காக ஏராளமான மரங்கள் தேவைப்பட்டன. அந்நாட்களில் பெரும்பாலும்  நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பெரும்பாலும் கடல்கடந்து பர்மா, சிங்கப்பூர், மலேசியாவில் வணிகம் செய்துவந்தார்கள். கட்டடங்களுக்கான தரமான பர்மா தேக்குகளை தேர்வுசெய்து அங்கிருந்து எடுத்துவருவதில் இவர்கள் உதவிசெய்தார்கள். அதுபோல இந்திய ஒப்பந்தக்காரர்கள் குறைந்த கூலியில் அதிக வேலையை செய்யும் இந்தியர்களை தேடிப்பிடித்து கொண்டுவந்தார்கள். இதனால் சரியான திட்டமிடலில் குறைந்த செலவில், குறைந்த அவகாசத்தில் நீடித்த கட்டுமான அமைப்பை நிறுவமுடிந்தது.

இந்தியாவிலேயே  சென்னைக்கு மட்டும் ஒரு பெருமையுண்டு. ஆங்கிலேயர்கள் அவர்கள் ஆட்சிக்காலத்தில் அதிகளவு கட்டிடங்களை கட்டிய ஊர் என்ற பெருமைதான் அது. ஆங்கிலேயர்கள் காலத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கட்டிடங்கள் இருந்தன. அதில் பல அழிந்து சில புதுப்பிக்கப்பட்டு இப்போது நம்மிடம் சில சொற்பமான கட்டிடங்கள் எஞ்சியுள்ளன. இதில் கணிசமானவை இந்தோ-சாரசெனிக் பாணியில் கட்டப்பட்டவை. வில்லியம் ஹோட்ஜஸ் மற்றும் டேனெல் என்ற இரட்டையர்களின் ஓவியங்களை அடிப்படையாக வைத்து  கட்டப்பட்ட முதல் இந்தோ சாரசெனிக் கட்டடம் சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் அரண்மனை. பிறகு இந்தியா முழுக்க இந்த பாணியில் பல சிவப்பு கட்டிடடங்கள் கட்டப்பட்டன. தென்னிந்தியாவின் முதல் ரயில்நிலையம். இந்தியாவின் மூன்றாவது ரயில் நிலையமென்று  இராயபுரம் ரயில் நிலையம் இந்த பாணியில் கட்டப்பட்ட கட்டிடம்.

சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம், பொது தபால் அலுவலகம், தென்னக ரயில்வே தலைமையகம், சென்னை உயர் நீதிமன்றம், செனட் ஹவுஸ்- சென்னை பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி, எழும்பூரில் உள்ள  அரசு அருங்காட்சியகம், தேசிய கலை அரங்கு , சென்னை பதிவு அலுவலகம், புனித ஆண்டிரியூ தேவாலயம்(வெள்ளை)  மற்றும் அரசு கவின்கலைக் கல்லூரி, ரிப்பன் கட்டிடம் (வெள்ளை வண்ணம்) , விக்டோரியா அரங்கு, அண்ணா சாலையில் உள்ள ஹிக்கின்பாதம் புத்தக நிலையம் (வெள்ளை வண்ணம்) , புனித ஜார்ஜ் கோட்டை, அமீர் மகால், அரசு அச்சகம் மற்றும் கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையம் போன்ற கட்டிடங்களை குறிப்பிடலாம். இவை எல்லாம் சென்னையில் காலங்கடந்து  இன்றும் அதே பொலிவுடன் நூற்றாண்டு வரலாற்றை சொல்கின்றன.

