இல்லை, நாம் ஏற்கனவே தீயவர்கள் தாம். இதை நான் சொல்லவில்லை. மிகச்சிறந்த தத்துவவாதிகளில் ஒருவரான இமானுவெல் கேண்ட் தனது “கல்வியியல் குறித்த உரைகளில்” சொல்கிறார். என்னுடைய கருத்து ஏற்கனவே கடைந்தெடுத்த கொடியவர்களான நம்மை இந்த சமூக, பொருளாதார அமைப்பும், கூடுதலாக கல்வியமைப்பும் மேலும் கொடியவர்களாக, அறம் பிறழ்ந்தவர்களாக மாற்றுகிறது என்பதே. ஒரு உதாரணத்துக்கு, இந்த உலகின் ஆகக்கொடூரமான, மனிதகுலத்துக்கே பேரழிவைக் கொண்டு வந்துள்ள குற்றங்களை இழைத்தவர்கள் யாரென்றால் அதிகமாகப் படித்தவர்களே. கல்வி நமது தீய சுபாவத்துக்கு ஒரு கூர்மையை, முனைப்பை அளிக்கிறது, தெளிவான இலக்கை, திட்டவட்டமான வழிமுறையைக் காட்டித் தருகிறது. நமது சுயநலத்தை நியாயப்படுத்த கல்வி உதவுகிறது. ஆய்வுகள் என்ன சொல்லுகின்றன எனப் பார்ப்போம்.

பொருளாதாரப் படிப்பை மேற்கொள்ளும் உயர்கல்வி மாணவர்களிடம் சுயநலத்தைக் கொண்டாடுகிற, பிறர் நலனைக் கண்டுகொள்ளாத போக்கு வலுவாக இருப்பதாக வேங், மல்ஹோத்ரா, மெர்னிகன் ஆகியோர் செய்த ஆய்வொன்றில் கண்டறிந்திருக்கிறார்கள். கேரலின் ஸ்டிராஸ் ESSEC நிர்வாகவியல் கல்வி நிறுவனத்தில் செய்த தனது ஆய்வொன்றில் பொருளாதார மாணவர்களிடம் அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றை தூக்கிப் பிடிக்கிற போக்கு, ‘மனிதன் தன் முன்னேற்றத்தை அன்றி வேறெதையும் முன்னெடுக்கத் தேவையில்லை, அதுவே இயல்பு’ எனும் நம்பிக்கைகள் தீவிரமாக உள்ளதாகக் கூறுகிறார். அமெரிக்கன் சைக்காலஜிஸ்ட் இதழில் வந்துள்ள “In Search of How People Change” எனும் கட்டுரையில் புரொஷஸ்கா, டிகிளெமெண்டெ, நோர்கஸ் ஆகிய ஆய்வாளர்களும் இதே கருத்தையே கல்வி பெற்றவர்கள் குறித்து எட்டுகிறார்கள்.

 

இதை நான் என் அனுபவத்தின் அடிப்படையிலே கண்டிருக்கிறேன். படித்தவர்களில் புத்திசாலித்தனம் மிக்கவர்களிடம் ஒரு தன்னொடுங்கிய, தன்னலமான பண்பு தூக்கலாக இருக்கிறது. (‘படிக்காத மேதைகளிடமும்’, ‘பாமர புத்திசாலிகளிடமும்’ இது உண்டு.) ஆனால் படிப்பறிவு குறைவானவர்களிடம் ஒரு களங்கமின்மை, சமூகத்துக்காக, அடுத்தவர்களுக்காக இரங்குகிற பண்பு இருக்கிறது. ஒரு வாய்ப்பு கிடைக்கையில் அதை வைத்து அடுத்தவர்களை திறமையாக ஏமாற்ற, அடுத்தவர்களின் சொத்துக்கள், பணம், வாய்ப்புகள், நிம்மதியைத் திருட ஒரு புத்திசாலித்தனம் இருக்க வேண்டும். அதை கல்வி வழங்குகிறது (அல்லது சமூகச் சூழலும் இயல்பான தேடலும் படிக்காத ஒருவருக்கு வழங்குகிறது.) ஏன் இதே புத்திசாலித்தனம் அடுத்தவரின் நலனுக்காக சிந்திக்க, செயல்பட நம்மைத் தூண்டுவதில்லை? இக்கேள்வியை வைத்தே நாம் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்.

