அண்மைக்காலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் வீடுகளில் சோதனை போடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தைப் போல ஐநூறு மடங்கு, ஆயிரம் மடங்கு என்று சொத்து சேர்த்திருக்கிறார்கள். வெளிநாட்டு நண்பர் ஒருவர் என்னிடம், “ஏம்பா, உங்க அதிகமுகவில யோக்கியன்னு ஒருத்தன்கூடக் கெடையாதா?” என்றே கேட்டுவிட்டார். இதற்கு விடையைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இதற்குமேல் மத்தியில் யோக்கியத்தனம் பேசும் ஆளும் கட்சி, இவர்களுக்கு இங்கே ஆதரவாக ஜால்ரா அடிக்கிறது.
இந்தச் சோதனைகள் எல்லாம், உள்ளாட்சித் தேர்தல் வரும் நேரத்தில் கட்சியைமுடக்கிப் போடும் வேலை என்று பெரும்பாலான ஊடகங்கள் அதிமுகவோடு சேர்ந்து ஒப்பாரி வைக்கின்றன. ஆனால் விவாதங்களில் வருபவர்கள் யாருமே, இது அதிமுகவைக் குறிவைத்துச் செய்யும் தாக்குதலா, இயல்பாக சட்டப்படி நடப்பதா என்றெல்லாம் வாதிக்கிறார்களே தவிர, ஒருத்தராவது “இவ்வளவு கோடிகளைச் சேர்த்து இந்த நபர்கள் பதுக்கி வைத்திருக்கிறார்களே, இது சரியா?” என்று கேட்பதில்லை. அந்த அளவுக்கு “மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பது ஆட்சியாளர்களுக்கு இயல்பான விஷயம், அதில் தவறில்லை” என்பது போன்ற மனநிலை ஊடகவியலாளர்கள் இடையிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஊடகவியலாளர்கள் கிடக்கட்டும், அதிமுக தொண்டர்கள் இடையில் எப்படிப்பப்பட்ட மனநிலை நிலவுகிறது? சோதனை போடப்படும் அரசியல்காரர்கள் வீட்டுமுன் ஆயிரக்கணக்கான “தொண்டர்கள்” வந்துகூடி சோதனையிடுவது தவறு என்று கூச்சலிடுகிறார்கள். போலீஸ் தங்கள் வேலையைச் செய்யவிடாமல் தடுக்கிறார்கள்.
முன்பு கோவையில் சோதனையிடப்பட்ட போது திரு.வேலுமணி சார்பில் டிபன், குளிர்பானம், சாப்பாடு உள்ளிட்டவை அங்கே கூடிய அனைவருக்கும் வழங்கப்பட்டன. அப்படியானால் தான் பணம் சேர்த்தது சரிதான் என்று அந்த அமைச்சர் நினைக்கிறாரா? அதிமுக அமைச்சர்கள் “கொள்ளை”யடித்தது சரிதான் என்று அந்தத் தொண்டர்களும் நினைக்கிறார்களா? அப்படியானால் எவ்வளவு கேவலமான மனோபாவம் இது? பணம் சேர்த்தவர்கள் தங்கள் பணத்தையும் சேர்த்துத்தான் எடுத்துக் கொண்டார்கள் என்ற அடிப்படை புத்திகூட இந்த மக்களுக்கு இல்லையா? ஒருவேளை தங்களைவிட்டுப், பிற மக்கள் சொத்தை எடுத்துக் கொள்வது சரி என்கிறார்களா?
ஒரு மக்கள் திரள் முழுவதுமே, (ஏறத்தாழ தமிழ்நாட்டின் பாதிப்பகுதி அதிமுக சார்பானவர்கள் என்று வைத்துக் கொள்வோம்) ஊழல் செய்வது தவறில்லை என்று நினைத்தால் சமுதாயம் என்ன ஆவது? அப்புறம், பாவம், சட்டத்தால் தண்டிக்கப்படுகிற இந்த சங்கிலிப் பறிப்புத் திருடர்கள், சின்னஅளவில் லஞ்சம் வாங்குபவர்கள்…இவர்கள் மட்டும்தான் பாவம் செய்தவர்களா ஐயா?
அமைச்சர்களுக்கு பதவி போனது தோள் துண்டு போனதற்குச் சமம். அதில் ஒன்றும் மானம் போய்விடாது. ஆனால் ஆயிரக்கணக்கான கோடிகள் பணம் சேர்த்து ரெய்டுக்கும் காவல்துறைச் சோதனைக்கும் உட்படுவது கட்டியிருக்கும் வேட்டியே போவது போல் அல்லவா? கட்டியிருக்கும் வேட்டி போய் மானம் போனாலும் பரவாயில்லையா உங்களுக்கு?
இன்று திருமதி ஏ2 அவர்களே எத்தனை ஆயிரம் கோடி வைத்திருப்பார் என்ற ஹேஷ்யங்கள் பத்திரிகைகளில் எழுதப்படுகின்றன. சிலசமயம் சில பகுதிகள் முடக்கப்படுகின்றன. அப்படியானால் திரு.ஏ1 அவர்கள் எவ்வளவு சேர்த்திருப்பார்? அதைச் சற்றும் மனத்தில் வைக்காமல் அவரைக் கோயில் கட்டிக் கொண்டாடுபவர்களிடம் இத்தகைய நடத்தையையும் மனப்பான்மையையும் தவிர வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?
எந்த ஆட்சியானாலும் சரி, இந்த மோசமான மனோபாவத்தை- “ஊழல் செய்வதில் தவறில்லை” என்ற மனோபாவத்தை மாற்றுவதுதான் அதன் முதல் கடமையாக இருக்கவேண்டும். இதற்கு மிகப் பெரிய விலையை எதிர்காலத்தில் நம் சமுதாயம் தரவேண்டியிருக்கும். குறிப்பாக வேலை வாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர்கள்.