மதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது.

– கிளின் பார்லோ

கால எந்திரமொன்றில் பயணித்து மதராஸ் என்ற தொன்மையான வரலாற்றுப்புத்தகத்தின்  கடந்தகால பக்கங்களின் சில சுவையான நிகழ்வுகளை பார்க்கும் ஒரு காலவெளி பயணம் இந்த தொடர்

மதராஸ் – மண்ணும் , கதைகளும் -12

உலகில் நடக்கும் எத்தனையோ நிகழ்வுகளின் பின்னால் இருக்கும்  காரணம் பிடிபடாமல் அதன் வசீகரிக்கும் புதிர்தன்மையாலே அது காலங்கடந்தும் பேசப்படுவதுண்டு. அப்படியொரு நிகழ்வுதான் சென்னையில் ஆங்கிலேயர்கள் காலத்தில் பள்ளியொன்றில் நடந்த படுகொலைச் சம்பவம். நூறாண்டுகள் கழித்தும் இன்றளவும் இந்தக் கொலைக்கான காரணம் கொலையாளிகள் யார் என்று கண்டுபிடிக்கமுடியாமல் புதிராகவே உள்ளது.

அன்றைய தேனாம்பேட்டையில் (இப்போதிருக்கும் காமராஜ் நினைவரங்கம் எதிரே) நியூயிங்டன் ஹவுஸ் என்ற பெயரில் பெரிய அரண்மனை போன்ற ஒரு பள்ளிக்கூடம் இயங்கிக்கொண்டிருந்தது. அதற்கு மைனர் பங்களா என்றும் இன்னொரு பெயர் இருந்தது. மைனர் பள்ளிக்கூடம் என்றும் சிலர் அழைத்தார்கள். மைனர் என்றால் பதினெட்டு வயதுக்குள் இருப்பவர்கள் என்று அர்த்தம் இல்லை. இது வேறு மைனர். சொல்லப்போனால் அங்குப்படித்த பலரும் பதினெட்டு வயதுக்குள்தான் இருந்தார்கள். அந்நாட்களில் ஜமீன்தார்கள் வாரிசுகளை மைனர்கள் என்று அழைப்பார்கள். அவர்களில் பலர் பெரும்பாலும் பளபளவென்று மின்னும் மஸ்லீன் சட்டைகளையும், மல்லுவேட்டியையும்   அணிந்து உடம்பில் அத்தர் பூசிக்கொண்டு  கழுத்தில் புலிப்பல் பதித்த தங்கச்சங்கிலி மின்ன குதிரைவண்டிகளில் உட்கார்ந்து ஊருக்குள் வலம்வருவது வழக்கம். இவர்களை ஊருக்குள் ’மைனர்கள்’ என்று அழைப்பார்கள்.

சிங்கம்பட்டி ஜமீன், வருஷநாட்டு ஜமீன், கண்டமனூர் ஜமீன்  என்று அந்நாட்களில் ஆங்கிலேயர்களுக்கு  இணையாக இவர்களும் அதிகாரத்துடனும், செல்வச்செழிப்போடும் இருந்தார்கள். பழைய இந்தியாவில் மஹராஜாவின் வாரிசுகளாவது சிலநாட்கள் அரண்மனையை விட்டுப் பிரிந்து காடு,மேடுகளில் அலைந்து சாதாரண மக்களுடன் இருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டு வரவேண்டும். ஆனால் பின்னாட்களில் வந்த இந்த ஜமீன் வாரிசுகள் அநேகர் கால் தரையில் படாமல் வாழப் பழகியிருந்தார்கள்.  ஆங்கிலேயர் இங்கு வந்தபிறகு அவர்களின் நாகரிகம், பேச்சு, ஆடம்பர வாழ்க்கை  எல்லாம் இந்த மைனர்களை பின்னுக்கு தள்ளிவிட்டது. என்னதான் பணம் இருந்தாலும் ஆங்கிலேயர்களை பொறுத்தவரையில் இந்த ஜமீன்தார், அவர்களின் வாரிசுகளும் அடிமைகள்தானே? அதனால் ஜமீன்தார்கள் ஆங்கிலேயர்களுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக்கொண்டு அவர்களைப்போலவே கோட்டு, சூட்டு அணிவது, முடிவெட்டிக்கொள்வது, தோல் காலணிகள் அணிவது, ஆங்கிலம் பேசுவது , ஆங்கிலேயர்களுடன் விருந்தில் கலந்துக்கொள்வது, சீமைச்சரக்கை நாகரகமாக அருந்துவது, குதிரையேறி வேட்டைக்குச்செல்வது, துப்பாக்கி சுடும் பயிற்சி, பில்லியர்ட்ஸ், கிரிக்கெட் விளையாடுவது என்று கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். அப்படி ஆங்கிலேயர்களின் பழக்கவழக்கங்களை, லண்டன் வாழ்க்கை, பொதுஅறிவு,   ஆங்கில மொழியைக் கற்றுக்கொடுக்கும்  பள்ளியாகவே இந்த மைனர் பள்ளி தொடங்கப்பட்டது. எனவே இங்கு மிகப்பெரிய செல்வந்தர்களின், ஜமீன்தார்களின் வாரிசுகள் மட்டுமே தங்கிப் படித்துவந்தார்கள். ஜமீன் பரம்பரையிலிருந்து வந்தவர்கள் என்பதாலும் மைனர்கள் என்பதாலும் அவர்களில் பலர் கட்டற்ற சுதந்திரமும், இளமைக்கே உரிய வேகமும், விபரீத விளையாட்டுத்தனமும் கொண்டவர்களாக இருந்தார்கள். அப்படியொரு விபரீத விளையாட்டாகத்தான் அந்த படுகொலையும்  நடந்தது.

