மதராஸ் – மண்ணும் , கதைகளும் -19
சென்னையின் வரைபடத்தில் இருநூறு முன்னூறு ஆண்டுகள் வரை திநகரோ மேற்கு மாம்பலமோ இடம்பெறவில்லை. ஏரிகளும், குளங்களும், குட்டைகளும் நிறைந்த பள்ளமான பகுதியாகவே அது இருந்துள்ளது. வடசென்னை ,அடையாறு மைலாப்பூர் போன்ற பகுதிகளில் மட்டும் மக்கள் குடியிருப்பு இருந்தது. தேனாம்பேட்டை பகுதி மெல்ல விரிவடைய ஏரிக்காடாக இருந்த திநகர் , மாம்பலம் பகுதிகளும் வளர்ந்தன. எழுத்தாளர் அசோகமித்திரன் தனது கட்டுரையொயொன்றில் இப்போது திநகர் பேருந்துநிலையம் அமைந்துள்ள இடம் பெரிய குட்டையாக இருந்ததாக குறிப்பிடுகிறார். அந்த குட்டை இருந்ததாக அவர் குறிப்பிடும் வருடம் 1960. ரங்கநாதன் தெருவில் ஒருசில வெளியூர் வியாபாரிகள் மட்டுமே கடைகள் நடத்தி வந்ததாக அசோகமித்திரன் சொல்கிறார். சுதந்திரத்துக்கு பிறகு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகுகூட திநகர் பெரியளவில் வளரவில்லை. எண்பதுகளில்தான் அது மாநகரின் மையத்துக்குள் வந்தது. அப்படி இருக்கும்போது பிரிட்டிஷ் காலத்தில் திநகர் எப்படியிருந்திருக்குமென்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.
1911-ஆம் ஆண்டில் மாம்பலம் ரயில் நிலையத்தை கட்டியபிறகுதான் திநகரின் வளர்ச்சி தொடங்கியது. 1920-ம் ஆண்டில் பிரிட்டிஷார் மாநகர கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில், ‘மதராஸ் டவுன் ப்ளானிங் ஆக்ட்-1920’ என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அந்தத் திட்டம்தான் தி.நகரின் உருவாக போட்ட ஆரம்பவிதை. திநகர் புகழடைய காரணமாக இருந்தது ஓர் அரசியல் இயக்கம்தான். அந்த அரசியல் இயக்கமும், வணிகர்களும் வந்தபிறகுதான் புறநகராக இருந்த அந்தப்பகுதி கவனம்பெற்றது. அந்த அரசியல் இயக்கத்தின் பெயர் நீதிக்கட்சி. சென்னையில் இன்று பிராமணர்கள் அதிகம் வசிக்கும் இடத்தில்தான் ஒருகாலத்தில் பிராமண ஆதிக்கத்துக்கு எதிராக நீதிக்கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
1920-ல் நடந்த தேர்தலில் நீதிக்கட்சி வென்றது. அந்தகட்சியின் தலைவர் பிட்டி தியாகராயர். கட்சித்தலைவராக இருந்தாலும் முதல்வர் பதவியை ஏற்க மறுத்து கட்சிப்பணிகளை தொடர்ந்தார். பனகல் அரசர் முதலமைச்சராக பொறுப்பேற்றார். பிட்டி தியாகராயர் மறைந்ததும் அப்போதைய முதல்வர் பனகல் அரசர் அந்த பகுதிக்கு தியாகராய நகர் என்று பெயர் வைத்து கவுரவித்தார்.
சென்னை மாநகரின் வேறு எந்த இடத்துக்கும் இல்லாத சிறப்பொன்று தி.நகருக்கு உண்டு. அது திநகரில் எங்கு திரும்பினாலும் நீதிக்கட்சி தலைவர்களின் பெயர்களை, சிலைகளை பார்க்கமுடியும். பனகல் அரசரின் மறைவுக்கு பிறகு அவரது பெயர் சூட்டிய பனகல் பூங்கா இருப்பதும் தி.நகரில்தான். நீதிக்கட்சியை சேர்ந்தவரும் சமூகப்போராளியுமான சௌந்தரபாண்டியனார் நினைவாக பாண்டிபஜார் இருப்பதும் தி.நகரில்தான். நீதிக்கட்சியின் இன்னொரு நிறுவனரான டாக்டர் சி. நடேச முதலியார் நினைவாக அமைக்கப்பட்ட நடேசன் பூங்கா இருப்பதும் தி.நகரில்தான். பூங்கா மட்டுமில்லை. தெருவுக்கும் இவரது பெயர் உள்ளது.