 

ஐரோப்பாவை பொறுத்தமட்டில் கடந்த 400 வருடங்களுக்கு மேலாக அறிவியலின் பிரம்மாண்ட வளர்ச்சியும் மதக்கல்வி, அறவியலின் பெரும் வீழ்ச்சியும் அங்கு ஒரு சேர நிகழ்ந்துள்ளது. அங்கு ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒரு மனிதனின் அடிப்படை நோக்கமே தன்னை எந்த வழியையும் பயன்படுத்தி பாதுகாத்தும், முன்னேற்றியும் கொள்வதே என மக்கள் அனைவரும் நம்பத் தொடங்குகிறார்கள். முதலீட்டியம், அறிவியல் ஆகியவை தனிமனிதவாதம், தனிமனித வளர்ச்சி, தனிமனித முதலீட்டின், தனிச்சொத்தின் வளர்ச்சி எனும் பெயரில் இந்த எண்ணத்தை ஊக்கப்படுத்துகிறது. அறிவியல் கூடுதலாக மனிதன் ஒரு மிருகமே, சமூகம் ஒரு கட்டற்ற வனமே, வலுத்தவன் மட்டுமே பிழைப்பான் எனும் சிந்தனையை வலுவாக மக்கள் மனதில் ஊன்றுகிறது. இதன் விளைவாக, கல்வியமைப்பு சுயநலம், சுயவளர்ச்சி, சுயமுன்னேற்றம் ஆகியவற்றை முன்னெடுப்பதாக மாறுகிறது. ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தாலும் “நீங்கள் தனித்தனி” என அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லித் தரப்படுகிறது; உங்கள் பக்கத்தில் இருக்கிற குழந்தை உங்கள் போட்டியாளன், அவனை அழித்தே நீங்கள் முன்னேற முடியும் என கல்வியியல் வலியுறுத்துகிறது. இத்தகைய கல்வியமைப்பில் கரையேறி வந்த பெற்றோரும் அப்படித்தான் தம் பிள்ளைகள் வளர்வதை பாதுகாப்பு என நம்புகிறார்கள். அநேகமாக கடந்த இரு நூறாண்டுகளில் அறவியல் எனும் துறையே அறிவியலின் முன்பு மண்டியிட்டு தன் தலையை பலிகொடுத்து காணாமல் போயுள்ளது. இன்று பள்ளி, கல்லூரிகளில், ஊடகங்களில் என எங்குமே அறம் விவாதிக்கப்படுவதில்லை. இந்த இரண்டு போக்குகளும் சேர்ந்து கல்வி கற்ற மனிதர்களை ஆபத்தான சுயநலமிகளாக, சுயமுன்னேற்றத்துக்காக யாரையும் அழிக்கலாம், அவமதிக்கலாம் என நம்புகிறவர்களாக மாற்றி விட்டன. அண்மையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுடன் நேரடியாக மோதுகிற காட்சிகள் இந்த பெரும் பனிமலையின் ஒரு நுனி மட்டுமே.

 

நீங்கள் யோசிக்கலாம் கல்வித்திட்டத்தில் நன்னடத்தைக் கல்வி, நீதி போதனைகளை அதிகப்படுத்த வேண்டுமா, அது தன் தீர்வா என. ஆம், அதுவும் வேண்டும். கல்வியின் நோக்கம் ஒரு மனிதனை அறவுணர்வின் உன்னத வெளிப்பாடாக மாற்றுவதே என தனது கல்வியியல் உரைகளில் கேண்ட் கூறுகிறார். திருவள்ளுவரும் கல்வி குறித்த குறள்களில் கல்வியை ஒரு அகமலர்ச்சியாக, தீமையின்றி சிந்திக்கும் பயிற்சியாகவே முன்வைக்கிறார், அடுத்தவரை பின்னுக்குத் தள்ளி கூடுதலாக சம்பாதிக்கும் திறமையை பயிற்றுவிப்பதாக அல்ல. ஆனால் நான் ஏற்கனவே கூறியுள்ளதைப் போல நிலைமை கைமீறிப் போய் விட்டது. இப்போதுள்ள தலைமுறையிடம் நன்னடத்தைப் பயிற்சிகள் எடுபடாது. ஆனால் அறவியல் குறித்த விவாதங்கள் ஆரம்பப் பள்ளியில் இருந்து உயர்கல்வி வரை தனிபாடமாகவே இருப்பது அவசியம். அடுத்ததாக, கல்வியின் மற்றொரு தீய விளைவைப் பற்றி பரிசீலிக்க வேண்டும்.

