பூதவாதம், சடவாதம், தேகவாதம், ஏதுவாதம், இயற்கைவாதம், உலகப்பற்றுவாதம், காட்சிவாதம், சுபாவவாதம், தற்செயல்வாதம், பிரகஸ்பதியம், தாந்திரிகம், சாருவாகம், காபாலிகம், புலன்வாதம், இன்பவாதம், விதண்டாவாதம், இம்மைவாதம், கற்பனாவாதம், நாத்திகவாதம், குதர்க்கவாதம், நடைமுறைவாதம் எனப் பல பெயர்களால் உலகாயதம் குறிக்கப்படுகிறது. உலகத் தத்துவங்களில் உலகாயதம் தவிரப் பிற எதற்கும் இவ்வளவு மேலதிகமான பெயர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இப்பெயர்ப்பெருக்கம், உலகாயதத்திற்குப் பொதுமக்களிடமிருந்த பெருஞ்செல்வாக்கையும், பரவலான புழக்கத்தையும், குறிப்பிடத்தக்க நெருக்கத்தையும், தொன்மைச்சிறப்பையும் காட்டுவதாகத் துணியலாம்.
பிறவிதோறும் தொடர்ந்து வருவதாகப் பாவ புண்ணியங்களுக்கேற்பப் பலனளிப்பதாகச் சூழ்வினைகளால் சுற்றப்படுவதாகக் காரணமற்ற இறையருளால் படைக்கப்படுவதாகச் சரீர வாழ்வை உலகாயதம் காண்பதில்லை. பேரண்டத்தின் முன்மாதிரியாக மனித உடலைக் கண்டு, ஆண்-பெண் இணைவிலும் நால்பூதக்கூட்டின் அடிப்படையிலும் மனிதப் பிறப்பையும் உலகத் தோற்றத்தையும் ‘கன்மம் மற்றும் கடவுளின்’ துணையின்றிக் கண்டு காட்டுவதுதான் உலகாயதமாகும்.
இது தூல தேகான்மவாதம், சூக்கும தேகான்மவாதம், இந்திரியான்மவாதம், அந்தக்கரணான்மவாதம், பிராணான்மவாதம், சமுதாயவாதம் எனப் பல்நோக்குப் பெற்றதாகும். இதைப் பிறர் எவ்வளவு குறுக்கி விளக்கினாலும், இதன் உடன்பாட்டுப் பார்வையும் பயன்பாடும் மதிப்பும் சாரமும் சிறிதும் அழிந்துவிடுவதில்லை. வரையறுக்கப்பட்ட சமூக ஒழுகலாறுகளின் மூலம் நிலைப்படுத்தப்பட்ட இரத்த உறவுக் குழுமங்களின் தோற்றத்திற்கும், இன்றைய நவீனகால வளர்ச்சிநிலைகளுக்கும் மிகமுற்பட்ட தொல்பழங்காலத்திலேயே வெகுமக்களின் இந்நடைமுறைவாதம் இயற்கையின் உடன்விளைவாகப் பிறந்துவிட்டதைக் கண்ணுள்ளோர் காணத் தவறக்கூடாது.
வர்க்கச்சுரண்டலின் விளைவாகத் தனியுடைமையின் பல்வேறு அதிகாரப் படிநிலைகள் கொண்டதாகப் பிரிவையும் பேதத்தையும் அவை இங்குள்ளவாறே நியாயப்படுத்தக் காலத்தாலும் கருத்தாலும் மிகப்பிற்பட்ட பல்வகைச் சமயச் சொல்லாடல்களும் முனைவதைக் காண்கிறோம். இவற்றினுள் மிகத்தந்திரமாக ஒளித்துவைக்கப்பட்டுள்ள சமத்துவ மானுட உணர்வுகளுக்கான புராதனப் பொதுவுடைமைச் சமூகத்தின் உலகாயதக் குரலைக் கண்டெடுத்து, மீண்டும் அதை வலிமையாக ஒலிக்க வைப்பதற்கான தத்தவப் போராட்டத்தைத் தற்காலத்தில் புதிய விழிப்புடன் முன்னெடுக்கும் தேவையுள்ளது. இத்தேவையின் பொருட்டே, ‘உலகாயதம் பற்றிய மிக விரிவான ஓர் உரையாடல்’, கூடுதல் அழுத்தத்துடன் முன்வைக்கப்படுகிறது.
உலகத்தோற்றத்திற்குப் புறக்காரணமும் கடவுளும் தேவையில்லை எனக் கருதிய உலகாயதர்களின் தத்துவத்தில், கண்களுக்குப் புலனாகும் பொருள்களைத் தவிரப் பிற எதுவும் முதன்மை பெறவில்லை. கடவுள், விதி, கர்மா, வினைச்சக்கரம், சொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம் போன்றவற்றைக் கடுமையாக மறுத்த உலகாயதர்கள், இந்த உலகப் பொருள்கள் தோன்றி மறைவது அவற்றின் இயல்பால்தான் என்று வாதிட்டனர். மாறுவதுதான் பொருள்களின் இயல்பு; மாற்றுவதற்குக் கடவுள் தேவையில்லை என்ற பொருள்முதல்வாதிகளின் இன்றைய விஞ்ஞான நோக்கைப் பழங்காலத்திலேயே உலகாயதர்கள் கைக்கொண்டிருந்தனர். மேலும், இத்தகைய முதல்நிலைப் பொருள்முதல்வாதத்தினைச் சாங்கியர்கள், வைசேடிகர்கள், மீமாம்சகர்கள், சமணர்கள், பௌத்தர்கள் எனப் பலரும் ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பேசினர். ஆனால், நிறுவனமயத்திற்கு ஆட்படாதவர்கள் என்ற வகையிலும், வினைப்பயனுக்கு முற்றிலும் எதிரானவர்கள் என்ற முறையிலும், காட்சியைக் கருதல் அளவையுடன் கூடுமானவரை இணைத்துச் செயல்பட்ட விதத்திலும், இயல்புணர்வுகளுக்கு முதன்மையளித்தவர்கள் என்ற சிறப்பாலும் பிறரிடமிருந்து உலகாயதர்கள் முழுக்க முழுக்க வேறுபட்டவர்களாயினர்.
