மதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது.
– கிளின் பார்லோ
கால எந்திரமொன்றில் பயணித்து மதராஸ் என்ற தொன்மையான வரலாற்றுப்புத்தகத்தின் கடந்தகால பக்கங்களின் சில சுவையான நிகழ்வுகளை பார்க்கும் ஒரு காலவெளி பயணம் இந்த தொடர்
மதராஸ் – மண்ணும் , கதைகளும் -13
வங்கிகளில் முதலீடு செய்துள்ள பொதுமக்கள் பணத்தை பெரும்தொழிலதிபர்கள் கடனாகப் பெற்று அதைத் திருப்பிக்கட்டாமல் வங்கியை திவாலாக்கிவிடும் சம்பவங்கள் இன்றைய காலகட்டத்தில் நமக்கொன்றும் பெரிய விஷயம் இல்லை. நாடெங்கும் ஒவ்வொருநாளும் அப்படியான சம்பவங்கள் நடந்துக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பெல்லாம் அது மிகப்பெரிய பரபரப்பான நிகழ்வாகப் பேசப்பட்டது.
அன்றைய மெட்ராஸில் முதலாவது பீச் லைனில் உள்ளஅர்பத்நட் என்ற பெயரில் ஒரு வங்கி செயல்பட்டுக்கொண்டிருந்தது. ஒருநாள் அந்த வங்கி திவாலானது. வங்கி திவாலான செய்தி காட்டுத்தீபோல மெட்ராஸ் மாகாணம் முழுக்க பரவியது. மெட்ராசில் இருந்தவர்கள் வங்கியின் முன்னால் குவிய ஆரம்பித்தார்கள். விஷயம் கேள்விப்பட்டு வெளியூர்க்காரர்களும் பதறியடித்து ஓடிவந்தார்கள். நேரம் செல்லச் செல்ல மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. மக்கள்கூட்டத்தை கட்டுப்படுத்த பிரிட்டிஷ் அரசு காவலர்களை அனுப்பி வைத்தது. தாங்கள் பாடுபட்டு உழைத்தப்பணம் பறிபோனதை பொறுக்கமுடியாத மக்கள் வங்கி மீது கல்வீச ஆரம்பித்தார்கள். அவர்களை கட்டுப்படுத்த வந்த பிரிட்டிஷ் போலீசார் மீதும் தாக்குதல் நடந்தது. மக்கள் வன்முறை கட்டுமீறிப்போவதை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு கூடுதலாக காவலர்களை அனுப்பிவைத்தது. அந்நாட்களில் கலவரங்களை கட்டுப்படுத்த குதிரை போலீசார்கள்தான் வருவார்கள். குதிரைகளில் வந்த போலீசார்கள் கலவரக்காரர்களை அடித்து நொறுக்கி ஓடவைத்தார்கள்.
பிரான்சிஸ் லதோரால் பதினெட்டாம் நூற்றாண்டில் துவங்கப்பட்ட இந்த வங்கி முதலில் ஒரு வர்த்தக நிறுவனமாகத்தான் இருந்தது. அன்றைய மைசூர் சமஸ்தானத்தில் நிறைய காபி தோட்டங்கள் இருந்தன. அங்கிருந்து காபிக்கொட்டைகளை வாங்கி லண்டனுக்கு கப்பலில் ஏற்றி வணிகம் செய்யும் வேலைகளை இந்த நிறுவனம் செய்துவந்தது. தவிர பருத்தித்துணிகளுக்கு இடும் சாயங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வேலைகளையும் இந்த நிறுவனம் பிரதானமாக செய்துவந்தது. ஒருக்கட்டத்தில் இந்த நிறுவனம் தங்கள் வணிகத்தை விரிவுப்படுத்த பெரும்நிதியை திரட்ட முடிவுசெய்தார்கள். அதற்காக பொதுமக்களிடம் பணத்தை பெற்று அவர்களது முதலீட்டு தொகைக்கு ஐந்து சதவீதம் வட்டி தரும் திட்டத்தை அறிவித்தார்கள். அந்நாட்களில்பெரும்தொழிலதிபர்களாகவும், வணிகர்களாகவும் இருந்த செட்டியார்கள், முதலியார்கள் தவிர பெரும்பாலும் பிரிட்டிஷ் அரசின் உயர்பதவிகளில் இருந்த பிள்ளைமார்கள் , ஜமீன்தார்கள் தவிர வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் என்று ஓரளவு நடுத்தர வசதி படைத்த பலரும் முதலீடு செய்ய முன்வந்தார்கள். தவிர கணிசமான பிரிட்டிஷ்காரர்களும் அந்த வங்கியில் பணத்தை முதலீடு செய்ய ஆர்வம்காட்டினார்கள்.
