பாஜகவினர் ஒவ்வொருமுறையும் தேர்தலில் தோற்கும்போது அந்தத் தோல்வியையும் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள ஏதேனும் ஒரு பொய்ப் பிரச்சாரத்தைக் கையில் எடுப்பார்கள் அல்லது ஆட்சியமைப்பதில் ஏதேனும் தில்லுமுல்லில் ஈடுபடுவார்கள். ஆம் ஆத்மி இன்று வெளியான டெல்லி தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவதுமுறையாக ஆட்சி அமைத்திருக்கிறது. இந்த வெற்றி கடந்த இரண்டாண்டுகளாக பல்வேறு மாநில மக்கள் பாஜகவிற்கு எதிராக அளித்துவரும் திர்ப்புகளின் தொடர்ச்சி. பாஜகவிற்கு எதிரான தீர்ப்பு என்பது அதன் இந்துத்துவா கொள்கைக்கு ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிரான தீர்ப்பு. ஆனால் ஊடகங்களில் அரசியல் ஆய்வாளர்கள் என்று சொல்லக்கூடியவர்களும் வெளிப்படையான வலசுசாரிகளும் இந்த வெற்றிக்கு காரணமாக ஒரு நூதனப் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள்.

ஆம் ஆத்மி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதற்குக் காரணம் அவர், மதவாத எதிர்ப்பைப் பேசாமல் மோடியைக் கடுமையாக விமர்சிக்காமல், தங்கள் ஆட்சியின் சாதனைகளை மட்டுமே பேசினார். அப்படிப் பேசியதால்தான் இந்துக்கள் அவருக்குப் பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெற செய்தார்கள். என்பதுதான் இந்தப் பிரச்சாரம். அது சொல்லக்கூடிய செய்தி மோடியையோ இந்துத்துவாவையோ யாரும் விமர்ச்சிதால் எவரும் வெற்றிபெற முடியாது ஆகவே, இந்த இரண்டிற்கும் எதிராக எல்லோரும் மௌனமாக இருங்கள்! அதுதான் உங்களுக்கு நல்லது என அறிவுறுத்த விரும்புகிறார்கள்.

அரவிந்த் கெஜ்ரிவால் மிகக் கடுமையான மோடி எதிர்ப்பாளர் என்பதும் பாஜகவின் அனைத்துக் கொள்கைகளையும் எதிர்த்தே அவர் அரசியல் செய்தார் என்பதும் நிகழ்கால வரலாறு. டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜகவினர் மிகப்பெரிய வன்முறை பேச்சுகளைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர் மேல் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. டெல்லியை ஒரு மதவாத போர்க்களமாகப் பிளவுபடுத்தி இந்துத்துவ வாக்குவங்கி ஒன்றை அணித்திரட்டலாம் என்பதுதான் பாஜகவின் திட்டம். டெல்லி மக்கள் அதைமுற்றாக நிராகரித்தார்கள் என்பதுதான் உண்மை. அந்த நிராகரிப்பின் விளைவே பாஜகவிற்கு அளித்திருக்கும் தோல்வி.

ஒரு ஆளும் கட்சி ஒரு மாநில தேர்தலில் தனது சாதனைகளை முன்னிறுத்தி வாக்குக் கேட்பது என்பது இயல்பான ஒன்று. கல்வி, சுகாதாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஆம் ஆத்மி ஆட்சி பெரும் பங்களிப்பைச் செய்தது. பொது போக்குவரத்தில் பெண்களுக்கு இலவச பயணம், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டண குறைப்பு, மாதம் 20 லிட்டர் இலவச குடிநீர், ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு வீட்டிலேயே ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் வழங்குதல் என மக்களுக்கு நெருக்கமான பலத் திட்டங்களை ஆம் ஆத்மி செயல்படுத்தியது. எந்தக் கட்சி இதைச் செய்திருந்தாலும் மக்கள் அதற்கு கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்திருப்பார்கள்.

அப்படியென்றால் டெல்லியில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது எல்லாத் தொகுதிகளையும் பாஜக எப்படி வெற்றிபெற்றது என்று கேட்கலாம். புல்வாமா தாக்குதல் நாடகத்தின் மூலமாக மிகப்பெரிய தேசிய வெறி அலை ஒன்று நாடுமுழுக்க உருவாக்கப்பட்டது. டெல்லி போன்ற பிரதேசங்கள்  இந்த அலையில் வீழ்வது மிக இயல்பான ஒன்று. அது பாகிஸ்தான் என்ற அந்நிய நாட்டை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட அலை. ஆனால் இப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தின்மூலம் சொந்த நாட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே ஒரு மதவாத அலையை உருவாக்க முயன்றார்கள். அதற்குக் கிடைத்த மரண அடிதான் இந்தத் தேர்தல் முடிவுகள்.

நாடுமுழுக்க மதவாத சாதியவாத மோதல்களை உருவாக்கி அதன்மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் பாஜகவின், அமித்ஷாவின் சோஷியல் இன்ஜினியங் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. பொருளாதாரம் சார்ந்த தங்கள் படுதோல்வியை மறைப்பதற்காக பாஜக இனியும் இந்த நாடகங்களை  அரங்கேற்ற முடியாது. இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல; பெரும்பான்மை இந்துக்களுக்கும் இந்த ஆட்சி மிகமிக ஆபத்தானது. பாஜகவிற்கு எதிராக மக்கள் நலனில் அக்கறைக்கொண்ட எந்தக் கட்சியையும் மக்கள் ஆதரிக்கத் தயாராக உள்ளார்கள்.

பாஜகவின் மதவாத நோக்களுக்கு எதிராக அனைத்துத்தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கக்கூடிய போராட்டங்கள்தான் பாஜகவை அதிகாரத்திலிருந்து அகற்றும். அதைத்தான் டெல்லி நிரூபித்திருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நாடுமுழுக்க மோடி அலை வீசியபோதும் தமிழ்நாட்டில் பாஜகவின் மதவாத அரசியலைக் கடுமையாக எதிர்த்த திமுக கூட்டணி மகத்தான வெற்றிப் பெற்றது.

ஆகவே இந்துத்துவ எதிர்ப்பு இல்லாமல் பாஜக எதிர்ப்போ, மோடி எதிர்ப்போ சாத்தியமே அல்ல. ஆம் ஆத்மி மட்டுமல்ல, கடந்த இரண்டாண்டுகளாக பல மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவின் இந்துத்துவ கொள்கைகளுக்கு எதிராகப் பெரும்பான்மை இந்துக்கள் தொடர்ந்து வாக்களித்து வருகிறார்கள் என்பதுதான் எதார்த்தம்.

சங்கிகள் சுய சாமாதானங்களோடு நிம்மதியாகத் தூங்கட்டும்!