வானமும் பூமியும் காற்றும் நீரும் நெருப்பும் தோன்றியவுடன் கடவுளும் தோன்றிவிடவில்லை. மனம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் கடவுள் பிறக்கிறார். அனுபூதிவாதமும் இறையருளும் புனித நூல்களும் இணைகிறபோது, பகுத்தறிவுவாதமும் இயற்கைநடப்பும் விஞ்ஞானக் கண்ணோட்டமும் பின்னுக்குத் தள்ளப்பட்டுப் பெரிதும் கருத்துமுதல்வாதமே அனைத்துக்குமான அடிப்படையாகப் புனையப்பட்டுவிடுவதைக் காண்கிறோம். தொன்றுதொட்டுப் பரவலாகச் செயல்பாட்டிலிருந்த பழங்குடியினப் பொதுமக்கள் அமைப்புச் சிதைந்து தனிமனிதச் சொத்துரிமை தோன்றியதுடன், இக்கருத்துமுதல்வாதத் தோற்றத்தையும் ஒன்றுசேர்த்துக் காணவேண்டும். இத்தகைய இறைமுதல் சிந்தனைகள் தோற்றம் பெறுவதற்குமுன்,‘வெகுஜனங்களிடம் வழக்கத்திலிருந்தது, இந்த உலகம் பற்றியது, மறு உலகம் பற்றியதன்று’ என்பதுதான், ‘உலகாயதம்’ என்ற சொல்லிற்குப் பொருளாகும். வெகுமக்களிடம் புழங்கிவரும் நெடுங்கால வாழ்வுசார் நடைமுறைகளின் சாரமாகத் திரண்டுள்ள மிகத் தொன்மையான உலகக் கண்ணோட்டம், உலகாயதப் பாரம்பரியத்திற்கு முற்றிலும் ஆதரவானதாகும்.
வேதங்களையும், மறு உலக நம்பிக்கைகளையும், அவற்றை நிலைநிறுத்தும் பொய்ம்மைச் சடங்குகளையும், மேல்கீழ் ஆசாரங்களையும் உலகாயதர்கள் மறுத்தனர். ஆனால், ‘வேளாண் மந்திரங்கள், குறி சொல்லுதல், வசியம் செய்தல், சகுனங்கள், சோதிடம், உயிர்ப்பலி, மருத்துவம்’ சார்ந்த பழங்குடிப் பண்பாட்டின் அடிப்படைக் கூறுகளை, அவை அனைத்தும் இவ்வுலகம் தொடர்பானவை என்பதால், எந்தத் தயக்கமுமின்றி ஏற்றனர். இந்த உலகத்திற்கு வெளியே ஒரு வாழ்வைப் புனைந்து, அதற்காகச் செய்யப்படும் வைதீகச் சடங்குகளைப் பொருளற்றவை எனக் கடிந்து நகையாடினர். இவ்வகையில், அவைதிகச் சிந்தனையின் முக்கியக் கருத்துநிலையான தாந்திரிகத்தைக் குறிப்பிட்ட அளவில் உலகாயதர் உள்வாங்கினர். எனினும், இயக்க மறுப்பியலை ஊக்குவிக்கும் சமயமாதலைச் சீற்றத்துடன் நிராகரித்தனர். இதற்கு மாறாகப் பழங்குடிகளின் தொடக்ககால விவசாயப் பொருளாதாரத்துடன் தொடர்புடைய தாந்திரிக நடைமுறைகளைப் பெண்களின் படைப்பாற்றலைப் பிரதானப்படுத்தும் இயற்கைமயமாதலைப் போற்றிப் பேணினர்.
செயலிலிருந்து சிந்தனை பிரிந்த நிலையில் தோன்றும் கருத்துமுதல்வாத நிலைப்பாட்டுக்கு எதிராகச் செயலையே சிந்தனையாக வலியுறுத்தும் பொருள்முதல்வாத நிலைப்பாட்டிற்குச் சார்பானவர்கள் என்பதால், உடல் உழைப்பிலிருந்து மூளை உழைப்பைப் பிரித்து வேறுபடுத்திப் பார்ப்பதைத் தவிர்த்தனர். ஏனெனில், உடல் உழைப்பினைச் சார்ந்துள்ள இவ்வுலக வாழ்விலிருந்து, மேலுலகச் சிந்தனைகளாலும் அதிகார வெறியாலும் விலகி அந்நியப்படாமல், இந்த மண்ணுலகை மட்டுமே பொருட்படுத்தி வாழும் எந்தவொரு மனிதனுக்கும் ‘சமயமும் கடவுளும் இயல்பான உண்மைகள் அல்ல, இவை புனையப்பட்ட பொய்ம்மைகள்’ என்ற தெளிவு அவர்களிடமிருந்தது.
தனிச்சொத்துரிமையைப் பாதுகாக்கும் கற்பிதங்களால் தூண்டப்பட்ட உடல் உழைப்பு X மூளை உழைப்பு என்ற கருத்துமுதல்வாத அதிகாரப் பிரிவினை மறையும்போது இறையும் சமயங்களும் மறைந்துவிடும் என்ற இக்காலப் பொருள்முதல்வாதிகளின் விஞ்ஞானபூர்வமான இயங்கியல் நிலைப்பாட்டைப் பழங்குடி மக்கள் இவ்வளவு விளக்கமாக அறிந்திருந்தார்கள் என்பதன்று; பழைய வாழ்வியல் விழுமியங்கள் சிதைக்கப்பட்டுச் சுயநலங்கள் நிறுவனமயமாகித் தலைவிரித்தாட யத்தனித்த அந்த உருமாற்ற காலத்திலேயே அது பற்றிய ஒருவித மேலதிக விழிப்புடன் எதிர்வினையாற்றியவர்களாக உலகாயதர்கள் இருந்தனர் என்பதே இங்கு அறியப்பட வேண்டியதாகும்.
