மக்களைப் பற்றி அனைத்தையும் அரசுகள் அறிந்துகொள்ளும் அதே நேரத்தில், தம்மை ஆளும் அரசுகள் பற்றிய பிரஜைகளின் புரிதல் குறைந்துகொண்டே போகும் காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்… பெகாசஸ் ப்ராஜக்ட் உணர்த்தும் உண்மை இதுதான்.

இந்தியாவில் சாவுகளின் கோடை காலம், வேவு பார்த்தலின் காலமாகவும் மாறியிருக்கிறது.

40 லட்சம் பேரின் உயிரை எடுத்துக்கொண்டு கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பின்சென்றிருக்கிறது. அதில் பத்தில் ஒரு பங்கான 4 லட்சம் பேர் மட்டுமே இறந்ததாக அதிகாரபூர்வ புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நரேந்திர மோதியின் பிறழ் உலகில் எல்லாம் இப்படித்தான் இருக்கும்… சுடுகாடுகளின் புகை அடங்குவதற்குள், தோண்டப்பட்ட இடுகாட்டு மண் இறங்குவதற்குள் “தேங்க் யூ மோதிஜி” விளம்பர பதாகைகள் தெருக்களை அலங்கரிக்கத் துவங்கின (இது வரை பெரிதும் கை வரை எட்டாத “இலவச தடுப்பூசிகளுக்காக” நன்றி செலுத்தும் முயற்சியே அது என்கிறார்கள். 95% மக்கள் தொகைக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை). உண்மையான மரணத்தைக் கண்க்கிடும் எல்லா முயற்சியுமே மோதி அரசாங்கத்தின் பார்வையில் இந்தியாவுக்கு எதிரான சதியாகவே சித்தரிக்கப்படும். லட்சக்கணக்கான மக்கள் மண்ணுக்குள் புதைந்து போனது போல நடிக்கிறார்களா… பறவைப் பார்வையில் தெரியும் குவியல் குவியலான சமாதிகள் அல்லது கங்கையில் மிதக்கும் பிணங்கள் என்ன சொல்வது… சிறந்த நடிகர்கள் அப்படி அங்கு நடிக்கிறார்களா… அப்படிப்பட்ட நடிகர்கள்தான் இந்தியாவின் சர்வதேச நல்மதிப்பைக் காப்பாற்றும் நோக்கத்தில் தகன மேடைகளில் தங்களைத் தாங்களே எரித்துக்கொண்டார்களா…

ஃபர்பிடன் ஸ்டோரீஸ், அம்னஸ்டி இன்டர்நேஷனல் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து 17 செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பூதாகாரமான உலகளாவிய கண்காணிப்பு சார்ந்த அம்பலங்கள் விஷயத்திலும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்படுகின்றன. இஸ்ரேலிய உளவு நிறுவனமான என்.எஸ்.ஓவிடம் பெகாசஸ் மென்பொருள் வாங்கி, பயன்படுத்திய நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. மனித உரிமையைக் காப்பதில் கடந்த கால ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, பயங்கரவாதிகளையும் குற்றவாளிகளையும் பின்தொடர்வதற்காக மட்டுமே இந்த மென்பொருளை விற்பதாகவும் தேசங்களை ஆளும் அரசுகள் அன்றி யாருக்கும் அதை விற்பதில்லை என்றும் என்.எஸ்.ஓ சொல்கிறது.

என்.எஸ்.ஓவின் மனித உரிமை மீறல் சோதனையில் பாஸ் மார்க் எடுத்த நாடுகள் எவை தெரியுமா… ருவாண்டா, சவூதி அரேபியா, பஹ்ரைன், யு.ஏ.இ, மெக்சிகோ… இதை நாம் நம்ப வேண்டும். சரி, “பயங்கரவாதிகள்”, “கிரிமினல்கள்” பற்றிய வரையறை என்ன… என்.எஸ்.ஓவும் அதன் கிளையன்டுகளும் யாரை நோக்கி விரலை நீட்டுகிறார்களோ, அவர்களே “பயங்கரவாதிகள்,” “கிரிமினல்கள்.”

