மதராஸ் – மண்ணும் , கதைகளும் -18 

சென்னையின் வரலாற்றில் வேல்ஸ் இளவரசரின் சுற்றுப்பயணத்துக்கென்று ஒரு தனித்த இடமுண்டு. 1921-ல் இந்தியாவின்  மிகப்பெரிய நிகழ்ச்சியாகவும் அந்த சுற்றுப்பயணம் அமைந்தது. ஆண்டின்   தொடக்கத்தில் அவர் வருவாரென்று அறிவிக்கப்பட்டது பின்னர் இந்தியாவில் நிலவிய அரசியல் கொந்தளிப்பு காரணமாக ரத்தானது. வேல்ஸ் இளவரசருக்குப் பதிலாக கன்னாட் கோமகன் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கிலாந்து இளவரசரின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை கிளப்ப அரசக்குடும்பத்தின் கௌரவம் கருதி வேல்ஸ் இளவரசர் ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதத்தில் இந்தியா வருகிறார்.

அவரது வருகை சிலமாதங்களுக்கு முன்பாகவே இந்தியாவில் உள்ள பல்வேறு தலைவர்களுக்கு தெரியவருகிறது. நாடெங்கும் சுதந்திரப்போராட்டங்கள் கொழுந்துவிட்டெரியும்  காலம் அது. ஒருபக்கம் இந்தியா வரும் வேல்ஸ் இளவரசருக்கு கருப்புக்கொடி காட்டுவது, போராட்டங்கள், மறியல் செய்வதென்று காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை செய்கிறார்கள். மறுப்பக்கம் அவரது பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள். காந்தியின் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய அகிம்சை போராட்டங்களின்போதுதான் பகத்சிங் போன்றோர் இன்னொருபக்கம் பிரிட்டிஷ் அரசுக்கு தலைவலியாக இருந்தார்கள். இந்தியாவில் நாளுக்கு நாள் விடுதலைப்போராட்டங்களின் வீர்யம் அதிகமாகிக்கொண்டேப்போனது. குறிப்பாக ஒத்துழையாமை இயக்கம் பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் தலைவலி கொடுத்தது. மக்கள் அரசுக்கு எந்த ஒத்துழைப்பும் செய்யாமல் வீட்டுக்குள் இருந்தால் அரசு எப்படி இயங்கமுடியும்? இதுவும் வேல்ஸ் இளவரசர் இந்தியா கிளம்பிவர பெரும் அழுத்தத்தை கொடுத்தது. இளவரசரின் சுற்றுப்பயண நோக்கமே இந்தியாவில் நடந்துவரும் போராட்டங்களை நீர்த்துப்போகச்செய்ய வைப்பது என்று நினைத்த  1921 ஜுலையில் பாம்பேயில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கூட்டத்தை ஏற்பாடு செய்து இளவரசரின் பயணத்தின்போது மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்ய முடிவெடுத்தது. வேல்ஸ் இளவரசரின் வருகையையொட்டி இந்திய மக்களிடம் ஆதரவை திரட்ட வேண்டிய கட்டாயத்தில் பிரிட்டிஷ் அரசு தள்ளப்பட வைசிராய் இந்திய மக்களை பார்த்து காங்கிரசின் போராட்டங்களை நிராகரிக்கும்படி கேட்டுக்கொண்டார். அது காங்கிரசை இன்னும் அதிக கோபமூட்ட வேல்ஸ் இளவரசருக்கு எதிராக நடக்கப்பட வேண்டிய போராட்ட வேலைகளை இன்னும்  தீவிரமாக முடுக்கிவிட்டார்கள். கிலாபத் இயக்கமும், காங்கிரசும் நூற்றுக்கணக்கானோரை திரட்டினார்கள். வேல்ஸ் இளவரசரின் சுற்றுப்பயணமும், அதற்கான எதிர்ப்பும் கிட்டத்தட்ட இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒரு அரசியல்  போர்போலவே பார்க்கப்பட்டது.