இந்த உலகாயதம் என்ற தத்துவக் கருத்தியல், இந்த உலகத்தைத் தவிர வேறு எதையுமே நம்புவதில்லை என்பதால்தான், இது மக்களின் தத்துவம் என்ற தனிச்சிறப்புத் தகுதிக்குரியதாகிறது. பூதவாதம், சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், மீமாம்சகம், ஆசீவகம், சமணம், பௌத்தம், சங்கர வேதாந்தம், இராமாநுச வேதாந்தம், மத்வ வேதாந்தம், சைவ சித்தாந்தம் என இந்தியத் தத்துவங்கள் பலவாகும். இவ்வாறு வைதீகமாகவும் அவைதீகமாகவும் பிளவுபட்டுள்ள இந்தியத் தத்துவக் கோட்பாடுகளிலிருந்து, இயற்கையையும் அன்றாட வாழ்வையும் மட்டுமே பொருட்படுத்துவது என்ற வேறுபட்ட கருத்துநிலையால், உலகாயதம் தனித்ததோர் அடையாளத்திற்குரியதாகிறது. இது மக்களின் தத்துவமாகவும், இந்த உலகின் இயக்கத்தைத் தர்க்கபூர்வமாகப் புரிந்துகொண்ட ஓர் அறிதல் முறையாகவும் இருப்பதுடன், ‘கடவுள் – ஆன்மா – மறுபிறவி – முத்திநிலை’ போன்ற புனிதக் கட்டுக்கதைகளுக்கு எதிராகவும் தீவிரமாகப் போரிடுகிறது.
இந்த எதிர்ப்புணர்வை முற்றிலுமாக இல்லாதொழிப்பதற்காகப் புலனின்பங்களைக் கட்டுக்கடங்காமல் துய்த்தல், பொருள்வேட்டையில் மனித வாழ்வின் மதிப்பை வீணடித்தல், தந்திரமான விவாதங்களிலும் மலிவான வெட்டிப்பேச்சுகளிலும் மனித ஆற்றலைச் சிதறடித்து நீர்த்துப்போகத் தூண்டுதல், சமூகப் பொது அமைதிக்கும் ஒற்றுமைக்கும் திட்டமிட்டுத் தீமை செய்தல் எனப் பிற சமயத்தவர் பலரும் உலகாயதர்களைக் குறுக்கிப் பேச முனைந்தனர். ஆனால், உண்மை முற்றிலும் வேறு.
பூமிக்குக் கீழும் சூரியனுக்கு மேலும் விரிக்கப்படும் அனைத்து வகைப்பட்ட புனிதப் புனைவுகளையும் எதிர்த்துத் தீவிரமாகக் கேள்வி கேட்டல், முரண்பட்டு விமர்சித்தல், சிந்தனையை முடக்கும் ஆயத்த விடைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தல், ஆன்மாவும் மோட்சமும் மெய்ம்மையில்லை என்ற அறிவுநிலை வாதத்திற்கு அழுத்தமளித்தல், காமத்தைத் தர்மமாகக் கருதுதல், வைதீகச் சடங்குகளையும் அவற்றை வலியுறுத்தும் வேதாகம நூல்களையும் மறுத்துரைத்தல் எனப் பொதுநலம் பேணும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளையே உலகாயதர்கள் கொண்டிருந்தனர்.
உண்பதும் புணர்வதும் உறங்குவதும் மட்டுமே வாழ்க்கையின் இலக்கு என்று உலகாயதர்கள் கருதவில்லை; ஆனால் இவற்றைத் தாழ்வாகக் கருதி ஒதுக்கிப் புற உலக உண்மைகளை முழுவதுமாகத் தவிர்த்துவிட்டுப் புலன்களை அடக்கி ஒடுக்கும் ஞானிகளாவதே வாழ்வின் இலக்கென்று ‘மாயாவாதம்’ பேசித் திரிந்து மயங்குவதையும் உலகாயதர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த மண்ணில் ரசித்து ருசித்துத் திளைத்துச் சுகமாக வாழலாம்; இந்த உலகம் துன்பமயமானதில்லை – இன்பமயமானது; இங்கு வாழும் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வுக்கு இடமில்லை; இவ்வுலகத்திற்கு வெளியே வேறோர் உலகத்தைக் கற்பித்துப் பாமரர்களைச் சுரண்டிக் கருத்தியல் மோசடி செய்வது பெருங்கொடுமை – இவைதாம் உலகாயதர்களின் நிலைப்பாடாகும்.
இந்தியத் தத்துவ வரலாற்றில், மெய்ப்பொருளைத் தெளிந்து உறுதிப்படுத்துவதற்குப் பின்வரும் பத்துப் பிரமாணங்கள் அல்லது அளவைகள் பின்பற்றப்படுகின்றன. 1. காண்டல் (காட்சி) 2. கருதல் (யூகம்) 3. உவமம் (ஒப்புமை) 4. ஆகமம் (சான்றோர் நூல்) 5. அருத்தாபத்தி (எண்ணி உணர்தல்) 6. இயல்பு (இயல்பறிதல்) 7. ஐதிகம் (உலகுரை) 8. அபாவம் (இன்மை) 9. மீட்சி (ஒழிவறிவு) 10. எய்திநெறி (சம்பவ அளவை). இவை பத்தையும் மணிமேகலை குறிப்பிடுகிறது. (சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை: 27:9-13). இப்பத்தினுள், ‘காண்டல்’ என்னும் ‘காட்சியளவை’யை மட்டுமே பயன்படுத்தித் தத்துவவாதம் பேசியவர்களாக, உலகாயதர்களை மணிமேகலை குறுக்குகிறது. இக்கருத்தினை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கில்லை. எங்கெல்லாம் ‘காண்டல் அளவை’ என்பது சாத்தியமோ, அங்கெல்லாம் உலகப் பொருள்கள் பற்றிய ‘கருதல் அளவை’யும் பயனுள்ளதாகும் என்பதுதான், உலகாயதர்களின் தத்துவப் பார்வையாகும். ஆனால், ‘மோட்சம் – ஊழ் வட்டம் – அறப்பயன் – முன்பிறப்பு – மறுபிறப்பு – நித்தியான்மா’ எனப் பலவாகக் கட்டப்படும் மிகைப் புனைவுகளை நிலைப்படுத்துவதற்குக் கருதலாகிய ‘அனுமான அளவை’ பயன்படுத்தப்படுவதைக் கடுமையாக உலகாயதர்கள் எதிர்த்தனர். கண்ணால் காணும் உலக எல்லைக்கு வெளியே, மானுட அனுபவ நடைமுறைகளுக்கப்பால், உலகப் பொருள்களுக்குப் புறம்பாகக் கருதலாகிய அனுமானத்தைப் பயன்படுத்த எவருக்கும் உரிமை கிடையாது என்பதுதான், உலகாயதரின் முடிவாகும்.
