உற்பத்தியின் பெருமையைக் காதுபுளிக்கப் பேசிக்கொண்டிருக்கும் பழைமை வாய்களுக்கு, மறு உற்பத்தியின் வெறுமையைக் கண்கிழிபடக் கண்டுகொண்டிருக்கும் எந்திர முகங்கள் பெருத்த அதிர்ச்சியளிக்கின்றன. வாழ்வியல் மதிப்புகள் அனைத்தும் மறுவரையறைக்குட்படும் ஒரு புதிய காலத்திற்குள் புகுந்துள்ளோம். எல்லாமே முன்சொல்லப்பட்டு விட்டன, இனி சொல்வதற்கு எதுவுமே இல்லை என்ற அதிகாரக் குரல் இன்று அடித்து நொறுக்கப்பட்டுத் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது. காலங்காலமாகச் சொல்லப்பட்ட யாவும் கேலிக்குரியவையாகிச் சாரமேதுமற்ற சக்கைகளாகத் துப்பப்பட்டுவிட்டன. பழைய வாழ்விலிருந்து கற்றுக்கொள்ள அதிகமில்லை என்ற ஒரு சூழலில், அக்காலம் கட்டமைத்த அறம் என்ற சொல்லிற்குப் பொருள்தான் யாது? பொய் சொல்லாதே, திருடாதே, புறம் பேசாதே, பிறன் மனை நோக்காதே, உயிர்களைக் கொல்லாதே, கள் குடிக்காதே என்று எதிர்மறையாகப் பேசப்படும் விழுமியங்களுக்கான அன்றைய மன்னராட்சித் தேவைகளும், இன்றைய மக்களாட்சி உருவாக்கி நிலைநிறுத்தும் சந்தைப்போட்டிச் சுரண்டல் நெருக்கடிகளும் ஒன்றுபோல் வெளிப்பார்வைக்குத் தோன்றினாலுங்கூட, அடிப்படையில் அவை வேறுவேறானவையே. இவ்வேறுபாட்டைப் பழநெறிமுறைகளின் இறுக்கத்திலும், இன்றைய திறப்புகளின் நெகிழ்விலும் கண்டுகொள்ளலாம்.
உண்மை சொல், உழைத்து வாழ், நேர்மையுடன் இரு, வெளிப்படையாகப் பேசு, மனைவியை நேசி, உயிர்களைப் போற்று, உடலுக்கு நன்மை செய்யும் உணவை உண் என்று நேர்ப்படப் பேசாமல் சுற்றிவளைத்து அதைச் செய்யாதே, இதைத் தவிர் என்று எதிர்நிலையாக அறிவுறுத்த வேண்டிய தேவைதான் யாது? இதற்குப் பதிலளிக்க, வரலாற்றைப் புதுக்கண்ணில் நோக்குவது அடிப்படையாகும். ஆளுவோரின் நலன்களைப் பேணவே, எதிர்நிலையிலிருந்து அறங்கள் போற்றப்படுகின்றன. ஆனால், அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் மாற்று அறங்கள் இப்படிப்பட்டவையல்ல. உண்மையில் அதிகாரத்தைப் பேணும் நோக்கில் கூறப்படுபவனவற்றையெல்லாம் அறம் என்ற சொல்லால் சுட்டுவது சரியா என்பது, இன்னும் உயிர்ப்புள்ள ஒரு வினாவாகும். அடித்தட்டு மக்களின் வாழ்வியல் விழுமியங்களிலிருந்து உருவாகுபவையே, நேர்நோக்கு அறங்கள். ’அறம்’ என்ற சொல்லிற்கு, ‘அதிகாரத்திற்கு எதிரானது’ என்ற பொருளைத் தருவதுதான், வரலாற்றைக் கூர்ந்து நோக்குவோர் செய்யவேண்டியதாகும்.