 அந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் 17ல்  இளவரசர்  மும்பைத்துறைமுகத்துக்கு கப்பலில் வந்திறங்க பேண்ட் வாத்தியங்கள், யானை, குதிரைகள், ஆட்டம், பாட்டம் என்று வைசிராய் வரவேற்பு தருகிறார். அவருக்கான விருந்தில்  பிரிட்டிஷ் கவர்னர்கள், அதிகாரிகள்,ஜமீன்தார்கள் எல்லாரும் கலந்துக்கொண்டு மரியாதை தருகிறார்கள். இன்னொருபக்கம் சௌபாதிக் கடற்கரையில் நடந்த கூட்டத்தில் காந்தி உணர்ச்சிகரமாக உரையாற்ற  இளவரசர் மும்பைத்துறைமுகத்தில் காலை வாய்த்த அதே தருணம்   நாடெங்கும் பந்த் அமலுக்கு வருகிறது. வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு வீட்டுக்குள் அமைதியாக இருக்க, தொழிலாளர்கள் வேலைக்குச்செல்லாமல் வேலைநிறுத்தம் செய்கிறர்கள். தொண்டர்கள் கண்டன ஊர்வலங்களையும் , பொதுக் கூட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகிறார்கள். சிலமணி நேரங்களில் பெரும் வன்முறை வெடிக்கிறது. பம்பாய் பற்றி எரிகிறது. மும்பைக்கலவரம் பார்த்து காந்தி அதிர்ந்துப்போனார். அகிம்சை என்பது இந்திய மக்களின் உதட்டளவில்தான் உள்ளது. ஆனால் அவர்கள் உள்ளத்தில் இல்லை. மும்பை நகரில் நான் கண்ட சுயராஜ்யத்தை பார்க்கும்போது எனது  மூக்கைத் துளைக்குமளவுக்கு மூடை நாற்றம் வீசுகிறது என்று மிகவும் வேதனைப்பட்டார். கொல்கத்தா சென்ற வேல்ஸ் இளவரசருக்கு  அங்கும் கடும் எதிர்ப்பு. சித்தரஞ்சன் தாஸ் தலைமையில் திரண்ட மக்கள் ஆர்ப்பாட்டம் பெரும் வன்முறையில் இறங்கியது.  சித்தரஞ்சன் தாஸ் குடும்பத்தை கைதுசெய்தது வங்காளிகளை கொதிப்படைய வைத்தது. கலவரம் கட்டுக்கடங்காமல் போகிறது.  அந்தாண்டின்  கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வேல்ஸ் இளவரசருக்கு இனிப்பானதொன்றாக அமையவில்லை.

வடக்கே அவமானப்பட்ட வேல்ஸ் இளவரசரை தெற்கே சென்னைக்கு அழைத்துவருகிறார்கள். பொதுவாக தமிழ்நாட்டு மக்கள் அந்தளவு உணர்ச்சிவசப்பட்டவர்கள் இல்லை. இளவரசருக்கு வரவேற்பு கிடைக்கும் என்றுதான் நினைத்து இங்கு அழைத்துவருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அப்போது உறுதியாக இருந்தது காங்கிரஸ் மட்டும் இல்லையே. ஐஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்ட நீதிக்கட்சி என்ற பிரமாண்ட படையும் அரசியல் களத்தில் நின்றது.   நீதிக்கட்சி மட்டும் காங்கிரசுக்கு எதிரணியில் இருந்து இளவரசரை வரவேற்க தயாரானது.

காங்கிரசுக்கும் , நீதிகட்சிக்கும் பலவகையில் இருந்த ஏழாம் பொருத்தமே இந்த வேல்ஸ் இளவரசரை வரவேற்கும் நிகழ்ச்சியிலும் இருந்தது.  அப்போது காங்கிரஸில் பிராமணர்கள் பலர் இருந்தார்கள். அரசியலிலும் சரி, சமூகத்திலும் சரி.    பிராமணரல்லாதோர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட வந்த சூழலில் சென்னை மாகாணத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்த பிராமணரல்லாதோர் மாநாடுகளின் விளைவாகவே  நீதிக்கட்சி உருவாக்கப்பட்டது.  அன்றைய மொத்த மக்கள் தொகையில் தங்கள் சதவிகிதத்தை விட மிக அதிகளவில் அரசுப்பணிகளில் பிராமணர்கள் இடம் பெற்றிருந்தார்கள். மற்ற சாதியினரை அவர்கள் நடத்திய விதமும் சமூக நீதிக்கு மாறாக இருந்தது. எனவே எங்கெல்லாம் பிராமண ஆதிக்கம் சிறிது தலைதூக்கினாலும் அதற்கு எதிர்நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு நீதிக்கட்சி சென்றது.

அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கம் பிராமணர்களை தூக்கிப்பிடிப்பதாக அதை எதிர்த்தார்கள். காங்கிரசின் ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்தார்கள். கல்வி நிறுவனங்கள், சட்டமன்றங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொது நிகழ்வுகளைப் புறக்கணிக்கும்படி காந்தி தனது ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். அந்த ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருக்கும்போதுதான் வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வருகிறார். நீதிகட்சியோ ஏற்கனவே எங்களை  கல்வி நிறுவனங்கள், சட்டமன்றங்கள், நீதிமன்றங்களில் நீங்கள் ஒதுக்கிதான் வைத்துள்ளீர்கள். இப்போது அதை வேறு நாங்கள் புறக்கணிக்கவேண்டுமா? உங்கள் காரியம் ஆகவேண்டும் என்றால் எங்களை கூப்பிடுகிறீர்கள். காரியம் முடிந்தால் கழற்றிவிடுகிறீர்கள் என்று சொல்லிவிட்டு ஒத்துழையாமை இயக்கத்துக்கு எதிர்நிலைப்பாட்டை எடுத்தார்கள். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்திடலாம் என்று ஒரு பழமொழி உண்டு. சுட்டுப்போட்டாலும் பிராமணர்களுக்கு சமூகநீதி வராது. அவர்களிடம் அதைப்பற்றி பேசுவதே வீண். அதற்கு ஆங்கிலேயர்களிடம் பேசினால் அவர்களுக்கு சமூகநீதி புரியும் என்று நினைத்தார்கள். காரணம் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல ஆங்கிலேயர்கள் காங்கிரசுக்கு எதிரியாக இருந்த நீதிக்கட்சியை ஆதரித்தார்கள். இன்னொருபக்கம் தலித் இயக்கத்தையும் ஆங்கிலயேர்கள் நட்பாகவே பார்த்தது. ஆனால் பிராமணர்களை வேலைக்குவைத்திருந்தாலும் ஆங்கிலேயர் அவர்களை நம்பாமல் சந்தேகத்துடனேயே பார்த்தார்கள்.

நீதிக்கட்சி தலைவர் சர்.பி.தியாகராசர் பெரும்செல்வந்தர். அவருக்கு வெள்ளுடை வேந்தர் என்று ஒரு பெயரும் உண்டு. அவர் எப்போதும் வெண்மையான வேட்டி அல்லது நீண்ட கால் சட்டையுடன் நீளமான வெண்ணிற சட்டை அணிவார். அதுபோல தலையில் வெண்ணிற தலைப்பாகை இருக்கும். ஆனால் அப்போது சென்னை மாகாண  ஆளுநராக இருந்த லார்டு வெல்லிங்டன் தியாகராயரிடம் சென்று ஒரு கோரிக்கை வைத்தார். சென்னை மாநகரின் முதல் குடிமகன் என்ற முறையில் நீங்கள்தான் வேல்ஸ் இளவரசரை முதல் நபராக வரவேற்க வேண்டும். ஒரு நிபந்தனை. வரவேற்பின்போது நாங்கள் குறிப்பிடும் முறையில் வெள்ளைக்காரர்போல கோட் சூட் அணிந்து வரவேண்டுமென்று சொல்ல கோபமானார் தியாகராயர். அப்படியெல்லாம் வரமுடியாது என்று சொல்ல வேறுவழியில்லாமல் பிரிட்டிஷார் அவரை அழைத்துச்சென்றார்கள்.