தொடக்கத்தில் அந்த நிறுவனம் நேர்மையாகத்தான் செயல்பட்டுவந்தது. ஃப்ரான்சிஸ் லதோர் இந்நிறுவனத்தை திறமையாக நடத்திக்கொண்டிருந்தார். முதலீடு செய்தவர்களின் பணத்துக்கு உரிய வட்டி தவறாமல் கிடைத்துவந்தது. 1803வாக்கில் அர்பத்நாட் குடும்பத்திலிருந்து ஒருவர் இந்நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். நிறுவனத்தை தொடங்கிய ஃப்ரான்சிஸ் லதோர் ஓய்வுபெற்றுவிட பிறகு நிறுவனம் அர்பத்நாட் டிமோன்டி அண்ட் கம்பனி என்று பெயர் மாற்றப்பட்டு பிறகு அர்பத்நாட் அண்ட் கோ என்று மாறியது. அர்பத்நாட் வந்தபிறகுதான் இந்த நிறுவனத்துக்கு தலைவலி தொடங்கியது. காலப்போக்கில் நிறுவனத்தின் வியாபாரத்தில் பல்வேறு வழிகளில் நஷ்டம் ஏற்பட ஆரம்பித்தது. ஒருபக்கம் இயற்கை சீற்றங்களினால் கப்பலுக்கு ஏற்றிச்செல்ல வேண்டிய பொருட்கள் தேக்கமடைந்தன. இன்னொருப்பக்கம் மேலும் பல நிறுவனங்களும் வணிகத்தில் இறங்கியதால் தொழில்போட்டி. தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதில் சிக்கல்கள். நேரத்துக்கு கப்பல்கள் வந்துசேரவில்லை. மறுப்பக்கம் உயர்பதவியில் இருப்பவர்களின் ஊழல்கள். ஒருக்கட்டத்தில் அந்த பிரமாண்ட அர்பத்நாட் என்ற கப்பல் கடலில் மூழ்க ஆரம்பித்தது.