பள்ளியின் பிரின்சிபால் டி லா ஹே  (De la hey) என்பவர் ஸ்காட்லான்ட்டிலிருந்து வந்தவர். சற்று வயதானவர். தன்னைவிட மிகக்குறைந்த வயதுடைய பெண்ணை மணமுடித்திருந்தார். தனது அழகான இளம்மனைவியோடு அதே விடுதியில் தங்கியிருந்தார். ஒருநாள் நள்ளிரவில் அந்த  விடுதியில் துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்கிறது. உறங்கிக்கொண்டிருந்த மாணவர்கள் பதறியடித்து மாடிக்குச்சென்று பார்க்க டி லா ஹே  தலையில் துப்பாக்கிக்குண்டு துளைத்து இறந்துக்கிடக்கிறார். சற்றுத்தள்ளி பித்துபிடித்ததுபோல அவரது மனைவி உட்கார்ந்துள்ளார். யாரோ ஒரு மாணவன் சுதாரித்துக்கொண்டு தொலைபேசியை எடுத்து பிரிட்டிஷ் காவலர்களுக்கு செய்தியைத் தெரிவிக்கிறான். ஆம் இந்த சம்பவம் நடந்த 1919-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி மெட்ராசில் அநேக செல்வந்தர்களின் மாளிகைகளில் தொலைபேசி வந்துவிட்டன. டிராம் வண்டிகள் வந்துவிட்டன. நகரமெங்கும் மின்சாரவிளக்குகள் கூட வந்துவிட்டன. வாகனத்தில் விரைந்துவந்த காவலர்கள் சடலத்தைக் கைப்பற்றி விசாரணையை தொடங்குகிறார்கள். காவல்துறையினரோடு மேஜர் ஹட்சன் என்ற பிரிட்டிஷ் மருத்துவரும் வருகிறார். அவர்  சடலத்தைப் பார்த்துவிட்டு உயிர்பிரிந்துவிட்டதை உறுதிசெய்கிறார்.