உலகாயதர்களின் உலகக் கண்ணோட்டம், கண்மூடித் தவத்தில் அமர்ந்து, சிந்தனையை உள்முகமாகக் குவித்துப் பரம்பொருளைக் கண்டுபிடித்த ஞானப்பரவசத்தில் வெளிப்படும் உள்ளொளிச் சாதனையன்று. மக்களின் அன்றாடங்களில் வேரோடிய உலகப் பற்றுள்ள நம்பிக்கைகளையும், பொருளியல் தேட்டத்துடன் தொடர்புடைய இயல்பான நடைமுறைகளையும் அடிப்படையாகக் கொண்டமையும் வாழ்க்கைப் பற்றுதலாகும். இதனைப் பிற தத்துவங்களைப்போல் தனிமனிதத் தரிசனமாகக் காணக்கூடாது; இது பொதுமக்கள் அனைவரையும் இணைத்துக்கொள்ளும் கூட்டுக்குரல்களின் தொகுப்பாகும்.
உடலின்பங்களை உலகாயதர்கள் புறந்தள்ளவில்லை. ஆனால் இதற்கு, அவர்கள் காமக் களியாட்டத்தைக் கணந்தோறும் தேடியோடியவர்கள் என்பதன்று பொருள். உடலுக்குக் கருத்துமுதல்வாதிகள் அளிக்காத முக்கியத்துவத்தையும், உடலைப் பழிக்கும் வாழ்க்கை மறுப்புப் போக்குக்கு எதிராகப் புலன்களையறிதலுக்குக் கூடுதல் அழுத்தத்தையும் உலகாயதர்கள் தந்தனர். அனைத்துச் சமயவாதிகளும், ஆன்மாவின் விடுதலை பற்றியோ – துக்க நிவர்த்தி பற்றியோ கனவுகள் கண்டுகொண்டிருந்தபோது, உலகாயதர்கள் மட்டும்தான் உடலென்ற உண்மையின் நியாயமான இருப்புக் குறித்தும், அதைப் பேண வேண்டிய ‘காய சோதனை’ குறித்தும் விழிப்புடனிருந்தனர். ஒருபோதும் அழியாத ஆன்மவாதத்திற்குக் கடும்மறுப்பாகத் தேகவாதத்தையும், ‘உடல் நிலையாமை’ என்ற அழிவுவாதத்திற்குப் பதிலாகக் ‘காய சோதனை’ என்ற உடற்காப்பு வாதத்தையும் உலகாயதர்கள் வலியுறுத்தியதாகப் புரிந்துகொள்வது ஒருவகையில் தலைகீழ்ப் புரிதலாகும். எதிர்மாறாகத் தேகவாதத்திற்கு மாற்றாக ஆன்மவாதமும், உடலோம்பலுக்குப் புறம்பாகப் புலனொடுக்கமும் பிறரால் வலியுறுத்தப்பட்டதுதான் உண்மையில் நடந்ததாகும்.
உலகாயதர்களின் தேகவாதம் என்னும் உடலைப் பற்றிய விரிவான ஆய்வு, உடற்கூறியல் (யுயெவழஅல), உடலியங்குஇயல் (Phலளழைடழபல), மற்றும் வேதியியல் (ஊhநஅளைவசல), மருந்தியல் (Phயசஅயஉநரவiஉயட) ஆகிய அறிவியற் கலைகள் தோன்றுவதற்குக் காரணமானதாகக் க.நெடுஞ்செழியன் குறிப்பிடுகிறார் (1990:102). இவ்வகையில், சமயப்பிரிவுகளின் கருத்துநிலைப் புனைவுகளோடு, பிற்கால அறிவியல் துறைகளின் உண்மைத் தேட்டத்திற்கும் உலகாயதம் பயன்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதுதான் உலகாயதம் என வழங்கும் இந்தியத் தத்துவ தரிசனம் கண்ட முடிவு எனப் பிற சமயவாதிகள் உலகாயதத்தைப் பழித்தனர். இவ்வாறு உலகாயதர்கள் பழிக்கப்படுவதற்குக் காட்சியாகிய அளவைக்கு அவர்கள் தந்த அதிகப்படியான முக்கியத்துவமன்று காரணம்; கடவுளையும் மறுஉலகத்தையும் அவர்கள் சிறிதும் ஏற்க மறுத்துவிட்டமையே காரணமாகும். இந்த உலகில் வாழும் பெரும்பாலோர், தத்தம் நோக்கிற்கும் போக்கிற்கும் ஏற்ப, இவ்வுலக இன்பங்களைத் துய்த்துத்தான் வருகின்றனர். இவ்வாறு இன்பந்துய்ப்பதில், எவ்வகையிலும் யாரும் குற்றவுணர்வுகொள்ளத் தேவையில்லை என்றும், கடும்புலனொடுக்கம் வழிப்பட்டு உடலை வருத்துவதால் உடலியற்கையை வென்றுவிட இயலாது என்றும், இந்த உலகத்தைப் பொருட்படுத்தாமல் இதற்கு வெளியே உள்ளதாகப் புனையப்படும் கடவுளையோ ஆன்மாவையோ மேலுலகையோ பற்றிக் கதைகள் திரிப்பதால் பயனில்லை என்றும் உலகாயதர்கள் ‘மெய்ம்மைவாதம்’ பேசினர். பொய்யான ஆறுதலளிக்கும் ‘கடவுள் கோட்பாட்டை’ முற்றுமுழுதாக உலகாயதர்கள் நிராகரித்துவிட்டதன் விளைவாகவே, அவர்களது ‘காட்சிவாதம்’ பிறரது நகைப்புக்கும் பெரும்பழிப்பிற்குமாளாயிற்று. பின்பற்றுவதற்குச் சிரமமான ஒழுக்கநெறிகளையும், பாவ புண்ணிய நம்பிக்கைகளையும், சாதி சடங்காசாரங்களையும் உலகாயதர்கள் அளவுக்குக் கேள்விக்குட்படுத்திய வேறு தீவிரச் சிந்தனையாளர்கள் இந்திய மண்ணில் இல்லை. சமண பௌத்த சமயங்கள், புலனொடுக்கக் கொள்கையில் காட்டிய தீவிரம் அனைவரும் அறிந்ததே. ஒழுக்கம் என்பது மனித நல்வாழ்வின் பொருட்டுத்தானே அன்றிச் சாதி சமயக் கட்டுப்பாடுகளையும் அவற்றுக்குரிய நிறுவன அமைப்புகளையும் பாதுகாப்பதற்காக இல்லை என்பதையும், ஒழுக்கத்தின் பெயரால் அமுக்கி வைக்கப்படும் இயல்பான மானுட உணர்வுகளுக்குச் சுதந்திரமான வடிகால்கள் தேவை என்பதையும் உலகாயதர்கள் சுட்டிக் காட்டினர். இவ்வாறு சுட்டிக் காட்டியதற்காகத்தான், ‘ஒழுக்க விரோதிகள்’ – ‘பண்பாட்டுப் பகைவர்கள்’ போன்ற எதிர்மறைப் பட்டங்களை அவர்கள் சுமக்க வேண்டியதாயிற்று.