அறமும் அதிகாரமும் எதிர்ச்சொற்களாக அல்லாமல் இணைச்சொற்களாக விளக்கப்படுவதில் சமூக வரலாற்றைக் குழப்பிப் பின்னகர்த்தும் சில அரசியல் தடுமாற்றங்கள் முண்டியடித்து முன்னுக்கு வருவதைக் கருதவேண்டும். இந்தச் சமூகம் இப்படியே இருக்கவியலாது, கடந்த காலத்திலும்கூட, இது இப்படியே அசைவற்ற ஆளும் வர்க்கச் சார்புடைய வரலாறாக மட்டுமே இருந்ததில்லை. எப்போதும் ஆளும் வர்க்கமும் சுரண்டப்படும் அடித்தட்டு வர்க்கமும் போராடிக்கொண்டேதான் இருந்தன; வர்க்கப் போராட்டம்தான் வரலாறு; சமூக இயங்கியலைப் புரிந்துகொண்டு அதைச் சுரண்டப்படுவோருக்கு ஆதரவாகத் திருப்பிவிடும் செயலைத் திட்டமிட்டு வளர்ப்பதுதான் சமத்துவத்திற்கான வழியெனக் கருதும் யாரும் அறத்தை அதிகாரத்திற்கு எதிரான குரலாகத்தான் காண முடியுமே தவிர, அறத்தின்வழி அதிகாரம் கட்டமைக்கப்படுவதாகச் சமூக வரலாற்றைத் திரிக்கமுடியாது. ஏனெனில், அதிகாரம் என்பது ஆளுவோர் உருவாக்கிய சொல் என்றால், அறம் என்பது எளியோரின் வாழ்வியல் புரிதலாகும்.
‘பொது அறம்’ இல்லை என்று சொல்கிறபோது, அதற்கு எந்த நிலையிலும் அறமே இல்லை எனப் பொருள் கொள்வது, யாருக்குச் சாதகமானதாகும்? பண்டைய உலகாயதரைச் சமூக ஒழுங்கைக் குலைக்கும் அராஜகவாதிகள், பெண் பித்தர்கள், குடிகாரர்கள், உதிரிகள், வீணர்கள், பொறுக்கிகள் என ஏளனம் செய்ததற்கும் அறமற்றோராகப் போராட்டக்காரர்களைக் கொச்சைப்படுத்துவதற்கும் அடிப்படையில் வேறுபாடில்லை. சமயவாதிகளும் ஒழுக்கவாதிகளும் பிற்போக்குவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும் வலியுறுத்தும் அறங்கள் உண்மையில் அறங்களே இல்லை என்பதையும், பின்நவீனர்கள் அறமே இல்லை என்று மறுத்தபோதிலும்கூட, அவர்களிடமே எல்லாரையும் (all inclusive) கணக்கிலெடுக்கும் பொதுமை அறங்கள் பக்கச்சார்பின்றிப் பொலிகின்றன என்பதையும் கண்ணுள்ளோர் காணக்கடவர். இவ்விவாதத்தை இதற்குமேல் வளர்த்துச் செல்ல இக்கட்டுரையில் இடமில்லை என்பதால், வெகு மக்களின் ஜீவித நியாயங்களுக்குத் தடையாகாமல், எல்லா வகைப்பட்ட அதிகாரங்களுக்குமெதிராகத் தன்னைப் புத்தம்புதிதாகத் தகவமைத்துக்கொள்ளும் இயல்புணர்வுகளின் எளிய வெளிப்பாடே அறம் என உடன்பாட்டுப் பார்வையில் புரிந்துகொண்டு, ஏலாதிக்குள் செல்கிறேன்.
கி.பி. 5 – கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குரியதாகப் பொதுவாகக் கருதப்படும் பதினெண் கீழ்க்கணக்கு நீதிநூல்களுள் ஒன்றான ஏலாதி, கணிமேதை என்ற சமணரால் இயற்றப்பட்டதாகும். சிறப்புப் பாயிரம், கடவுள் வணக்கம் உட்பட இந்த நூலில் 82 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன. ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறு மருந்துப் பொடிகளின் கூட்டுக்கலவையால் செய்யப்படுவது ஏலாதியாகும். இது பழங்குடிச் சமூகங்களின் அன்றாட உலகியல் நடைமுறைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மருத்துவ அறிவாகத் தொன்றிருந்து, பின் சமணர்களிடம் சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில், சமணமும் வைதீகமும் பூசலொதுக்கித் தமக்குள் சமரசம் செய்து கொண்டபோது, இது பொதுச்சமூகத்தால் ஏற்கப்பட்டு, `நன்கு பரிசோதிக்கப்பட்ட வீட்டு மருந்தாகி’ப் படிப்படியாகப் பரவிப் `பாட்டி வைத்தியமாக` நிலைபெற்றிருக்க வேண்டும். ஏலத்தை முற்கொண்ட `ஏலாதி` என்ற இந்த மருந்தின் வெற்றிகரமான தலையீடு, இலக்கியத்திலும் ஒரு கருத்தாக எதிரொலித்தபோது, இந்நூல் பிறந்திருக்கலாம்.