சிவப்புக்கட்டிடம் விக்டோரியா அரங்குக்கென்று சில பெருமைகள் உள்ளன. சென்னையில் முதன்முதலில் திரைப்படங்கள் வெளியிடப்பட்டது விக்டோரியா அரங்கில்தான். மெட்ராஸ் போட்டாகிராபிக் ஸ்டோரின் உரிமையாளரான டி. ஸ்டீவன்சன் என்பவர் பத்து குறும்படங்களைக் கொண்டு சில காட்சிகளை இங்கு திரையிட்டார். 1892 ஆம் ஆண்டு சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற மகா ஜன சபை மாநாடு வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய நிகழ்வு. அதில்தான்  நீலகிரியின் பிரதிநிதியாக கலந்து கொண்டு ஒடுக்கப்பட்டோர் கோவிலுக்குள் நுழைய அனுமதி வேண்டும் என்று குரல் கொடுத்தார் அயோத்திதாச பண்டிதர். மகாத்மா காந்தி, விவேகானந்தர் , கோபால கிருஷ்ண கோகலே, சுப்பிரமணிய பாரதியார், சர்தார் வல்லபாய் படேல் போன்றோர் இந்த அரங்கில்  பேசியுள்ளார்கள். சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்றோர் இங்கு நாடகங்களை நடத்தியுள்ளார்கள்.

சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள  இந்தோ-சரசெனிக் கட்டிடம் அமீர்மஹால். ஆற்காடு நவாப் குடும்பத்துக்கு சொந்தமான இந்த மாளிகையை முதலில் பிரிட்டிஷார் அவரது நிர்வாக அலுவலக பணிகளுக்காக கட்டினார்கள். பிறகு நட்பு அடிப்படையில் நவாப் குடும்பத்தினருக்காக இந்த இடத்தை வழங்கினார்கள். எழுபது அறைகளை கொண்ட இந்த மாளிகை இன்றும் அதே பொலிவுடன் பராமரிக்கப்படுகிறது

கன்னிமாரா நூலகமும் அப்போது மெட்ராஸ்  மாகாண  தலைமை கட்டடக் கலை நிபுணராக இருந்த எச். இர்வினால் வடிவமைக்கப்பட்டு அப்போது பிரபலமான கட்டிட ஒப்பந்ததாரராக இருந்த நம்பெருமாள் செட்டியாரால் கட்டப்பட்டது. அதை கட்டி முடிக்க ஐந்து லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவானது. அங்குள்ள மர அலமாரிகளும் கட்டுமானப் பொருட்களும் விலை உயர்ந்த பர்மா தேக்கு மரங்களால் உருவாக்கப்பட்டவை.  கட்டடத்தில்  பதிக்கப்பட்ட  சலவைக்கற்கள் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்திலிருந்து படகுகளில் ஏற்றி  பக்கிங்காம் கால்வாய் வழியாக சென்னைக்கு கொண்டுவந்துள்ளார்கள். ஜக்கிள் புக் நூலாசிரியர் பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் பிறந்தது மும்பையில். பிறகு லண்டனுக்கு சென்று அங்கேயே மறைந்தார். அவரும் எச். இர்வினும் நண்பர்கள். ருட்யார்ட் கிப்ளிங் விலங்குகளை நேசிப்பவர். அவரது தாக்கத்தினாலேயே கன்னிமாரா நூலக கட்டிடங்களில் விலங்குகளின் உருவங்கள் இடம்பெற்றதாகவும் ஒரு தகவல் உண்டு.

சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகைக்கு வெள்ளை மாளிகை என்று இன்னொரு பெயரும் உண்டு. இதை வடிவமைத்தவர் ஜி.எஸ்.டி.ஹாரிஸ். கட்டியவர் லோகநாத முதலியார். மாளிகை கட்டிமுடிக்க நான்காண்டுகள்  எடுத்துக்கொள்ளப்பட்டன. சென்னையின் கடும்கோடையை சமாளிக்கும் விதத்தில்  மாளிகையின் மேற்கூரையில் மெட்ராஸ் டெரஸ் கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் பாரம்பரிய முறையில் ஒருவித கலவையை தயார்  செய்து சிமெண்ட்போல பூசுவார்கள். கலவையில் சுண்ணாம்புக்கல், ஆற்றுமணல், கடுக்காய் தண்ணீர், வெல்லம் எல்லாம் கலந்து அரைப்பார்கள். இந்த கலவைதான் ரிப்பன் மாளிகைக்கும் பயன்படுத்தினார்கள். மாளிகையின் ஒவ்வொரு தளத்தையும் இரும்பு உத்தரங்களும் , தேக்குமரக்கட்டைகளும் தங்கி நிற்கின்றன. தரைத்தளத்துக்காக ஆந்திராவிலிருந்து  படகுகள் வழியாக கடப்பாக்கற்களை  கொண்டு வந்தார்கள். மாளிகையின் தனித்தன்மை எந்த திசையில் இருந்து பார்த்தாலும் தெரியும் மாளிகையின்  மேலிருக்கும் கடிகாரம். அதை 1913 ல் ஓக்ஸ் அண்ட் கோ வடிவமைத்து தந்தது. நான்கு பெண்டுலங்களுடன் இயங்கும் தன்மைக்கொண்டது.  மாளிகை கட்டிமுடித்ததும் உள்ளாட்சி அமைப்பின் முன்னோடி ரிப்பன் பிரபுவின் பெயரையே கட்டடத்துக்கு சூட்டினார்கள்.