உடலைவிட உயர்ந்த ஒன்றாக, ஆன்மா அல்லது உயிரைப் பிறர் புனைந்தபோது, உடலுள்ளவரையில்தான் அது இயங்கும் வரையில்தான் வாழ்வுண்டு என்பதால், உடல்தான் உயிர் அதைத் தவிர வேறோர் உயிரில்லை என உலகாயதர்கள் வாதிட்டனர். உலகத்தைப் படைத்தவனாகக் கடவுளைப் பிறர் தூக்கிப் பிடித்தபோது, சடப்பொருள்கள் தத்தம் இயல்பின்படி தாமாகவே இயங்குகின்றன, அவற்றை இயக்குவதற்கு அவற்றுக்கு வெளியில் இருந்து எந்தச் சக்தியும் தேவையில்லை எனச் சுபாவவாதத்தை உலகாயதர்கள் வலியுறுத்தினர். உயிர்களின் பொருட்டும், இறைவனின் பொருட்டும், மறுமையில் பயன்தரும் பாவ புண்ணியங்களின் பொருட்டும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமெனப் பிறர் அச்சத்தை அடிப்படையாகக் கொண்ட தூய்மைவாதத்தைக் கற்புநெறி மற்றும் புலனொடுக்கம்வழிப் பரப்பியபோது, உடலென்ற உண்மையைச் சிறிதும் மறுக்காமல் நேர்முகமாய் நின்று அதை எதிர்கொள்ளும் நோக்கிலிருந்து, இயல்புணர்வுகளின் இன்றியமையாமையைக் கற்பிக்கப்பட்ட ஆன்மவாதத்தைத் தகர்த்தழித்தொழிப்பதற்காகப் பிற்காலத்தில் சார்வாகர்கள் முதன்மைப்படுத்தியிருக்கலாம். ஆனால், இந்த இயல்பறிவுவாதப்போக்கைக் கொச்சைப்படுத்தும் குறிக்கே’hளுடன், பெண்ணிடம் பெறுவதையே தலைமையான தனிப்பெரும் இன்பமாக உலகாயதர் கண்டதாகவும், இதைப் பெற ஒழுங்கோ முறையோ எதுவும் தேவையில்லை எனக் கருதியதாகவும், கட்டுப்பாடுகள் ஏதுமற்று விலங்குகளைப் போன்று வலிமையே மானுடவாழ்வின் முடிவான அறமென்று நம்பித் தறிகெட்டுத் திரிந்ததாகவும் குற்றஞ்சாட்டிக் குடும்பநெறிகளைக் குலைக்கும் அராஜகவாதிகள் என்ற இழிமுத்திரையைக் குத்திப் பாமரப் பொதுமக்களிடமிருந்து சார்வாகர்களைத் தனிமைப்படுத்தப் பிறர் முனைந்தனர். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றனர். எனினும், உண்மையில் உலகாயதர்கள்தாம், புலனுடலைப் பொருட்படுத்திப் பேசியதன் மூலம் ‘மானுட உணர்வுகளுக்குரிய நியாயமான மதிப்பினை அளித்தவர்கள்’ என்பதையும், ஆணின் வஞ்சகமான பெண்விரோத ஒழுக்கநெறிகளைக் கருணையின்றிக் கேள்விக்குட்படுத்தியவர்கள் என்பதையும் அறியவேண்டும். பாவமாகக் கருதப்பட்டுப் பிறரால் வெறுத்தொதுக்கப்பட்ட புலனின்பங்ளை உலகியலின் ஒருபகுதியாக ஏற்று, மானுட வாழ்வின் பல அம்சங்களுள் விலக்கத் தேவையில்லாதவையாக அவற்றையும் உலகாயதர்கள் கருதினார்களே அன்றிப் பிறர் திரித்துக் காட்டுவதுபோல் காமுகர்களாகவும் கயவர்களாகவும் விபச்சாரகர்களாகவும் புலன்வெறியாளர்களாகவும் உதிரிகளாகவும் தம்மைத் தாமே அவர்கள் உருச்சிதைத்துக்கொண்டவர்களில்லை. புலனின்பங்களை விலக்கத்தேவையில்லை என்ற உலகாயத வாதிகளின் தத்துவ நிலைப்பாட்டைச் சீரணிக்கமுடியாது புலனொடுக்கம் பேசியவர்கள்;, பொதுமக்களிடமிருந்து பிரித்து உலகாயதர்களை அந்நியப்படுத்தும் திரிபுவாத நோக்குடன்தான், அவர்களைப் பெண் பித்தர்களாகச் சித்திரிக்க முனைந்தனர். பெண்ணுக்கு மட்டும் இல்லை; இந்த உலகிலுள்ள வேறு எந்த ஒன்றிற்குமே பித்தர்களாக உலகாயதர்கள் இருந்ததில்லை; மேலும் எதையுமே அறிவுக்கண் கொண்டு அணுகிய விரிவுதான் தத்துவவாதிகளாக அவர்களது தனிச்சிறப்பான அடையாளமாகும்.