முதல்கட்ட விசாரணையில் இது தற்கொலையல்ல, கொலைதான் என்று உறுதியாக தெரிந்துவிடுகிறது. காரணம் டி லா ஹே இடதுகைப்பழக்கம் கொண்டவர். அவரது வலது நெற்றிப்பொட்டில் துப்பாக்கிக்குண்டு துளைத்திருந்தது. இன்னொரு விஷயம் காவல்துறை கைப்பற்றிய துப்பாக்கி ரகம் 12-போர் துப்பாக்கி. அதை இரண்டு கைகளால் தூக்கிப்பிடித்தே ஒருவரால் சுடமுடியும். டி லா ஹேவால் அதை  ஒருகையால் எடுத்து நெற்றிப்பொட்டில் வைத்து சுட்டிருக்கமுடியாது. ஒருவேளை அவர் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்திருந்தால் உட்கார்ந்தப்படியோ  அல்லது நின்றபடியோ நீளமான அந்தத்துப்பாக்கியின் முனையை  தொண்டைக்குழியில் வைத்து கால்பெருவிரலால் டிரிக்கரை அழுத்தினால் மட்டுமே சாத்தியப்படும். அப்படி செய்திருந்தால் முகம் முழுவதுமாக சிதைந்துப்போயிருக்கும். தவிர அந்த துப்பாக்கி அறையில் இல்லை. அது விடுதிக்கு வெளியே புல்தரையில் கிடந்தது.   இதையெல்லாம் விட இது கொலைதான் என்ற முடிவுக்கு உறுதியாக வர காரணம் டி லா ஹே மனைவியின் செயல்பாடுகள். விசாரித்தவரையில் அவரைப்பற்றிய  நல்ல அபிப்ராயத்தை யாரும் சொல்லவில்லை. அவருக்கும் அந்தப்பள்ளியில் இருந்த மாணவர்களுக்கும் நெருக்கம் இருந்துள்ளது. அதுதொடர்பாக மாணவர்களிடம் பலநேரங்களில் வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. டி லா ஹேவுக்கும் இந்த விஷயம் அரசல்புரசலாக தெரிந்துள்ளது. தம்பதிகளுக்குள் அடிக்கடி வாக்குவாதமும்,சண்டையும் வந்துள்ளது.

ஒருவேளை ஏன் டி லா ஹேவின் மனைவியே தனது கணவரை கொன்றிருக்கக்கூடாது என்ற கோணத்தில் அணுகும்போதுதான் இந்த விசாரணையையே  தலைகீழாக புரட்டிப்போடும் சம்பவம் நடந்தது. அது அங்கு படித்துக்கொண்டிருந்த சிங்கம்பட்டி ஜமீன்தாரின் வாரிசுகளில் ஒருவர் தானாக முன்வந்து (அப்ரூவர்) காவல்துறையினரிடம் கொடுத்த சாட்சியம். இந்த கொலையை நான் நேரில் பார்த்தேன். கடம்பூர் ஜமீன் மைனர்தான் இந்தக்கொலையை செய்தார் என்று சொல்லி காவல்துறையினரை அதிரவைத்தார்.  கடம்பூர் மைனர் ஏன் சுட்டார் என்பதற்கு சிங்கம்பட்டி மைனர் சொன்னது. அந்தப்பள்ளியின் பிரின்சிபால் டி லா ஹே இனத்துவேஷம் கொண்டவர். ஒருமுறையல்ல. பலமுறை  எங்களை பார்த்து தமிழர்கள் பார்பேரியன் அதாவது காட்டுமிராண்டிகள் என்று திட்டுவார். அது மாணவர்கள் பலரை மிகவும் காயப்படுத்தியது. கடம்பூர் மைனர் அதிகமாக காயப்பட்டிருந்தார்.  பிரின்சிபாலை கொலைசெய்வதென்று அவர் திட்டமிட்டார். அந்தத் திட்டத்தையும் என்னிடம் சொன்னார். துப்பாக்கியை எடுத்து மாடிக்கு போகும்போது என்னையும் அழைத்துச்சென்றார். எனது கையில் ஒரு துப்பாக்கியும் இருந்தது.  கடம்பூர் மைனர் பிரின்சிபாலை சுடும்போது அவரது மனைவி சத்தம்கேட்டு ஓடிவந்தால் அவளை நான் சுடவேண்டும். இதான் திட்டம். ஆனால் கடம்பூர் மைனர் பிரின்சிபாலை சுட்டதும் எனக்கும் பயம்வந்துவிட்டது. அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன். ஓடிவரும்போது எனது கையில் இருந்த துப்பாக்கியை மாடியில் இருந்து வெளியே தூக்கிப்போட்டேன் என்று சாட்சியம் சொல்ல காவல்துறையினருக்கு குழம்பிவிட்டது.

