மதராஸ் – மண்ணும் , கதைகளும் -20 

சென்னைக்கென்று உள்ள எத்தனையோ தனித்த சிறப்புகளில் இதுவுமொன்று. இந்தியாவில் முதன்முறையாக சென்னையில்தான் வானிலை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. ஐரோப்பாவுக்கு வெளியே அமைக்கப்பட்ட முதல் வானிலை ஆய்வு மையம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் இந்த வானிலை மையம் உருவாக்க  காரணம் சென்னையின் நிலவமைப்புதான். வங்கக்கடலின் தென்கோடி மையத்தில் இருக்கும் பெருநகரம் என்பதால் கிழக்கு ஆசிய தீவுகளிலிருந்து உருவாகிவரும் புயல்கள், கடல் சீற்றங்கள் எல்லாம் முதலில் சென்னையை குறிவைத்துதான் வரும். பிறகு காற்றின் போக்குக்கு ஏற்ப அவை வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா அல்லது ஒரிசாவை தாக்கும். சிலநேரங்களில் சென்னையில்  பெருமழையை கொட்டி  வெள்ளச்சேதங்களை ஏற்படுத்தும். கடலில் பொருட்களை ஏற்றி வரும் பிரிட்டிஷ் வணிகர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். அரசுக்கு வரியிழப்போடு உயிர்சேதங்களையும் ஏற்படுத்தும். தொடர்ந்து வந்த இந்த தலைவலி காரணமாகவே வானிலை ஆய்வு மையத்தை சென்னையில் உருவாக்கவேண்டிய தேவை அப்போதைய சென்னை மாகாண கவர்னர் சார்லஸ் ஓக்லேவுக்கு இருந்தது. இன்னொருப்பக்கம் தொடர்ந்து வரும் உள்ளூர் மன்னர்கள், பிரெஞ்ச் படையெடுப்புகளாலும், வணிகப்பொருட்களை உள்நாட்டிலேயே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச்செல்லவும் நிலத்தை அளந்து மேப் தயாரிக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தன.

நாம் இன்று பார்க்கும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்துக்கு வயது இருநூற்று இருபத்தெட்டு. 1792 -ஆம் ஆண்டில் இந்த ஆய்வு மையத்தை உருவாக்கினார்கள். வில்லியம் பெட்ரி என்ற பிரிட்டிஷ் வணிகர்தான் அதை உருவாக்கினார். அவர் தொழில்முறை வானிலை ஆராய்ச்சியாளர் இல்லை. அவரது பொழுதுபோக்காகதான் அந்த வானிலை ஆராய்ச்சி மையத்தை உருவாக்கி பிறகு அதில் தீவிரமாக இறங்கியுள்ளார். முதலில் இந்த வானிலை ஆய்வு மையத்தை எழும்பூரில்தான் தொடங்கினார்கள். பிறகுதான் நுங்கம்பாக்கத்துக்கு இடமாற்றப்பட்டது.  வணிகர் வில்லியம் பெட்ரியும், கவர்னரும் இணைந்து நுங்கம்பாக்கத்தில் கூவம் ஆற்றின் கரையோரமாக வானிலை ஆராய்ச்சிமையத்தை உருவாக்குகிறார்கள். அந்த கட்டிடத்தை புனித ஜார்ஜ் கோட்டையின் தலைமை கடல் நிலஅளவையாளராக இருந்த மைக்கேல் டாப்பிங் என்பவர்தான் வடிவமைத்து தருகிறார். மைக்கேல் டாப்பிங்தான் ஜார்ஜ் கோட்டைக்கு அருகே 1794-ல் எட்டு மாணவர்களை வைத்து ஒரு  நிலஅளவைப் பள்ளியைத் தொடங்கினார். அந்தப்பள்ளி  1858-ல் கட்டிடப் பொறியியல் பள்ளியாக மாறியது. பிறகு அது பொறியியல் கல்லூரியாக மாறியது. தற்போது கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் அந்தக் கல்லூரி உள்ளது. வில்லியம் பெட்ரி வணிகர் என்பதால் அவரே தனது கைக்காசை போட்டு பல கருவிகளை உருவாக்குகிறார். பிறகு தனது இறுதிக்காலத்தில் இந்தியாவிலிருந்து புறப்பட்டு லண்டன் செல்லும்போது அந்தக்கருவிகளை கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைத்துச் செல்கிறார்.  வில்லியம் பெட்ரிக்கு பிறகு அவரது உதவியாளர் ஜான் கோல்டிங்ஹாம் வானிலை ஆராய்ச்சி மையத்தை நிர்வகித்தார். அவர்தான் இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வ வானியலாளர். கிழக்கிந்திய நிறுவனத்துக்காக    பணியாற்றினார். வில்லியம் பெட்ரி லண்டன் சென்றபிறகு மைக்கேல் டாப்பிங்குடன் இணைந்து ஜான் கோல்டிங்ஹாம் ஆராய்ச்சியைத் தொடர்கிறார். ஜான் கோல்டிங்ஹாம் ஒரு பொறியியல் வல்லுநர். மைக்கேல் டாப்பிங் உருவாக்கிய நில அளவியல் பள்ளியின் தலைமைப்பொறுப்பையும் ஏற்று நடத்திக்கொண்டிருந்தார். அதேநேரம் இந்தியா முழுமையும் நிலஅளவு செய்து மேப் தயாரிக்கும் வில்லியம் லாம்ப்டனுடன் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்தார். லாம்ப்டன் நிலவியல் பணிகளை மேற்கொண்டு இந்தியாவின் மேப் தயாரிக்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருந்தார். இந்தியாவில் சென்னையில்தான் முதல்முறையாக மேப் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது. நிலத்தை அளந்து மேப் தயாரிப்பதும், வானிலையை கணிப்பதும் வேறு வேறு துறைகள் என்றாலும் இரண்டு துறை வல்லுனர்களும் ஒன்று சேர்ந்து பணியாற்றினார்கள். தங்கள் கண்டுபிடிப்பை கணக்கீடுகளை அவர்களுக்குள் பகிர்ந்துக்கொண்டார்கள். அதன் தொடர்ச்சிதான் இன்று நாம் பார்க்கும் எல்லா அறிவியல் வசதிகளும்.