உலகாயதக் கண்ணோட்டத்தின் வேர்க்கொள்கை பூதவாதமாகும். இப்பூதக்கொள்கையில் நிலம், நீர், தீ, காற்று என்ற நான்கை மட்டுமே உலகாயதர் ஏற்றனர். பிற்காலக் கருத்துநிலைச் சார்பால் உருப்பெற்ற ஆகாயக்கொள்கையைப் பொருள் சார்புடைய உலகாயதர் ஏற்கவில்லை. இந்தியத் தத்துவ வரலாற்றில், ஒரு புதுவரவாகக் கண் காது மூக்கு நாக்கு உடல் என்ற ஐம்புலன்களுடன் சேர்த்து ஆனால் இவற்றிலிருந்து வேறுபட்டதாக ‘மனம்’ என்ற ஒன்று கூடுதலாகப் புனையப் பட்டபோது, அதற்கு இணையானதாகப் பூதக்கொள்கையுடன் ஆகாயமும் சேர்க்கப்பட்டிருக்கலாம். உடல் உயிர் மனம் ஆன்மா என்றெல்லாம் ஒன்றையே பலவாகக் கருதி மயங்கும் கருத்து நிலை, உலகாயதருக்கு ஏற்புடையதன்று. இருப்பது உடல் ஒன்றுதான், பிற யாவும் கற்பனை என்பதுதான் உலகாயதர்களின் முடிவாகும். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் எனக் கூறப்படும் நால்வகைப் புருஷார்த்தங்களுள் அர்த்தத்தையும் காமத்தையுமே உண்மைப்பேறுகளாக உலகாயதர் மதித்தனர். அடைவதற்குப் பொருளும் இன்பமுமே இவ்வுலகில் உள்ளன, வல்லானுக்கு ஏற்ப விதி வகுப்பதுதான் தர்மம், மோட்சம் என்பது மிகப்பெரிய மோசடி எனப் பகுத்தறிவுவயப்பட்டு அவர்கள் பேசினர். வலிமை உடையவர்களின் அதிகாரத்தைப் பாதுகாக்கக் கருதும் அறக் கோட்பாடுகளைச் சிறிதும் அச்சமின்றி எதிர்த்து நின்றார்களே அன்றிக் கருணையும் அன்புமின்றி மனித விழுமியங்களைத் திரித்தும் இழித்தும் பழித்தும் கொச்சைப்படுத்தும் பெண்ணின்பப் பித்தர்களாகவோ, சுயநலச் சுரண்டல்காரர்களாகவோ, கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பலகீனர்களைச் சிதைக்கும் சமூக விரோதிகளாகவோ, வெறுத்தும் சலித்தும் கசந்தும் வாழ்வை வீணடிப்பவர்களாகவோ உலகாயதர்கள் என்றும் இருந்ததில்லை. ஆனால், இப்படித்தான் சீரழிந்த உதிரிப்பொறுக்கிகளாக இவர்கள் இருந்ததாகப் பரபக்கத்தார் கதை கட்டிவிட்டனர். மணிமேகலை, நீலகேசி, சிவஞானசித்தியார் போன்ற பல தமிழ் நூல்களிலும் உலகாயதர்களைப் பற்றிய மேற்குறித்தது போன்ற தவறான சித்திரிப்புகளைப் பரவலாகக் காணலாம். இந்தியா முழுவதும் மிகப்பழங்காலம் தொட்டே வழக்கத்திலிருந்து வந்த உலகாயத நூல்களுள் எதனையும் இன்று கண்டெடுக்கமுடியாத சூழலில், உலகாயத எதிரிகள் உலகாயதர்களைக் குறித்துக் காழ்ப்பும் சினமுமாய்க் கக்கிவைத்துள்ள மிகப்பலவான பரபக்க இழிவுரைகளைத் துருவித் துருவித் தேவி பிரசாத் சட்டோ பாத்யாயா, நா.வானமாமலை முதலிய சமூகவியல் அறிஞர்கள் தரும் விளக்கங்கள் வாயிலாகத்தான், உலகாயதர் தொடர்புடைய பல்வேறு நுண்ணுண்மைகளைக் கண்டு விளங்கிக்கொண்டாக வேண்டியுள்ளது. இந்த உலகமும் இங்குள்ள மானுடவாழ்வும் ஆகப்பெரும் துன்பமானவை என்றும், இவற்றிலிருந்து விடுதலை அடைந்து பிறவாமையைப் பெறுவதுதான் பெரும்பேறு என்றும் பெரிதும் வற்புறுத்தும் இந்தியத் தத்துவங்களுக்கு எதிர்மாறாக உலகமும் வாழ்வும் கொண்டாடப்பட வேண்டியவை, இவற்றுக்கு வெளியே அடைவதற்கென்று வேறு எதுவுமே இல்லை என்று திட்டவட்டமாகத் தெளிவுபடுத்திய இவ்வுலக வாழ்க்கைநேசம்தான் உலகாயதரின் தத்துவப் பங்களிப்பாகும்.