அர்பத்நாட்டை பொறுத்தவரை அவர் ஒரு ஆரம்ப பிரியராகவே எப்போதும் இருந்துவந்துள்ளார். வங்கிப்பணத்தை எடுத்து தனது சொந்த ஆடம்பரத்துக்கு பயன்படுத்திய தகவல்கள் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தன. அர்பத்நாட் மெட்ராசில் இருந்த ஐரோப்பிய சங்கத்தலைவராகவும் இருந்தார். அதனால் அவரது செயல்பாடுகளை பற்றி யாரும் கேள்விகேட்டதில்லை. நிறுவன முடிவுகளை தன்னிச்சையாக எடுப்பது நெருக்கமானவர்களுக்கு கடன்களை அள்ளிவிடுவது என்று பொறுப்பற்று செயல்பட்டுக்கொண்டிருந்தார். தவிர அப்போது ஐரோப்பியர்களிடம் தங்க வேட்டை என்ற பெரும்மோகம் இருந்தது. நீலகிரி, ஆனைமலை போன்ற அடர்ந்த வனங்களில் தங்கச்சுரங்கம் உள்ளது. தோண்டினால் டன்கணக்கான தங்கம் கிடைக்கும் என்ற வதந்தியை நம்பி பலரும் அங்கே சிறுசிறு குழுக்களாக, தனிநபர்களாக தங்கவேட்டை நடந்திக்கொண்டிருந்தார்கள். வசதி படைத்தவர்கள் பெரும் முதலீடு செய்து ஆட்களையும், பொருட்களையும் வரவழைத்து தங்கவேட்டையில் இறங்கினார்கள். அந்த வேட்கை அர்பத்நாட்டையும் விடவில்லை. நிறுவனத்தின் பணத்தை கணிசமாக எடுத்து இந்த தங்க தேடுதல் பணிக்கு செலவழித்தார். புதையல் தேடுவது வியாபாரமல்ல. அது சூதாட்டத்தை விட மோசமான செயலென்று பலர் எச்சரிக்கை விடுத்தும் அர்பத்நாட் கேட்கவில்லை. இந்த தங்கவேட்டை அப்போது இந்தியாவில் மட்டுமல்ல. தென்னாப்பிரிக்கா, தென்னமெரிக்கா போன்ற நாடுகளின் பல்வேறு காடுகள், மலைப்பகுதிகள், பள்ளத்தாக்குகளிலும், மேற்கிந்திய தீவுகளின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நடந்தன. அங்கெல்லாம் கூட அர்பத்நாட் முதலீடு செய்ய தொடங்கினார். வருடக்கணக்கில் தேடியும் குன்றுமணி தங்கம்கூட கிடைக்கவில்லை.
வங்கி நொடித்துப்போக இன்னொரு காரணம் அந்த வங்கியின் லண்டன் முகவரும், அர்பத்நாட் வங்கியின் துணைநிறுவனமான மெக்ஃபடைன் நிறுவன தலைவர் பேட்ரிக் மெக்ஃபடைன் என்பவர். வங்கியின் பணத்தை இவர் லண்டன் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்திருந்தார். வங்கி ஒருக்கட்டத்தில் நொடித்துப்போக நிலைமை கட்டுமீறி போவதை உணர்ந்த மெக்ஃபடைன்
லண்டன் சுரங்க ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்துக்கொண்டார். அவரது தற்கொலையை தொடர்ந்து நீதிமன்றத்தில் திவால் மனு கொடுக்கப்பட்டது. மெக்ஃபடைன் தற்கொலைக்கு மறுநாள் 1906ஆம் ஆண்டு அக்டோபர் 22 அன்று திவால் மனு கொடுக்கப்பட்டது. வங்கி திவாலாகும்போது அதன் கையிருப்பில் வெறும் 27 லட்சம் பணம் மட்டுமே இருந்தது. ஆனால் மக்களுக்கு திருப்பிக்கொடுக்க வேண்டிய பணம் அதைப்போல பத்துமடங்கு. வரவைப்போல கடன் பத்துமடங்கு. ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி வங்கிக்கணக்கை தணிக்கை செய்துபார்க்கும்போது அந்த 27 லட்சம் பணமும் இல்லை. வங்கியை பூட்டி சீல் வைத்தார்கள். பிரிட்டிஷ்காரர்கள் எல்லாரும் ஏமாற்றுபேர்வழிகள் இல்லை என்பதையும் மெட்ராஸ் கவர்னராக இருந்த லார்ட் வென்லாக் போன்றவர்கள் நிரூபித்தார்கள். செல்வம் படைத்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வணிகர்களை திரட்டி அவர்களிடமிருந்து சிறுதொகையை வசூல் செய்து வங்கிதிவாலால் பாதிக்கப்பட்ட ஏழை ,எளிய மக்களுக்கு கொடுக்க முயற்சி செய்தார். ஆனால் அவ்வளவுபெரிய தொகையை அவரால் திரட்டமுடியவில்லை. அர்பத்நாட் வங்கி திவாலானதற்குப்பிறகுதான் இந்தியாவில் சுதேசி வங்கிகள் துவங்கப்பட்டன, பஞ்சாபில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் தமிழ்நாட்டில்,இந்தியன் வங்கியும் தொடங்கப்பட்டன. அப்போது மெட்ராசின் புகழ்பெற்ற வழக்கறிஞர் கிருஷ்ணசாமி அய்யர் என்பவர் வியபாரத்தில் பெருமளவு ஈடுபட்டிருந்த செட்டியார்களை அழைத்து பேசி சுதேசி வங்கியின் தேவையை புரியவைத்து இந்தியன் வங்கியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்.