இல்லறம், துறவறம், வீடுபேற்றிற்கு வழிகாட்டும் நூலாகச் சிறப்புப்பாயிரம்வழித் தன்னை ஏலாதி இனங்காட்டிக் கொள்கிறது. இப்பாயிரம், `மகடூஉ முன்னிலையாய்` இயற்றப்பட்டுள்ளது. `நால்மறை புரிந்து வாழுமேல், மண்ணொழிந்து விண்ணோர்க்கு இறைபுரிந்து வாழ்தல் இயல்பு` எனக் கடவுள் வணக்கம் கூறப்படுவதால், இது சமணப் புலவரால் இயற்றப்பட்டதாயினும், இதனுள் வைதீகத்தின் செல்வாக்குள்ளதும் அறியப்படுகின்றது. மண்ணொழிந்து விண்சென்று வாழ்தலைப் போற்றும் ஒரு கருத்தியல், உலக வாழ்வைத் தற்காலிகமானதாகக் கருதும் ஒரு வாழ்க்கை நோக்கிலிருந்து பிறப்பதாகும். இவ்வுலகிற்கு வெளியில் இன்னோர் உயர்நிலை உலகமுண்டு என்று கருதுவதால், இவ்வுலக வாழ்வு வெறுக்கப்பட்டு, மறுவுலகு பற்றிய புனைவுகள் மிகையழுத்தம் பெற்றுவிடுகின்றன. எனவே, அம்மேல்நிலைப் புனைவுக்குத் தக்கபடி இவ்வுலக வாழ்வைக் கறாரான விதிகளுடன் வடிவமைத்துக்கொள்வதும் கட்டாயமாகிவிடுகிறது.
வாழ்வியல் நெறிகளை வகுத்தளிக்கும் நீதி நூல்களில், முதன்மையாக இடம்பெறும் ஒரு கருத்து, சாதிக்கொரு நீதி கூற முனையும் அவற்றின் ஒருபாற்கோடலாகும். புகழ், செல்வம், மீக்கூற்றமாகிய அனைவராலும் மதிக்கப்படும் விழுமிய சொல், கடமையில் கருத்தைச் செலுத்தும் உறுதி, கல்வி, கொடை ஆகியன மறைவழிப்பட்டாரிடத்துப் பொருந்தும் அழகுகள் என்கிறார் கணிமேதை. இங்குச் சுட்டப்பட்ட ஆறினையும் நல்வாழ்வுக்குரிய சிறப்புகளாக ஏற்கலாம். ஆனால், இவை ஆறும் மறையோரிடத்து மட்டுமே குடிகொண்டிருக்கும் அழகுகள் என்ற கூற்றை, நாம் எவ்வாறு ஏற்கமுடியும்? மறையோர் நலன்களைப் பேண முனையும் இக்கருத்து, அறநூலின் பொதுமைக்குப் பெருமையா சேர்க்கிறது? இத்தகைய பிரிவினைக் கருத்தைப் புறக்கணித்துச் சாதி, மத, இன, வர்க்க, பால் பேதம் கடந்ததாக அறத்தைக் கணிமேதையார் பேசியிருக்க வேண்டாமா?
பிறர் இடர் தீர்த்தல், யாரையும் இகழாமை, கீழ்களோடு பழகாமை, பசித்துன்பம் போக்கல், உலகம் பழிக்கும் செயல் தவிர்த்தல், கண்டோர் விரும்பும் இனிய சொல் பேசல் ஆகிய ஆறும் கொண்டோருக்குக் கல்வி புகட்டும் அறிவு நூல்கள் தேவையில்லை என்கிறார். இங்குக் கீழ்கள் என்று யாரைக் கணிமேதை கூறுகிறார் என்பது முக்கியமான வினாவாகும். சாதியாலோ ஏழ்மையாலோ மனிதரை இழிவாகக் கருதுவது அறமாகாது. மேலும், குணம் இழிந்தோரிடத்தும் அன்பு பூண்டு சேர்ந்து பழகி மாற்றாரையும் மாற்றக் கருதுவதே பண்புடைமையாகும். உலக நடை அறிந்து ஒழுகலும், எப்போதும் இன் சொல்லே பேசலும் சுயநல வாழ்வுக்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால், சமூகக் கேட்டைத் தட்டிக் கேட்கும் துணிவையும், இடித்துரைத்துத் திருத்தும் மாண்பையும் மனிதனுக்குத் தர அவை தவறிவிடுகின்றன. இவற்றைக் கணிமேதையார் கவனங்கொள்ளவில்லை (பாடல் : 84).
