“சாய் வித் சித்ராவில்” சாரு தன் பேட்டியின் நான்காவது அத்தியாயத்தில் மிஷ்கினுடன் தனது உறவு கசந்த ‘அந்த’ பழைய சம்பவத்தை நினைவுகூருகிறார். நான் அந்த நிகழ்வை பார்த்ததில் இருந்து, பின்னர் மிஷ்கினை கடுமையாக விமர்சித்து, தன் காயங்களை விலாவரியாக எழுதி சாரு எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் படிக்கவும் செய்திருக்கிறேன். இந்த ஒட்டுமொத்த உணர்ச்சிகரமான மோதலில் ஒரு வெளிநபராக நின்று கவனித்த வகையில் எனக்கு சொல்வதற்கு ஒரு கருத்து உண்டு: அது தவறு சாருவின் மீதே என்பது. ஏனென்று சொல்கிறேன்.

சாரு ஒருவருடன் நட்பாகும் போது அவரை முழுமையாக அரவணைக்கக் கூடியவர். நண்பர்கள்  அவரைக் கொண்டாடும் போது அவர்கள் சொல்லுவது அனைத்தையும் அப்படியே நம்பி விடுவார். அதன் பிறகு அவர்கள் அதற்கு விரோதமாக நடந்து கொள்ளும் போது அவருக்கு அது புரியவே புரியாது. தத்தளித்துப் போய் மிகுந்த கோபத்துடன் எதிர்வினையாற்றுவார். சாரு நட்பின் உணர்வுப் புயலில் போகிற இடமெல்லாம் தன்னையும் அடித்துக் கொண்டு போக அனுமதிப்பவர். ஒரு கலைத்து விட்ட கேரெம் போர்டைப் போல புயல் அடித்து முடியும் போது சாரு எந்த இடத்தில் நிற்கிறார் என அவராலே கணிக்க முடியாது. அதன் பிறகு நிறைய வருத்தப்படுவார், திட்டுவார், கடைசியாக மன்னித்தும் விடுவார். தொடர்ந்து எதிர்த்தரப்பு அவரை தேற்றாவிடில் அவர் மீண்டும் பழைய காயங்களில் விழுந்து வருத்தப்படுவார். இது சாருவின் ஆளுமையில் உள்ள ஒரு பெண் தன்மை கொண்ட இயல்பு என நினைக்கிறேன். ஒரு எழுத்தாளுமையாக அவரது வலுவும் இது தான். அந்த பேட்டியில் தனது பழைய நட்புகளை அவர் நினைவுகூறும் போது எனக்கு தோன்றிய எண்ணம் இதுவே.

சரி சாரு என்ன தப்பு செய்தார்? அவர் மிஷ்கின் தான் ஒரு உலக இலக்கிய வாசகன் என கோரிக் கொண்டதை, ஜார்ஜ் பத்தாயின் நாவலை பரிசளித்ததை அப்படியே நம்பி விட்டார். மிஷ்கின் தானே குரொசோவாவின் மறுபிறவி என்று சொல்லி இருந்தாலும் அவர் நம்பி இருப்பார் (இதே பேட்டியில் பாலகுமாரன் தன் மரணத் தேதியை துல்லியமாக கணித்தவர் என சாரு சொல்வதை கவனியுங்கள்.) இது சாருவின் ஒரு மாற்றுப் பகுத்தறிவு. அவர் உணர்வுகளுக்கு மத்தியில் தர்க்கத்தை நாட மாட்டார். ஆனால் என்னுடைய ஒரு கணிப்பு என்னவென்றால் மிஷ்கினுக்கு உலக இலக்கியத்தில் மட்டுமல்ல தமிழ் இலக்கியத்திலும் ஆழமான அடிப்படை வாசிப்பு இல்லை.

