ஜெயலலிதா பேரில் பல்கலைக்கழகம் தொடங்கி நடத்தவேண்டும் என்று ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டும் எதிர்ப்பைத் தெரிவித்தும் வருகின்றனர். இது முற்றிலும் தவறானதொரு முன்னுதாரணம் ஆகும்.

எடப்பாடி பழனிச்சாமி, அவசர கதியில் தன் ஆட்சியின் இறுதி இரண்டு மாதங்களில் எண்ணற்ற அடிக்கல் நாட்டு விழாக்கள், ஜெ. பல்கலைக்கழகத் திறப்பு என்றெல்லாம் அறிவித்துவிட்டுச் சென்றார். தானே மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற எண்ணமோ என்னமோ? அப்படி வந்திருந்தால் பரவாயில்லை. அந்த அடிக்கல் நாட்டு விழாக்களைத் தொடர்ந்து பணியில் ஈடுபடலாம்.

ஆனால் வேறொரு ஆட்சி அமைந்த பிறகு இவர்களது செயல் ஆரம்பங்களையும் அடிக்கல்நாட்டிய திட்டங்களையும் அடுத்து வரும் அரசு செய்யவேண்டும் என்ற கட்டாயம் என்ன உள்ளது? அவர்கள் என்ன இவர்களுக்கு அடிமைகளா? “நான் தொடங்கி அடிக்கல்லோ, பலகையோ வைத்துவிட்டேன், நீ அதைத் தொடரத்தான் வேண்டும்” என்று அடம்பிடிக்க இவர்கள் யார்? புதிய அரசுக்கென புதிய பணிகள், அவர்களது கொள்கைகள், அவர்கள் முக்கியம் என்று நினைக்கும் செயல்கள் எதுவும் இருக்காதா? இந்தத் திமிர் பிடித்த போக்கு எடப்பாடிக்கும் பன்னீர் செல்வத்துக்கும் ஏன் இன்னும் அடங்கவில்லை?

உன் அரசில் நீ முக்கியம் என்று ஒரு திட்டத்தை நினைத்தால் அதை உன் ஆட்சிக்குள் செய்ய வேண்டும். அதைவிட்டு, தேர்தல் அறிவிப்பு வரும்போதுதான் இவர்கள் அதற்கு முன்னாள் வேண்டுமென்றே ஒரு செயலை அறிவிப்பார்களாம், அதை வருகின்ற ஆட்சியினர் தொடரவேண்டுமாம். வேண்டாம் அய்யா இந்தத் திமிர்.