உலகாயதர் உடலும் உலகமும் மட்டுமே உள்பொருள்கள் என்றும், உலகத்துப்பொருள்கள் யாவும் தத்தம் இயல்புக்கேற்பத் தாமாகவே இயங்குகின்றன என்றும், நால்வகைப் பூதக்கூட்;டால் இயக்கமும் அவற்றின் பிரிவால் இயக்கமின்மையும் தற்செயலாக நேர்கின்றன என்றும், இயக்குவோன் மட்டுமல்ல ஊழ்வட்டமும் இல்லை என்றும் ‘தேகவாதம் அல்லது சுபாவவாதம்’ என்பதைக் கொண்டாடினர். இத்தேகவாதத்தின் தர்க்கபூர்வமான நீட்சியாகத் தொடர்ந்து உருமாறும் பிரகிருதியையும், பிரகிருதியுடனல்லாது தனித்தியங்க இயலாத புருடனையும் இணைத்துப் ‘பிரகிருதி வாதம் அல்லது பிரதானவாதம்’ எனும் பூரண அறிவுவாதத்தைச் சாங்கியர் முதன்மைப்படுத்தினர். இவற்றுக்குக் கடும் எதிர்நிலை எடுத்துக் கணமும் அழியாத நித்தியவஸ்துவாக ஆன்மாவைத் தூக்கிப்பிடித்துப் ‘பூரண ஆன்மவாதம் அல்லது பரமான்மவாதம்’ பேசினர் வைதீகர். இந்த நித்தியான்ம ஒருமைவாதத்துடன் முற்றிலுமாக முரண்பட்டுப் பரமான்மவாதத்திற்குப் பதிலாக அழியாத அணுவாதத்துடன் கூடிய வினைக்கோட்பாடாகிய விதி வாதத்தைப் பெரிதும் வலியுறுத்தி ‘அநேகான்மவாதம் அல்லது அநேகாந்தவாதம்’ பேசினர் சமணர். அழியாத அணுக்களின் சேர்க்கையால் உருவாகும் உலகத்தையும் உயிர்களையும் இயக்குவிப்பது கர்மவிதியென்ற சமணரின் அணு மற்றும் வினைவாதத்துடன் பெரிதும் உடன்பட்டு, உருமாறும் பொருள்கள் அப்பொருள்களுக்குரிய நிலையாமை நியதிப்படியே அவ்வாறு உருமாறுகின்றன எனக் கூடுதல் அழுத்தத்துடன் ‘ஊழ்வாதம் அல்லது நியதிவாதம்’ பேசினர் ஆசீவகர்.
இவ்வாறு சமணமும் ஆசீவகமும் வலியுறுத்தும் ஊழ்வினை அல்லது விதி அல்லது நியதிக் கோட்பாட்டிலிருந்து விலகிக் கடவுள் அல்லது அதிர்ஷ்டத்தால் நால்வகை அணுக்களும் கூட்டப்படுவதாகக் கூறிக் கண்ணுக்குப் புலனாகாத பகுதியற்ற பன்மைப் பொருள்களைக் கண்டு காட்டும் அணுப்பன்மையைச் சிறப்பிக்கும் ‘பரமாணுவாதம் அல்லது விசேட அனந்தவாதம்’ பேசினர் வைசேடிகர். இவ்வைசேடிகருடன் பேரளவிற்குக் கருத்துடன்பட்டுப் பொருளோடு நேரடியாய்த் தொடர்புற்றுப் பொருளை அல்லது அதன் இன்மையைப் புலன்களால் அறியும் பிரத்தியட்சத்தைப் பிரதானப்படுத்தி ஆனால் உலகாயதர்கள் போல் காட்சியளவை மட்டுமே அனைத்தையும் அறியப் போதுமென நின்றுவிடாமல், ‘அனுமானம், சப்தம் அல்லது உரை, உபமானம்’ ஆகிய பிற அளவைகளையும் சேர்த்துக்கொண்டு, மேலும் மேலும் அறிவுசார் ஆய்வில் தோய்ந்து ஈடுபட்டு, நுணுகி நுணுகி வாதிட்டுத் தர்க்கபூர்வமாய் உலகமும் புறப்பொருள்களும் சுயேச்சையான உண்மைகள் என்பதை நிலைநாட்டும் ‘பிரமாணவாதம் அல்லது மெய்ம்மைவாதம்’ பேசினர் நையாயிகர்.
சமணர்களுக்கு மாறாக வேதத்தை ஏற்று ஆனால் அவர்களைப் போல் இறைவனை மறுத்து, ஆசீவகர் போல் கண்ணுக்குப் புலனாகும் அணுக்களை ஏற்று ஆனால் வைசேடிகருக்கு முரணாகக் கண்ணுக்குப் புலனாகாத அணுக்களை ஏற்காது, நையாயிகர் கூறும் பொருளும் குணமும் வேறு என்னும் பேதநிலையையும் வேதாந்திகள் கூறும் பொருளும் குணமும் ஒன்று என்னும் அபேதநிலையையும் இணைத்துப் பேதாபேதமாக அதாவது ஒன்றும் அல்ல; வேறும் அல்ல; ஒன்றும் வேறும் எனத் தனிநிலையெடுத்து ஆனால் சமணர் போல் கர்மமே யாவும் என்று அறுதியிடும் ‘கன்மவாதம் அல்லது ஞானக் கன்மச் சமுச்சயவாதம்’ பேசினர் பூர்வ மீமாம்சகர்.
இக்கருத்துகளுள் எந்த ஒன்றையும் ஏற்காமல், இவை அனைத்திலிருந்தும் வேறுபட்டுப் பொருளென்றும் மாறாத உடலென்றும் ஏதும் இல்லை என்றும், வைதீகர்கள் கூறும் பொருளில் கடவுளும் ஆன்மாவும் முற்றிலும் இல்லை என்றும் ‘அனாத்மவாதம் அல்லது நிரீச்வரவாதம்’ பேசினர் பௌத்தர். கடவுளும் ஆன்மாவும் இல்லை என்ற இந்த நிலைப்பாட்டால், ‘இருப்பது என்பது சார்பு என்றும், சார்பின்மை என்பது இல்லை என்றும்’ தொனிக்கும் பௌத்தக் கோட்பாட்டைப் பிற்காலத்தில் ‘சூன்ய வாதம்’ என்ற பெயரில் பிரும்மாண்டமாகக் கட்டியெழுப்பினார் நாகார்ச்சுனர். இந்தச் சூனியத்தின் அல்லது வெறுமையின் இடத்தில் அதாவது சார்புண்மையின் இடத்தில் பிருமத்தைப் பொருத்திப் ‘பிருமம்’ என்ற உள்பொருளாயுள்ள ஒருமையைத் தவிரப் பன்மையாய்த் தோற்றமளிக்கும் இல்பொருள்களான பிற யாவும் மாயை என்ற விவர்த்தவாத முடிவைப் ‘பிருமவாதம் அல்லது அத்வைத மாயாவாதம்’ என்ற ஏகான்மவாதமாகப் புனைந்தார் ஆதிசங்கரர். இக்கருத்துக்கு நேரெதிர்நிலையில் நின்று, ‘உலகம் உயிர் இறைவன் என்றமையும் முப்பொருள்களும் உண்மைகளே’ எனப் ‘பிரபத்தி’ எனப்படும் சரணாகதிவாதம் அல்லது சரீர-சரீர சம்பந்தத்தை மையப்படுத்தும் ’விசிட்டாத்வைதம்’ கண்டார் இராமாநுசர்.