இந்த ஸ்பைவேர் வாங்கி உபயோகிக்க ஒரு செல்பேசிக்கே லட்சக்கணக்கான டாலர் கட்டணம் பெறுகிறது என்.எஸ்.ஓ. அது மட்டுமல்ல. வருடாந்திர கணினி பராமரிப்பு கட்டணமாக, பெகாசஸ் திட்டத்தின் ஒட்டுமொத்த செலவில் 17% வசூலிக்கப்படுகிறது. சொந்த நாட்டின் பிரஜைகளை உளவு பார்க்க, அந்த நாட்டின் அரசாங்கமே ஒரு வெளிநாட்டு கார்ப்பரேஷனை கூலிக்கு அமர்த்தி, உளவு நெட்வொர்க் பராமரிப்பது தேசத் துரோகமாக பார்க்கப்பட வேண்டும்.

வேவு பார்க்கப்பட்டதாகக் கசிந்த 50,000 செல்பேசி எண்களில் புலனாய்வுக் குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் 1,000 நம்பர்கள் இந்தியாவின் என்.எஸ்.ஓவின் கிளையன்ட் ஒருவரால் வேவு பார்க்க தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிய வந்தது. அந்த தொலைபேசிகள் வெற்றிகரமாக ஹேக் செய்யப்பட்டதா அல்லது முயற்சி செய்யப்பட்டதா என உறுதிப்படுத்த முடியவில்லை. அந்த செல்பேசிகளை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தினால் மட்டுமே அந்த உண்மையைக் கண்டுபிடிக்க முடியும். இந்தியாவில் வேவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் பல தொலைபேசிகள் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வேவு பார்க்கப்பட்டதாக கசிந்துள்ள தொலைபேசி நம்பர்களில் எதிர்க் கட்சி அரசியல் தலைவர்கள், கருத்து மாறுபாடு கொண்ட செய்தியாளர்கள், சமூகப் போராளிகள், வழக்கறிஞர்கள், சிந்தனையாளர்கள், தொழிலதிபர்கள், முரண்டு பிடித்த இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி, அதே போல தலைவலியாக இருந்த மூத்த உளவுத் துறை அதிகாரி, கேபினட் அமைச்சர், அவரது குடும்பத்தினர், வெளிநாட்டு தூதர்கள்… ஏன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நம்பர்கூட அந்தப் பட்டியலில் உள்ளது.

அந்தப் பட்டியல் பொய்யானது என்று இந்திய அரசின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். எவ்வளவு பெரிய கற்பனை ஆற்றல் கொண்டவர்களாக இருந்தாலும்கூட இப்படிப்பட்ட துல்லியமான பொய்ப் பட்டியல் ஒன்றைத் தயாரிக்க முடியாது என்பது இந்திய அரசியலை உற்று நோக்குகிறவர்களுக்குத் தெரியும். ஏனென்றால் இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலானோர் தற்போதைய ஆளும் கட்சியின் அரசியல் திட்டத்திற்கு எதிரானவர்கள். இதில் பல எதிர்பார்க்கப்பட்ட பெயர்கள் இல்லை. பல எதிர்பாராதவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.

ஒரே ஒரு மிஸ்டு கால் மூலமாகவே பெகாசஸ் உளவு மென்பொருளை ஒருவரது செல்பேசியின் செருக முடியும் என சொல்கிறார்கள். ஒரு மிஸ்டு கால் என்ற ஏவுகணையில் ஏறி பயணிக்கிறது கண்ணுக்குத் தெரியாத ஸ்பைவேர். இதுவரை பார்த்திராத கண்டம் விட்டு கண்டம் தாண்டு ஏவுகணை இது. ஜனநாயகக் கட்டமைப்புகளை உடைத்துப் போடும் வல்லமை கொண்டது இந்த ஸ்பைவேர் ஏவுகணை. எந்த வாரண்ட்டும் இல்லாமல், ஆயுதப் பிரயோக ஒப்பந்தமும் இல்லாமல், எந்த மேற்பார்வையும் இல்லாமல், எந்த நெறிமுறைகளும் இல்லாமல் மனித சமூகங்களின் மீது வீசப்படக்கூடிய அணு குண்டுகள் இவை. இதில் தொழில்நுட்பத்தின் குறை ஒன்றும் இல்லை. இது யாரின் குற்றமும் இல்லை என சொல்ல முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