நான் இயக்குநர் ராமின் சென்னை வீட்டுக்கு முன்பு அடிக்கடி செல்வேன். எல்லா இடங்களிலும் புத்தகங்கள் கிடக்கும். கழிப்பறையில் படிப்பதற்கென்றே சில புத்தகங்கள் இருக்கும். ஐந்து நிமிடத்தில் பத்து புத்தகங்களைப் பற்றி கருத்து சொல்லி விடுவார். இலக்கிய விமர்சனத்தில் அவர் இறங்கி விட்டால் அவரை பிடித்து நிறுத்துவது சிரமம் – மிகக்கடுமையான கருத்துக்களை சொல்லுவார். ஆனால் அதில் ஒரு நேர்மை இருக்கும். அவருடைய மாணவரான மாரி செல்வராஜ் இயல்பாகவே எழுத்துத் திறமை கொண்டவர்; நல்ல வாசகர். பா.ரஞ்சித்திடம் முன்பு (“மெட்ராஸ்” வெளியான சமயத்தில்) ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசி இருக்கிறேன். சுருக்கமாக என் புத்தகம் ஒன்றைப் பற்றி தன் கருத்தை சொன்னார். அதில் எது பிடித்திருந்தது என குறிப்பாக வேறு பேசினார். வேறு விசயங்களைப் பற்றியும் தன் தரப்பை வெளிப்படுத்தினார். இப்போது மிஷ்கினுக்கு வருவோம் – அவருடைய வீட்டில் நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் ஒரு புத்தகக்கடை பாணியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் தான் படித்த புத்தகங்களைப் பற்றி ஒன்றிரண்டு சொற்களுக்கு மேல் பேச மாட்டார். அவர் பேட்டியில் புத்தகங்களின் பெயர்களை உதிர்க்கும் போது சொல்லுகிற வாக்கியங்களை வைத்துப் பார்க்கும் போது அவர் நிஜமாக அப்புத்தகங்களைப் படிக்கிறாரா எனும் ஐயம் எனக்கு எழும். என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை, இது ஒரு ஐயம் மட்டுமே.

சாருவின் புத்தகங்களை நவீன இலக்கிய பரிச்சயம் கொண்டவர்களுக்கே நெருங்கி புரிந்து கொண்டு மதிப்பிடுவதில் நிறைய தடைகள் உள்ளன. அத்தடைகள் அதன் உள்ளடக்கத்தினால் அல்ல எழுதும் முறையில் இருந்தே, குறிப்பாக எழுத்தாளனின் குரலை அவர் கட்டமைப்பதில் இருந்தே வருகிறது. (நான் இதைப் பற்றி தனியாக விரிவாக எழுதி உள்ளேன்.) சாருவின் “தேகம்” நாவல் வெளியான போது நான் அதற்கு உயிர்மையில் மிகுந்த தயக்கத்துடன் ஒரு விமர்சனம் எழுதினேன். ஏன் ‘தயக்கம்’ என்றால் எனக்கு அதை எப்படி தொகுத்து மதிப்பிடுவது என அப்போது புரியவில்லை. “புரியவில்லை” என்றால் “எப்படிப் புரியவில்லை” என சொல்லத் தெரிய வேண்டும். எனக்கு அப்போது பின்நவீன இலக்கியப் பரிச்சயம் இருந்தது. என் பதினான்காவது வயதில் இருந்தே இலக்கிய நூல்களை படித்து வருகிறேன். ஆனால் சாருவின் எழுத்து வழக்கமான தொழில்நுட்ப ரீதியான, அழகியல் சார்ந்த பின்நவீனப் புனைவு அல்ல என்பதால் நான் அப்போது திகைத்துப் போனேன். ஒரு பாமர வாசகன் என்றால் (இதை ஒரு எதிர்மறைப்பொருளில் சொல்லவில்லை) “எனக்குப் பிடிக்கல, புரியல” எனச் சொல்லி விட்டு கடந்து விடலாம். என்னால் அது முடியவில்லை. ஆகையால் நான் அதை ஒரு நவீனத்துவ உளவியல் புனைவின் அடிப்படையில் பரிசீலித்து விமர்சனம் எழுதினேன். கடந்த ஐந்தாண்டுகளில் நான் அதிகமாக பின்நவீன தத்துவ, கோட்பாட்டு எழுத்துக்களை வாசித்தேன், அவற்றின் அடிப்படையில் உலக எதிர்-புனைவு எழுத்துக்களின் பரிச்சயம் கொண்டேன். இந்த ஆழமான பயணத்தின் முடிவில் மீண்டும் சாருவிடம் வந்த போது அவர் என்ன செய்ய முயல்கிறார் எனப் புரிந்தது. இதற்கு எனக்கு ஒரு நெடிய பயணம் தேவைப்பட்டது. இதில் நூற்றில் ஒரு மடங்கு கூட செய்யாதவர்கள், புதுமைப்பித்தனைக் கூட படிக்காதவர்கள் எப்படி முதன்முதலாக “தேகம்” நாவலைப் படித்து விளங்கிக் கொள்ள முடியும்? மிஷ்கின் அந்த சமயத்தில் அதற்குத் தயாரான நிலையில் இல்லை. ஒவ்வொரு படைப்பும் அதற்கு உரித்த ஒரு வரலாற்றின் பகுதியாகவே நம்மிடம் வருகிறது. அதைச் சும்மா உருவி வாசிக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் பிரஞ்சு புதிய அலை படங்களைப் பார்க்கக் கூட அதற்கு உரிய வரலாற்று, தத்துவப் பரிச்சயம் வேண்டும். மிஷ்கினுக்கு சினிமா சார்ந்து இருக்கிற அறிவும் பரிச்சயமும் இலக்கியம் சார்ந்து இல்லை என்பது அவருடைய தவறு அல்ல. அவருக்கு ஒரு அறிவுஜீவி பிம்பம், கற்றறிந்த இயக்குநர் எனும் சித்திரம் வேறு  உள்ளது. “தேகம்” புத்தக வெளியீட்டின் அன்று மிஷ்கின் தனது புரியாமையின் திகைப்பு மற்றும் அறிவுஜீவி, மேதை பிம்பத்துக்கும் நடுவே மாட்டிக்கொண்டு விட்டார் என கணிக்கிறேன்.

