இப்போது மாண்புமிகு ஸ்டாலினும் அவரை ஏற்றுக் கொண்டுள்ளோரும் மத்திய அரசு (Central Government) என்ற சொல்லுக்கு பதிலாக ஒன்றிய அரசு (Union Government) என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் பாஜகவினரும் அது ஏதோ தீண்டத்தகாத சொல் போலவும் வேண்டுமென்றே முதலமைச்சரும் பிறரும் அதை “மைய” (?) அரசைக் கீழ்ப்படுத்தப் பயன்படுத்துவது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகின்றனர்.
நான் ஒரு மொழிபெயர்ப்பாளன் என்பது அனைவர்க்கும் தெரியும். மொழிபெயர்ப்பில் சாகித்திய அகாதெமி பரிசும் பெற்றுள்ளேன். ஐம்பதுக்கும் மேற்பட்ட பலவித நூல்களை மொழிபெயர்த்துள்ளேன்.
அந்தவிதத்தில் அரசியலமைப்புச் சட்டத்தையும் பிற சட்டங்களையும் மிகுதியாகப் படிக்கவேண்டிய, மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டுள்ளது. நான் பார்த்தவரை அரசியலமைப்புச் சட்டத்திலோ, இந்தியாவின் பிற சட்டங்கள் எதிலுமோ The Union of India என்ற சொல்தான் ஆளப்பட்டுள்ளதே ஒழிய எங்கும் Central Government என்ற சொல் ஆளப்படவில்லை.
அதேபோல அரசுக்கும் பிறருக்குமான வழக்குகளிலும் Union of India, Union Govt. of India என்ற சொற்களே உள்ளன. உதாரணமாக தாஸ் குப்தாவுக்கு எதிராக (மத்திய?) அரசின் வழக்கு என்றால் The Union of India vs Das Gupta என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்குமே ஒழிய Central Government of India vs Das Gupta என்று இருக்காது. அனைத்து வழக்குகளிலும் இதே நிலைதான். சந்தேகமிருப்பின் வழக்கறிஞர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
யூனியன் பிரதேசம் (Union Territory) என்றுதான் இப்போதும் இந்தியாவின் சில பகுதிகள் குறிப்பிடப்படுகின்றனவே ஒழிய “மத்தியப் பிரதேசம்” (பாவம், அது ஒரு மாநிலம்! நான் சொல்லவருவது Central Territory…) என்று அல்ல. மத்திய அரசாங்கம் என்ற சொல் தெரிந்தோ தெரியாமலோ ஒன்றிய அரசுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டிச் சிலர் வழக்கில் கொண்டுவந்த விஷயம். அது தவறானது. அறியாதவர்களின் வழக்கு.
சரியான வழக்காகிய ஒன்றிய அரசு (Union of India, Union Government) என்பதை வழக்கிற்குக் கொண்டுவந்த முதலமைச்சருக்கும் அவரது சகாக்களுக்கும் நமது பாராட்டுகள்.
அதேபோல நான் பார்த்தவரை, இதுவரை உள்ள சட்டத் தொடர்பான, ஆட்சி அலுவல் தொடர்பான ஆவணங்கள் எதிலும் தமிழக என்ற சொல் கிடையாது. தமிழ்நாடு என்ற சொல் மட்டுமே உண்டு. வேண்டுமானால், நீங்கள் தமிழக அரசு என்று எந்த மொழிபெயர்ப்பானிலும் (கூகுள் உள்ளிட்ட) கொடுத்துப்பாருங்கள், அது Government of Tamilagam (வேடிக்கையாக இல்லையா?) என்று சொல்லாது, தானாகவே Government of Tamilnadu என்றுதான் மொழிபெயர்க்கும். இவற்றை எல்லாம் அறியாதோர் மட்டுமே விவாதப்படுத்துவார்கள். தமிழகம் என்பது அரசியலுக்கான கலைச்சொல் (technical term) அல்ல, அது நம் அகத்தில் (மனத்தில், உயிரில்) தமிழை வைத்திருக்கிறோம் என்பதைக் குறிக்கும் உணர்வுச்சொல். தமிழ்நாடு என்பது அரசியல் பயன்பாட்டுக்கான கலைச்சொல்.