என்.எஸ்.ஓவுக்கும் இந்தியாவுக்குமான இந்த நட்பு ஒப்பந்தம் 2017ஆம் ஆண்டு துவங்கியதாகக் கருதப்படுகிறது. மோதி-நெதன்யாஹு தோழமை என அழைக்கப்பட்ட இஸ்ரேலிய பயணத்தின் போது இது துவங்கியதாகக் கருதப்படுகிறது. இஸ்ரேலின் டார் கடற்கரையில் ஒன்றாகக் கைகோர்த்து நடந்தார்கள். அவர்களின் கால் தடத்துடன் வேறு சிலவற்றின் தடத்தையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள். அந்த காலக் கட்டத்தில்தான் இந்தியாவைச் சேர்ந்தவர்களின் செல்போன் எண்கள் இந்த வேவு பார்த்தல் பட்டியலில் இடம் பெறத் துவங்கின.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கான பட்ஜெட் செலவினம் அதே ஆண்டில் பத்து மடங்கு உயர்ந்தது. அதில் பெருவாரியான தொகை சைபர் செக்யூரிட்டி பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டது. 2019 ஆகஸ்ட்டில் மோதி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய போது கொடுங்கோன்மை சட்டமான சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யு.ஏ.பி.ஏ) விரிவுபடுத்தப்பட்டது. அமைப்புகளை மட்டுமே குறி வைத்த அந்த சட்டத்தில் தனி நபர்களையும் இலக்கு வைக்கும்படி மாற்றம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை ஜாமீன் இல்லாமல் சிறையில் வைக்கும் கொடிய சட்டம் அது. ஆனால் அமைப்பு என வரும் போது ஸ்மார்ட்ஃபோன் இருக்காது அல்லவா. தனி நபர் என்றால் ஸ்மார்ட் ஃபோன் இருந்துதானே தீரும்.

யு.ஏ.பி.ஏ சட்டத் திருத்தம் குறித்த நாடாளுமன்ற விவாதித்தார் இவ்வாறு பேசினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா: “சார், பயங்கரவாதம் அதிகரிக்க ஆயுதங்கள் காரணமாக இருப்பதில்லை. பயங்கரவாதத்தின் வேர் அதற்கான பிரச்சாரத்தில் இருக்கிறது… தனி நபர்கள் பயங்கரவாதிகளாக பிரகடனம் செய்யப்பட்டால், எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அதில் ஆட்சேபனை இருக்கும் என நான் நினைக்கவில்லை.”

பெகாசஸ் முறைகேடு இந்த பருவ மழைக் கூட்டத் தொடரில் பெரும் போர்க் குரலை உருவாக்கியிருக்கிறது. உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது. மிருக பலம் கொண்ட மெஜாரிட்டி கொண்டிருக்கும் மோதியின் ஆளும் பி.ஜே.பி இந்த சர்ச்சையை எதிர்கொள்ள புதிய தகவல் தொழில்நுட்ப அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் அனுப்பப்பட்டார். அவரின் ஃபோன் நம்பரும்கூட வேவு பார்க்கப்பட்ட எண்கள் பட்டியலில் இருந்தது என்பது போல் அவமானம் வேறேது.

அரசாங்கத்தின் பதில்களில் உள்ள ஆணவத்தையும் அதிகார வர்க்க புதிர்களையும் கடந்து பார்த்தால் ஒன்று புரியும்: பெகாசஸ் பயன்படுத்தவில்லை என எங்கேயும் நேரடியான மறுப்பு இல்லை. இந்தியாவுக்கு பெகாசஸ் ஸ்பைவேர் விற்பனை செய்யவில்லை என என்.எஸ்.ஓ மறுக்கவும் இல்லை. இந்த ஸ்பைவேர் சார்ந்த துஷ்பிரயோகம் குறித்து இஸ்ரேல் அரசு விசாரணை ஆரம்பித்துள்ளது. ஃபிரெஞ்ச் அரசும் விசாரணை நடத்தி வருகிறது. இந்தியாவைப் பொருத்த வரை பண பரிவர்த்தனையின் சங்கிலி என்றாவது ஒரு நாள் உண்மையை உலகிற்கு உணர்த்தும். ஆனால் இந்த உண்மை நம்மை எங்கே அழைத்துச் செல்கிறது…