நீதிக்கட்சியின் பொருளாளராகவும், சென்னை மாநகராட்சி தலைவராகவும் பதவி வகித்தவர் இருந்தவர் கோபதி நாராயணசாமி செட்டி. இவரது நினைவாக திநகரில் ஜி.என்.செட்டி சாலை உள்ளது. நீதிக்கட்சி தலைவர்களுள் ஒருவரான டாக்டர் டி.எம் நாயர் நினைவாக நாயர் சாலை உள்ளது. சென்னை மாகாண ஆளுநரின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும், திருவாங்கூர் சமஸ்தான திவானாகவும் பணியாற்றிய நவாப் கான் பகதூர் சர் முகமது ஹபிபுல்லா நினைவாக ஹபிபுல்லா சாலை உள்ளது. பிராமணர் அல்லாதவருக்கு முழுமையாக பணிவாய்ப்பு கிட்டும்வரை பிராமணர்களுக்கு எந்த பணிவாய்ப்பும் வழங்கப்படக்கூடாது என்கிற தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் முகமது ஹபிபுல்லா. 1920 – நீதிக்கட்சி தேர்தலில் வென்றபோது சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பட்டியலின சமூக உறுப்பினர் எம்.சி.ராஜா. சட்டமன்றத்தில் நீதிக்கட்சியின் துணைத்தலைவராக இருந்தவர். 1922-ல் சட்டமன்றத்தில் பறையர், பஞ்சமர் என்ற சொற்களுக்கு பதிலாக ஆதிதிராவிடர் என்ற சொற்களை பயன்படுத்த வேண்டுமென்ற தீர்மானத்தை கொண்டு வந்தவர். அவரது பெயரில் எம்.சி.ராஜா சாலை உள்ளது.1925ல் சென்னை மாநகராட்சி தலைவராய் இருந்தவர் திரு. தணிகாசலம். அவரது பெயரில் தணிகாசலம் தெரு உள்ளது.
திநகரில் இருக்கும் உஸ்மான் சாலைக்கு அந்தப்பெயர் வர காரணமாக இருந்தவரும் நீதிகட்சியை சேர்ந்தவர்தான். கான் பகதூர் சர் முகமது உஸ்மான் என்பது இவரது முழுப்பெயர். இவர் சென்னை கிறிஸ்தவக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். 1916 ல் நீதிக் கட்சியில் சேர்ந்த உஸ்மான் சில ஆண்டுகள் கழித்து சென்னை மாகாண பொதுச்செயலாளராகத் தேர்வானார். 1920-ல் நீதிக் கட்சி சார்பில் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். சென்னை நகர முஸ்லிம் தனித்தொகுதியில் வெற்றிப்பெற்று சட்டசபை உறுப்பினரானார். 1932-1934 திரு. பொப்பிலி ராஜா மாகாண பிரதம மந்திரியாக இருந்த போது உஸ்மான் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவர் 1925-ஆம் ஆண்டில் சென்னை சிறுவர் குற்றவாளிகள் பள்ளிச்சட்டம் கொண்டு வந்தார்.இதன் காரணமாகவே சிறுவர் குற்றவாளிகள் கல்வி பயில முடிந்தது. 1927-ஆம் ஆண்டில் தோட்டத் தொழிலாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவந்தார். இச்சட்டத்தின் வாயிலாக ஒப்பந்தக்காரர்களாலும் தரகர்களாலும் இன்னலில்லாமல் தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பு பெற்றனர். 1934 ஆம் ஆண்டில் தனது உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தனக்குப் பதிலாக ஏ.டி.