மதராஸ் – மண்ணும் , கதைகளும் -10 

மதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும் ஒரு பகுதியாக சரித்திரத்தில் அமைந்துள்ளது.

– கிளின் பார்லோ

கால எந்திரமொன்றில் பயணித்து மதராஸ் என்ற தொன்மையான வரலாற்றுப்புத்தகத்தின்  கடந்தகால பக்கங்களின் சில சுவையான நிகழ்வுகளை பார்க்கும் ஒரு காலவெளி பயணம் இந்த தொடர்

சென்னை மாநகரின் பல்வேறு புவியியல் நிலவமைப்பு, பல்வேறு மொழி, கலாச்சாரம்போலவே அந்த ஊரின் பெயருக்கும் பல்வேறு பெயர்க்காரணங்கள் சொல்லப்படுகிறது. வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய நிறுவனத்தினர் சென்னப்ப நாயக்கரிடம் இருந்து விலைக்கு வாங்கியதால் இந்த ஊருக்கு சென்னப்பட்டினம் என்று பெயர்வந்ததாக ஒரு வரலாற்றுக்குறிப்பு சொல்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டதின்  பெண்ணேஸ்வர மடம் என்னும் ஊரில் கி.பி. 1367-ல் வெட்டப்பட்ட ஒரு பாறைக் கல்வெட்டில் சென்னை கடற்கரையையொட்டி உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் மாதரசன்பட்டணம் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கிழக்கிந்திய நிறுவனம் வருவதற்குமுன்பு வெட்டப்பட்ட கல்வெட்டில் இந்த மாதரசன் என்ற பெயர் இருந்துள்ளது.   சென்னப்பட்டினம் என்பது வேறு மதராஸப்பட்டினம் என்பது வேறு. இரண்டும் வேறுவேறு  கிராமங்கள். இந்த கிராமங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட நிலப்பரப்பே மெட்ராஸ் அல்லது சென்னை என்று சிலர் சொல்கிறார்கள்.  முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால் மதராஸா  என்று அழைக்கப்பட்டு பின்னாட்களில் மெட்ராஸாகிவிட்டது என்று சிலர் சொல்கிறார்கள்.  முகமதியர்கள் இப்படி சொன்னால் இந்துக்கள் இன்னொரு கதையை சொல்கிறார்கள்.  சுமார் 365 ஆண்டுகளுக்கு முன்புசென்னையில் தற்போதைய உயர்நீதிமன்றக் கட்டிடம் இருக்குமிடத்தில் சென்னகேசவ பெருமாள் ஆலயமொன்று  இருந்ததாகவும் அதனாலேயே  சென்ன கேசவபுரம் என்று இந்த ஊர் அழைக்கப்பட்டதாகவும் பின்னாட்களிலே அது சென்னை என்று பெயர் மாறியதாகவும் சொல்லப்படுகிறது. இப்போதுள்ள புனித ஜார்ஜ் கோட்டை  இருக்கும் இடத்தில் மீனவக்குப்பங்கள் இருந்ததாகவும் மதுரசேனன் என்ற மீனவத்தலைவன் வசித்ததாகவும் அருகில் நரிமேடு என்ற குன்று இருந்ததாகவும் பின்னாட்களில் ஆங்கிலேயர்கள் இந்த இடத்தில்  கோட்டையை கட்டி நகரை நிர்மாணிக்கும்போது மதுரசேனன் பெயரில் மதராசப்பட்டினம் வந்ததாகவும் ஒரு கருதுகோள் உண்டு.