யோசித்துப் பாருங்கள்: சமூகப் போராளிகள், வழக்கறிஞர்கள், தொழிற் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள் (பலர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) 16 பேர் பீமா-கோராகாவ்ன் வழக்கில் சிறையில் உள்ளனர். தலித்துகளுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் இடையே 2018 ஜனவரி 1ஆம் தேதி நடந்த மோதலில் வன்முறையைத் தூண்டிவிட்டதாக அவர்கள் மீது நம்ப முடியாத குற்றம் சுமத்தப்படுகிறது. பீமா-கோரேகாவ்ன் போர் வெற்றியின் 200ஆவது நினைவு தினத்தைக் கொண்டாட பல லட்சம் பேர் அங்கு திரண்டனர் (பிரிட்டிஷ் படையிலிருந்த தலித் போர் வீரர்கள் கொடுங்கோல் ஆட்சி புரிந்த பிராமண பேஷ்வா மன்னர்களை தோற்கடித்ததன் நினைவு தினம்). பீமா-கோரேகாவ்ன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 16 பேரில் 8 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் செல்போன் நம்பர்கள் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் செல்பேசிகள் காவல் துறையிடம் இருப்பதால் அவற்றில் எந்த தடயவியல் சோதனையும் நடத்த முடியாது. அந்த செல்பேசிகளின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதா, அது வெற்றிகரமாக இருந்ததா என்பதை இப்போதைக்கு உறுதி செய்ய வழி இல்லை.

தனது எதிரிகள் என கருதுகிறவர்களை பொறியில் சிக்க வைக்க மோதியின் அரசாங்கம் எவ்வளவு தூரம் கீழே இறங்கும் என்பதில் எங்களில் பலர் இப்போது எக்ஸ்பர்ட் ஆகிவிட்டோம். அந்த வகையில் இது வெறுமனே உளவு பார்க்கும் வேலை அல்ல. பீமா கோரேகாவ்ன் வன்முறையில் குற்றம்சாட்டப்பட்ட ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங் ஆகிய இரண்டு பேரின் கணியில் மசாசூசெட்ஸில் உள்ள ஆர்ஸினெல் கன்சல்டிங்க் என்ற டிஜிட்டல் தடயவியல் அமைப்பு ஆய்வு மேற்கொண்டிருக்கிறது. எலக்ட்ரானிக் காப்பியின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் இருவரின் கணினியிலும் அடையாளம் தெரியாத ஹேக்கர்கள் உள்நுழைந்திருப்பதன் ஆதாரம் கிடைத்துள்ளது. ஆதாரபூர்வமாக அவர்களை குற்றவாளிகள் என காட்டும் வகையிலான ஆவணங்கள் அந்த கணினிகளின் ஹார்ட் டிஸ்க்கில் செருகப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியாகியுள்ள அந்த ஆய்வின் ரிப்போர்ட் தெரிவிக்கிறது. எதிர்பார்க்கப்பட்டது போலவே அதில் ஒரு கடிதம் செருகப்பட்டிருந்தது. பிரதமர் மோதியைக் கொல்வதற்கு திட்டமிடப்படுவதாக குறிப்பிடப்பட்ட நகைப்புக்குரிய கடிதம்தான் அது.

ஆர்சினல் வழங்கியிருக்கும் ஆய்வு அறிக்கையின் தீவிரத் தன்மை குறித்து இந்தியாவின் நீதித் துறையோ, மைய நீரோட்ட ஊடகங்களோ கண்டுகொள்ளவே இல்லை. நீதியை நிலைநாட்ட போராடுவதற்கு நேர் மாறான காரியங்களைத்தான் பார்க்க முடிந்தது. அந்த ஆய்வு ரிப்போர்ட்டின் பின்விளைவுகளை மறைக்கும் விதமாகவே அவை நடந்துகொண்டன. பீமா கோரேகாவ்ன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரான இயேசு சபை பாதிரியார் ஃபாதர் ஸ்டான் சுவாமிக்கு அவர் கைது செய்யப்பட்ட போது 84 வயது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காக பல தசாப்தங்களாக வேலை பார்த்தவர் அவர். மலைவாழ் மக்களின் வீடுகளை கார்ப்பரேட்கள் கபளீகரம் செய்வதைத் தடுக்க போராடிய ஃபாதர் ஸ்டேன் ஸ்வாமி சிறையிலேயே துன்பப்பட்டு இறந்தார். சிறையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட போது அவருக்கு பார்க்கின்சன் நோயும், புற்றுநோயும் இருந்தது.

சரி, பெகாசஸ் பிரச்சனையை என்ன செய்வது… வழக்கமாக செய்வதை புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்கிறார்கள் என உதாசீனப்படுத்திவிட்டுச் செல்ல வேண்டியதுதானா… அப்படிச் செய்தால் அதைவிட பெரிய பிழை இருக்க முடியாது. இது வழக்கமான, சாதாரணமாக உளவு வேலை அல்ல. செல்பேசிகள் நமது மிகவும் அந்தரங்கமான கருவிகள். நமது மூளையின் உடலின் தொடர்ச்சியாக மாறிவிட்டவை அவை. செல்பேசியின் வழியாக சட்டவிரோதமாக உளவு பார்ப்பது புதிது அல்ல. காஷ்மீரிகளுக்கு அதைப் பற்றி நன்கு தெரியும். இந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலான சமூகப் போராளிகளுக்கும் இது தெரியும். ஆனால் அரசுகளும் கார்ப்பரேட்களும் நமது செல்பேசிகளை ஆட்கொள்ள சட்டபூர்வ அனுமதி கொடுப்பது என்பது நம்மை சீரழிக்க நாமே ஒப்புக்கொள்வதற்குச் சமம்.