பன்னீர் செல்வத்தை அந்த பதவியில் நியமிக்க பரிந்துரை செய்தார். விடுதலைக்குப் பின் 1952-1954 ஆண்டுகளில் சென்னை சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு பெற்று 1960 வரை அப்பதவியில் இருந்திருக்கிறார். சென்னை மாகாண கவர்னராக பதவி வகித்த முதல் தமிழர் என்ற பெருமையும் இவருக்குண்டு. உஸ்மானை யுனானி மருத்துவர் என்றும் சொல்வார்கள். ஆனால் அவர் மருத்துவப்பட்டமோ பயிற்சியோ பெற்றதில்லை. உஸ்மானின் மனைவி வழி மற்றும் பெற்றோர் வழி தாத்தாக்கள் யுனானி வைத்தியத்தில் சிறந்து விளங்கியவர்கள். பிரிட்டிஷ் காலத்தில் எல்லாம் சித்தம், ஆயுர்வேத சிகிச்சை எல்லாம் குடும்ப தொழிலாக இருந்தது. குடும்பத்தில் இருக்கும் எல்லாரும் மருத்துவர்களாக இருப்பார்கள். எனவே உஸ்மானுக்கும் யுனானி மருத்துவர் என்ற அடைப்பெயர் வந்தது. உஸ்மான் மருத்துவர் இல்லையே தவிர 1925-ஆம் ஆண்டில் இந்திய மருத்துவக் கல்வி அமைப்பு உருவாகக் காரணமான அரசுக் குழுவின் இவர் தலைவராக இருந்தார். அரசுக்கு இவர் அளித்த அறிக்கை உஸ்மான் அறிக்கை என்றே அழைக்கப்படுகிறது. இந்தியாவில் வெளியிடப்பட்ட மிக முக்கியமான முதல் சுகாதார அறிக்கை அதுதான். உஸ்மான் தேனாம்பேட்டையில் இருந்த மிகப்பெரிய மாளிகையில் வசித்தார். 1993-ல் அந்த மாளிகை இடிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டன. உஸ்மானுக்கு குழந்தைகள் இல்லை. அவர் தனது சகோதரரின் மகனையும் மகளையும் தத்தெடுத்து வளர்த்தார். உஸ்மான் 1960 ல் மறைந்தார். இந்த நீதிக்கட்சி நிறுவனர்கள் அனைவரது சிலைகளையும் சென்னையில் தி.நகரில் மட்டும்தான் பார்க்கமுடியும்.
இன்று நாம் பார்க்கும் திநகருக்கு மூன்று காலகட்டம் உள்ளது. அதன் முதல்காலக்கட்டம் நீதிக்கட்சியால் வளர்ந்தது என்றால் இரண்டாவது காலம் அறுபதுகளில் எழுபதுகளில் தொடங்கியது. நீதிக்கட்சி மறைந்தபிறகு திநகரின் செல்வாக்கு சற்று சரிய அந்த இடத்தை வணிகர்கள் நிரப்பி மீண்டும் திநகரை உருவாக்கினார்கள். தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சத்தினால் தெற்கிலிருந்து சென்னைக்கு வந்த நாடார் சமூகத்தினர் ஆங்காங்கு வணிக மையங்களை திறக்க திநகர் வளர்ந்தது. இன்னொருப்பக்கம் வியாபாரத்தில் சிறந்தவிளங்கிய செட்டியார் சமூகமும் திநகரை வளர்த்தது. திநகரின் மூன்றாவது காலம் எண்பதுகளுக்கு பிறகு உலகமயமாக்கல் ஏற்பட்ட பிறகு தொடங்கியது. அதுதான் நாம் பார்க்கும் இன்றைய திநகர். பொதுவாக வந்தாரை வாழவைக்கும் ஊர் என்று சென்னையை சொல்வார்கள். சென்னையிலும் அந்த பெயர் திநகருக்குதான் அதிகம் பொருந்தும். பெரிய பெரிய முதலாளிகள் கடை நடத்தும் அதே பகுதிதான் நூற்றுக்கணக்கான சிறுவியாபாரிகளை, நடைபாதை கடைக்காரர்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. உலகில் வேறெந்த மொழியிலாவது ஒரு தெருவை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளிவந்துள்ளனவா என்று தெரியவில்லை. ஆனால் தமிழில் திநகரில் இருக்கும் ரங்கநாதன் தெருவை வைத்து ‘அங்காடித்தெரு’ என்று ஒரு திரைப்படம் வெளிவந்துள்ளது.
