ஒரு காட்சி அமைப்பின் நோக்கமானது அடிப்படையில் ஒரு நாவலிலும் திரைக்கதையிலும் ஒன்று தான் – கதையை நகர்த்துவது, மைய பாத்திரங்களின் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்துவது, அவர்களின் சிக்கலை அறிமுகப்படுத்துவது அல்லது வளர்த்து மேலும் சிக்கலாக்குவது, இச்சிக்கலை லகுவாக்குவது அல்லது தீர்த்து வைப்பது. ஆனால் நாவலுக்கும் திரைக்கதைக்கும் இவ்விசயத்தில் உள்ள முக்கிய வித்தியாசம் சினிமாவில், குறிப்பாக வணிக சினிமாவில், காட்சி என்பது புறவயமானது, சுருக்கமானது, வேகமாய் நகர்வது என்பது. இலக்கிய நாவல்களிலோ, மாறாக, காட்சிகள் விரிவாக, பல்வேறு ஊடுபாவல்களைக் கொண்டதாக, நீண்டதாக இருக்கும். ஒரு படத்தில் பல காட்சிகள் இணைந்து ஒரு காட்சி வரிசையாகிறது (சீக்வென்ஸ்), இந்த காட்சி வரிசைகளே ஒட்டுமொத்த கதைக்குள் நிகழும் வளர்ச்சி மாற்றங்களை சித்தரிக்கின்றன. காலத்தைப் பொறுத்தமட்டில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் சில நிமிடங்களிலே ஒரு சினிமாவில் ஒரு காட்சி வரிசை நிகழ்ந்து முடிந்திருக்கும். ஆனால் ஒரு நாவலிலோ அதற்கு ஐம்பது பக்கங்களில் இருந்து நூறு பக்கங்கள் வரை எடுத்துக் கொள்ளப்படும்.

சரி, சினிமாவில் இந்த காட்சி வரிசையில் இலக்கு என்ன?

எந்த கதையிலும் துவக்க வினையாக, ஆன்மாவாக இருப்பது அதன் ஒற்றை வரியே – சின்ன அளவில் கள்ளக்கடத்தலில் ஈடுபட்டிருக்கும், அடிப்படையில் நல்லவனான, ஒரு இளைஞன் ஊரின் பிரதான கடத்தல் தாதாக்களை எதிர்க்கிற, அவர்களை விட புத்திசாலித்தனமாக, முரட்டுத்தனமாக செயல்பட்டு முறியடித்து, அதன் பின் தன் மக்களுக்காக போராடி உயரும் நிலை ஏற்பட்டால், அதற்காக அவன் பல குற்றங்களை செய்ய நேர்ந்தால் என்னவாகும் என்பது “நாயகனின்” ஒற்றை வரி. இது பாட்டி வடை சுட்ட கதைதானே – பாட்டியை ஏய்த்து திருடிப் பிடுங்குகிற காகத்தை அதை விட சாமர்த்தியசாலியான ஒரு நரியை சந்திக்க நேர்ந்தால் என்னவாகும்?

ஆனால் இந்த ஒற்றை வரி என்பது சுவாரஸ்யமான கதையல்ல; முடிவில் என்னவாகும் என ஏற்கனவே கதைச்சுருக்கத்தை நீங்கள் படித்து விட்டால் படத்தைப் பார்ப்பீர்களா மாட்டீர்களா? பார்ப்பீர்கள். ஏன்? அதன் காட்சிகளின், காட்சி வரிசைகளின் சுவாரஸ்யம். அப்போது இந்த ஒற்றை வரியானது இந்த காட்சி வரிசைகளுக்கு ஒரு லாஜிக்கை, துவக்கத்தை, முடிவை, காலம், வெளி குறித்த குறிப்புகளை மட்டும் தருகிற ஒன்று மட்டுமே. படம் என்பது, திரைக்கதை என்பதை அதையும் மீறிய ஒன்று. அதோடு ஹிட்ச்காக் சொல்வதைப் போல சினிமாவில் கதை என்பது இல்லாத ஒன்றை இருப்பதாய் நம்ப வைப்பதே, ஏதோ ஒன்றை நோக்கி கதை மாந்தர்கள் ஓடுவதாய் காட்டி அதில் பார்வையாளர்களுக்கும் ஆர்வம் ஏற்படுத்துவதே (“மெக்கபின்”). அதனாலே நாவலைப் போல இங்கு நிதானமாய், ஒரே தொனியில், பாய்ச்சலில் கதையை கொண்டு போக முடியாது. பார்வையாளர்கள் தம்மை மறந்து ஒரு கதையைப் பின்  தொடர்வதற்கு காட்சி வரிசைகள் இடையே தொனியில், உணர்வுநிலையில், போக்கில் பல மாறுதல்கள் அவசியம்.