தனக்கும் தன்னைச் சார்ந்தவருக்கும் பொய்யுரையாது மெய்யுரைத்தல், சுயநலப் பற்றின்மை, நகையணிந்த மாதர்களின் சொல்லைப் பேணாமை, செல்வச் செருக்கின்மை ஆகியவற்றை உடையவனிடத்து அறநூற்பண்புகள் தாமே வந்து நிரம்பும் என்கிறார் (பாடல் : 5). நகையணிந்த மாதர் சொல்லைக் கேளாதே என்பது, எவ்வாறு அறமாகவியலும்? இது ஆணாதிக்கக் கருத்தியலின் உச்சமல்லவா? கொலைஞருடன் சேராதும், ஓருயிரைக் கொல்லாதும், வருந்துவோரின் நோய் தீர்த்தும், அறியாமைக்குட்படாமலும், சான்றோர்களின் நூல்களைக் கற்றும், அதற்குத் தக ஒழுகியும் வாழ்வோனைச் சேர்ந்தோர் மேம்படுவர் (பாடல் : 8) என்ற கருத்தோடு உடன்படலாம். இது அனைவரும் பின்பற்றத்தக்க நெறியாகும். ஆனால், கொடுமை செய்தாரைக் கொல்லல் தவறன்று என இதற்கு எதிர்வாதம் பேசவும் இடமுண்டு. கொலைக்களம், நீர்நிலைகள், சூதாடுமிடம், சிறைச்சாலை, போர் யானைகளைப் பழக்குமிடம், யானையும் தேரும் குதிரையும் ஓடுமிடங்கள், இவற்றை விரும்பாமையும் போய்ப் பாராமையும் நல்லது (பாடல் : 12) என்பதில், ஆபத்துக்கஞ்சும் எளிய மனநிலை ஒளிந்துள்ளதைக் காணலாம். இது ஒரு மேல்வர்க்க மனநிலை என்றும்கூட நோக்கலாம். சூதாட்டத் தடை, சிறையொழிப்பு, போரெதிர்ப்பை வலியுறுத்துவதுதானே பொது அறமாக நிலைபெற முடியும்?
கண்போன்ற நண்பரைக் கோபிக்கக்கூடாது என்றும், கற்றாரைச் சேர்ந்தொழுகவேண்டும் என்றும், சிறியதாயினும் வறியோருக்களித்துத் துன்பம் நீக்கவேண்டும் என்றும் கூறுவனவற்றைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், பெண்ணைப் பின்பற்றக்கூடாது என்றும், பெண்ணுக்கு மறைபொருள் உண்மைகளைக் கூறக்கூடாது என்றும் அறிவுறுத்துவதெல்லாம் அறமாகுமா? (பாடல் : 15). எனினும், `இறுதலில் வாழ்வே இனிது` (பாடல் : 16) எனத் துறவறத்தினும் இல்லறமே இனிது எனக் கூறும் குரல், இன்றைய காலத்திற்கும் பொருத்தமானதாகும். இதற்கெதிராக, `மின்னேர் இடையார் சொல் தேறான் (பாடல் : 20) எனப் பெண்ணைப் பழிக்கும் மூடக்குரல், இக்காலத்திற்கு மட்டுமில்லை, எக்காலத்திற்கும் பொருந்தாத ஒன்றாகும். “வெறுப்பு அறுத்தான் விண்ணகத்தும் இல்’’ (பாடல் : 20) எனப் பிறரை வெறுக்காதவன் விண்ணுலகிலும் இல்லை என்றுரைத்து, மனிதரின் தீய இயல்பு பற்றிய எதிர்நிலை நோக்கைப் புலப்படுத்துகிறார். இதனூடாகச் சூழலைக் கட்டுக்குள் வைத்திருக்க அற நெறியை ஆளுவோர் போதிப்பதன் அதிகாரத் தேவையைப் புரிந்துகொள்ளலாம்.
