மதராஸ் – மண்ணும் , கதைகளும் -17
1773-ல் அன்றைய மெட்ராஸ் மேயராக இருந்தவர் ஜார்ஜ் பேக்கர் என்ற வர்த்தகர். அவர் முதலில் பிரிட்டிஷ் கடற்படையில் கேப்டனாக இருந்தவர். 1758-ல் நடந்த சென்னை முற்றுகை என்ற தாக்குதலுக்கு வரலாற்றில் இடமுண்டு. பிரெஞ்ச் படைகள் பாண்டிச்சேரியிலிருந்து புறப்பட்டு மெட்ராஸ் வந்து ஜார்ஜ்கோட்டையை தாக்கினார்கள். அந்த தாக்குதலில் பிரிட்டிஷ் அரசு சுமார் இருபத்தைந்தாயிரதுக்கும் மேற்பட்ட பீரங்கிக்குண்டுகளையும் இரண்டுலட்சம் தோட்டாக்களையும் பயன்படுத்தி பிரெஞ்ச் படைகளை பின்வாங்க வைத்தார்கள். இந்தப்போரில் பிரிட்டிஷ் அரசின் கடற்படை சார்பில் திறமையாகப் போரிட்ட கேப்டன் ஜார்ஜ் பேக்கரின் வர்த்தகத்துக்கு பிரிட்டிஷ் அரசு உதவி செய்தது. அந்த நாட்களில் எல்லாம் அப்படித்தான்.பெரும்பாலான வணிகர்கள் முதலில் இராணுவவீரர்களாக இருப்பார்கள். பிறகு வர்த்தகர்களாக மாறி செல்வந்தராக மாரி அரசு உயர்பதவிகளையும் பெற்று பிறகு இங்கு சம்பாதித்த செல்வங்களோடு லண்டனுக்கு திரும்பிச்சென்று ஓய்வெடுப்பார்கள். பென்னிகுக் போன்ற சிலரே இங்கேயே பணியாற்றி இந்த மண்ணிலேயே இறந்துப்போனார்கள். 1761 -ல் பிரிட்டிஷ்காரர்கள் பாண்டிச்சேரியை தாக்கி அதை கைப்பற்றினார்கள். ஆனால் அதன்பின்னால் பாரிஸ் உடன்படிக்கைக்கு பிறகு மீண்டும் பாண்டிச்சேரியை பிரெஞ்சுவசம் ஒப்படைத்தார்கள் என்பது வேறுவிஷயம். பாண்டிச்சேரியை கைப்பற்றிய தகவலை சொல்ல லண்டனுக்கு ஜார்ஜ் பேக்கரைதான் அனுப்பிவைத்தார்கள். அந்த நல்ல செய்தியை கொண்டுவந்த பேக்கருக்கு கிழக்கிந்திய கம்பெனி நிர்வாக இயக்குநர்கள் முன்னூறு பவுண்டுகள் பணம் கொடுத்து மீண்டும் மெட்ராசுக்கே அனுப்பிவைத்தது. இந்தமுறை ஜார்ஜ் கோட்டையில் அவரது செல்வாக்கு இன்னும் ஒருபடி உயர்ந்து இராணுவகேப்டன் என்ற அந்தஸ்திலிருந்து கோட்டையின் சில வணிக ஒப்பந்தங்களை பெற்றார். குறிப்பாக கோட்டைக்கு குடிநீர் கொண்டுச்செல்லும் குழாய்களை அமைக்கும் அரசு ஒப்பந்தந்தை பெற்றார்.