அவருக்கு “தேகம்” எப்படி எந்த கோர்வையான கதைச்சரடும், நேர்கோட்டுக் கதைக்களமும் இல்லாமல் எங்கெங்கோ போகிறது, இது எப்படிக் கதையாக முடியும் எனப் புரியவில்லை. ஆக ஒரு சில அத்தியாயங்களுடன் மூடி வைத்து விட்டு நிகழ்ச்சிக்கு வந்து விட்டார். ஒரு பக்கம் என்ன பேசுவது எனும் குழப்பம், சாரு தன் நண்பர் எனும் உணர்வு, இன்னொரு பக்கம் நிறைய பார்வையாளர்கள். அவர்கள் தன் பேச்சை, கருத்தைக் கேட்கவென்றே அங்கு வந்திருக்கிறார்கள் என வேறு அவருக்குத் தோன்றுகிறது. அங்கு தன் மனத்தில் பட்டதை ஒரு ‘விழுமியத்துடன்’ கலந்து “விமர்சனமாக” சொல்கிறார். என்ன பிரச்சனை என்றால் அது ஒரு இலக்கிய மேடை, அதற்கு ஒரு சிறுபத்திரிகை பாரம்பரியம் உண்டு, அதற்கு ஒரு உலக இலக்கிய பின்னணி உண்டு, அங்கு வந்து சும்மா ஒரு தெளிவற்ற கருத்தை சொல்லி விடக் கூடாது எனும் பிரக்ஞை அவருக்கு இல்லை. ஏனென்றால் அவருக்கு சிறுபத்திரிகை மரபோ, இங்கு உலக இலக்கியங்கள் விவாதிக்கப்பட்ட வரலாறோ, இங்கு கடந்த ஐம்பதாண்டுகளில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது எனும் புரிதலோ இல்லை. அவருக்கு தெரிந்ததெல்லாம் அவருடன் தண்ணியடிக்கும் இலக்கியவாதிகளை மட்டுமே. ஆக அவர் சு.ராவை அந்த காலத்தில் நாகர்கோயில்காரர்கள் ஜவுளிக்கடை முதலாளி எனச் சொன்னதைப் போல, ஒரு இலக்கியவாதி தன் நண்பரின் வீட்டில் கேரம்போர்ட், சீட்டு விளையாட செல்வதைப் பார்க்கும் ஒரு குழந்தை “இந்த அங்கிள் எங்க வீட்டுக்கு கேரம்போர்ட் ஆட வருவாரு” எனக் கோருவதைப் போல “நான் சாருவுடன் தண்ணி அடித்திருக்கிறேன்” எனச் சொல்லுகிறார். அடுத்த சில நொடிகள் தயங்கி புத்தகத்தை கையில் எடுத்து “இது சரோஜா தேவி புத்தகம் போலிருக்கிறது” என அவர் தனக்கே உரித்த செருக்குடன் கூறுகிறார். இந்த’ செருக்கையும்’ தன்னுடைய அகநெருக்கடியை மறைக்கத் தான் மிஷ்கின் வெளிப்படுத்துகிறார். அவரை அந்த நெருக்கடியான நிலையில் தள்ளியது தான் சாரு செய்த தவறு என்கிறேன்.