அர்பத்நாட் வங்கி நொடித்துப்போனதிலும், பிரிட்டிஷ் காவலர்கள் தாக்கியதிலும் பலர் பெரும் மனஉளைச்சல் அடைந்திருந்தார்கள். பணம் போட்ட பலருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. சிலர் தற்கொலை செய்துக்கொண்டார்கள். மகாகவி பாரதியே இந்த வங்கி திவாலானதுப்பற்றி தொடர்ந்து எழுதிவந்துள்ளார் என்றால் இது எந்தளவு முக்கியத்துவமான நிகழ்வென்று பார்த்துக்கொள்ளுங்கள். இதுப்பற்றி இலந்தை சு. ராமசாமி எழுதிய இந்திய சுதந்திரப் போராட்டம் நூலில் சில தகவல்கள் உள்ளன. ஒருநாள் சுப்ரமணிய ஐயர் அவரது வீட்டுக்கு பாரதியை அழைத்து இதுப்பற்றி பேசியுள்ளார். ஐயரை பார்த்து நீங்க எதுவும் அந்த வங்கியில் பணம் போட்டீங்களா என்று கேட்க, என் பணத்தை விடுங்க. ஆனால் சுதேசிய நிதி முழுவதையும் அதில்தான் முதலீடு செய்திருந்தேன் என்று வேதனை தெரிவித்துள்ளார். இதில் உங்க தப்பு என்ன இருக்கு? வங்கி ஏமாற்றினால் நீங்க என்ன செய்யமுடியும் என்று பாரதி கேட்டுள்ளார். இல்லை பாரதி. இது மக்கள் பணம். ஏழை எளிய மக்கள் பலர் சுதந்திரப்போராட்டத்துக்காக என்னை நம்பி கொடுத்த சுதேசி பணம். நான் பாதுகாப்பாக இருக்குமென்று அந்தவங்கியில் முதலீடு செய்தேன். அவர்கள் என்னை ஏமாற்றவில்லை. நம் மக்களை ஏமாற்றியுள்ளார்கள். இதை நாம் சும்மாவிடக்கூடாது என்று ஆவேசமாக சொல்லியுள்ளார். நான் இதுப்பற்றி இந்தியா பத்திரிக்கையில் எழுதுகிறேன். நீங்கள் சுதேசமித்திரனில் எழுதுங்க என்று பாரதியிடம் சொன்னார்.