 

கல்வி நம்மை தனிமையானவர்களாக, உள்ளொடுங்கியவர்களாக, அடுத்தவர் மீது, மற்றமை மீது அச்சம் கொண்டவர்களாக மாற்றி விடுகிறது. அதாவது நமது இயல்பான சமூகப் பண்பை கல்வி வேரோடு பறித்து விடுகிறது. அதனிடத்தில் அது சமூகமாக்கல் பண்பை போதிக்கிறது. அதாவது அருகில் உள்ளவரின் துயரத்தைக் கேட்டறிந்து அதற்கு உதவ முடியுமா என யோசிப்பதற்குப் பதிலாக அவரிடம் “ஹலோ, நலமா?”என்று விசாரித்து புன்னகையுடன் நகர்ந்திட, முடிந்தால் அவரை நமது லாபத்துக்கான ஒரு சமூகத் தொடர்பாக பயன்படுத்த முயல அது போதிக்கிறது. இன்றைய மாணவர்கள் இதில் வித்தகர்களாக இருக்கிறார்கள். அதாவது சுயமான சமூக விலக்கம், தன்முனைப்பு, மற்றும் தனிமைக்கும் தீமைக்கும்  இடையே ஒரு நுட்பமான தொடர்பு உள்ளது. இதுவே கற்றவர்கள் ஆற்றும் பல மோசமான குற்றங்களுக்கு, அநீதிகளுக்கு வழிவகுக்கிறது. நேற்றைய செய்தியில் ஒரு படித்த மனிதர் தான் ஆன்லைனில் மின்ரம்பம் ஒன்றை வாங்கி தன் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் மயக்க மருந்து கொடுத்து அவர்களுடைய தலையை அறுத்து கொன்று, தன்னையும் கொன்ற செய்தியை பார்த்திருப்பீர்கள். படிக்காத, குறைவான புத்திசாலித்தனம் கொண்ட ஒருவர் இந்த கொடூரத்தின் எல்லைக்கு தானாக நிச்சயம் சென்றிருக்க மாட்டார்.

 

இந்த தன்னல விழைவின் வேர் நமது கல்வி முறைமையில் உள்ளது. ஒரு பாடத்தைக் கற்று அதை ஒரு தனிமாணவர் எப்படி தேர்வில் பயன்படுத்துகிறார் என்பதை வைத்து அவருக்கு மதிப்பெண் அளிக்கிறோம். அதன் மூலம் அம்மாணவருக்கு நாம் என்ன உணர்த்துகிறோம் என்றால் “நீ உன் சகமாணவனின் கல்வி முன்னேற்றத்துக்கு உதவினாலோ, உன் சமூகத்துக்கு தொண்டாற்றினாலோ உனக்கு எந்த பயனும் இல்லை, எல்லாரையும் உதாசீனித்து உன்னை மட்டுமே கவனம் கொள், உன்னை மட்டுமே முக்கியம் என நினை.” ஒரு மாணவன் எந்தளவுக்கு தன்னலமும், தன்னுணர்வும், தனிமையும் மிக்கவனாக இருக்க முடியுமோ அந்தளவுக்கு அவன் இன்று சிறந்த மாணவனாக விளங்க முடியும். இதை சரி செய்ய சிறந்த வழி மதிப்பெண்ணுக்கான அடிப்படையை மாற்றுவதே. ஒரு மாணவன் ஒன்றாம் வகுப்பில் இருந்து கல்லூரி வரை எப்படி தன் சகமாணவனுக்கு, குடும்பத்துக்கு, சமூகத்துக்கு உதவுகிறான், தொண்டாற்றுகிறான் எனும் அடிப்படையிலும் நாம் 50% மதிப்பெண்களை அளித்தால் இயல்பாகவே அடுத்தவர்களுக்காக சிந்திக்கிற, இரங்குகிற பண்பை நாம் வளர்க்க முடியும். பரஸ்பரம் போட்டியிடாமல் இணைந்து கற்கிற ஒரு மாடலை நாம் கொண்டு வர முடியும். எட்டாம் வகுப்பில் இருந்து கல்லூரி இறுதி ஆண்டு வரை அத்தனை மாணவர்களையும் அவர்கள் எந்தளவுக்கு சகமாணவரிடம் அக்கறை கொண்டு உதவுகிறார்கள், அதற்காக புதிய சிந்தனைகளை, முயற்சிகளை கொண்டு வருகிறார்கள், எந்தளவுக்கு தொண்டு செயல்பாடுகளை வலுப்படுத்த புதிய கண்டுபிடிப்புகளை, ஆய்வுகளை செய்கிறார்கள், அவர்களுடைய சிந்தனை, செயல்பாடு, கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் எப்படி கல்வி நிலையத்துக்கு வெளியே உள்ள மக்களுக்கு உதவும் வண்ணம் இருக்கிறது என்பதை வைத்து மதிப்பெண்களை அளிக்க வேண்டும். ஒரு கணிதப் பாடத்தில் ஒரு மாணவன் எப்படி தன் கல்வியை வைத்து ஒரு மளிகைக்கடையில் நிற்கும் வேலையாளுக்கும், ஒரு சிறுதொழில் வியாபாரிக்கு தன் வேலையை சுலபமாக்க வழிவகுக்கிறான், உத்திகளை உருவாக்குகிறான் என்பதை வைத்து மதிப்பெண் அளிக்கலாம். மொழி, சமூக அறிவு, அறிவியல் பாடங்களை இப்படியே வகுக்கலாம். கூடவே நேரடியான சமூகப்பணி பாடங்களையும் எல்லா வருடங்களுக்கும் கட்டாயமாக்கலாம். இந்த பாடங்களின் போது மாணவர்கள் நேரடியாக சமூகத்துக்கு சென்று தொண்டாற்றுவதை கட்டாயமாக்கலாம். அதாவது நீ என்ன படித்தாய் என்றல்ல, நீ படித்ததை வைத்து அடுத்தவர்களுக்கு உன்னால் என்ன செய்ய முடிந்தது என்பதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