வேறு எந்த உளவு, வேவு விவகாரத்தைவிடவும் பெகாசஸ் ப்ராஜக்ட் நமது அந்தரங்கத்தின் எல்லைகளை மீறுகிறது எந்பது சமீபத்திய அம்பலங்களில் தெரிய வருகிறது. கூகிள், அமேசான், ஃபேஸ்புக் பயன்படுத்தும் அல்காரிதிம் போன்றது அல்ல இது. உங்கள் பாக்கெட்டில் உள்ள உளவாளி என்பதையும் தாண்டிச் செல்லக்கூடியது இது. உங்கள் மூளையை கழற்றி அவர்களிடம் ஒப்படைப்பது போன்றதுதான் பெகாசஸ் ப்ராஜக்ட்.

தொற்றிக்கொண்ட செல்பேசியை மட்டும் அல்ல, அந்த செல்பேசியுடன் இணைப்பில் இறுக்கும் சமூக வட்டம், நண்பர்கள், சக ஊழியர்கள் என அனைவரும் அரசியல், சமூக, பொருளாதார ரிஸ்க்குகளை சந்திக்கிறார்கள்.

இத்தகைய பெருமளவிலான கண்காணிப்பு பற்றி மற்ற எவரையும்விட விரிவாகவும் ஆழமாகவும் கவனித்தவர் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு ஏஜென்சியில் முன்பு வேலை பார்த்தவரும் எதிர்க் குரல் எழுப்பி வருபவருமான எட்வர்ட் ஸ்னோடன். சமீபத்தில் தி கார்டியன் பத்திரிகைக்கு கொடுத்த நேர்காணலில் அவர் இவ்வாறு கூறினார்: “இந்த தொழில்நுட்பத்தின் விற்பனையை தடுக்காவிட்டால் அடுத்து வெறும் 50,000 பேர் இலக்கு வைக்கப்பட மாட்டார்கள். 5 கோடி பேர் இலக்காக மாறுவார்கள். நாம் எதிர்பார்ப்பதைவிட இது வேகமாக நடக்கும்.” அவர் சொல்வதை நாம் உற்று கவனிக்க வேண்டும். அதை உள்வட்டத்திலிருந்து பார்த்தவர் இவர்.

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு முன்பு 2014 டிசம்பரில் ஸ்நோடனை நான் மாஸ்கோவில் சந்தித்தேன். அரசு ரகசியங்களை அம்பலப்படுத்துபவராக அவர் மாறி ஒன்றரை ஆண்டுகளாகியிருந்தது. தனது சொந்த மக்களையே உளவு பார்க்கும் அரசாங்கத்தின் செயலால் வெறுத்துப் போய் அவர் எடுத்த முடிவு அது. 2013 மே மாதத்தில் எப்படியோ தப்பி வந்த அவர் தலைமறைவாக வாழும் வாழ்க்கைக்கு பழகி வந்த சமயம் அது. பென்டகன் பேப்பஸ் புகழ் டேனியல் எல்ஸ்பக், ஜான் குசாக் ஆகியோருடன் நான் அவரை சந்திக்க மாஸ்கோ சென்றிருந்தேன். பனிக் கத்தியால் குத்துவது போன்ற ரஷ்ய குளிரில் நாங்கள் மூன்று நாட்கள் கண்காணிப்பு, உளவு வேலைகள் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தோம். எந்த அளவுக்கு செல்வார்கள்… இதெல்லாம் நம்மை எங்கே அழைத்துச் செல்லும்… நாம் யாராக மாறுவோம்…