ஒரு காட்சி வரிசைக்குள்ளாடியே காட்சிகளில் பல வித்தியாசங்கள் மகிழ்ச்சி, துக்கம், கோபம், ஆறுதல், வருத்தம், நிம்மதி, நம்பிக்கை, அவநம்பிக்கை என கொண்டு வரப்பட வேண்டும். இதை ராபர்ட் மெக்கீ beat என்கிறார். (ஆனால் நாவல் எழுத்துமுறையில் beat என்றால் காட்சிகளின் கதைச்சுருக்கம் எனப் பொருள்.) ஒரு காட்சிக்குள்ளாடியே பல beatகள் வந்தால் அக்காட்சி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

வணிக சினிமாவில் ஒரு காட்சியானது பாத்திரத்தின் சிக்கலை, மனவியலைப் பற்றி கூடுதலான தகவல்களை நமக்குத் தருவதை விட, பல முரணான உணர்வுநிலைகளை ஒரே சமயம் கொண்டிருப்பதே முக்கியம். ஏனென்றால் வணிகப் படங்களில் ஒரு பாத்திரத்தின் அமைப்பில் முக்கியமான மாற்றம் கதையின் மூன்றாவது பகுதியில் தான் வருகிறது. நாம் இதைப் பற்றி விரிவாக தெளிவாக புரிந்து கொள்ள தமிழ் சினிமாவில் இருந்து சில எளிமையான உதாரணங்களைத் தருகிறேன்.

“சந்தோஷ் சுப்பிரமணியம்” (2008) படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். அதில் சந்தோஷ் (ஜெயம் ரவி) ஹாசினியை (ஜெனீலியா) ஒரு கோயிலில் கண்டு காதல் வயப்படுகிறான். அவளை அவளது வீட்டுக்கு அருகே சென்று பார்த்து ஹலோ சொல்லி காப்பி சாப்பிட வெளியே வருகிறாயா எனக் கேட்கிறான். அவள் அச்சப்பட்டு “இடியட்” எனத் திட்டி சென்று விடுகிறாள். அடுத்து அவள் படிக்கும் கல்லூரிக்கு செல்கிறான் – மீண்டும் கோரிக்கை வைக்க அல்ல, தன்னை அவமதித்த அவளைத் திட்டுவதற்காக. ஆனால் அங்கு “உன் மீது காதல் வயப்பட்டு மயங்கி உன்னைத் தேடி ஒன்றும் வரவில்லை” என அவன் சொல்லி விட்டுக் கிளம்ப, அவளோ சட்டெனத் திரும்பி “ஒரு காப்பிட சாப்பிடப் போலாம், வரியா?” என அழைக்கிறாள். அதாவது கோபத்தில் கத்த சென்றவன் அவளிடம் சினேகமாகி, அவளே அவனை வெளியே அழைக்கத் தலைப்படும் இடத்தில் காட்சி முடிகிறது. இந்த காட்சி எளிதாக நகைச்சுவையாக இருப்பதனாலே இது நம் மனத்தில் தங்கி விடுகிறது. மேலும் காப்பி சாப்பிட காபி டேய்க்கு வெளியே அழைப்பதே எலைட்டிஸ்ட் வாழ்வில் ஆண்களுக்கு தம் காதலிக்கு தூண்டில் போடுவதற்கு ஒரு சந்தர்ப்பமாக இருக்க, ஹாசிலினியோ அவனை ஒரு சாதாரண டீக்கடைக்கு அழைத்து சென்று, அதை சாதாரணமாக ஏதோ நண்பர்களுக்கு இடையில் நடப்பதாக மாற்றி தலைகீழாக்கி விடுகிறாள். அதுவும் அவள் காப்பி சாப்பிட அழைத்து செல்வது ஒரு இஸ்லாமியக் கடைக்கு. “வழக்கமாக பாய் கடையில் பிரியாணி தான் நல்லா இருக்கும், ஆனால் இங்கே காபி பிரமாதமாக இருக்கும்” என வேறு அறிமுகம் செய்கிறாள். அங்கு சென்றதும் காபியை இரு விரல்கள் இடையே குழந்தைத்தனமாக ஏந்தி, தன்னையே வெகுவாக ரசித்து, அடுத்தவர் பார்ப்பதைப் பற்றி கவலைப்படாமல், சத்தமாக உறிஞ்சிக் குடிக்கிறாள். ஒரு காட்சிக்குள் எத்தனை தலைகீழாக்கங்கள் பாருங்கள்.