அசோகமித்திரன் அவரது பலக்கட்டுரைகளில் அந்நாளைய சென்னை குறிப்பாக திநகர் எப்படி மின்சாரம்கூட இல்லாமல் ஆளரவமற்று கிடந்தது என்று குறிப்பிட்டுள்ளார். ரங்கநாதன் தெருவும் அதில் ஒன்று. அந்த தெருவுக்கு முதலில் குடிவந்தவர் இரங்கசுவாமி ஐயங்கார். அப்போதைய பிரிட்டிஷ் அரசில் ஒரு நடைமுறை இருந்தது. யார் முதலில் ஒரு பகுதியில் இடம் வாங்கி வீடுகட்டுகிறார்களோ அவர்கள் விரும்பினால் அந்த தெருவுக்கு அவர்கள் பெயர் சூட்டப்படும். 1920-ல் சென்னை மாகாண அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற துபில் இரங்கசுவாமி ஐயங்கார் இங்கு வீடு கட்டுகிறார். அப்போதுதான் நீதிக்கட்சியும் தேர்தலில் ஜெயித்தது. குடியுரிமை அலுவலர்கள் கேட்டபோது தனது பெயர் வேண்டாம் ஸ்ரீரங்கர் பெயரை வைங்க என்றார். இரங்கசுவாமி என்று சூட்டப்பட இருந்த பெயர் இரங்கநாதன் என்று மாறியது. ஒரு மனிதன் உயிரோடு இருக்கும்வரை மட்டும்தான் அவன் பணத்தால் போற்றப்படுவான். இறந்தபிறகு எல்லா மனிதர்களும் அவர்களது செயலால் போற்றப்படுவார்களே தவிர செல்வாக்கால் அல்ல. இதற்கு இன்னொரு உதாரணம் திநகரில் இருக்கும் நாதமுனி தெரு, கோவிந்து தெரு. இவர்கள் இருவரும் பெரிய அரசியல் தலைவர்களோ, வணிகர்களோ இல்லை. ஏன் கையெழுத்துக்கூட போடத்தெரியாத படிக்காதவர்கள். கூலித்தொழில் செய்துவந்தவர்கள். திநகரில் பாதாளச்சாக்கடை அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டபோது அந்த பணிகளில் ஈடுபட்டு மண்சரிந்து இறந்த தொழிலாளர்கள். அவர்களது நினைவாக நாதமுனி தெரு, மற்றும் கோவிந்து தெரு திநகரில் உள்ளது. இந்த சம்பவத்தை நல்லி குப்புசாமி செட்டியார் அவர் எழுதிய “தியாகராய நகர்: அன்றும் இன்றும்” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். செல்வாக்கான கட்சி, செல்வாக்கான மனிதர்கள் என்றில்லை. ஒரு நகரம் சாமான்ய மனிதனை கூட நினைவில் வைத்துக்கொள்ளும். நகரத்தை திட்டமிட்டு உருவாக்கலாம். ஆனால் மாநகரை அப்படி திட்டமிட்டெல்லாம் உருவாக்கமுடியாது. காலம் செல்ல செல்ல மனிதர்கள் பெருக பெருக அந்த நகரம் விரிவடைந்து மாநகராக மாறும். கடலில் விழும் ஒவ்வொரு துளியும் கடல்தான் என்பதுபோல இங்குள்ள ஒவ்வொரு சாமான்ய மனிதனின் வாழ்க்கையும் சேர்ந்ததுதான் மாநகரம். இந்த மாநகரம் தன்னை நம்பிவரும் யாரையும் கைவிடாது. அதற்கு சரியான உதாரணம் திநகர்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்
- சென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் - விநாயக முருகன்
- ஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்
- அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
- அடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்
- ஒரு வங்கி திவாலான கதை - விநாயக முருகன்
- மைனர் மாளிகையும் ஒரு நள்ளிரவுப் படுகொலையும்
- சென்னையின் சிவப்பு மாளிகைகள்- விநாயக முருகன்
- சென்னையின் சில பெயர்களும், காரணங்களும்- விநாயக முருகன்
- கன்னிமாராவின் கதை-விநாயக முருகன்
- பிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்
- கோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்
- ஒரு விளையாட்டின் கதை - விநாயக முருகன்
- பின்னிமில்லின் கதை - விநாயக முருகன்
- ஒரு கால்வாய் மறைந்த கதை - விநாயக முருகன்
- தேசத்தை அளந்த கால்களின் கதை - விநாயக முருகன்
- ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை - விநாயக முருகன்
- தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் - விநாயக முருகன்