இளமை கழிவதாலும், பிணியும் மூப்பும் வருவதாலும், செல்வமும் உடல் வலிமையும் தேய்வதாலும், எஞ்சிய வாழ்நாள் முழுவதும் இத்தகைய துன்பங்களே சூழ்வதாலும் வீடுபேற்றை விரும்பிச் செயல்படுதலே முறைமையாகும் என்கிறார் கணிமேதையார் (பாடல் : 21). இவ்வுலக வாழ்வு கசக்கும்போது, மறுமை பற்றிய புனைவே ஆறுதலளிக்கிறது. இக வாழ்வு இனிக்கும் இளமையில் வீடுபேற்றை யாரும் நினைப்பதுமில்லை என்றும் இப்பாடலை நுணுக்கிக் காணலாம். இவ்வாறு கட்டுடைக்கும்போது, பேறு பற்றிய மிகையழுத்தம் கைவிடப்பட்டுச் சாவிற்குக் காத்திருப்போனின் ‘மன மாயை’ அது என்பதும் புலப்பட்டுவிடுகிறதல்லவா! மேடையில் வந்தாடும் கூத்தர்களைப்போல் பிறந்திறந்து உழன்றுகொண்டிராமல், வீடே பற்றினாருக்கு இன்பமுண்டு என்கிறார் கணிமேதை (பாடல் : 24). இப்பாடலில் கையாளப்படும் உவமை, ஷேக்ஸ்பியரின் All the world is a stage, everybody is an actor என்பதை நினைவூட்டுவதாகக் கூறலாம். பிறன் மனை விரும்பலைக் கடிந்துரைத்தல், ஐம்புலன்களின் நுகர்வைச் சாடல், பொதுமகளிரை ஏசல், தவப்பெருமை பேசல், புலால் உண்ணலைக் கண்டித்தல், கள்குடித்தலைப் பழித்தல், சூதாட்டத்தை இழித்துரைத்தல் முதலியவற்றை ஏலாதியில் காண்கிறோம். இவை குடும்பத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் கூறப்பட்டுள்ளன. இச்செயல்களால், சமூக வாழ்வில் மதிப்பிழந்தோர், மறுவாய்ப்புகளே தரப்படாமல், சமூகவிரோதிகளாகக் கருதப்பட்டுப் புறக்கணிக்கப்படுகின்றனர். இதில் மேல்வர்க்க நலன்களே ஒளிந்துள்ளன. ஒழுங்கீனரைச் சமூகத்திலிருந்து வெளியேற்றும் இலக்குடன், அவர்களை அறம் தவறியோராகக் கடுமையாக விமர்சித்து இழித்துரைக்கின்றனர். பண்படுத்துவதில் பரிவற்ற இந்தக் கபடமே, அதிகாரம் பேணும் அறப்போலிகளின் உண்மை முகமாகும்.