அதைத்தொடர்ந்து பாரதி அந்த வங்கியை பற்றி பல தகவல்களை சேகரித்து அங்கு நடந்த ஊழல்களை விரிவாக தொடர்ந்து பதிவு செய்ய ஆரம்பித்தார். பாரதி வேலைபார்த்த பத்திரிக்கை அலுவலகமும் அர்பத்நாட் வங்கியும் ஒரே இடத்தில இருந்ததால் பாரதிக்கு இந்தச்செய்தி மிகுந்த மனஉளைச்சலை கொடுத்துள்ளது. தினமும் அலுவலகம் செல்லும்வழியில் அந்த வங்கிமுன்னால் பித்துபிடித்ததுபோல உட்கார்ந்திருந்த பலரையும், அழுது கொண்டிருந்தவர்களையும் பார்த்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். குரலற்ற சாமானியனின் குரலாக ஒலிக்கும் முதல்குரல் எப்போதும் ஒரு கலைஞனுடையதாக இருக்கும். இதே இந்தியர் ஒருவர் நடத்தும் நிறுவனம் திவாலாகி யிருந்தால் பிரிட்டிஷார் சும்மா விடுவார்களா. ஆங்கிலேயர் நிறுவனம் என்பதால்தான் இப்படி பொறுப்பற்று அலைக்கழிக்கிறார்கள் என்று உணர்ந்த பாரதி அந்த வங்கி ஊழல் பற்றி புலன்விசாரணை செய்து பல தகவல்களை சேகரித்து கட்டுரைகளை எழுதஆரம்பித்தார்.
பாரதியின் ஒரு கட்டுரையிலிருந்து….
இந்த சமாச்சாரம் கேட்டவுடனே அனேக ஜனங்கள் நீரில் முழுகிச் சாகப்போகிறவர்கள் துரும்பைக் கைப்பற்றிப் பிழைத்துவிட முயல்வது போல ஆர்பத்நாட் கம்பெனி சேதமடைந்து விட்டதென்று கேள்விப் பட்டதற்கப்பால் தத்தம் பணம் ஒருவேளை கிடைக்கலாமென்ற ஆசையுடன் கடற்கரையோரத்திலிருக்கும்
‘ஆர்பத்நாட் கம்பெனி ‘ வாசலுக்கு ஓடிச் சென்றார்கள். கம்பெனி கட்டிட வாசலிலே பெரிய பெரிய எழுத்துக்களில் பின்வருமாறு எழுதி ஒட்டப்பட்டிருந்தது :
‘ஆர்பத்நாட் கம்பெனியார் கடனாளிகளுக்குப் பணம் கொடுப்பதை நிறுத்தி வைத்திருப்பதாக விசனத்துடன் அறிவித்துக் கொள்கிறார்கள்.’
இதைப்பார்த்த உடனே ஜனங்களெல்லாம் இன்னது செய்வதென்று தெரியாமல் திகைத்தார்கள். ஒரு க்ஷணத்திற்குள்ளே கதியற்றுப் போய்விட்ட விதவைகளும், கிழவர்களும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழுதார்கள். அதற்குள் கம்பெனி வாசலிலே நிறுத்தப்பட்டிருந்த குதிரைப் போலீஸார் ஜனங்களைச்
சவுக்காலடித்துத் துரத்தத் தொடங்கினார்கள். ‘ஐயோ! வெள்ளைக்காரன் கையிலே பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டுச் சவுக்கடியும் படவேண்டுமோ! தெய்வமே! ‘ என்று ஜனங்கள் அலறிக்கொண்டு திரும்பினார்கள்.
‘இந்தியா ‘ – 27.10.1906 – சுப்பிரமணிய பாரதியார்’
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்
- சென்னையின் முகமான தி.நகர்- விநாயக முருகன்
- சென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் - விநாயக முருகன்
- ஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்
- அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
- அடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்
- மைனர் மாளிகையும் ஒரு நள்ளிரவுப் படுகொலையும்
- சென்னையின் சிவப்பு மாளிகைகள்- விநாயக முருகன்
- சென்னையின் சில பெயர்களும், காரணங்களும்- விநாயக முருகன்
- கன்னிமாராவின் கதை-விநாயக முருகன்
- பிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்
- கோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்
- ஒரு விளையாட்டின் கதை - விநாயக முருகன்
- பின்னிமில்லின் கதை - விநாயக முருகன்
- ஒரு கால்வாய் மறைந்த கதை - விநாயக முருகன்
- தேசத்தை அளந்த கால்களின் கதை - விநாயக முருகன்
- ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை - விநாயக முருகன்
- தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் - விநாயக முருகன்