மற்றொரு சந்தர்பத்தில் சந்தோஷின் அப்பாவுக்கு அவன் காதல் தெரிந்து விட, ஹாசினியை வீட்டில் தங்க வைத்து தன்னிடம் அவளை அவனுக்கு ஏற்றப் பெண் தான் என நிரூபிக்க ஒரு வாரம் தருவதாக அவர் அறிவிக்கிறார். அவனும் சவாலை ஏற்று அவளை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறான். அப்போது பல குழப்படிகள், வேடிக்கையான சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றில் ஒன்றில், சந்தோஷின் வருங்கால மாமனார் கல்யாணப் பத்திரிகை வைக்க வீட்டுக்கு வருகிறார். (சந்தோஷுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகி விட்டது.) அவருக்கு சந்தோஷின் காதல் கதை தெரியாது. அவர் வரும் போது வாசலில் சந்தோஷின் அண்ணன், அக்கா குழந்தைகளுடன் ஹாசினி ஜோக் சொல்லி விளையாடிக் கொண்டிருக்கிறாள். சந்தோஷின் மாமனார் உள்ளே வந்ததும் எல்லாருக்கும் டென்ஷன் எகிறுகிறது – அவருக்கு உண்மை தெரிந்து விட்டால் என்ன பண்ணுவது? நமக்கு கூட சந்தோஷ் மாட்டிக்கொண்டு பிரச்சனை வெடிக்க போகிறது எனத் தோன்றுகிறது. ஆனால் நடப்பதோ வேறு. சந்தோஷின் அப்பாவுக்கு பதற்றத்தில் ரத்தக்கொதிப்பு அதிகமாக அவர் மாத்திரை கேட்கிறார். உடனே வருங்கால மாமனார் தனக்கும் ரத்தக்கொதிப்பு அதிகமாகி விட்டது, அதே மாத்திரை தனக்கும் வேண்டும் என்கிறார். வேலைக்காரன் மாத்திரை எடுத்து வரச் செல்கிறான். இதனிடையே ஹாசினி ஒரு எறும்பு ஜோக் சொல்ல, அதில் வரும் எதிர்பாராத திருப்பம் வருங்கால மாமனாரை பதற்றம் மறந்து மனம் விட்டு சிரிக்கச் செய்கிறது. வேலைக்காரன் மாத்திரையுடன் வர அவர் “இனிமே எதற்கு மாத்திரை, என் பிபி எல்லாம் போச்சு” என்கிறார். ஆனால் சந்தோஷின் அப்பாவுக்கோ ரத்தக்கொதிப்பு எகிறுகிறது. வருங்கால மாமனார் கிளம்பும் போது ஹாசினியை நோக்கி “மகாலட்சுமியைப் போல இருக்கிறாள்” என புகழ்ந்து விட்டு வேறு செல்ல, அதை சந்தோஷ் தன்னை மறந்து ஆமோதிக்கிறான். இக்காட்சிக்குள் எத்தனை தலைக்கீழாக்கங்கள் பாருங்கள் – நாம் நினைப்பதற்கு நேர்மாறாக காட்சி முடிகிறது, வருங்கால மாமனாரின் மகிழ்ச்சி அதிகமாக சந்தோஷின் அப்பாவின் வெறுப்பும் பதற்றமும் கூரையைப் பொத்துக்கொண்டு செல்கிறது. இதை எதையும் அறியாமல் ஹாசினி வழக்கம் போல கள்ளங்கபடமற்று உற்சாகமாக இருக்கிறாள்.

இப்படத்தில் காட்சி வரிசைகள் இடையிலும் இப்படியே முரண் நிலைகள் இருக்கும் – ஒரு காட்சி வரிசையில் சந்தோஷின் நோக்கம் தவிடுபொடியாகும் போது, அடுத்ததில் வெற்றிபெற்று அவன் நம்பிக்கை அடைவான், அடுத்ததில் மீண்டும் அந்நம்பிக்கை உடையும். ஆனால் இக்காட்சிகள் ரொம்ப சாதாரண பிரச்சனைகளைக் கையாள்வதாக லைட்டாகவே இருக்கும் – ஹாசினியின் அப்பாவை சமாதானப்படுத்தி அவளை தன் வீட்டுக்கு அழைத்து செல்வது, அங்கு அவளைப் பற்றி குடும்பத்தினரிடத்து நல்ல மதிப்பை  ஏற்படுத்துவது, இதனிடையே அவர்கள் ஜெயிப்பது, தோற்பது, இது அவர்களின் உறவை கசக்க வைப்பது, அந்த கசப்பை அவர்கள் கடந்து வருவது, அதன் பின்னர் அவர்கள் பரஸ்பரம் கூடுதல் புரிதலை, உறவில் ஆழத்தைப் பெறுவது என.

ஒரு எளிய வணிகப்படத்துக்கு காட்சிகளில், காட்சி வரிசையில் இப்படி beats சரியாக அமைந்தாலே அது சுவாரஸ்யமாக இருக்கும் என்பதற்கு “சந்தோஷ் சுப்பிரமணியம்” ஒரு சிறந்த உதாரணம்.