கொலை, திருட்டு, காமத்திற்கு எதிர்ப்பதங்களாகக் கொல்லாமை, கள்ளாமை, காதலைக் கணிமேதை பரிந்துரைக்கின்றார் (பாடல் : 29). சான்றோரைப் பிறரிடமிருந்து உயர்த்திக்காட்டும் குணநலன்களாக இவை கூறப்படுவதல்லாமல், சமூக நன்னடத்தைகளாக உண்மையில் இவை வற்புறுத்தப்படுவதில்லை. எனவே, அதிகாரம் கோலோச்சுமிடங்களில் அறம் முதன்மைப்படுத்தப்படுவதும், பிற இடங்களில் அறம் அதிகாரமாகாது தடுக்கப்படுவதும் சமூகத் தேவைகளாகின்றன. இவற்றை ஏலாதி போன்ற அறநூல்கள் ஓரளவுக்கு உணர்ந்திருந்தாலும், பெரும்பாலும் அவை, ஆள்வோருக்குச் சாதகமாகவே செயல்பட்டுள்ளன. கணவனுக்குப் பிறந்தவன் ஔரதன் என்றும், கணவன் உள்ளபோதே பிறனுக்குப் பிறந்தவன் கேத்திரசன் என்றும், திருமணத்திற்கு முன்பாகப் பிறந்தவன் காணீனன் என்றும், களவில் பிறந்தவன் கூடன் என்றும், விலைக்கு வாங்கப்பட்டவன் கிரீதன் என்றும், மறுமணம் புரிந்த இரண்டாம் கணவனுக்குப் பிறந்தவன் பெளநற்பவன் என்றும், சுவீகாரபுத்திரன் தத்தன் என்றும், திருமணத்தின்முன் கருக்கொண்டு பின்பிறந்தவன் சகோடன் என்றும், தானே மகனாகப் புகுந்துகொண்டவன் சூதன் என்றும், கைவிடப்பட்ட குழந்தையாய்க் கண்டெடுக்கப்பட்டுப் பேணப்பட்டவன் அபவித்திரன் என்றும், காணிக்கை கொடுக்கப்பட்டவன் உருகிருதன் என்றும், அன்னமும் ஆடையும் கொடுத்துப் புத்திரனாகப் பாவிக்கப்பட்டவன் உபகூதன் என்றும், மகளுக்குத் தந்தையிடம் பிறந்தவன் புத்ரீ புத்ரன் என்றும் (பாடல் : 30) வழங்கப்பட்டதாக ஏலாதி மற்றும் அதன் உரைவழியே அறிகிறோம். இதுதான் சமூக நடப்பியல். ஆனால், கற்பரசிகளின் பெருமையைப் பலவாறாக நம் அற நூல்கள் விதந்தோதுகின்றன. இது உடற்கற்பைப் பெண்மீது மூளைச்சலவை செய்தேற்றும் ஆணாதிக்கம் பேணும் முயற்சியேயாகும்.
கீழ்மை பேசாதும், பகைமை பாராட்டாதும், சினம் கொள்ளாதும், தன் நல்லியல்பைத் தானே புகழாதும், எந்தக் குற்றமும் செய்யாதும், தன்னை நாடுவோருக்கு முடிந்ததைக் கொடுத்துதவும் பண்பாளனைத் தேவர்களும் விரும்புவர் என்கிறது ஏலாதி (பாடல் : 34). இது ஒரு தனிமனித அறமாகும். கொடுப்பவனும் பெறுபவனும் இல்லாத ஒரு சூழலில்தான் பொது அறத்தின் வெற்றி முழுமைப்படுகிறதெனலாம். காலில்லார், கண்ணில்லார், நாக்கில்லார், துணையில்லார், நூலறிவில்லார் ஆகியோருக்கு உணவளித்தவரைத் தேவர்களும் விரும்புவர் (பாடல் : 36) என்பதால், விளிம்புநிலை மக்களைப் பேணும் பொது அறம் பற்றியும் ஓரளவு ஏலாதி பேசியுள்ளதெனலாம். உயிர் விடுதல் எளிது; சான்றோனாதல் அரிது; மணவாழ்வில் ஈடுபடுதல் எளிது; உண்மையாயிருத்தல் அரிது; பெருந்தவம் எளிது; பேற்றுநிலை கூடும்வரை அதிலேயே நிலைத்திருத்தல் அரிது; எதனையும் கூறுவது எளிது; செய்து முடிப்பது அரிது என்கிறார் (பாடல் : 39). இவை உலகோர் இயல்பாயுள்ளன. இவற்றைக் கூறுவதன்வழிச் சிந்தனையைத் தூண்டி, மேலும் முனைப்பாகச் செயல்பட மனிதனைக் கணிமேதையார் ஆற்றுப்படுத்துகிறார். இதேபோல் எளியோரை எள்ளக்கூடாது (பாடல் : 46) என்பதிலும், அவரிடம் ஒரு பெருநோக்கைக் காணமுடிகிறது.