இராமாநுசரைப் போன்று திருமாலை முழுமுதற்கடவுளாகக் கட்டமைத்து, முப்பொருள் இருப்பை ஏற்றுக்கொண்டாலும், கடவுள் ஆன்மா என்ற இரண்டும் ஒருபோதும் ஒன்றிணைய முடியாத வேற்றுமையுள்ளவை என்ற நுண்பொருளில், ‘நித்திய ஐவகை பேதத் தத்துவம் அல்லது துவைதம்’ எனப்படும் ‘முப்பொருள் ஒருமைக்கு மாற்றாக இரு பொருள் வேற்றுமையை’ வலியுறுத்தும் வேதாந்த முடிவைப் பரப்பினார் மத்வர். வைணவம்போல் வேதங்களை மட்டும் பிரமாணமாகக் கொள்ளாமல், சிவ ஆகமங்களையும் பிரமாணமாகக் கொண்டதால், வைணவ சமயக் கருத்து நிலையிலிருந்து சிறிது வேறுபட்டுப் ‘பசு பதி பாசம்’ என்னும் முப்பொருள்களின் உண்மையைத் தமக்கேயுரிய தனித்தவிதத்தில், சகசமாகிய ஆணவம் என்னும் மூல மலத்தாலும், கன்மம் மற்றும் மாயையாகிய பிற மலங்களாலும் அநாதியாய்ப் பற்றப்பட்டு நித்தியமாயுள்ள பலவாகிய ‘சத் அசத்’ ஆன்மாக்களின் இருப்பைச் சிவனுடன் சேர்த்து உறுதிப்படுத்தும் ‘அநேகான்ம ஈச்வரவாதம்’ அல்லது இன்பமும் அறிவும் பரிபூரணமாகும் முத்திநிலையை முன்மொழியும் சத்சித் ஆனந்தத் தத்துவமாகிய ‘சுத்தாத்வைதம்’ பேசினர் சைவ சித்தாந்திகள். இந்தியத் தத்துவக் கருத்து மோதல்கள் பற்றிய மேலோட்டமான ஒரு மொழிப் பதிவை, இவ்வாறாகத் தொகுத்துக்கொள்ளலாம்.
உலகாயதர்களின் தத்துவ நோக்கிலிருந்து, மேற்குறிப்பிட்ட மொழிப் பதிவைக் கூர்ந்தாராய்வோருக்கு, உலகமும் உடல்களும் மட்டுமே உள்ளன என்ற ஓர் மிக எளிய பொருள்முதல்வாத உண்மையைக் கருத்துமுதல்வாதச் சுரண்டல் லாபங்களுக்காகச் சித்தாந்திகளும் வேதாந்திகளும் எவ்வளவு தூரத்திற்குப் பகுத்தும் தொகுத்தும் விரித்தும் விளக்கியும் நுணுக்கியும் புதுக்கியும் ஒளித்தும் திரித்தும் பழித்தும் பசப்பியும் உருத்தெரியாமல் சிதைத்துவிட்டுள்ளனர் என்ற ‘வர்க்கப் போராட்டத்தின் வரலாறு’ விளங்காமலிராது. கடவுளை ஏற்காமல் ஆனால் வினையுடன் கூடிய பல்பிறவிப் புண்ணியப் பாவப் புனைவுகளை மட்டும் ஏற்றுக்கொண்ட சமணம், ஊழை வலியுறுத்திய ஆசீவகம், துக்க நிவர்த்திக்குப் பாடுபட்ட பௌத்தம் போன்ற அவைதீகச் சமயங்களுக்கும் இவ்வரலாற்று மோசடியில் ஓரளவுக்குப் பங்குண்டு என்பதையும், இத்தருணத்தில் நாம் ‘நினைவு மறந்து’ மயங்கிவிடக்கூடாது. இவை அனைத்துக்கும் எதிராய் அன்றும் இன்றும் அறைகூவல் விடுத்தபடி, இப்போதும் நிறுவனமயமாகி விடாமல், தொடர்ந்து உலகாயதம் அமுக்கப்பட்டவர்களின் கலகக்குரலாய்க் கனன்று கொண்டுள்ளது.
இதுதான் முதல்நிலைப் பொருள்முதல்வாதமான பூதவாதம் அல்லது உலகாயதத்திற்கும், கருத்துமுதல்வாதத்தின் பல்வேறு வகைப் போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற இந்தியத் தத்துவ தரிசனங்களுக்குமிடையில் காலந்தோறும் நிகழ்ந்துவரும் கருத்துப்போரின் குழிகளும் வலைகளுமாய் விரியும் மிகச் சுருக்கமான வரலாறாகும். இது தொடர்பாக, உலகாயதர்களே இந்நாட்டின் முதல் தர்க்கவாதிகள் (2010:36) எனத் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவும், அவ்வச் சமயவாதிகளின் புராதன நூல்கள் உலகாயதத்தை மறுக்கின்றன. எனவே உலகாயதம் என்ற தத்துவம் பிற தத்துவங்களின் புராதன நூல்களைப் பார்க்கிலும் தொன்மையானது (2008:157) என நா.வானமாமலையும், உலகாயதர் தவிர்ந்த ஏனையோருக்கிடையே ஒற்றுமை காண்பது சுலபம் (2000:431) எனக் கி.லஷ்மணனும் கூறும் கருத்துகள், மேலும் நுணுகிச் சிந்திக்கத்தக்கன.