அன்று வேல்ஸ் இளவரசரை வரவேற்க இன்னொரு காரணமும் இருந்தது. அது பம்பாயில், கொல்கத்தாவில் நடந்த வன்முறையைபோல இன்னொரு நிகழ்வை சென்னை பார்க்கவேண்டாம் என்பதுதான். பம்பாய், கொல்கத்தா வன்முறைச்செயலை கண்டித்தார். ஏன் காந்தியே அந்த வன்முறையை பார்த்து மிகவும் வருந்தினார். இருந்தாலும் அதை ஆரம்பித்து வைத்தது அவர்தானே?

ஆனால் தியாகராயர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. காங்கிரஸ் தொண்டர்கள் இளவரசரை வரவேற்க கிளம்பிய தியாகராயர் வசித்துவந்தமாளிகையைச் சூழ்ந்துக்கொண்டு கல்வீசினார்கள். பொதுவாகவே எல்லா கலவரங்களையும் பிராமணர்கள் தூண்டிவிட மற்றவர்கள் அந்த கலவரத்தில் இறங்கிமாட்டிக்கொள்வார்கள். அப்படித்தான் அன்றும் கலவரத்தின்போதும் எண்ணற்றவர்கள் வன்முறையில் இறங்கி பிரிட்டிஷ் அரசிடம் அடிவாங்கினார்கள்.  ஒரு பொங்கல் தினத்தன்று அதாவது ஜனவரி மாதம் 1922-ல் வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வருகிறார். சென்னையிலும் கலவரம் ஆரம்பித்தது. மக்கள் போலீஸ்மீது கல்லெறிந்தார்கள். பலர் படுகாயமடைந்தனர். குதிரையில் வந்த போலீசார் அவர்களை தடியால் அடித்து விரட்டினார்கள். சிலர் டிராம் வண்டிகளை  கொளுத்திவிட்டார்கள். இளவரசர் பேசவிருந்த மைதானத்தை சுற்றி இருந்த கொடிகளை போராட்டக்கார்கள் கிழித்துப்போட்டார்கள். ஆங்கிலேயர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்ற கலவரக்காரர்கள் அங்கிருந்த வெள்ளைப்பெண்களிடம் அத்துமீறலில் இறங்கமுயற்சிக்க பிரிட்டிஷ் அரசு வன்முறைக்கூட்டத்தை அடித்து விரட்டினார்கள். பிரிட்டிஷ் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் உயிரிழந்தார்கள்.

சுதேசமித்திரன்போன்ற பத்திரிக்கைகள் வரவேற்பை புறக்கணிக்க மக்களை கேட்டுக்கொண்டது. ஆனால் இந்த போராட்டங்களை எல்லாம் மதிக்காமல் வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வந்திறங்கியபோது  வாணவேடிக்கைகள், யானை , குதிரை ஊரவலங்கள், விருந்து உபசரிப்புகள் என்று இன்னொருபக்கம் இருந்தது. பள்ளிக்கூட மாணவர்கள் பதினைந்தாயிரம் பேர் வரழைக்கப்பட்டு மூன்றுமைல் தூரத்துக்கு வரிசையாக நிற்கவைக்கப்பட்டார்கள். கூவமாற்றின் கரையோரமாக அணிவகுத்து நின்றிருந்த அவர்களது கையில் பிரிட்டிஷ்கொடி இருந்தது.  அவர் கலந்துக்கொண்ட அரசுமாளிகை முழுக்க சான்ட்லியர்களால் அலங்கரிக்கப்பட்டன. சென்னையில் படித்த ஜமீன்தார்களின் வாரிசுகள் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். செல்வந்தர்களும்,  காஞ்சிப்பட்டுபுடவை அணிந்து வந்த பெண்மணிகளும் இளவரசருக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்கள். மேற்கத்திய சங்கீதத்துக்கு ஆங்கிலேயர்கள் நடனமாடினார்கள். ஆடல், பாடல் என்று அரசுமாளிகை கொண்டாட்டமாக இருந்தது. வேல்ஸ் இளவரசர் நான்குநாட்கள் சென்னையில் தங்கியிருந்தார். அதில் இரண்டுநாட்கள் கிண்டி மைதானம் சென்று குதிரை பந்தயம் பார்த்தார். ஒருநாள் பரங்கிமலை சென்று போலோ விளையாடினார். ஒருநாள் விருந்தில் கலந்துக்கொண்டு நன்றாக சாப்பிட்டார். இளவரசர் ஆயிற்றே. அவர் இந்தியா வந்ததே கட்டாயத்தின்பேரில்தான். விட்டால்போதுமென்று இங்கிருந்து கிளம்பிச்சென்றார்.   அடுத்த மாதமே உத்தரபிரதேச மாநிலத்தின் சௌரி சௌராவில் ஒத்துழையாமை இயக்கம் மிகப்பெரிய வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்தது. பொதுமக்கள் இறந்தார்கள். காவல்நிலையத்துக்கு  தீவைத்து  இருபத்திரண்டு காவலர்களை உயிரோடு எரித்தார்கள். பிரிட்டிஷ் அரசு 172 பேரை பிடித்திச்சென்று தூக்குத்தண்டனை கொடுக்க காந்தி அந்த போராட்டத்தையே கைவிட்டார். நீதிக்கட்சி மட்டும் அன்றே  ஒத்துழையாமை போராட்டம் ஒரு தோல்வி முயற்சி என்று கணித்தே வேல்ஸ் இளவரசரை வரவேற்கச் சென்றது.