பெகாசஸ் ப்ராஜக்ட் பற்றிய செய்தி வெளியானவுடன் பழைய உரையாடல் பதிவுகளை எடுத்துப் பார்த்தேன். அது பல நூறு பக்கங்கள் கொண்டது. மயிர்க் கால்கள் குத்திட்டு நின்றன. முப்பதுகளில் இருந்த ஸ்னோடன் நடக்கப் போவதை எல்லாம் முன்கூட்டியே சொல்லியிருந்தார்: “இந்த தொழில்நுட்பத்தை பின்னோக்கி செலுத்த முடியாது. இது இன்னும் மலிவானதாக மாறும். இன்னும் திறம்பட்டதாக மாறும். இன்னும் எளிதாகக் கிடைக்கக்கூடியதாக மாறும். நாம் எதுவும் செய்யாவிட்டால் எங்கும் கண்காணிப்பு இருள் வெளிக்குள் சென்றுவிடுவோம். அரசாங்கம் அதி பயங்கர சக்திகள் கொண்டதாக மாறும். மக்களைப் பற்றி எதையும் தெரிந்துகொள்ளும் ஆற்ற மிக்க அரசாங்கமாக, அதைப் பயன்படுத்து விரும்புகிறவர்களை எளிதாக குறி வைக்கக்கூடிய அரசாங்கமாக, பலவந்தமாக அதைச் செய்யக்கூடிய அரசாங்கமாக நமது அரசுகள் மாறும்… இதுதான் எதிர்காலத்தின் திசை…”

வேறு வார்த்தைகளில் இப்படி சொல்லலாம்: மக்களைப் பற்றிய அனைத்தையும் அறிந்த அரசுகளும், தம்மை ஆளும் அரசுகள் பற்றிய பிரஜைகளின் புரிதல் குறைந்துகொண்டே போகும் காலக் கட்டத்தில் நாம் நுழைகிறோம். கொல்லும் கொடிய கிருமி இது. ஜனநாயகத்திற்கு ஒரேயடியாக முற்றுப் புள்ளி வைக்கக்கூடியது இது.

ஸ்நோடன் சொல்வது சரிதான். தொழில்நுட்பத்தை பின்னோக்கி செலுத்த முடியாது. ஆனால் கட்டுப்பாடுகள் இல்லாத, சட்டபூர்வமான தொழிலாக தொழில்நுட்பத்தின் அத்துமீறலை அனுமதிக்க முடியாது. அத்தகைய அத்துமீறலுக்கு எதிராக சட்டங்கள் வர வேண்டும். அத்தகைய அத்துமீறல்கள் பதுங்கு குழிக்குள் விரப்பட வேண்டும். தொழில்நுட்பம் இருந்துவிட்டுப் போகட்டும். அதை வைத்து லாபத் தொழில் வருவதை அனுமதிக்க முடியாது.

ஸோ, நாம் எங்கே போகிறோம்… அரசியல் நடவடிக்கைகள் மட்டுமே இதைத் தடுக்க அல்லது பாதிப்பைக் குறைக்க முடியும். சட்டபூர்வமாக, சட்டவிரோதமாகவோ தொழில்நுட்பம் உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது ஏன் தடுக்க முடியாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. தேசியவாதம், முதலாளித்துவம், பேரரசுகளின் ஆதிக்கம், காலனி ஆதிக்கம், இனவாதம், சாதியம், பாலினவாதம் ஆகிய நமது இந்த காலக் காலத்தின் சிடுக்குகளில் அது எங்கேனும் ஒளிந்துகொண்டு தன்னைக் காத்துக்கொள்ளும்.  தொழில்நுட்பத்தின் பயணம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் இதுதான் நமது போர்க் களமாக இருக்கும்.

நமது செல்ல எதிரிகளான செல்பேசிகளால் நாம் கட்டுப்பாட்டிற்கும் ஆதிக்கத்திற்கும் ஆளாக்கப்படாத உலகிற்கு நாம் இடம்பெயர்ந்தாக வேண்டும். மூச்ச விட முடியாமல் செய்யும் இந்த டிஜிட்டல் கண்காணிப்பிற்கு வெளியே நமது வாழ்வையும் போராட்டங்களையும் சமூக இயக்கங்களையும் மறு கட்டமைப்பு செய்ய முயற்சிக்க வேண்டும். இவற்றை நமக்கு எதிராக செலுத்தும் ஆட்சிகளை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதிகாரத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் இரும்புப் பிடியை எப்படியாவது தளர்த்த வேண்டும். நமது சக்தி அனைத்தையும் பயன்படுத்தி இதைச் செய்ய வேண்டும். நம்மிடமிருந்து திருடப்பட்ட அத்தனையையும் நாம் மீட்டுப் பெற வேண்டும்.

நன்றி: தி கார்டியன்

சுட்டி :

https://www.theguardian.com/commentisfree/2021/jul/27/spying-pegasus-project-states-arundhati-roy