கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், புதிதாகப் பதவியேற்ற 17 அமைச்சர்களுக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா இன்று (ஆகஸ்ட் 20) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கடந்த ஜூலை 23ஆம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, ஜூலை மாதம் 26ஆம் தேதி முதல்வரானார். முதல்வராகப் பொறுப்பேற்று 20 நாட்களுக்கு மேலாகியும் அமைச்சர்கள் நியமிக்கப்படாததால் காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மறைவு, கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால், அமைச்சரவை விரிவாக்கப்படாமல் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் டெல்லி சென்ற முதலமைச்சர் எடியூரப்பா, அமைச்சரவை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா, அமைப்புச் செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை செய்துள்ளார்.

அப்போது, முதல்கட்டமாக 25 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை பாஜக மேலிடத்தில் வழங்கினார் எடியூரப்பா. இதனை பரிசீலித்த அமித் ஷா முதல்கட்டமாக 17 பேர் அடங்கிய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இன்று 17 பேருக்கு அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் வாஜூபாய் வாலா. பாஜக மூத்த தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டார், ஈஸ்வரப்பா, சிடி ரவி, ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர். எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்த சுயேட்சை எம்.எல்.ஏ நாகேஷூம் அமைச்சராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.