வேல்ஸ் இளவரசரின் சென்னை வருகையை இந்தியாவே  மிகுந்த பதற்றத்துடன் எதிர்பார்த்திருந்தது. சென்னை மாகாணம் மட்டும் மைய நீரோட்டத்திலிருந்து விலகிச்சென்று தனிராஜ்ஜியம் அடைந்துவிடுமோ என்று எல்லாருக்கும் உள்ளுக்குள் பயம் இருந்தது.  காரணம் அன்று சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்தது. ஆங்கிலயேர்களுடன் சேர்ந்து இந்தியர்களும் அரசு பதவிகளில் இறங்க ஆரம்பித்திருந்தார்கள்.   1920 முதல் 1937  வரை  அந்த பதினேழு ஆண்டுகளில் 13 ஆண்டுகள் நீதிக்கட்சியே சென்னை மாகாணத்தை ஆண்டது. நீதிகட்சியினரே சென்னை முதல்வர்களாக இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட இந்திய தேசிய காங்கிரசு 1920-ல்  சென்னை மாகாண தேர்தலைப் புறக்கணிக்க நீதிக்கட்சி தேர்தலில் ஜெயித்தது. எனவேதான் காந்தி நீதிக்கட்சிக்கு எதிராக வேல்ஸ் இளவரசரை புறக்கணித்தவர்களுக்கு தனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தார். பின்னாட்களில் நீதிக்கட்சியை மெல்ல மெல்ல வலுவிழக்க வைத்து காங்கிரஸ் சென்னை மாகாண ஆட்சியை பிடித்தது வரலாறு.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கதை-விநாயக முருகன்
 2. சென்னையின் முகமான  தி.நகர்- விநாயக முருகன்
 3. ஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்
 4. அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
 5. அடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்
 6. ஒரு வங்கி திவாலான கதை  - விநாயக முருகன்
 7. மைனர் மாளிகையும் ஒரு நள்ளிரவுப் படுகொலையும் 
 8. சென்னையின் சிவப்பு மாளிகைகள்- விநாயக முருகன்
 9. சென்னையின் சில பெயர்களும், காரணங்களும்- விநாயக முருகன்
 10. கன்னிமாராவின்  கதை-விநாயக முருகன்
 11. பிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்
 12. கோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்
 13. ஒரு விளையாட்டின் கதை - விநாயக முருகன்
 14. பின்னிமில்லின் கதை - விநாயக முருகன்
 15. ஒரு கால்வாய் மறைந்த கதை  - விநாயக முருகன்
 16. தேசத்தை அளந்த கால்களின் கதை - விநாயக முருகன்
 17. ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை - விநாயக முருகன்
 18. தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் - விநாயக முருகன்