 

இப்படி செய்தால் நம்மால் மனிதர்களின் அறமற்ற குணத்தை மாற்றி, அறவுணர்வாளர்களாக அவர்களை ஓரளவுக்கு மாற்ற முடியும். ஏனெனில் அறம் என்பது தன்னை மறந்து பிறருக்காக, மற்றமைக்காக உழைப்பதே.

 

இப்படியான அறவியல் நோக்கு நம் கல்வியமைப்புக்கு இல்லாததாலே இன்று மக்களுக்கு கடுமையான மன அழுத்தம், போதைப்பழக்கம், மனச்சிதைவு போன்ற பிரச்சனைகள், நோய்கள் ஏற்படுகின்றன. ஏனென்றால் தன்னலமே இந்த பிரச்சனைகளின் அடிப்படை. மனிதன் தனக்காக வாழ்வது அவனது இயல்புக்கு விரோதமான ஒன்றே. ஆம், மனிதன் ஒரு கூட்டு விலங்கு அல்லவா? நாம் அவனை சின்னச்சின்ன கூண்டுகளில் வாழக் கற்பித்தால் அவன் நோய்வாய்ப்படமல் வேறு என்ன ஆவான்? அவ்விவத்தில் நவீனக் கல்வியே உளநோய்களுக்கு ஒரு முக்கிய காரணியாக மாறி உள்ளது. கல்வியின் நோக்கம் (தன்வளர்ச்சிக்கான ஆவேசத்தில் இருந்து சமூக முன்னேற்றத்துக்கான அக்கறையாக) மாறினால் அது சமூகத்துக்கு மட்டுமே அன்றி தனிமனிதர்களின் மன ஆரோக்கியத்துக்கும் வெகுவாக உதவும். இன்றைய சமூகத்தில் நீக்கமற நிறைந்துள்ள தனிமை, அன்பின் வறட்சி, ஊழல், பேராசையினால் செய்யப்படும் குற்றங்கள் ஆகியவை குறைந்து ஒத்திசைவு, மகிழ்ச்சி, நிம்மதி பெருகும்.

 

ஆக கல்வி இன்றைய கல்வி நம்மை அறமற்றவர்களாக மட்டுமல்ல, ஒருவிதத்தில் மனநோயாளிகளாகவும் மாற்றி உள்ளது. இதை சரி செய்வது காலத்தின் கட்டாயமாகும்.