சென்னையின் புகழ்ப்பெற்ற சிவப்பு கட்டடங்கள்போல  பழமையான வெளியில் தெரியாத சில இடங்களும் உண்டு. அதில் ஒன்று ஹஸ்ரத் சையத்  மூஸா ஷா காதாரி என்ற சூஃபி ஞானியைப் பற்றி சென்னையிலேயே  பல தலைமுறைகளாக வசிப்பவர்களுக்குக்கூட அவ்வளவாக தெரிந்திருக்காது. சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் மெக்காவிலிருந்து சென்னைக்கு வந்து தங்கி இங்குள்ளவர்களுக்கு  ஆன்மீக தொண்டாற்றி அவர்களுக்கான உடற்பிணியை  தீர்த்து வைத்த ஓர்  இஸ்லாமிய மஹான்தான் சையத்  மூஸா ஷா காதாரி. அவரது ஜீவசமாதி சென்னையின் அண்ணாசாலையில் உள்ளது. இந்த இடத்தை மவுண்ட்ரோடு தர்கா என்றும் சொல்வார்கள். நாகூர்தர்கா போல இங்கும் மாற்று மதங்களை சேர்ந்தவர்களும் வருவது வழக்கம்.

சென்னையில் இன்றும் பல இடங்களில் கம்பீரமாக  நிற்கும் அநேக இந்தோ சாரசெனிக் கட்டடங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அதேபோல முறையான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்த கட்டடங்களையும் பார்க்கலாம்.  அண்ணாசாலையில் உள்ள பாரத் காப்பீடு கட்டிடம் சிதிலமடைந்து உள்ளது. சிதிலமடைந்த இந்த மாளிகையை  2006-ல் எல்ஐசி நிறுவனம் இடிக்க திட்டமிட்டபோது அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது  சென்னையின் பாரம்பரிய அடையாளம் என்று மாளிகையை புதுப்பிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. தீர்ப்பின் முடிவில் இதை பாதுகாக்கவேண்டுமென்று உத்தரவு வந்தது.

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்
  2. சென்னையின் முகமான  தி.நகர்- விநாயக முருகன்
  3. சென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் - விநாயக முருகன்
  4. ஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்
  5. அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
  6. அடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்
  7. ஒரு வங்கி திவாலான கதை  - விநாயக முருகன்
  8. மைனர் மாளிகையும் ஒரு நள்ளிரவுப் படுகொலையும் 
  9. சென்னையின் சில பெயர்களும், காரணங்களும்- விநாயக முருகன்
  10. கன்னிமாராவின்  கதை-விநாயக முருகன்
  11. பிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்
  12. கோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்
  13. ஒரு விளையாட்டின் கதை - விநாயக முருகன்
  14. பின்னிமில்லின் கதை - விநாயக முருகன்
  15. ஒரு கால்வாய் மறைந்த கதை  - விநாயக முருகன்
  16. தேசத்தை அளந்த கால்களின் கதை - விநாயக முருகன்
  17. ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை - விநாயக முருகன்
  18. தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் - விநாயக முருகன்