அடையாறு, கூவம் என்ற இரண்டு ஆறுகள் ஓடிக்கொண்டிருந்த அந்தக்காலத்திலேயே மெட்ராசில் குடிநீர்பஞ்சம் தொடங்கிவிட்டது. அந்த இரண்டு ஆறுகளுக்கும் ஆந்திர மலைகளில் இருந்துதான் நீர் வந்துக்கொண்டிருந்தது. சென்னையை பொறுத்தவரை அது கடற்கரை கடைமடை பிரதேசம் என்பதால் எப்போதும் குடிநீர் பஞ்சம் இருந்துள்ளது. குறிப்பாக பருவமழை பொய்க்கும்காலங்களில், கோடைக்காலங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. தவிர நகரமும் நாளுக்கு நாள் விரிந்துக்கொண்டே இருந்தது. கிராமங்கள் எல்லாம் இணைக்கப்பட்டு நகரங்களாக மாறிக்கொண்டிருந்தது. வெளிநாடுகளிலிருந்து வணிகர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். இந்தியாவின் முக்கிய வணிகஸ்தலமாக சென்னை உருவாகிக்கொண்டிருந்தது. தொழிலாளர்களும், மக்களும் பெருகிக்கொண்டே போனார்கள். கறுப்பர் நகரமும், வெள்ளையர் நகரம் இரண்டுக்கும் பொதுவாக இருந்தது குடிநீர் தேவை. மறுபக்கம் பஞ்சம் தலைவிரித்தாட மக்கள் புலம்பெயர்ந்து மெட்ராசுக்கு வரத்தொடங்கினார்கள். குடிநீருக்காக மக்கள் அடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
அப்போதுதான் ஜார்ஜ்கோட்டைக்கு வெளியிலிருந்து பிரமாண்ட குழாய்கள் வழியாக குடிநீர் கொண்டுவர திட்டமிட்டார்கள். ஆனால் அதற்கு மிகுந்த பொருட்செலவு ஆகுமென்று எல்லாரும் சொல்ல ஜார்ஜ் பேக்கரோ வேறுவிதமாக யோசித்தார். மெட்ராசின் வரைபடத்தை எடுத்து கவனமாக பார்த்தார். மலைகள், மேடு, பள்ளம் , காடு , சதுப்புநிலங்கள் என்று கலவையாக இருந்த நிலவமைப்பை பார்த்தவருக்கு ஒரு விஷயம் தோன்றியது. மெட்ராஸ் கடற்கரையோரமாக இருந்ததால் அதன் நிலவமைப்பு மேற்கிலிருந்து கிழக்குப்பக்கமாக சரிந்துள்ளது என்று தோன்றியது. அவர் வங்கக்கடலில் விழும் இரண்டு நதிகளையும் ஆய்வு செய்தார். நதிகளின் இயல்பு மேட்டிலிருந்து பள்ளத்திலிருந்து விழுவது. நதிகளில் எந்திரத்தை வைத்து யாரும் நீரை இறைத்து கடலில் ஊற்றுவதில்லை. இயற்கையே இயல்பான புவியீர்ப்பு விசையை வைத்து அதை செய்துள்ளது என்று யோசித்தவர் அதையே தனது திட்டமாக சொன்னார். எல்லாருக்கும் அவரது யோசனைகளை பிடித்துப்போனது. அதாவது ஜார்ஜ்கோட்டை தாண்டி சற்று மேடான அதேநேரம் நீர்ப்பிடிப்பு உள்ள ஒரு பகுதியில் வரிசையாக ஏழு பெரிய கிணறுகளை தோண்டுவது. இயற்கையான புவியீர்ப்புவிசையை வைத்தே அதிலிருந்து வெளியேறும் நீரை குழாய்களில் கொண்டுவருவது. பிறகு நீர் ஜார்ஜ்கோட்டையை அடைந்ததும் அங்கிருந்து மேலேற்றி கோட்டைக்குள் வசிக்கும் வெள்ளையர் குடியிருப்புகளுக்கு கொண்டுச்செல்வது என்று முடிவானது. எல்லாரும் அவரது திட்டத்தைப் பாராட்டினார்கள்.