சிங்கம்பட்டி வாரிசைத்தவிர வேறு யாரும் வேறு எந்த மாணவர்களும் கடம்பூர் மைனர்மேல் குற்றம் சொல்லவில்லை. சொல்லப்போனால் கடம்பூர் மைனர் நல்லவர் என்றே விசாரணையில் சொன்னார்கள். சிங்கம்பட்டி வாரிசு குறிப்பிட்ட இடத்தில் தேடி அந்தத்துப்பாக்கியை எடுத்துவருகிறார்கள். அந்த துப்பாக்கியை  சோதனை செய்யும்போது மாடியிலிருந்து தூக்கிப்போட எந்த தடயமும் இல்லை. 12-போர் துப்பாக்கி கொஞ்சம் எடைகூடுதலாக இருக்கும். மாடியிலிருந்ந்து தூக்கிப்போடும்போது கண்டிப்பாக அந்த துப்பாக்கியின் மரக்கட்டையில் கீறலோ மண்ணோ ஒட்டியிருக்கும். ஆனால் ஒருவர் துப்பக்கியை கையில் எடுத்துவந்து நிதானமாக அந்த இடத்தில்  வைத்துவிட்டுப் போனதுபோலத்தான் அந்த புதுத்துப்பாக்கி இருந்துள்ளது. தவிர துப்பாக்கித்தோட்டாக்களை மாடியிலிருந்து வீசியதாக சிங்கம்பட்டி சொன்னதும் பொய். அப்படி வீசியிருந்தால் தோட்டாக்கள் சிதறி கிடந்திருக்கும். ஆனால் காவல்துறையினர் கைப்பற்றிய தோட்டாக்கள் துப்பாக்கி பக்கத்தில் ஒரே இடத்தில் கிடந்தன.

            மீண்டும் விடுதியிலிருந்த  மாணவர்களை விசாரிக்க இந்தமுறை தெளிவற்ற சாட்சியங்கள் கிடைக்க ஆரம்பித்தன. மாணவர்கள் ஒவ்வொருவரும்  ஒவ்வொரு கதை சொன்னார்கள். எல்லா மாணவர்களும் சேர்ந்து கூட்டுச்சதி செய்து கொலையை நிகழ்த்தியிருக்கலாம் என்றும் காவலர்களுக்குத் தோன்றியுள்ளது. ஆனால் அப்படி இருந்தால் இரண்டுபேரை மட்டும் குற்றவாளியாக்கமுடியாது. அங்கு படித்த ஒவ்வொருவரையும் விசாரிக்கவேண்டும். காவலர்கள் தலையை பிய்த்துக்கொள்ள அப்போதைய மெட்ராசின் ஆளுநர் லார்டு வெலிங்டனுக்கு இந்தத் தகவல் போனது. அவர் இது சாதாரண கொலை வழக்காக இருக்காது.  பல ஜமீன்தார்களின் வாரிசுகள் சம்பந்தப்பட்டுள்ளார்கள். தவிர இறந்தவரும் சாதாரண ஆளில்லை. மதராஸில் இந்த வழக்கு நடந்தால் தனக்கு தேவையற்ற சிக்கல்கள் வரும். லண்டன் வரை செல்லும். தனது பதவிக்கும், பெயருக்கும் களங்கம் வருமென்று யோசித்துள்ளார். இந்த வழக்கு மெட்ராசில் நடந்தால் தேவையற்ற சிக்கல்கள், கலவரங்கள் வருமென்று பம்பாய் நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றினார்.