இதை நான் என் அனுபவத்தில் இருந்தே சொல்லுகிறேன் – நான் ஊடகம், சினிமா சார்ந்த நண்பர்களை என் படைப்பைப் பற்றி மேடையில் பேசக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்களைக் “குழந்தைகள்” என்று நினைத்தே அழைத்து வருவேன். சிறுபத்திரிகை ஆட்கள் இதை விட ஆபத்தானவர்கள் – அன்றைய மனநிலை, சின்னச்சின்ன கோபங்களை மனத்தில் வைத்து கடித்துக் குதறி விடுவார்கள். அல்லது பெரும்பாலும் படிக்காமலே வந்து “நான் இந்த புத்தகத்தை அஞ்சு நிமிடம் முன்னத் தான் படிக்க ஆரம்பிச்சேங்க” என்று ஆரம்பித்து ஒரு மணிநேரம் பேசுவார்கள். எப்படிப் போனாலும் கொத்துக்கறி போட்டு விடுவார்கள். ஒன்று ஒரு குழந்தை பொருட்களை தரையில் வீசியடித்து மேசையில் ஏறி நின்று குதிப்பதைப் போல இருக்கும் (மிஷ்கின் பாணி), அல்லது ஒரே ரத்தக்களறியாகி விடும் (சிறுபத்திரிகை அரசியல் பாணி).

இதிலும் விதிவிலக்காக சிறப்பாக புறவயமாக நிதானமாக பேசும் எழுத்தாளர்கள், விமர்சகர்கள் உண்டு. ஆனால் எண்ணிக்கையில் அவர்கள் மிகவும் குறைவு. முன்பு தக்கலையில் கலை இலக்கியப் பெருமன்ற கூட்டங்களில் வெள்ளி தோறும் நடக்கும். அப்போது ஒரு நூலை தேர்ந்தெடுத்து விமர்சித்து ஒருவர் பேச மற்றவர்கள் கருத்து சொல்லுவார்கள். என்ன புத்தகம் என முன்கூட்டியே தெரியும் என்பதால் அதற்காக நாங்கள் எல்லாம் முன்கூட்டியே வாசித்து, கருத்துக்களைத் தொகுத்து ஒரு ‘மூர்க்கத்துடன்’ வந்திருப்போம். குறுகின கால அளவில் தீயாக விவாதம் நடக்கும். அவ்வளவு கூர்மையாக, செறிவாக இருக்கும். ஆனால் அந்த வகை மனிதர்கள் இன்று எங்கோ போய் மறைந்து விட்டார்கள். அடுத்து, இன்று என்னுடைய இலக்கிய வகுப்புகளில் internal assessment இன் பகுதியாக புத்தகங்களை வைத்து கருத்துரை வழங்க மாணவர்களிடம் சொல்கிறோம். அவர்களிடையே சுமாரான மாணவர்கள் கூட நம் தமிழ் இலக்கிய பேச்சாளர்களை விட செறிவாக, தயாரிப்புடன் பேசுவார்கள். அதற்கான பயிற்சியை அவர்களுக்கு தொடர்ந்து அளிக்கிறோம். சென்னைப் பல்கலையில் நான் ஆய்வு செய்யும் போது அவ்வப்போது பிரசிடென்ஸியில் படிக்கும் ஆய்வு மற்றும் முதுகலை மாணவர்கள், பேராசிரியர் ஶ்ரீனிவாசனின் நெறியாள்கையின் கீழ், நூல் அறிமுகம் செய்து பேசுவார்கள். அதுவும் சிறப்பாக இருக்கும். ஆனால் இந்த கல்விப்புல கூட்டம் அப்படியே நம் இலக்கிய கூட்டங்களுக்கு வராமல் எங்கேயோ போய் மறைந்து விடுகிறார்கள். இப்போது நம் வசம் இருக்கும் ஆட்களுக்கு கோட்பாட்டுக் கல்வியின் பெரிய போதாமை வேறு உள்ளது. இவர்களுக்கு பேஸ்புக் பதிவும், ஒரு நாவலும் ஒன்று தான். இவர்கள் “அட்டக்கத்தி” படத்தில் நாயகன் கராத்தே கற்றுக்கொள்ள மாஸ்டரிடம் செல்வானே அதே போல இருக்கிறார்கள். சும்மா குத்து என்றால் வேறெங்கோ பராக்கு பார்த்துக் கொண்டு பளாரென மூக்கில் குத்தி விடுகிறார்கள்.