கிணறுகள் வெட்ட பெத்துநாயக்கன்பேட்டை என்ற இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்தத்திட்டத்தை வடிவமைத்த பேக்கர் இன்னொரு யோசனையையும் சொன்னார். அந்த கிணற்றுநீரை ஊர்மக்களுக்கு மட்டுமில்லை துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டு நிற்கும் கப்பல்களுக்குகூட குழாய்கள் வழியாக எடுத்துச்செல்லலாம். கடலுக்கடியில் குழாய்களை பதிக்கவேண்டுமென்று ஒரு யோசனையை முன்வைத்தார். ஆனால் மிகுந்த பொருட்செலவின் காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டார்கள். ஆனால் ஏழுகிணற்றிலிருந்து கறுப்பர்நகரத்துக்கும், கோட்டைவாசிகளுக்கு குடிநீர் கொண்டுச்செல்லும் திட்டம் வெற்றிப்பெற்றது. ஜார்ஜ் பேக்கர் ஒரு சாமர்த்தியமான வணிகர். ஏழுகிணற்றை வெட்டியபிறகு அந்த கிணற்றை அவர்தான் சொந்தமாக நிர்வகித்து வந்தார். இருபத்தொரு ஆண்டுகளுக்குப்பிறகுதான் அந்த கிணறுகளை கிழக்கிந்திய கம்பெனிக்கு விற்றார். பிறகு சம்பாதித்த சொத்துகளோடு லண்டன் சென்றுவிட்டார்.
ஜார்ஜ் பேக்கர் பற்றி எழுதும்போது பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் என்ற இன்னொரு ஆங்கிலேயரின் நினைவு வருகிறது. ஆங்கிலம் போலவே தமிழிலும் சரளமாக எழுத, பேச தேர்ச்சிப்பெற்றவர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர். மதராஸ் மாகாண ஆட்சியராக இருந்த இவர் தமிழ்மொழிமீதும், தமிழ் இலக்கியங்களின் மீதும் தீராக்காதலை கொண்டிருந்தார். எல்லீஸ் என்ற பெயரை தனது தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப எல்லீசன் என்று மாற்றிக்கொண்டவர். தமிழ் இலக்கணத்தை முறையாக பயின்ற எல்லீசன் சொந்தமாக தமிழில் செய்யுள் இயற்றுமளவுக்கு தேர்ச்சியடைந்திருந்தார். ஆங்கிலேய அதிகாரிகளுக்கு தென்னிந்திய திராவிட மொழிகளை கற்பித்தவர். இதற்காக ஜார்ஜ்கோட்டையில் ’சென்னைக் கல்ல்விச் சங்கம்’ என்ற கல்லூரியை 1812ல் நிறுவிமொழி ஆய்வுகளுக்கான மையமாக அதை உருவாக்கினார். கால்டுவெல்லின் ‘திராவிடமொழிகளின் ஒப்பிலக்கண’ என்ற ஆய்வுநூலுக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்பாகவே 1816ல் ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கருத்தை வெளியிட்டவர். 1809 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணத்தின் நிலச்சுங்க அதிகாரியாகப் பதவி ஏற்ற இவர் 1810 ஆம் ஆண்டில் ஆட்சியராக பொறுப்பேற்றார். ஏழுகிணறுகள் வெட்டியபோது எல்லீஸ் அந்த கிணற்றில் திருக்குறளின் வான்சிறப்பு அதிகாரங்களில் இருந்த திருக்குறள்களை பொறித்தார். இதை வைத்தே தமிழ்மொழி மீதான அவரது காதலை தெரிந்துக்கொள்ளலாம். தமிழ்மொழி ஆராய்ச்சிக்காகவே வாழ்ந்த எல்லீஸ் தனது நாற்பத்தோராவது வயதில் உடல்நலக்குறைவால் ராமநாதபுரத்தில் மறைந்தார். அவரது கல்லறை இன்றும் அங்குள்ளது.