இந்த கொலை வழக்குக்கு வெளியிலிருந்து பலர் நெருக்கடி கொடுத்தார்கள்.  விரைவில் வழக்கை   வழக்கை முடிக்கும்படி அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. வெல்டன் , வாடியா போன்ற பிரபல வழக்கறிஞர்கள் களத்தில் இறங்கினார்கள். வெல்டன் அரசுத்தரப்பிலும் , வாடியா கடம்பூர் மைனர் சார்பாகவும் ஆஜரானார்கள். வாடியாவுக்கு துணையாக  டாக்டர் சுவாமிநாதன் மற்றும் எத்திராஜ் என்ற வழக்கறிஞர்கள் சென்னையிலிருந்து சென்றார்கள். சிங்கம்பட்டி மைனருக்கு ஆதரவாக தாவர் என்ற வழக்கறிஞர் இருந்தார். மெட்ராஸில் நடந்த ஒரு கொலை இந்தியாவெங்கும் தலைப்புச்செய்தியானது. புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் மோதிக்கொள்கிறார்கள் என்றதும் நீதிமன்றமே பரபரப்பாக இருந்தது. ஜுனியர் வழக்கறிஞர்கள் எல்லாரும் குறிப்புகள் எடுக்க ஆர்வமாக கூடினார்கள்.   கடம்பூர் மைனர் சார்பாக வாதாடிய வாடியா எழுந்து வந்து கேள்விகள் கேட்க ஆரம்பித்ததும் சாட்சிசொல்ல வந்த மைனர்களுக்கு சப்தநாடியும் ஒடுங்கியது.  சாட்சியமளித்த  மாணவர்கள் பலரது வாக்குமூலங்களை வாடியா நீதிமன்றத்தில் அடித்து நொறுக்கினார். மைனர்கள் பலருக்கும் பொழுதுபோக்கே பொய்சொல்வது, வெட்டியாக சுற்றுவது, பெண்கள் பின்னால் சென்று வம்பிழுப்பது என்பதால் அவர்களது வாக்குமூலத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்ற முடிவுக்கு நீதிபதி வந்தார். இந்த வழக்கு நடக்கும்போது நீதிபதிகளின் கேள்விகளுக்கு மாணவர்கள் விழிப்பதும், வாடியாவின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு மைனர் மாணவர்கள் ஏடாகூடமாக பதில் சொல்லி மாட்டிக்கொள்வதும் நீதிபதிகள் தலையிலடித்துக்கொள்வதும், பார்வையாளர்கள் வெடித்துச்சிரிப்பதும், நமது மெட்ராஸ் மாகாண மைனர்களின் காதல் லீலைகளை, அவர்களது வாக்குமூலங்களை ஆங்கிலேய பெண்கள்  குறும்புடன் ரசிப்பதும் என்று அந்நாட்களில் நீதிமன்றமே களைக்கட்டியுள்ளது. அதிலும் ஒருசில மைனர்கள் பேசஆரம்பித்தாலே நீதிமன்றத்தில் எல்லாரும் சிரிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

சுண்டி என்ற மைனர் சாட்சி சொல்லும்போது கடம்பூர் மைனர்தான் கொன்றான் என்றான். இருட்டில் ஓர் உருவம் மாடிக்கு துப்பாக்கியுடன் சென்றது. சுருள் முடி, கட்டுமஸ்தான உடல். எனவே அது கடம்பூர் மைனர்தான் என்று சாட்சியம்  சொல்லியிருந்தது. ஆனால் கடம்பூர் மைனருக்கு சுருள் முடி, கட்டுமஸ்தான உடல் இல்லை. அந்த அம்சம் சிங்கம்பட்டி மைனருக்குத்தான் உரித்தானது. தவிர சாட்சி சொன்ன சுண்டியின் பெயர் விடுதியில் அடிக்கடி நடந்த திருட்டுப்புகார்களில் அடிப்பட்டுள்ளது. எனவே அவனை பொய்சாட்சி என்று துரத்திவிட்டார்கள். கடம்பூருக்கு எதிராக சாட்சி சொன்ன இன்னொரு மாணவரை துருவி துருவி விசாரிக்க அவன் தனக்கும் டிலாஹே மனைவிக்கும் இருந்த நெருக்கம் கடம்பூர் மைனருக்கு பிடிக்காமல் அடிக்கடி சண்டை வந்ததாக சொன்னான். எனவே  கடம்பூர் மைனர் மேல் வேண்டுமென்றே பழிப்போட்டதாக  அந்த சாட்சியையும் முறியடித்தார்கள். ஒரு மாணவன் சாட்சி சொல்லும்போது  அவர்கள் அனைவரும் ஒதகமந்து சுற்றுலா சென்றபோது அங்கு ஒரு  மலைஜாதிப்பெண்ணை சந்தித்து அவளோடு நெருக்கமாக இருப்பதை சகமாணவன் கவனித்து டிலாஹேவிடம்  போட்டுக்கொடுக்க டிலாஹே மோசமாக திட்டி கண்டித்துள்ளார் என்பதை பதிவு செய்தான். ஆனால் டிலாஹேவை நான் கொலைசெய்யவில்லை என்றான்.  இப்படியே ஒவ்வொரு சாட்சியாக கழித்துக்கொண்டே வந்து இறுதியில் சிங்கம்பட்டி சொன்னதும் பொய்யென்று நிரூபித்தார்கள். எனவே கடம்பூர் மைனரை நிரபராதி என்று விடுவித்தார்கள்.

