ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவையடுத்து, முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதே வழக்கில் கடந்த ஆண்டு(2018) பிப்ரவரியில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக 305 கோடி ரூபாய் முதலீட்டை பெற அனுமதியளித்த குற்றச்சாட்டில் ப.சிதம்பரத்தைக் கடந்த 21ஆம் தேதி கைது செய்தது சிபிஐ. இதுதொடர்பான வழக்கில், ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவரை கடந்த 15 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்தது. இந்நிலையில் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமின் கோரிய சிதம்பரத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 5) தள்ளுபடி செய்யப்பட்டது.

முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையிலும், காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை அனுமதி கோரவில்லை. இதனிடையே சிபிஐ கைது செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ப.சிதம்பரம் வாபஸ் பெற்றார்.

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் முடிவடைந்ததையடுத்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் குஹர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிதம்பரத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வலியுறுத்தினார். ஆனால் சிதம்பரம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர் கபில் சிபல், சிதம்பரம் அமலாக்கத் துறை காவலுக்கு செல்ல தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிதம்பரத்தை வரும் 19ஆம் தேதி வரை அதாவது 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். சிறையில் சிதம்பரத்துக்கு தனி அறை வழங்கப்பட வேண்டும் என்றும், உரியப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சிதம்பரத்துக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதனிடையே, இசட் பிரிவு பாதுகாப்பில் ப.சிதம்பரம் இருப்பதால் திஹார் சிறையில் அவருக்குத் தனி அறை ஒதுக்க வேண்டும். இந்நிலையில், சிறையில் உள்ள 7ஆம் எண் அறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டார். இந்த தனிச் சிறையில் மேற்கத்தியக் கழிப்பறை அமைக்கப்பட்டிருப்பதோடு, போதிய பாதுகாவலர்களும் நிறுத்தப்பட்டிருப்பார்கள். மேலும், மூக்குக் கண்ணாடியை மாற்றிக் கொள்ளச் சிதம்பரம் அனுமதிக்கப்படுவார். மருந்து, மாத்திரைகளை உடன் எடுத்துச் செல்லலாம் என நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதே அறையில்தான், இதே வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரமும் அடைக்கப்பட்டிருந்தார். 23 நாட்கள் சிறை வாசத்துக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

மேலும், திஹார் சிறையின் விதிப்படி, காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சிதம்பரம் எழ வேண்டும். காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்ட பிறகு, நடைப்பயிற்சிக்கோ, உடல் பயிற்சிக்கோ அனுமதிக்கப்படுவார். மதிய உணவாக ரொட்டி, பருப்புக்குழம்பு அல்லது சப்ஜி ஆகியவை 12 முதல் ஒரு மணிக்குள் பரிமாறப்படும். அவர் தொலைக்காட்சி பார்க்க விரும்பினால் சிறை நூலகத்திற்குச் சென்று பார்க்கலாம். இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இரவு உணவு வழங்கப்படும். 9 மணிக்குள் அவர் தனது அறைக்குச் செல்ல வேண்டும்.