வருடங்கள் செல்ல செல்ல ஜார்ஜ் பேக்கரும், எல்லீசும் உருவாக்கிய அந்த ஏழு கிணறுகளில் நீர் வறண்டு மீண்டும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. சென்னையை சுற்றி இருந்த ஏரி, குளங்களை பாதுகாக்க அவற்றை விரிவாக்க தேவை எழுந்தது. அதற்கென்று தனி அரசுத்துறையை உருவாக்க பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தது. அப்படித்தான் 1820-ல் பொதுப்பணித்துறையை உருவாக்கினார்கள். அவர்கள் உருவாக்கிய பொதுப்பணித்துறைதான் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்தத்துறை தமிழ்நாட்டின் மூன்றாவது பழமையான துறையாகும். வருவாய் மற்றும் சட்டம் முதல் இரண்டு துறைகளாகும். தனிநபர்கள் வசமிருந்த இந்தத்துறை 1858-இல் அரசுத்துறையானது. பொதுப்பணித்துறைதான் அனைத்து அரசு கட்டடங்கள் மற்றும் பாசன திட்டங்களான அணைகள், கால்வாய்கள், ஏரிகளை பராமரிக்கும் பணிகளை செயல்படுத்தி வருகிறது. இன்று சென்னைக்கு வீராணம் , செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் போன்ற ஏரிகளிலிருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. ஆனால் இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி வைத்தது ஜார்ஜ் பேக்கர் மற்றும் எல்லீஸ்.
முல்லைப்பெரியாறு அணையை கட்டி இங்குள்ள மக்களுக்காகவே வாழ்ந்து அவர்களுக்காக இங்கேயே உயிரைவிட்ட பென்னிகுக்போல ஜார்ஜ் பேக்கரை பெரிதாக யாரும் நினைவுகூறுவதில்லை. காரணம் அவர் பென்னிகுக்போல சொந்த பணத்தை போட்டு கட்டிய திட்டம் இல்லை. தவிர அவரது வேலை முடிந்ததும் மெட்ராசை விட்டு போய்விட்டார். அதனாலேயே இந்த மண்ணும் அவரை நினைவில் வைத்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். ஜார்ஜ் பேக்கர் நினைவாக சென்னையில் ஒரு தெருவே உள்ளது. எல்லீஸ் நினைவாகவும் சென்னையில் ஒரு சாலை உள்ளது. ஜார்ஜ் பேக்கர் தெரு பாரிமுனை அருகில் உள்ளது, பேக்கர் தெரு. ஆனால் அங்கு சென்னை மாநகராட்சி வைத்திருக்கும் பெயர்பலகையில் பேக்கர் தெரு என்பதற்கு பதில் பாரக்ஸ் தெரு என்று பிழையாக பெயர் இடம்பெற்றுள்ளது. இதுவரை எவரும் அதை கண்டுகொள்ளவுமில்லை. சென்னையிலேயே பல ஆண்டுகள் வசிப்பவர்கள்கூட யார் அந்த பேக்கர் என்று பெரிதாக கண்டுக்கொண்டதில்லை.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்
- சென்னையின் முகமான தி.நகர்- விநாயக முருகன்
- சென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் - விநாயக முருகன்
- அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
- அடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்
- ஒரு வங்கி திவாலான கதை - விநாயக முருகன்
- மைனர் மாளிகையும் ஒரு நள்ளிரவுப் படுகொலையும்
- சென்னையின் சிவப்பு மாளிகைகள்- விநாயக முருகன்
- சென்னையின் சில பெயர்களும், காரணங்களும்- விநாயக முருகன்
- கன்னிமாராவின் கதை-விநாயக முருகன்
- பிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்
- கோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்
- ஒரு விளையாட்டின் கதை - விநாயக முருகன்
- பின்னிமில்லின் கதை - விநாயக முருகன்
- ஒரு கால்வாய் மறைந்த கதை - விநாயக முருகன்
- தேசத்தை அளந்த கால்களின் கதை - விநாயக முருகன்
- ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை - விநாயக முருகன்
- தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் - விநாயக முருகன்