பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், குடியரசுத் தலைவர் வேட்பாளராக, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டிருக்கிறார். பலரும் இந்த அறிவிப்பினை வரவேற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது.  இந்தியாவின் குடியரசுத் தலைவர் போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது ஆரோக்கியமான ஜனநாயக மரபு. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், மூத்த அரசியல் தலைவர் யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு மதிப்பு தற்போது  49 சதவீதமாக உள்ளது. எதிர்கட்சிகள் ஒருங்கிணைப்பு இன்னும் முழுமை அடையவில்லை என்பதால் யஷ்வந்த் சின்கா வெற்றிவாய்ப்பு சதவீதம் குறித்து உறுதி செய்ய முடியவில்லை.  எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் தேர்வு குறித்து இப்போதுவரை ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் எந்த முடிவும் எடுக்காத நிலையில் உள்ளன.
ஆக, எதிர்க்கட்சிகளின் வேட்பாளரின் வாக்கு சதவீதம் உறுதியாகிறதோ இல்லையோ, தங்களது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றால், ஒரு சதவீதத்துக்கும் மேலான வாக்குகளை உறுதி செய்ய வேண்டும் என்கிற நிர்பந்தம் பாஜகவுக்கு எழுந்துள்ளது. அதேநேரத்தில், எதிர்க்கட்சிகளின் பலத்தைக் குறைத்து, தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளவும் முடியும் என்பதால், மகாராஷ்டிரா அரசியல் களத்தை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில்,  குடியரசுத் தலைவர் தேர்தலில், தாங்கள் முன்னிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்று, மகாராஷ்டிரா சிவசேனா ஆட்சியில்  குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
ஒப்பீட்டளவில் சிவசேனாவுக்கும், பாஜகவுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. பாஜகவின் அரசியல் கொள்ளை, சிந்தாந்தம், கட்சி நடைமுறை எல்லாம் சிவசேனாவுக்கும் அப்படியே பொருந்தும். ஆர்.எஸ்.எஸ் சேனைகளில் அதிகாரத்தில் உள்ள மற்றொரு சேனைதான் உத்தவ் தாக்கரேவின் ஆட்சி என சொல்லலாம்.  என்றாலும், இந்த முறை அதிகாரத்தை காங்கிரஸ் உடன் பகிர்ந்துள்ளதால், எதிர்க்கட்சிகள் நிறுத்தும் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் சிவசேனா உள்ளது.

 

இப்போது இருக்கும் சூழலில், சிவசேனாவின் 40 எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. அதிருப்தி எம்.எல்.ஏவாக வெளியேறி பாஜக அணைப்பில் உள்ள, சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷின்டே கூறுகையில், “பால்தாக்கரே எங்களுக்கு இந்துத்துவத்தை கற்றுக் கொடுத்துள்ளார்” என்கிறார். அதுதான் சிவசேனாவின் பலம், அதுவே பாஜகவின் கரத்தை இப்போது பலப்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம்  சிவசேனா – காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விட்டு பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.  ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கும் சிவசேனா உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதன் மூலம், குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர்களை வாக்களிக்க விடாமல் செய்து விடலாம். அல்லது 40 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால், கட்சித் தாவல் தடை சட்டத்தின் படி நடவடிக்கை செல்லாது என்பதால், அவர்கள் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு  சிவசேனாவின் வாக்கு மதிப்பு 25,200. அதாவது 2.34 சதவீதம். அதை கணிசமாக குறைத்து விட்டது இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள். அல்லது தங்களுக்கு சாதகமாக திசை திருப்பிக் கொள்ள முடியும். தற்போதுவரை பாஜகவின் வெற்றி வாய்ப்பு  49 சதவீதம் என்பதால்,  பாஜக ஆதரவு சிவசேனா உறுப்பினர்களின் வாக்குகளுடன் மிகச் சொற்பமான வாக்கு வித்தியாசத்தை உறுதி செய்து விட முடியும்.  பாஜக ஆதரவு நிலை எடுக்காத கட்சிகளை நம்பிக் கொண்டிருப்பதை விட, நம்பகமாக சிவசேனா உறுப்பினர்கள் மூலம் குடியரசு தலைவர் தேர்தல் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய பாஜக முடிவு செய்து விட்டது.
இது முன்னோட்டம்தான், தொடர்ந்து ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை குலைக்கும் வேலைகள் நடக்கலாம். ஏற்கெனவே, அங்கு காங்கிரஸ் ஆட்சி, உள்கட்சி பூசலால் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்குள், அங்கும் கணிசமாக உறுப்பினர்களை அதிருப்தி கொள்ள வைப்பதன் மூலம்,  எதிரியின் பலத்தை குறைத்து விடலாம் என காய் நகர்த்தி வருகிறது.
ஜனநாயக முறைப்படி, மக்கள் பிரதிநிதிகளால் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது  ஆரோக்கியான ஜனநாயகம் மரபு என பெருமை கொள்ளலாம். ஆனால், ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து வரும் பாரதிய ஜனதா கட்சி இந்திய வரலாற்றை தீர்மானிப்பது ஆரோக்கியத்தின் அடையாளமாக இல்லை.