ஜான் கோல்டிங்ஹாமின் பரந்துபட்ட அனுபவமும் அவரது பொறியியல் படிப்பின் பின்னணியும் , நிலஅளவியல் களப்பணியும்,  வானிலை ஆர்வமும் சேர்ந்து அவரை சிறந்த வானியல் வல்லுனராக மாற்றுகிறது.  இன்று நம்மிடம் செயற்கைகோள்கள் உள்ளன. தவிர உலகநாடுகளிடையே வினாடிகளில் தகவல் பரிமாற்றம் செய்துக்கொள்ளும் தொலைத்தொடர்பு வசதியும் உள்ளது. ஆயிரம் மைல் தாண்டி ஒரு புயல் உருவாகும்போதே அது எந்தத்திசையில் நகரும். எங்கே கரையை கடக்கும். கரையை கடக்கும்போது எந்த வேகத்தில் காற்று வீசும். மழை எத்தனை சென்டிமீட்டர் பெய்யும் என்றெல்லாம் துல்லியமாக கணிக்கமுடிகிறது. அதற்கு தகுந்தாற்போல எச்சரிக்கை கொடுத்து உயிர்சேதத்தையும், பொருட்சேதத்தையும் தவிர்க்கமுடிகிறது. ஆனால் இந்த எந்த வசதிகளுமற்ற காலத்தில் காலநிலையை கணிக்க எவ்வளவு சிரமம் இருந்திருக்கும்?