J.B.P.More எழுதிய Origin and Foundation of Madras என்ற ஒரு புத்தகம் சென்னையின் பெயர்க்காரணம் பற்றிய ஒரு விநாதமான கருத்தை  சொல்கிறது.  மேடுராச பட்டிணம் என்ற சொல்லில் இருந்துதான் மதராஸ பட்டிணம் என்ற சொல் வந்தது. சென்னை என்ற பெயர் தமிழ் இல்லை. அது தெலுங்கு பெயர். அந்த காலத்தில் சென்னையை சென்னபட்டனம் மற்றும் சின்னப்பட்டனம் என்று இங்கு வசித்து வந்த தெலுங்கர்களும், தமிழர்களும் அழைத்து வந்துள்ளனர். ஆனால் சென்னபட்டனம் என்பது சென்னை என்று தமிழுக்கு மாறியுள்ளது. 1639ம் ஆண்டு வெங்கடப்பா நாயக்கரிடமிருந்து ஆங்கிலேயர்கள் தற்போது புனித ஜார்ஜ் கோட்டை இருக்கும் பகுதியை விலை கொடுத்து வாங்கினார்கள். அப்போது மெட்ராஸ்பட்டனம் என்றுதான் பெயர் இருந்தது. ஆனால் 1640களில் மெட்ராஸ் பட்டனத்திற்கு இரு வேறு பெயர்கள் உருவாகியுள்ளன. அதாவது தமிழர்கள் சின்னப்பட்டனம் என்றும், தெலுங்கர்கள் சென்னப்பட்டனம் என்றும் அழைத்தார்கள் என்றும் அந்த புத்தகம் சொல்கிறது.   .

இதுவரை இப்படித்தான் இந்தப்பெயர் வந்தது என்று உறுதியாக எல்லாராலும் ஏற்கப்பட்ட பொதுக்கருத்து எதுவும் இல்லை என்பதே மெட்ராஸ் அல்லது சென்னை என்ற பெயரின் சிறப்பு. யாராலும் நிரூபிக்கப்படாத அந்த புதிரே இந்த ஊரின் பெயருக்கு ஒரு வசீகரத்தை தருகிறது.

மெட்ராஸ் அல்லது சென்னை என்ற பெயருக்குத்தான் பெயர்க்காரணம் கண்டுப்பிடிப்பதில்  குழப்பமடைவார்களே தவிர இங்குள்ள இடங்களின், சாலைகளின் பெயர்களுக்கான காரணங்கள் கண்டுபிடிப்பதில் அவ்வளவு சிரமம் இருக்காது. காரணம் அவை எல்லாம் ஆங்கிலேயர்கள் சூட்டிய பெயர்கள் என்பதால் முறையான ஆவணப்பதிவுகளை வைத்துள்ளார்கள். அப்படி சூட்டப்பட்ட சில பெயர்கள்:-

சென்னை மக்களால் சால்ட் கோட்ட என்றழைக்கப்படும் இடம்  Salt cotaurs என்ற ஆங்கிலச் சொல்லிலிருந்து வந்தது. கொட்டாரு என்பது தெலுங்கு சொல். தமிழில் கொட்டாரம் என்று அழைக்கப்பட்டு பிறகு அது மருவி சால்ட் கோட்ட என்று நாளடைவில் மாறியது. வால்டாக்ஸ் சாலை யானை கவுனி சந்திப்பிலிருந்து மேற்குபக்கமாக  செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த இடத்தில் ஒருகாலத்தில் உப்புமூட்டைகளை சேமித்து வைத்திருந்தார்கள். ஒருகாலத்தில் எண்ணூரிலிருந்த உப்பளங்களிலிருந்து சிறுசிறு படகுகள் மூலம் பக்கிங்காம் கால்வாய் வழியாக உப்புமூட்டைகளை  கொண்டுவந்து சேமித்துவைத்துள்ளார்கள். பிறகு ரயில்வே இருப்புப்பாதை வந்தபிறகு இது பொது சரக்குப்போக்குவரத்து குடோனாக மாறியது.

கிளின் பார்லோவின் சென்னையில்  கதை என்ற நூலில்  வால்டாக்ஸ் சாலை பற்றிய பெயர்க்காரணம் வருகிறது. கறுப்பர் நகரத்தையும், வெள்ளையர் நகரத்தையும்  இரண்டையும் பிரிக்கும் பெரிய மதில் சுவர் நிர்மாணிக்கும் பணிகளுக்காக அன்றைய பிரிட்டிஷ் நிர்வாகத்திடம் நிதி கேட்க அவர்களால் அதற்கு போதுமான நிதியை ஒதுக்க இயலவில்லை. மக்களிடமே வரி வசூலித்து அந்தச்சுவரை கட்டலாம் என்று தீர்மானிக்கிறார்கள். அந்த சுவற்றையொட்டிய  சாலையின் பெயர் வால்டாக்ஸ் ரோடு.

