12வது உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து நாட்டில் நடந்துவருகிறது. இப்போட்டியில் இந்தியா, வருகிற ஜூன் 16ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள டிராஃபோர்ட் மைதானத்தில் பாகிஸ்தான் அணியைச் சந்திக்கிறது. இதுவரை உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி ஒருமுறை கூட வீழ்த்தியது இல்லை. இதனால் இரு அணிகளுக்கிடையேயான போட்டியை ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கண்டுகளிப்பது வழக்கம்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை கிண்டல் செய்யும் விதமாக பாகிஸ்தானின் ஒரு தொலைக்காட்சி, விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பர சர்ச்சையால் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி ரசிகர்களின் மனதில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விளம்பரத்தின் தொடக்கத்தில் புல்வாமா தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானிடம் சிக்கி பின்பு விடுதலை செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமானை போல மீசை வைத்த ஒருவர், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை அணிந்துகொண்டு வருகிறார். அவர் கோப்பையில் தேநீர் அருந்தி கொண்டிருப்பதுபோல காட்டப்படுகிறார். அவரிடம் இந்திய அணி டாஸ் வென்றால் என்ன செய்யும்? யார் யார் விளையாடுவார்கள்?’ என்று கேள்விகளைக் கேட்கின்றனர். அதற்கு அவர் என்னால் கூற முடியாது என்று மறுக்கிறார். பின்பு அவர் எழுந்து செல்லும் போது “கப்பை” வைத்துவிட்டு செல்லுங்கள் என்று நக்கலாக சொல்லப்படுகிறது.

இந்த வீடியோ அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கியபோது அவரை விசாரணை செய்த வீடியோவை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த விளம்பரத்திற்கு சமூக வலைத்தளங்களில் இந்தியர்கள் பலர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.