காலநிலையை கணிப்பதில் பெரும்சிக்கலாக இருந்தது நேரத்தை அளப்பதுதான். மணற்கடிகாரங்கள், சூர்யகடிகாரங்கள் மறைந்து அதிநவீன எந்திர பெண்டுல கடிகாரங்கள் எல்லாம் வந்தாலும் இந்தியா என்ற சிக்கலான பரந்த பிரதேசத்தில் ஒவ்வொரு இடங்களுக்கும் ஒவ்வொரு நேரஅளவு இருந்தது. கொல்கத்தாவில் சூரியன் உதிக்கும் நேரமும், சென்னையில், மும்பையில் உதிக்கும் நேரமும் வேறு வேறாக இருந்தது. இப்போது IST எனப்படும் இந்தியா முழுமைக்குமான ஒரே இந்தியன் தர நேர அளவு உள்ளதல்லவா. இது அந்நாட்களில்  மூன்றாக இருந்தது. பாம்பேக்கு இரு நேரமும், கொல்காத்தாவுக்கு ஒரு நேரமும், சென்னைக்கு ஒரு நேரமும் இருந்தது. இதில் சென்னை நேரம் (Madras Time) என்ற கணக்கை ஜான் கோல்டிங்ஹாம்தான் கொண்டுவந்தார். கிரீன்விச் இடைநிலை நேரத்திற்கு முன்னதாக ஐந்து மணி நேரம், இருபத்தொரு நிமிடங்கள் மற்றும் பதினான்கு  விநாடிகளாக சென்னை நேரத்தை நிர்ணயித்தார். சென்னை நேரம் என்பது கொல்கத்தா நேரத்துக்கு முப்பத்திமூன்று  நிமிடங்கள் மற்றும் இருபது நொடிகள் பின்னதாக இருந்தது. அதாவது கொல்கத்தாவில் காலை ஆறுமணி என்றால் சென்னைக்கு ஆறு மணி முப்பத்து மூன்று நிமிடங்கள். சூரியன் கிழக்கில் உதிப்பதை வைத்து அளவிட்டிருக்கலாம். கிழக்கிந்திய கம்பெனி போய் பிரிட்டன் அரசு ஆட்சியின் கையில் இந்தியா வந்தபிறகு அதாவது 1884-ல் இந்தியாவின்  அதிகாரப்பூர்வ நேர மண்டலங்களாக மும்பை நேரம் மற்றும் கொல்கத்தா நேரம் கணக்கிடப்பட்டது. இந்த இரண்டு நகரங்களில் இருந்த இரயில் நிலையங்களில் இந்த நேரம் பயன்படுத்தப்பட்டது. இந்த இரண்டு மண்டல நேரத்துக்கிடையில் ஓர் இடைநிலை நேரமாக மட்டுமே  சென்னை நேரம்  பயன்படுத்தப்பட்டது. இதனால் சென்னை நேரத்தை  “இந்தியாவின் இரயில்வே நேரம்” என்றும் அழைத்தார்கள். பிறகு அந்தமானில் போர்ட்பிளேயரில் ஒரு இடைநிலை நேரத்தை பயன்படுத்தினார்கள்.  ஆனால் இப்போது அந்தநடைமுறைகள் எல்லாம்  இல்லை. இந்தியா முழுவதும் ஒரே நேரம்தான். நமக்கு அண்டைநாடான இலங்கையில் மட்டுமே அரைமணிநேரம் வித்தியாசம் இருக்கும். இந்த நேர வித்தியாச குழப்பத்தினால் வானிலையை அளப்பதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் வானிலையை கணக்கிடவேண்டியிருந்தது. 1840-ல் ஒவ்வொரு மணிக்கும் வானிலை மாற்றங்களை அளக்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. 1875 -ல் தான் அது ஒவ்வொரு நாள்தோறும் வானிலையை அளக்கும் நடைமுறையாக மாறியது.

இந்த சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் பின்னால் பல பிரிட்டிஷ் பொறியாளர்களின், வானிலை வல்லுநர்களின், நிலவியல் கணக்கெடுப்பாளர்களின் உழைப்பு உள்ளது. 1805 ஆம் ஆண்டு கோல்டிங்ஹாம் இந்த விடுப்பெடுத்துக்கொண்டு செல்கிறார். ஐந்தாண்டுகளுக்கு பிறகுதான் திரும்பிவருகிறார். அந்த ஐந்துவருடங்களில் ஜான் வாரன் என்ற பொறியாளர் ஆராய்ச்சி மைய பணிகளை கவனிக்கிறார். இவர் வில்லியம் லாம்படனோடு இணைந்து மைசூர் நிலவியல் மேப்பை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர். சென்னை வானிலை மையத்தை நிர்வகித்த காலத்தில் வானில் உள்ள நட்சத்திரங்களை கணிப்பதில் சில சூத்திர மாற்றங்களை கொண்டுவந்தார். தீர்க்கரேகை கணக்கீட்டில் சில மாறுதல்கள் செய்தார். விடுப்பில் சென்ற கோல்டிங்ஹாம் திரும்பி வந்ததும் ஜான் வாரன் மீண்டும் அவரிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு பாண்டிச்சேரி சென்றார்.  இவரது கல்லறை பாண்டிச்சேரியில் உள்ளது.