மூன்றாவது மைசூர் போரில் திப்புவை வென்று அவரது புதல்வர்களை பிணைக்கைதிகளாக பிடித்துவந்த காரன்வாலிஸ் நினைவை போற்றும்விதமாக பிரிட்டிஷார் அவருக்கு அன்றைய மெட்ராசில் சிலையொன்றை  நிறுவினார்கள்.  சிலையின் பீடத்தில் திப்புசுல்தானின் மகன்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வரப்பட்ட நிகழ்வை பொறித்து வைத்தார்கள். இந்தச் சிலை இந்தியர்களின் உணர்வை புண்படுத்தும் விதத்தில் சர்ச்சைக்குரிய முறையில் இருந்ததால் பலர் அதை உடைத்துவிடுவார்கள் என்று பயந்து பின்னாட்களில் எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு மாற்றப்பட்டது. cenotap என்றால்  வேறிடத்தில் புதைக்கப்பட்ட ஒருவருக்காக இன்னொரு இடத்தில்  எழுப்பப்பட்ட நினைவு மண்டபம். இங்கிலாந்தில் இறந்துப்போன காரன்வாலிஸ் சிலை நிறுவப்பட்ட அந்த சாலையின் பெயர்தான் cenotap சாலை.

சென்னை மாகாணத்தை பொப்பிலி ராஜா என்னும்  சர் ராமகிருஷ்ண ரங்காராவ் தலைமையில் நீதிக்கட்சி ஆட்சி செய்த போது அந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார் கான் பகதூர் சர் முகமது உஸ்மான்.  சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்குண்டு. சென்னை மாகாண மாஜிஸ்திரேட்டாகவும், சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும், சென்னை நகர செரீப்பாகவும், சென்னை மாநகராட்சித்தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். இந்திய மருத்துவக்கல்வி என்ற அமைப்பை நிறுவிய அரசுக்குழுவின் தலைவராகவும்  இருந்தவர்.  இந்தியாவில் வெளியிடப்பட்ட மிக முக்கியமான முதல் சுகாதார அறிக்கையின் பெயர் உஸ்மான் அறிக்கை. தேனாம்பேட்டையில் மிகப்பெரிய அரண்மனை கட்டி வசித்த செல்வந்தரான இவருக்கு வாரிசுகள் இல்லை. இவரது பெயரைத்தான் தியாகராய நகரில் உள்ள ஒரு சாலைக்கு சூட்டியுள்ளார்கள். சாலையின் பெயர் உஸ்மான் ரோடு.

இன்றைய சென்னையில் அந்தக்காலத்தில் வாழ்ந்த ஆங்கிலேயர்களின் பெயர்களில் அமைந்த பல தெருக்களையும், சாலைகளையும் பார்க்கமுடியும். பெசன்ட் நகர் என்பது அன்னிபெசன்ட் பெயரை தங்கி நிற்கும். திருவல்லிகேணியில் பெசன்ட் ரோடு என்ற பெயரில் ஒரு சாலை உள்ளது. அடையாறில் பெசன்ட் அவென்யூ சாலை உள்ளது. அதுபோல பின்னி பெயரில் பின்னி ரோடு உள்ளது. எழும்பூரில் காசா மேஜர் சாலை உள்ளது. ஜேம்ஸ் ஹென்றி காசா மேஜர் வேலூரில் வணிகராகவும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யும் அதிகாரியாகவும் இருந்துள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள ஒரு சாலைக்கு எல்டாம்ஸ் ரோடு என்று பெயர். ரிச்சர்ட் எல்டாம்ஸ் பிரபல ஆங்கிலேய வணிகர் நினைவாக பெயர்சூட்டப்பட்ட சாலை. எல்டாம்ஸ் மெட்ராசின் மேயராகவும் இருந்துள்ளார். 1795ல் மெட்ராசின்  நிர்வாக அதிகாரியாக இருந்த ஜேம்ஸ் டெய்லர் நினைவாக கீழ்பாக்கத்தில் உள்ள டெய்லர்ஸ் ரோடு உள்ளது. கிரீம்ஸ் என்ற பிரிட்டிஷ் அதிகாரியின் பெயராக கிரீம்ஸ் ரோடு உள்ளது. கெல்லீஸ் ரோடு, ஹண்டர்ஸ் ரோடு  போன்ற பல்வேறு ஆங்கிலேயப்பெயர்களில் சென்னையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு சிறு சந்துக்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் கட்டிடங்கள், நினைவிடங்களை இன்றும் பார்க்கலாம்.