தவிர இந்த வழக்கின் இறுதிதீர்ப்பு வெளியானநாளில்  எல்லாரும் இறுக்கமாக உட்கார்ந்திருக்க நீதிபதியின் மனைவி மட்டும் தீர்ப்பை வரவேற்று எழுந்து நின்று ஆர்ப்பாட்டமாக கைதட்டியது எல்லாமே சந்தேகத்துக்கிடமாக இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரையோ காப்பாற்றவே வழக்கின் தீர்ப்பு இருந்ததாக மக்கள் சந்தேகப்பட்டார்கள். இந்த வழக்கில் ஒரேயொரு சாட்சி என்றால் அது கொலையை நேரில் பார்த்த டி லா ஹேவின் மனைவி மட்டுமே. அவருக்கும்  விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் சிலருக்கும் நெருக்கம் இருந்துள்ளது. அதனால்தான் இந்த கொலை நடந்துள்ளது. அந்த கோணத்தில் யாரும் இதை விசாரிக்கவே இல்லை. ஆனால் அவரோ சித்தப்பிரமை பிடித்தாற்போல இருந்தார். அவர் இறுதிவரை விசாரிக்கப்படவேயில்லை. நீதிமன்றத்துக்கும் வரவில்லை. வழக்கு நடக்கும்போதே லண்டனுக்கும் போய்விட்டார். பிறகு அந்தப்பள்ளியை நிரந்தமாக சீல்வைத்து இழுத்துப்பூட்டினார்கள். இந்த மைனர் பள்ளியை இழுத்து மூடியதைப்பற்றியும் யாரும் பெரிதாக கவலைப்படவில்லை. ஏனெனில் அங்கு படித்ததே மைனர்குஞ்சுகள் மட்டும்தான். அவர்களுக்கு எந்தவித கல்வியையோ, நல்லொழுக்கங்களையோ இந்த பள்ளியால் போதிக்கமுடியவில்லை. இங்கு ஒரு கூடுதல் தகவலை குறிப்பிட வேண்டியுள்ளது. டி லா ஹேவின் சகோதரி டோர்த்தே டி லா ஹே  என்ற பெண்மணிதான் பின்னாட்களில் ராணி மேரி கல்லூரியை நிறுவினார்.

இளமைக்கே உரிய சில விளையாட்டுத்தனங்கள் இருப்பது சகஜம்தான். அதுவும் அவர்கள் ஜமீன்தார்களின் வாரிசுகள் வேறு. பொலிகாளைகள்போல திரிபவர்கள்.    ஆனால் எல்லாமே ஓர் எல்லைக்குள் இருக்கவேண்டும். எல்லைத்தாண்டும்போது அது விபரீதங்களில் முடியும் என்பதற்கு இந்த மெட்ராஸ் கொலை வழக்கு ஓர் உதாரணம். சரி. யார்தான் டி லா ஹேவை கொன்றது? அந்த ரகசியம் மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்  ஒன்று இறந்துப்போன டி லா ஹே. இரண்டாவது அந்த கொலைகாரன். மூன்றாவது டி லா ஹே மனைவி. இப்போது இவர்களில் யாருமே உயிரோடு இல்லை. ஒருவேளை அந்த மைனர் பங்களாவின் சுவர்களில் இருந்த செங்கற்களுக்கு தெரிந்திருக்கலாம். இப்போது சென்னையில் அந்தப்பள்ளியும் இல்லை. சிதைந்து மக்கி மண்ணோடு மண்ணாக போய்விட்டது. மெட்ராஸின் மண்ணோடு கலந்துவிட்ட இந்த கதை நூறாண்டுகள் தாண்டியும் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்
  2. சென்னையின் முகமான  தி.நகர்- விநாயக முருகன்
  3. சென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் - விநாயக முருகன்
  4. ஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்
  5. அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
  6. அடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்
  7. ஒரு வங்கி திவாலான கதை  - விநாயக முருகன்
  8. சென்னையின் சிவப்பு மாளிகைகள்- விநாயக முருகன்
  9. சென்னையின் சில பெயர்களும், காரணங்களும்- விநாயக முருகன்
  10. கன்னிமாராவின்  கதை-விநாயக முருகன்
  11. பிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்
  12. கோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்
  13. ஒரு விளையாட்டின் கதை - விநாயக முருகன்
  14. பின்னிமில்லின் கதை - விநாயக முருகன்
  15. ஒரு கால்வாய் மறைந்த கதை  - விநாயக முருகன்
  16. தேசத்தை அளந்த கால்களின் கதை - விநாயக முருகன்
  17. ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை - விநாயக முருகன்
  18. தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் - விநாயக முருகன்