பின்னாட்களில் இந்த ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய போக்ஸன் காலத்தில் இந்த ஆய்வு மையத்தின் துணை ஆய்வு மையங்கள் சென்னையை தாண்டி உருவாக்கப்பட்டன. இந்தியாவை பொறுத்தவரை இரண்டுவித வானிலைகள்தான் பிரதானமாக பார்க்கப்படும். ஒன்று வடக்கிழக்கு வானிலை.  இரண்டாவது தென்மேற்கு வானிலை. இதில் விவசாயத்துக்கான அதிகளவு பருவமழையை கொண்டுவந்து உணவுஉற்பத்தியை பெருக்குவது தென்மேற்கு பருவமழை. தென்மேற்கு பருவமழை பொய்க்கும்போதெல்லாம் உணவுப்பஞ்சம் ஏற்படுவது வழக்கமாக இருந்தது. தவிர கப்பலில் பொருட்கள் ஏற்றி வரும் வணிகர்களும் இந்த வானிலையை நம்பி இருக்கவேண்டியிருந்தது. எனவே பிரிட்டிஷாருக்கு தென்மேற்கு வானிலையை கணிக்க சென்னையைத்தாண்டி கூடுதல்  ஆய்வுமையங்களை  மேற்குத்தொடர்ச்சி மலைப்பிரதேசங்களில்  தொடங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. கொடைக்கானல், நீலகிரி , பழநி போன்ற ஊர்களில் ஆய்வுமையங்கள் தொடங்கப்பட்டன. அங்குள்ள  மலைகளில் தொலைநோக்கியை வைத்து வானிலை மாற்றங்களை, நட்சத்திரங்களின் கோணங்களை இன்னும் துல்லியமாக கணக்கிட ஆரம்பித்தார்கள். தமிழ்நாட்டின் வானிலை கணிப்பில் கொடைக்கானல் வானிலை மையத்தின் பங்கு கணிசமாக இருந்தது. அங்கிருந்து மேற்குத்தொடர்ச்சியிலிருந்து வரும் மழை மேகங்களை கணித்தார்கள். போக்ஸனின் மனைவி, மகளும் கூட அவரோடு சேர்ந்து வானிலை ஆய்வுப்பணிகளில் உதவினார்கள்.

இன்று முசெளரி, டேராடூன் என்று இந்தியாவின் பலஇடங்களில் இந்த வானிலை ஆய்வுமையங்கள் இருந்தாலும்  முதன்முதலில் இந்த ஆய்வுப்பணிகளின் விதை சென்னையில்தான் விதைக்கப்பட்டது. ஐரோப்பாவுக்கு அடுத்தபடியாக என்று வைத்தாலும் உலகின் இரண்டாவது இடமென்ற பெருமையும் சென்னைக்கு உண்டு.  சென்னை வானிலை மையத்தில்  மைக்கேல் டாப்பிங் வடிவமைத்த பதினைந்தடி கல்தூண் இன்றும் அங்குள்ளது. ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட அந்த கிரானைட் தூணின் எடை பத்து டன். அந்தத்தூணின் மேல்தான் தொலைநோக்கி , தியோடலைட் போன்ற கருவிகளை வைத்து வானிலை மற்றும் நிலஅளவை கணக்கிட்டார்கள்.   பத்தொன்பதாம் நூற்றாண்டின் நிகழ்ந்த கிரகணங்களை கணித்தார்கள்.  அந்தத்தூணில் லத்தீன், துளு, தமிழ் தெலுங்கில் இப்படி எழுதி வைத்துள்ளார்கள்.

“ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் வருபவர்களும் ஆசியாவில் பிரிட்டிஷ் காலத்தில் கணித அறிவியல் தொழில்நுட்பம் நிறுவியதை தெரிந்துக்கொள்வதற்காக…”

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. சென்னையின் முகமான  தி.நகர்- விநாயக முருகன்
 2. சென்னையும், வேல்ஸ் இளவரசரின் வருகையும் - விநாயக முருகன்
 3. ஏழுகிணற்றின் வரலாறு- விநாயக முருகன்
 4. அது ஒரு டிராம் வண்டிகள் காலம் - விநாயக முருகன்
 5. அடையாறும், ஆல்காட் இயக்கமும்- விநாயக முருகன்
 6. ஒரு வங்கி திவாலான கதை  - விநாயக முருகன்
 7. மைனர் மாளிகையும் ஒரு நள்ளிரவுப் படுகொலையும் 
 8. சென்னையின் சிவப்பு மாளிகைகள்- விநாயக முருகன்
 9. சென்னையின் சில பெயர்களும், காரணங்களும்- விநாயக முருகன்
 10. கன்னிமாராவின்  கதை-விநாயக முருகன்
 11. பிரிட்டிஷாரின் ஆவணங்கள் காட்டும் உண்மைகள்- விநாயக முருகன்
 12. கோஷா மருத்துவமனையின் கதை – விநாயக முருகன்
 13. ஒரு விளையாட்டின் கதை - விநாயக முருகன்
 14. பின்னிமில்லின் கதை - விநாயக முருகன்
 15. ஒரு கால்வாய் மறைந்த கதை  - விநாயக முருகன்
 16. தேசத்தை அளந்த கால்களின் கதை - விநாயக முருகன்
 17. ஆர்மீனியர்கள்: வாழ்ந்துகெட்ட வம்சத்தின் கதை - விநாயக முருகன்
 18. தறிப்பேட்டையும், மஸ்லின் துணியின் கதையும் - விநாயக முருகன்