ஆங்கிலேயர்களின் காலத்தில் பெயர்சூட்டப்பட்டு சுதந்திரத்துக்குப்பிறகு  பின்னாட்களில் தமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்ட சில சாலைகளின் விபரங்களை பார்க்கலாம். மவுண்ட் ரோடு என்பது பலரும் நினைப்பதுபோல மவுண்ட் பேட்டன் நினைவால் வந்ததல்ல. மலைச்சாலை என்பதைத்தான் மவுண்ட் சாலை என்று அழைத்தார்கள். மவுண்ட் ரோடின் பெயர் மாற்றப்பட்டு  இப்போது அண்ணா சாலை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.  எட்வர்ட் எலியொட் சாலை என்ற பெயர்   டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலையாக மாறியது. அதுபோல எலியொட் பீச் ரோடின் பெயர் சர்தார் படேல் சாலை என்று மாறியது. ஆங்கிலேயர் காலத்தில் கமான்டர் இன் சீப் ரோடாக இருந்த பெயர்  எத்திராஜ் சாலையாக மாறியது. ‘தி மெட்ராஸ் ஆர்மி’ என்ற பெயரில் அப்போது மெட்ராஸ்க்கு மட்டும் பிரத்யேகமாக ஒரு தனி ராணுவப்படை  இருந்தது. படைத்தளபதி இருந்த இடம்தான்  ‘கமாண்டர் – இன்- சீப் சாலை’ என்று அழைக்கப்பட்டது. வாரன் ரோடு பக்தவத்சலம் சாலை என்றும் லாயிட்ஸ் ரோடு  அவ்வை சண்முகம் சாலை என்றும்  ஆலிவர் ரோடின் பெயர் முசிறி சுப்பிரமணியம் சாலை என்றும் லட்டிஸ் ப்ரிட்ஜ் ரோடு பிறகு  கல்கி சாலை என்றும் மாறியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தினம் கொண்டாட்ட நிகழ்வின்போது பலர் அரசிடம் வைத்த கோரிக்கை இதுதான். சென்னையின் அடையாளங்களில் ஒன்று இந்த பெயர். இதை மாற்றாமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்பதுதான். எனது கருத்தும் அதுதான். ஏனெனில் இந்த சாலைகள் எல்லாமே வரலாற்றில் ஏற்கனவே வேறு பெயர்களில் இருந்து ஆங்கிலேயர்களால் பெயர்மாற்றம் செய்யப்பட்டவை இல்லை. காலனி உருவாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டு ஆங்கிலேயர்களால் பெயர்சூட்டப்பட்ட இடங்கள். அவை வெறும் பெயர்கள் மட்டுமில்லை. வரலாற்றின் நிகழ்வுகளை நினைவுகளைக்கூறும் சாட்சிகள். அவற்றை அழிப்பது வரலாற்றை அழிப்பதற்கு சமம்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்
 2. சென்னையின் முகமான  தி.நகர்- விநாயக முருகன்
 3. சென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் - விநாயக முருகன்
 4. ஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்
 5. அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
 6. அடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்
 7. ஒரு வங்கி திவாலான கதை  - விநாயக முருகன்
 8. மைனர் மாளிகையும் ஒரு நள்ளிரவுப் படுகொலையும் 
 9. சென்னையின் சிவப்பு மாளிகைகள்- விநாயக முருகன்
 10. கன்னிமாராவின்  கதை-விநாயக முருகன்
 11. பிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்
 12. கோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்
 13. ஒரு விளையாட்டின் கதை - விநாயக முருகன்
 14. பின்னிமில்லின் கதை - விநாயக முருகன்
 15. ஒரு கால்வாய் மறைந்த கதை  - விநாயக முருகன்
 16. தேசத்தை அளந்த கால்களின் கதை - விநாயக முருகன்
 17. ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை - விநாயக முருகன்
 18. தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் - விநாயக முருகன்