கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

கன மழையால் 150-ற்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி தற்போது வரை 76 பேர் பலியாகியிருப்பதாகவும் 58 பேர் காணவில்லை எனவும் தகவல் வெளிவந்துள்ளது. மலப்புரம், வயநாடு உட்பட 8 மாவட்டங்களில் அதிகளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 1,621 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் 74 ஆயிரத்து 400 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதனிடையே கனமழை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு கண்ணூர், காசர்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் தங்க இடமில்லாமல், உண்ண உணவில்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள இச்சூழலில் பலரும் கருணை உள்ளத்தோடு மனமுவந்து உதவிகளை வழங்கி வருகின்றனர். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்கள் நிதியினை உலகெங்கிலும் வாழும் இந்தியர்கள் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வுடன் தொடர்புடைய அமைப்புகள் கேரள முதல்வரின் நிவாரணநிதிக்கு பணம் அனுப்ப வேண்டாமென்று விஷமப் பரப்புரை செய்துவருகின்றன. அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றன.

இதற்கு முன்னரும் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது இந்தியாவின் பல மாநிலங்களும் நிதியுதவி அளித்தன. ஆனால் பாஜக ஆளும் எந்த மாநிலமும் கேரளாவிற்கு நிதி அளிக்கவில்லை. தற்போது அதைவிடக் கீழிறங்கி யாருமே கேரளத்திற்கு உதவாதீர்கள் என்ற ரீதியில் பாஜக மற்றும் அதனுடன் தொடர்புடைய இந்துத்துவா இயக்கங்கள் வன்மத்துடன் செயல்படுகின்றன. பாஜக கம்யூனிஸ்ட்கள் ஆளும் ஒரே மாநிலமாக விளங்குவதே இதன் காரணம்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் மிகவும் வலிமையாக இயங்கிவருகிறது. இதனால் பாஜகவால் அங்கு காலூன்ற முடியாத நிலை இருக்கிறது. மேலும் மத்திய பாஜக.,வின் சர்வாதிகாரப் போக்கினைக் கண்டிக்கும் அரசாகவும் கேரள கம்யூனிஸ்டு அரசாங்கம் இருக்கிறது. இதனை மனதில் கொண்டு தற்போது முதலமைச்சர் நிவாரண நிதிக்கு யாரும் பணம் தராதீர்கள் என்ற பிரச்சாரத்தை சங்கிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் கையிலெடுத்துள்ளனர் இந்துத்துவா அமைப்புகள்.

இந்நிலையில் நேற்று முந்தினம் தமிழகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார். ஆனால் கேரளா வெள்ள பாதிப்புகளைப் பற்றி அவர் பார்வையிடாதது மட்டுமல்ல அதைப்பற்றி வாய் திறக்காமல் இருப்பது பாஜகவின் மக்கள் விரோதப்போக்கை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ‘இந்துத்துவா அமைப்புகளின் விஷமப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் ஊடகங்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் மாநிலமே அழிவிலிருக்கும் இச்சூழலில் இதுபோன்ற மக்கள் விரோதப் போக்கோடு செயல்படும் குற்றவாளிக் கும்பல்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அந்த விஷமிகளின் பிரச்சாரத்தைக் கைக்கொள்ளாமல் புறந்தள்ளிச் சிறப்பாகச் செயல்படுவதாக ஊடகங்களுக்குப் பாரட்டும் தெரிவித்தார்.