தவம் செய்வோருக்குப் பசு நெய்யுடன் உணவளிப்போன் மறுமையில் குபேரனாய் வாழ்வான் (பாடல் : 49) என்பதில், தவம் புரிவோருக்குச் சார்பாக அறம் திரிக்கப்படுவது விமர்சனத்துக்குரியது. ஆனால், நீர் வளம் பெருக்குவோன் ஆடல் பாடலுடன் சிறந்த மனைவியையும் பெற்று இன்புற்று வாழ்வான் (பாடல் : 51) என்பது, சூழலியலுக்கு ஆதரவான குரல். இதன் நீட்சியாய் வீடிழந்தோர், கண்ணிழந்தோர், நெல்லிழந்தோர், பசுமந்தையிழந்தோர், கால்முடப்பட்டோர், கருவுற்றோர், கடன்பட்டோர், ஆதரவற்றோர், பொருளற்றோர், பித்தர், நோயாளிகள், வயது முதிர்ந்தோர், பெற்றோர் இல்லாதாருக்கு உணவளிப்போர் இவ்வுலகில் மன்னர்களாகி இன்புறுவார்கள் என்கிறது ஏலாதி (பாடல்கள் : 52, 53). இது சமூக நீதி கோரும் பேரறமாகும். சுரண்டிக்கொழுப்போரைத் தடுக்கவியலாதபோது அவர்களிடமே சென்றிரந்து, சமூகப் பொதுநலத்தைப் பேணக் கேட்பது, ஒன்றுமே செய்யாது அழிவை வேடிக்கை பார்ப்பதைவிட மேலானதல்லவா? மன்னராகலாம் என்ற ஆசையாலாவது சிலர் நன்மை செய்ய வரமாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பின் அவலக்குரல்தான் இது. எனினும், அந்தணர் துன்பம் நீக்கியோர் இன்புறுவர் (பாடல் : 54) எனச் சாதிக் குரலாக ஒலிக்கும்போது, இது அறத்திற்கெதிரான ஒருவகை அதிகாரக் குரலாக நீர்த்துவிடுகிறது. அதேவேளை அடிமைப்பட்டோர், தாழ்வுற்றோர், கருஞ்சிரங்குடையோர், வெண்தொழுநோயுடையோர், பெருஞ்சிரங்குடையோர், வாத நோயுடையோர், வயிற்று எரிச்சலுடையோர் மற்றும் சுமைதூக்கி வழிநடப்போருக்கு உணவளிக்க வேண்டுமென்று ஏலாதி கூறுவதையும் சிந்திக்க வேண்டும்.
அன்னதானத்தைப் பேரறமாக ஏலாதி வலியுறுத்துகின்றது; தவ வாழ்வை வியந்து வீடுபேற்று நெறியைப் பெரிதும் போற்றுகின்றது; புலன்வழித் திரிந்து கெடும் இன்பவாதிகளைத் தூற்றுகின்றது; அந்தணர் மற்றும் மன்னர்களை முதன்மைப்படுத்துகின்றது; மகடூஉ முன்னிலையாகப் பாடப்பட்டிருந்தாலும் பெண்களைப் பழிப்பதில் ஏலாதி முன் நிற்கின்றது; புலால், கள், சூது, பொய், புறங்கூறலைக் கண்டிக்கிறது; மறுமை உலகப் பயன்களைப் பரிந்துரைத்து இம்மையை இரண்டாம் இடத்துக்குத் தள்ளுகிறது; நட்பையும் கற்பையும் புகழ்கிறது; இல்லறத்தாரின் கடன்களை நினைவூட்டி விருந்தோம்பலைச் சிறப்பிக்கிறது. ஆனால், திருக்குறள் போலின்றி, ஏலாதி கூறும் அறங்கள், தெளிவாகச் சமூக நலன்களுக்குப் பொருந்துமாறு வரையறுத்துக் காட்டப்படவில்லை. கூறியது கூறலாகவும், பக்கச் சார்புடனும், அதிகாரம் பேணும் நோக்குடனுமே வருண அறங்கள் ஏலாதியில் கூறப்பட்டுள்ளன. இவை சமூகக் கொதிப்பைத் தடுக்கும் எண்ணத்துடன் ஒருவகை சமரச மனத்தைப் புலப்படுத்தினாலும், பெரும்பாலும் இவை, ஆளுங்கருத்தியலுக்கு வலுச் சேர்க்கும் ஆண் நோக்கின என்பதில் மாற்றுக்கருத்தில்லை. (புஷ்பரத செட்டியார் (ப.ஆ.), கணிமேதையார் செய்த ஏலாதி : மூலமும் உரையும், முதற்பதிப்பு : 1887, சென்னை).