 

நவீனக் கல்வி நம்மை கெட்டவர்களாக ஆக்குகிறதா? ஆம், நிச்சயமாக. நவீனக் கல்வி ஒடுக்கப்பட்டவர்களுக்கு, ஏழைகளுக்கு, பெண்களுக்கு முன்னேற வழிவகுத்துள்ளது. அதே நேரம் அது அவர்களை மேலும் கடைந்தெடுத்த தீயவர்களாகவும் மாற்றி உள்ளது. அவர்கள் முன்னேறிய பின்னர் தமக்குப் பின்னால் வருகிறவர்களை காலால் உதைத்து கீழே தள்ள, பரஸ்பரம் வெறுப்பரசியலை பரப்பிட, அடுத்தவரை நோகடிப்பதில் திளைக்க சொல்லித் தருகிறது. இதுவே நவீனக் கல்வி நமக்குத் தந்துள்ள மிக மோசமான “பரிசு”. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வைதீகக் கல்வி முறையும் இப்படித்தான் மோசமான சுயநலமிகளாக யாருக்கு அது கிடைத்ததோ அவர்களை மாற்றியது. அவ்விதத்தில் வேதம் வகுத்தோரின் கல்வி முறைக்கும், இன்றைய நவீனக் கல்விக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு மட்டுமே இருக்கிறது; இரு கல்விகளும் அறவியலை, நீதியுணர்வை தவிர்த்துத் தோன்றியவை என்பது இரண்டுக்குமான ஒற்றுமை. இந்தியாவைப் பொறுத்த மட்டில் சமூக சீரழிவுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சாதிய ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு இரண்டு வகைக் கல்விகளும் மறைமுகமாக ஆதரவளித்து வந்துள்ளது எதேச்சையானதல்ல. அதற்காகவே அவை அறம் குறித்த விவாதங்களை தவிர்த்தன; மனிதர்களை தனித்தனியாக, சிறு குழுக்களாக உடைத்து, தன்முனைப்பு சார்ந்த அறிவுப்பெருக்கத்துக்கு முக்கியத்துவம் அளித்தது, அளிக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

 

“எழுதப் படிக்க மட்டும் கற்றுக்கொடுப்பது கல்வியல்ல. வெறும் மனப்பாடத் திறமையில் தகவல் தொகுப்பாக குழந்தைகளை மாற்றுவது கல்வியின் பணியல்ல. மாறாக, ஒட்டுமொத்த சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் விருப்பு வெறுப்பின்றி விசாரணை செய்வதும், சமூக அநீதியைக் களைவதும், ஒரு சிலர் மட்டும் அனுபவிக்கும் முறையற்ற செல்வப் பகிர்வை உலகில் உள்ள அனைவருக்கும் பயனுடையதாக மாற்றுவதுமே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்!” என்றார் பாவ்லோ பிரையர். “கல்வி என்பது எந்த ஒரு விஷயத்தையும் திணிப்பது என்பதை விடுத்து, ஏற்கெனவே மக்கள் மத்தியில் கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் பண்பாட்டுக் கூறுகளின் பெயரால், பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ள ஆதிக்கக் கருத்தாக்கங்களிலிருந்து ஒருவரை விடுவித்து நிர்வாணமாக்குவதே சரியான கல்வியாகும் என்று நினைத்தவர் [பெரியார்]. எத்தகைய முன்முடிவுகளோடும் பிணைத்துக்கொள்ளாமல், ஒன்றை அணுகும்போது மட்டுமே ஒரு சரியான முடிவுக்கு வர முடியும்; எனவே, முன்முடிவுகளைத் துறந்து நிர்வாணமாக்கிக்கொள்வது கற்றலின் முதற்படி என்று நினைத்தவர். பெரியாரியக் கல்வியில் பற்றற்றுப்போவது முக்கிய மானது. பற்றற்றுப்போதலே அனைத்திலுமான விடுதலைக்கு வழிவகுக்கிறது!” என்கிறார் பூ. மணிமாறன். இவ்விருவரும் பேசிய விடுதலைக்கான, நீதிக்கான கல்வியாக நவீனக் கல்வி மாற வேண்டும். இவர்களுக்கு பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே புத்தர் அத்தகையதொரு கல்வி முறையை இங்கு தோற்றுவித்தார். பௌத்த ஆசிரியர்களின் நினைவிலே நாம் இன்று பள்ளிக்கூடங்கள் என கற்கும் இடங்களை அழைக்கிறோம். நவீனக் கல்வியை நாம் புத்தரின், கேண்டின், பிரையரின், பெரியாரின் திசையில் மீளுருவாக்கம் பண்ண வேண்டும். அதுவரை அது மனிதனை மேலும் மேலும் தீயவனாக்கியபடியே இருக்கும். அதுவரை நவீன கல்வி வெறும் சுயமுன்னேற்ற பயிற்சி மட்டுமே அன்றி, கல்வி ஆகாது.